தமிழ் சினிமா பிரபலங்களின் விவாகரத்து தற்சமயம் தொடர்கதையாகி வருகிறது. ஏற்கனவே தனுஷ் ஐஸ்வர்யா, ஜெயம் ரவி வரிசையில் ஏ.ஆர்.ரஹ்மான் சாய்ரா பானு இந்த வார பரபரப்பு செய்தி. 29 வருட திருமண வாழ்க்கை திடீரென அவர்களுக்கு கசந்தது ஆச்சரியம். அவர்கள் இருவரும் வெளியிட்டுள்ள அறிக்கையில் அதற்கான காரணத்தை தெரிவிக்கவில்லை. இது எங்கள் தனிப்பட்ட விஷயம் என்று சொல்லி யாரும் கருத்துக்கதிர்வேலர்களாக மாறாதீர்கள் என்று மறைமுகமாக குறிப்பிட்டிருக்கிறார்கள்.
1995-ஆம் ஆண்டு ஏ.ஆர்.ரஹ்மான் சாய்ரா பானு திருமணம் நடந்தது. இது பெற்றோர்கள் பார்த்து செய்து வைத்த திருமணம். இவர்களுக்கு கதிஜா, ரஹீமா, அமீன் என்று மூன்று குழந்தைகள் மூவருமே விவரம் தெரிந்த வயதை தொட்டவர்கள்.
சாய்ரா பானு சார்பாக அவரது வழக்கறிஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தனது கணவரை பிரியும் கடினமான முடிவை சாய்ரா எடுத்துள்ளார் என்று வழக்கறிஞர் குறிப்பிடுகிறார். அவர்களுடைய உறவில் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க உணர்வு ரீதியான அழுத்தத்திற்கு பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றும் வழக்கறிஞர் அந்த அறிக்கையில் சொல்லி இருக்கிறார். ஆனால் அந்த "உணர்வு ரீதியான அழுத்தம் "என்ன என்பது அந்த அறிக்கையில் இல்லை. ஆனால் வலி மற்றும் வேதனையில் தான் இந்த முடிவை எடுத்துள்ளதாக சாய்ரா அந்த அறிக்கை மூலம் தெரிவித்து இருக்கிறார். இந்த கடினமான அத்தியாயத்தை கடக்கும் இந்த நேரத்தில் சாய்ரா தன்னுடைய பிரைவசியை மதிக்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கையும் வைத்திருக்கிறார். அதாவது வாய்க்கு வந்தபடி பேசாதீர்கள். எங்கள் பிரச்சனை எங்கள் இருவரோடு போகட்டும் என்பதை மறைமுகமாக குறிப்பிடுகிறார் சாய்ரா.
ஏ.ஆர்.ரஹ்மான் வக்கீல் எல்லாம் வைத்துக் கொள்ளவில்லை. அவரே இந்த தகவலை எக்ஸ் வலைதள பதிவில் "திருமண பந்தத்தில் 30 ஆண்டுகளை எட்டுவோம் என்று நாங்கள் நம்பி இருந்தோம். ஆனால், அனைத்தும் முடிவுக்கு வந்து விட்டதாக தெரிகிறது. கடவுளின் சிம்மாசனம் கூட உடைந்த இதயங்களின் கனத்தில் நடுங்கக்கூடும் .இந்த பலவீனமான அத்தியாயத்தை நாங்கள் கடந்து செல்லும் போது எங்கள் தனியுரிமைக்கு மதிப்பளிக்கும் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி "என்று தெரிவித்திருக்கிறார். அவரும் அவரது மனைவி போல் இது எங்க சொந்த பிரச்சினை சோகப் பிரச்சனை நீங்கள் யாரும் கருத்து சொல்ல வேண்டாம் என்று கொஞ்சம் வெளிப்படையாக சொல்லி இருக்கிறார். அதனால் தான் முன்கூட்டியே நன்றி என்று பதிவிட்டு இருக்கிறார் இசைப்புயல்.
ஒரு தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் ஏ.ஆர்.ரஹ்மான் என்னுடைய ஒவ்வொரு அசைவும் என்னுடைய மனைவியுடையது என்று பெருமைப்பட பேசி இருக்கிறார். அவ்வளவு சிலாகித்து தனது மனைவி பெருமை பேசிய ஏ.ஆர்.ரஹ்மான் தான் இல்வாழ்க்கை கசந்து விட்டது என்று விலகுகிறார். திருமதி ஏ.ஆர்.ரஹ்மான் குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர். அவருக்கு தமிழ் சரியாக பேச வராது. ஒரு முறை பொது மேடையில் சாயிரா இந்தியில் பேசினார். கணவர் ரஹ்மான் அவரை தமிழில் பேசும் படிசொன்ன போது எனக்கு தமிழில் அவ்வளவாக பேச வராது என்று பதில் கூறினார்.
இந்த சம்பவத்தை வைத்து இசைப்புயலை கலாய்ப்பதாக நினைத்து நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில் உங்கள் மனைவிக்கு தமிழ் பேச வராதா அவர் தாய்மொழி என்ன என்று கிண்டல் அடித்தார். இதற்கு ரஹ்மான் சொன்ன பதில் காதலுக்கு மரியாதை என்பது !! எல்லா முடிவுகளும் விளைவுகள் பற்றி யோசிக்காமல் ஒரு நொடியில் தீர்மானிப்பது தான் என்று ஒரு அறிஞர் குறிப்பிட்டார்.
இசைப்புயல் விவாகரத்து அதை உண்மை என்று தான் சொல்கிறது.
யோசித்துப் பார்த்தால் திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்று சொல்வார்கள். விவாகரத்துக்கள் எங்கு நிச்சயிக்கப்படுகிறது. ?? நம் மனங்களில்.
காயப்படாத மனங்களும் இல்லை, கல்லடிபடாத உறவுகளும் இல்லை. தற்போது தொட்டால் விவாகரத்து என்று போகும் போக்கு நல்லதா ?? அதிலும் 25 வருடங்கள் கடந்த திருமண உறவுகள் கலைந்து போவது நம் சமூகம் எங்கே செல்கிறது என்று யோசிக்க வைக்கிறது ???
புது தம்பதிகள் இப்படி முடிவெடுத்தால் நாம் சொல்லலாம். திருமணம் என்பது ஒரு பந்தம. ஆரம்பத்தில் கஷ்டமாகத்தான் இருக்கும். இருவருக்குமே தத்தம் சுதந்திரம் பறி போனது போல இருக்கும் அவசரப்பட வேண்டாம் என்றெல்லாம் ஆயிரம் புத்தகங்களிலிருந்தும் கருத்துக்களை பகிரலாம்.
ஆனால் இப்படி கிழங்கட்டைகளான பிறகும் விவாகரத்து என்பது கேலிக்குறியது போல இருக்கிறது. ஒரு வேளை சமூக ஊடக தொழில்நுட்பம் காரணமா ?? என்னவோ..
நம் சமூகத்தின் வருங்கால சந்ததிகள் இந்த கலாச்சாரத்தை கற்றுக் கொள்ளாமல் இருக்க வேண்டும்.
திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டு நம் மனங்களில் நிரந்தரமாக நிலைக்கட்டும். !!!!
Leave a comment
Upload