தொடர்கள்
பொது
" தலைகுனிந்து நிற்கும் மலைகளின் அரசி " - ஸ்வேதா அப்புதாஸ்

கடந்த 8 ஆம் தேதி இரவு 8 மணியளவில் ஊட்டி கோத்தகிரி சாலையில் ஒரு தனியார் கார் சென்று கொண்டிருக்க தொட்டபெட்டா ஜங்க்ஷனில் மாவட்ட ஊழல் தடுப்பு கண்காணிப்பு டி .எஸ் .பி ஜெயக்குமார் மற்றும் இன்ஸ்பெக்டர் பரிமளா தேவி தகவலின் பேரில் பின் தொடர்ந்து தடுத்து நிறுத்தி சோதனையிட்டபோது அந்த காரில் 11.70 லட்சம் பணம் பிடிப்பட்டது .

20241021225517203.jpg

இவ்வளவு பணத்தை எடுத்து கொண்டு கூலாக சென்னைக்கு பயணித்த நபர் ஊட்டி நகராட்சி ஆணையர் ஜஹாங்கிர் பாஷா என்றவுடன் அதிர்ச்சியில் உறைந்து போனது ஊட்டி !.

அந்த 11.70 லட்சம் ரொக்கத்துடன் ஆணையாளர் ஜகாங்கீர் பாஷாவை நகராட்சி அலுவலகத்திற்கு அழைத்து வந்து அவரின் அறையில் அவரின் இருக்கையில் அமரவைத்து விடிய விடிய விசாரித்து 11.70 லட்சம் பணத்தை அவரின் டேபிள் மேல் வைத்து எண்ணியுள்ளனர் .

20241021225625472.jpg

அடுத்த நாள் அவர் மேல் வழக்கு பதிவு செய்து விசாரணை தொடர்கிறது .

10 ஆம் தேதி திங்கட்கிழமை எதுவமே நடக்காதது போல மாவட்ட ஆட்சியர் குறை கேட்கும் கூட்டத்தில் இந்த ஆணையாளர் கலந்து கொண்டது தான் ஐலைட் !.

எப்படி இவ்வளவு பணத்தை அள்ளிக்கொண்டு எஸ்கேப் ஆக புறப்பட்டார் இந்த மதிப்பிற்குரிய ஆணையாளர் என்று விசாரிக்கும் போது ஷாக் அடிக்கும் தகவல்கள் கிடைத்தன .

ஊட்டி நகரில் சாலை புதுப்பிக்கும் பணியை செய்து வரும் காண்ட்ராக்டர்களிடம் இருந்து வலுக்கட்டாயமாக பெற்ற லஞ்ச பணமும் மேலும் ஊட்டி குன்னூர் சாலையில் தமிழகத்தின் பிரமாண்டமான போர்க்கால அடிப்படையில் கட்டியெழுப்பின டெக்ஸ்டைல் ஷோ ரூமிடமிருந்து பெற்ற மிக பெரிய தொகையும் இதில் அடங்குமாம் .

இத்தனை பணத்தையும் சென்னைக்கு எடுத்து செல்லும் போது அவரின் அலுவலக விசுவாச நபர்களால் ஊழல் தடுப்பு கண்காணிப்பு காவல் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்க லாவகமாக சிக்கிக்கொண்டார் ஆணையாளர் .

20241021225721741.jpg

ஊட்டி நகரின் பெரும்பாலான சாலைகள் மிக மோசமான நிலைமையில் இருப்பது தான் வேதனை .

ஒரு முக்கிய கவுன்சிலர் போனில் பேசுவதை நாம் காது கொடுத்து கேட்டோம் ,

" சார் இந்த கமிஷனர் இரக்கமற்றவர், நகராட்சி ஊழியர்கள் சிலர் மாற்றலாகி கூடலூர் , பந்தலூர் , நெல்லியாளம் செல்ல அவர்களின் ஊட்டி குடியிருப்பை உடனடியாக காலி செய்ய தொல்லை கொடுத்தவர் . அலுவலகத்தின் உள்ளே ஊழியர்களுக்கு ஏகப்பட்ட டார்ச்சர் கொடுத்த மகான் , இவர் ஊழல் தடுப்பு காவல் துறையிடம் சிக்கும் அதே நாளில் மாலை 6.30 மணிக்கு நான் அவரை சந்தித்து ஊழியர்களிடம் கடுமையாக நடக்க வேண்டாம் என்று கூறினேன் அதை அவர் கேட்கும் எண்ணத்தில் அவர் இல்லை இரவு அவர் சிக்கின தகவல் வந்தது தான் ஷாக்கிங் என்று கூறினார் .

கடந்த மாதம் முழுவதும் நகராட்சி குப்பை எடுத்து செல்லும் வாகனத்தில் பொது மக்களை மிரட்டும் அறிவிப்பு அலறிக்கொண்டிருந்தது " வீட்டு வரி , குடிதண்ணீர் வரி ,கழிவு குப்பை வரி ஆறு மாத தவணையில் உடனடியாக கட்டவேண்டும் இல்லையேல் குடிநீர் துண்டிக்கப்படும் .உடனடியாக கட்டணத்தை கட்டுவோருக்கு சில சலுகைகள் வழங்கப்படும் " என்று அறிவிக்க என்ன சலுகைகள் என்பது தான் மிக பெரிய கேள்விக்குறி .

ஆணையாளர் ஊழல் வழக்கில் சிக்கினவுடன் அந்த அறிவிப்பு நிறுத்தப்பட்டுவிட்டது .

ஒரு பத்திரிகையாளர் நம்மிடம் பேசினார் , "நீலகிரி அதிலும் மலைகளின் அரசியான ஊட்டி உலகப்பிரசித்தி பெற்றது .

20241021225805651.jpg

இங்கு பொறுப்பேற்கும் எல்லா அதிகாரிகளுக்கும் ஒரு பெருமையான விஷயம் தான் .ஊட்டி யில் ஒரு முக்கிய அதிகாரியாக பதவி வகிப்பது ஒரு கௌரவமான ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது .

பிரிட்டிஷ் காலத்தில் இருந்து இன்று வரை எந்த ஒரு மிக முக்கிய அதிகாரிகளும் எந்த களங்கத்தையும் ஏற்படுத்தவில்லை .

மிக சிறந்த மனிதாபிமான முறையில் பணி செய்து சிறந்த முத்திரையை பதித்து சென்றுள்ளனர் .

இப்படிப்பட்ட மலைகளின் அரசிக்கு களங்கம் ஏற்படுத்தும் அதிகாரிகள் தான் தலைகுனிந்து நிற்க வேண்டும் ".என்று கூறினார் .

ஊட்டி நகராட்சியில் இன்னும் பலர் விரைவில் சிக்குவார்கள் என்று கூறப்படுகிறது .

ஆணையாளர் மற்றும் கலெக்டர் டேவிஸ் முதல் மிக சிறந்த நகராட்சி ஆணையாளர்கள் பணிபுரிந்த ஊட்டியில் இது தான் முதல் முறை ஒரு ஊழல் ஆணையாளர் சிக்கியுள்ளது .

ஏற்கனவே இதே நகராட்சியில் இவர் பணிபுரிந்துள்ளார் .தற்போது காத்திருப்போர் பட்டியலில் ஊசலாடி கொண்டிருக்கிறார் .

20241021231022105.jpg

நீலகிரியில் பல அலுவலகங்களில் இன்னும் ஏகப்பட்ட அதிகாரிகள் லட்சங்களில் லஞ்ச வசூல் வேட்டையில் படு பிசியாக இருக்கிறார்கள் என்ற தகவல் மலைகளின் அரசியை கவலையில் ஆழ்த்தியுள்ளது .

ஊழல் தடுப்பு கண்காணிப்பு காவல் துறையினரின் காந்த பார்வை இவர்கள் மேல் படர்ந்துகொண்டிருக்கிறதாம் .

அதே சமயம் லஞ்சம் வாங்கி சிக்கி கைது செய்யப்பட்ட அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் குடும்பங்களை நினைத்து கண்கலங்குகிறாள் மலைகளின் அரசி !.