அமெரிக்காவின் உளவுத்துறை எஃப்பிஐ யின் புதிய இயக்குனராக வழக்கறிஞர் காஷ்யப் படேலை அதிபர் ட்ரம்ப் நியமிக்க உள்ளதாக செய்திகள் பரவியுள்ளன.
மிகவும் சக்திவாய்ந்த பதவிக்கு ஒரு இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் வருவது சாதாரண விஷயம் அல்ல. குஜராத்திக்காரரான 44 வயதான பட்டேல் நியூயார்க்கில் பிறந்து வளர்ந்தார்.
பட்டேலின் தந்தை கிழக்கு ஆப்ரிக்காவிலிருந்து வந்தவர். பட்டேலின் தந்தை உகாண்டாவில் வாழ்ந்த போது இடி அமீனின் ஆட்சியில் தாக்குப்பிடிக்க முடியாமல் அங்கிருந்து தப்பித்தால் போதும் என்கிற நிலைமையில் 1970 ல் அமெரிக்கா வந்து சேர்ந்தார்.
காஷ் அமெரிக்காவில் பிறந்து வளர்ந்தாலும் இந்து மத நம்பிக்கை உள்ள குடும்பத்தில் வளர்ந்தவர்.
படிக்கும் காலத்தில் காஷ்யப்பின் கல்லூரி ஆண்டு நூல் தொகுப்பில் “ இனவெறி மனித குலத்தின் மிகப்பெரிய அச்சுறுத்தல் .
ஒரு குறைந்தபட்ச காரணத்திற்காக மனிதர்கள், அடுத்தவர்களிடம் காட்டும் அதிகபட்ச வெறுப்பு” என்பதை அவரது மேற்கோளாக வைத்திருந்தார்.
லண்டனில் சட்டம் பயின்று, மயாமியில் வழக்கறிஞராக தனது தொழிலை தொடங்கினார்.
அக்காலக்கட்டத்தில் கொலை, போதைமருந்து கடத்தல், நிதி முறைக்கேடுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் என பல்வேறு சிக்கலான வழக்குகளை கையாண்டார்.
அதன்பின்னர் பட்டேல், பாதுகாப்பு மற்றும் புலனாய்வு துறைகளில் நுழைந்து பாதுகாப்புசெயலாளர் கிறிஸ்டோபர் மில்லரிடம் தலைமை அதிகாரியாக பணியாற்றினார்.
அமெரிக்க அதிபரின் துணை உதவியாளர் மற்றும் தேசிய பாதுகாப்பு கவுன்சிலில் பயங்கரவாத எதிர்ப்புக்கானமூத்த இயக்குனராக பணியாற்றும் போது, ஐஎஸ்ஐஎஸ் மற்றும் அல்-கொய்தாவின் முக்கிய தலைவர்களை ஒழிப்பது உட்பட டிரம்ப்பின் பல முக்கிய முன்னுரிமைகளை நிறைவேற்றுவதில்பட்டேல் முக்கிய பங்கு வகித்தார்.
அமெரிக்காவின் 2016 அதிபர் தேர்தலில் ரஷ்ய தலையீடு இருந்ததாக செய்திகள் பரவிய போது அது குறித்த விசாரணையில், அமெரிக்க உளவுத்துறையின் பங்கு இருந்ததாக கூறப்படுகிறது. அதன் பின்னணியில் பட்டேல் இருந்தார். அதுவே பெரும் சர்ச்சையானது.
அந்த அளவுக்கு ட்ரம்ப்பின் தீவிர ஆதரவாளராக விளங்கும் பட்டேல் , ட்ரம்ப்புக்காக என்றால் எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் செல்ல அவர் தயங்கமாட்டார் என்கிறார்கள்.
பட்டேல் 2019 ல் தமது 40 வயதில் தான் ட்ரம்ப்புடன் சேர்ந்து பணியாற்ற ஆரம்பித்தார். சமீபத்தில் நடந்த கட்சி கூட்டத்தில் ட்ரம்ப் உரையாற்றிய போது , காஷ் பட்டேலை நோக்கி “ தயாராக இருங்கள் காஷ்.. தயாராக இருங்கள்..!” என உரக்க பேசியது, ட்ரம்ப்பின் ஆட்சிக்காலத்தில் பட்டேலுக்கு மிக பிரகாசமான வாய்ப்பு உள்ளது என்பதை உணர்த்தியுள்ளது.
தற்போது காஷ் அமெரிக்க உளவுத்துறையின் இயக்குநராக நியமிக்கப்பட உள்ளார் என்கிற செய்தி அதை ஊர்ஜிதப்படுத்தியிருக்கிறது.
இருந்தாலும் காஷ் பட்டேல் எஃப்பிஐ யின் இயக்குநராவது அவ்வளவு சுலபம் அல்ல. அதற்கு செனட் சபையின் ஆதரவு தேவை. அங்கே குடியரசுக் கட்சியினர் பெரும்பான்மையைப்பெற்றிருப்பதால் அது எளிதாக தெரிந்தாலும், அதற்கு உத்தரவாதம் இல்லை.
ஒரு வேளை அது நடக்கவில்லை என்றால்,பட்டேல் தேசிய பாதுகாப்பு கவுன்சிலில் நியமிக்கப்படலாம் என்றுகூறப்படுகிறது.
பட்டேல் அமெரிக்க உளவுத்துறையின் இயக்குநராவதற்கு எதிர்ப்புகளும் கிளம்பியுள்ளன.
செப்டம்பரில் தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் பட்டேல் “நான் எஃப்பிஐ யின் இயக்குநராக பதவியேற்றால், முதல் நாளிலேயே எனது முதல் வேலை எஃப்பிஐ அலுவலகமான ஹூவர்கட்டிடத்தை இழுத்து மூடுவது தான்.
அதை அருங்காட்சியகமாக மாற்றிவிட்டு, வாஷிங்டன், டி.சி.யில் வசதியாக வாழ்ந்துக்கொண்டிருக்கும் உளவுத்துறையின் 7,000 ஊழியர்களைஅமெரிக்கா முழுவதும் அனுப்பி போலீஸ் அதிகாரிகளாகப் பணியாற்ற வைப்பேன்” என கூறியது மிகப்பெரிய அதிர்வலைகளை கிளப்பியது.
“சுதந்திரமாக இயங்கும் அதிகாரம் படைத்த எஃப்பிஐ தனது இரகசிய மற்றும் அதிகாரப்பூர்வமற்ற வலையமைப்பை கொண்டு, அமெரிக்க மக்களுக்காக பணியாற்றாமல் அரசாங்கத்தின் ஊழல்களையும் சட்ட விரோத செயல்களையும் மூடி மறைப்பதற்காக செயல்படுகிறது . நான் பதவியேற்றால் உளவுத்துறையின் சீர்கேடுகளை ஒழிப்பதுதான் எனது தலையாய வேலை “ என்கிறார்.
பட்டேலை எஃப்பிஐயின் இயக்குநராக நியமிப்பது மிக மிக ஆபத்தான விஷயம் என்று எஃப்பிஐயின் முன்னாள் அதிகாரி
டேனியல் ப்ரூனர் எச்சரிக்கிறார்.
2021 கேபிடல் கலவரத்தின் போது பாதுகாப்புச் செயலர் கிறிஸ் மில்லரின் தலைமை இயக்குநராகஇருந்த பட்டேல் கலவரத்தை நிறுத்த எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை எனவும், எதிர்காலத்திலும் நடுநிலையாக முடிவெடுக்காமல், ட்ரம்பின் பழிவாங்கும் கோரிக்கைகளைமட்டுமே நிறைவேற்றுவார் என்றும் ப்ரூன்னர் தனது அச்சத்தை வெளிப்படுத்துகிறார்.
படேலின் நியமனம் உலகளவிலான சேதத்தை ஏற்படுத்தும் என்று கணிக்கிற ப்ரூன்னர், "காஷ்படேலைப் போன்ற ஒருவரை எஃப்பிஐ யின் இயக்குநர் பதவியில் அமர்த்துவது, பயங்கர ஆபத்தானது என்று நான் நம்புகிறேன்" என்கிறார்.
ஆனால் அமெரிக்க மக்களில் பலர் பட்டேல் அமெரிக்க உளவுத்துறையின் இயக்குநராகி அத்துறையின் ஊழல்களை களைவது நல்லது தானே அவரை வரவேற்கிறோம் என்கிறார்கள்.
அதிபர் ட்ரம்ப், அவரின் அரசியல் பயணத்தில் உதவுகிற மிகத்தீவிர விசுவாசிகளை கூடவே வைத்து பதவிகளை அளித்து அழகு பார்ப்பவர்.
காஷ்யப் பட்டேல் ட்ரம்ப்பின் முக்கிய விசுவாசியாக இருப்பதால்,ட்ரம்ப் ஆட்சியில் பட்டேலின் வளர்ச்சி உச்சத்தை எட்டும் என்றே எதிர்ப்பார்க்கலாம்.
Leave a comment
Upload