தொடர்கள்
தொடர்கள்
‘தமிழுக்கு ஒரு முத்தம்’ – 19     பித்தன் வெங்கட்ராஜ்

20240703080341344.jpg

‘இ.பி.கோ சட்டம் போட்டு

ஊரடங்க செய்தாலும்

ஓடோடி ஒருநொடியில்

உனை சந்திப்பேன்’

-பாடலாசிரியர் பா.விஜய்

மேற்கண்ட வரிகளில் காணும் ‘இ.பி.கோ’வே இப்போது இல்லை என்றாகிவிட்டது. (மேலதிகத் தகவல்களுக்கு 13.07.2024 விகடகவி இதழில் திரு.ஜாசன் அவர்களின் ‘இனி இ.பி.கோ இல்லை’ கட்டுரையைப் படிக்கலாம்)

இப்படி நம் நாட்டின் நீதித்துறையில் மாற்றங்கள் நிகழ்ந்துவரும் சூழலில் தமிழர்களின் நீதித்துறை அறிவு பற்றி அறிவதும் அவசியம்தானே!!

20240703080439860.jpg

அறியாமல் செய்த தவற்றுக்காகத் தன் கையையே துண்டித்துக்கொண்ட பொற்கைப் பாண்டியன், பசுங்கன்று தேர்க்காலில் அடிபட்டு இறந்ததற்காகத் தன் மகனையே அதே தேர்க்காலில் இட்டுத் தண்டனையளித்த மனுநீதிச் சோழன், புறாவின் மீது இரக்கப்பட்டு அதன் எடைக்கு நிகராகத் தன் சதையை வேடனுக்குக் கொடுத்து நீதி வழங்கிய சிபிச் சோழன், தன் கணவனின் தண்டனையை எதிர்த்து மேல் முறையீடு செய்து தன் கணவன் குற்றமற்றவன் என்று நிறுவிய கண்ணகி என்று தமிழ் வரலாறு நெடுகவும் எத்தனையோ வழக்குகளையும், நீதி விசாரணைகளையும் கண்டு, சரியான தீர்ப்புகளை வழங்கி நீதியை நிலைநாட்டியதையும் நாம் அறிகிறோம். ஆனால், அவர்கள் பயன்படுத்திய சட்டதிட்ட நடைமுறைகள் என்ன என்பதை நாம் அறிவோமா?!

சங்க நூல்கள் அரசன் நல்லாட்சி புரிய ஐம்பெருங்குழுவும் எண்பேராயமும் துணைபுரிந்ததாகக் குறிப்பிடுகின்றன. அமைச்சர், புரோகிதர், படைத்தலைவர், தூதுவர், சாரணர் ஆகியோர் அடங்கிய குழு ஐம்பெருங்குழு மற்றும் கரணத்தியலவர், கருமகாரர், காப்பாளர், நகரமாந்தர், படைத்தளபதி, வீரர், மறவர், இளையர் ஆகியோர் அடங்கிய குழு எண்பேராயம் ஆகும். மன்னனுக்குச் சந்தேகம் எழும்போதோ, முடிவெடுக்கும் சூழலில் குழப்பம் நிகழும்போதே இக்குழுக்களின் ஆலோசனையை ஏற்று மன்னர் முடிவெடுப்பதோ தீர்ப்பு வழங்குவதோ நிகழ்ந்திருக்கிறது.

தமிழில் நீதிமன்றக் காட்சிக்குப் பெயர்போன இலக்கியம் சிலப்பதிகாரம்.

'என் காற்சிலம்பு பகர்தல் வேண்டி நின்பாற்

கொலைக் களப்பட்ட கோவலன் மனைவி

கண்ணகி என்பது என் பெயரே'

-வழக்குரை காதை- வரிகள்: 61 - 63

என்று வந்து நிற்கிறாள் கண்ணகி.

20240703080521492.jpg

'கள்வனைக் கோறல் கடுங்கோல் அன்று

வெள்வேல் கொற்றம் காண்'

-வரிகள்: 64-5

என்று பதிலுரைக்கிறான் பாண்டியன். அதாவது, திருடனைக் கொல்வது குற்றமன்று. அதுவே நல்லாட்சிக்கு அடையாளம் என்கிறான். இது,

'கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்

களைகட் டதனொடு நேர்'

-குறள் 550

20240703080656195.jpg

என்னும் வள்ளுவரின் கூற்றோடு ஒப்புகிறது. இப்படி, அரசர்களின் நீதி வழங்கும் முறைக்கும், முடிவெடுக்கும் முறைக்கும், ஆலோசனைக் குழுக்களுக்கும் நமது நீதி நூல்கள் பெரிதும் உதவியிருக்கவேண்டும் என்பது நமது புரிதல்.

'அச்சமும் அவலமும் ஆர்வமும் நீக்கிச்

செற்றமும் உவகையும் செய்யாது காத்து

ஞெமன்கோல் அன்ன செம்மைத்து ஆகிச்

சிறந்த கொள்கை அறங்கூறு அவையமும்'

என்கிற மதுரைக்காஞ்சி (489-492) வரிகள், விறுப்பு வெறுப்பில்லாமல் யாருக்கும் அஞ்சாமல், எமனின் துலாக்கோல் போலச் சரியான நீதியை வழங்கும் அவைகள் அந்நாளில் இருந்ததைக் குறிப்பிடுகின்றன.

அப்படியான ஓர் அவையில்தான் சுந்தரருக்கும், திருநாவலூர்ப் பித்தனுக்கும் ஒரு வழக்கு நடந்தது என்பதைப் பெரியபுராணம் எழுதிய சேக்கிழார் தடுத்தாட்கொண்ட புராணத்தில் நமக்கு அறியத் தருகிறார்.

சுந்தரரின் பாட்டனார், 'தாமும் தம் வழித்தோன்றல்களும் திருநாவலூர்ப் பித்தனுக்கு அடிமை' என ஆவண ஒப்பந்தம் எழுதிக்கொடுத்துள்ளதாகவும், சுந்தரர் அதை ஏற்க மறுப்பதாகவும் சொல்லி திருநாவலூர்ப் பித்தன் அவையைக் கூட்டுகிறார்

20240703080552183.jpg

அவையோர் முன்னிலையில் ஆவணத்தைக் காட்ட எடுக்கும் பித்தனிடமிருந்து அதனைப் பிடுங்கி, கிழித்து நெருப்பிலிட்டுவிடுகிறார் சுந்தரர். நிருபிக்க ஆவணம் இல்லாமல் தடுமாறும் பித்தனிடம் அவையோர் 'தாங்கள் யார், எந்த ஊர்?' என்று கேட்க, 'தான் திருவெண்ணெய்நல்லூரைச் சேர்ந்தவன்' என்று பதிலுரைக்கிறார் பித்தன். ஆக, இந்த வழக்கைத் திருவெண்ணெய்நல்லூரில் விசாரிப்பதுதான் முறை என்று அவையோர் கூறிவிடுகின்றனர். இஃது இப்போதைய 'ஆள்வரை அதிகார வரம்பு' எனப்படும் Territorial Jurisdiction இன்படி வழக்கை விசாரிக்கும் முறையாகும்.

அதன்படி, திருவெண்ணெய் நல்லூரில் வழக்குத் தொடர்கிறார் பித்தன். வழக்கைப் பதிவுசெய்துகொண்டு அதனை மெய்ப்பிக்க, பித்தனை அழைக்கின்றனர் நீதிபதிகள்.

'ஒரு சங்கதியைக் கூறும் நபரே அந்தச் சங்கதியை நிரூபிக்கவேண்டும்' என்று இந்திய சாட்சியச் சட்டம் (Indian Evidence Act என்னும் இச்சட்டமும் அண்மையில் ‘பாரதிய சாட்சிய அதினியம்’ என்று மாற்றப்பட்டுள்ளது) பிரிவு 101 கூறுகிறது.

இம்முறைப்படியே அந்நாளிலும்,

'ஆட்சியில் ஆவணத்தில் அன்றி மற்று அயலார் தங்கள்

காட்சியில் மூன்றில் ஒன்றும் காட்டுவாய்'

என்று அவையோர் பித்தனைக் கேட்கின்றனர்.

ஆட்சி என்றால் Precedent (முன் சான்று), ஆவணம் என்றால் Document, அயலார் தங்கள் காட்சி என்றால் Eye witness ஆகிய மூன்றில் எதையாவது ஒன்றைக் காட்டு என்கின்றனர் அவையோர்.

இ.சா.சட்டத்தில், 'மெய்ப்பிக்கத் தேவையில்லாத பொருண்மைகள்' (Customary facts need not to be proved) என்று குறிப்பிடப்பட்டுள்ளவைதாம் முதலிரண்டும். வாய்மொழிச் சான்று (Oral evidence) என்று இ.சா.சட்டம் பிரிவு 60-இல் உள்ளதுதான் இந்த 'அயலார் தங்கள் காட்சியில்' என்பது.

ஆக, இன்றைய நீதிமன்ற நடைமுறைகளிலும் முன்னோடியாகத் தமிழர்களே இருந்திருக்கிறார்கள் என்றால் மறுக்கமுடியாது. அற்புதமானதோர் நீதிமன்றக் காட்சியை நமக்களித்த சேக்கிழார்க்கு ஒரு தமிழ்முத்தம் தந்தோம்.

அவர்க்கும், நமக்கும், யாவர்க்கும் பொதுநீதி வழங்கும் நம் தமிழுக்கு இது பத்தொன்பதாவது முத்தம்.

முத்தங்கள் தொடரும்.

-பித்தன் வெங்கட்ராஜ் ✍️