(படம் நன்றி ஷட்டர்ஸ்டாக்)
சமீப காலமாக விரும்பாத காதல் தனது மரியாதையை தொலைத்து விட்டதோ என்று சந்தேகப்படும் படியான சம்பவங்கள் தமிழ்நாட்டில் அரங்கேறத் தொடங்கியுள்ளன
தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டணம் அருகே உள்ள சின்னமலை கிராமத்தைச் சேர்ந்தவர் ரமணி. 25 வயதான ரமணி மல்லிப்பட்டினம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் கடந்த ஜூன் 10-ஆம் தேதி தற்காலிக தமிழாசிரியராக நியமிக்கப்பட்டார்.
ரமணி வசிக்கும் அதே கிராமத்தை சேர்ந்தவர் 28 வயதான மதன்குமார். இவர் ஆரம்பத்தில் சிங்கப்பூரில் வேலை பார்த்து வந்தார். ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு சிங்கப்பூரிலிருந்து தனது சொந்த கிராமம் வந்து மீன் பிடித்தொழில் ஈடுபட்டு வருகிறார். ரமணியும் மதன்குமாரும் காதலித்து வந்தார்கள். கடந்த சில மாதங்களுக்கு முன்பு மதன்குமாரின் பெற்றோர் ஆசிரியை ரமணியின் பெற்றோரை சந்தித்து தனது மகன் திருமணம் சம்பந்தமாக பேசியபோது உங்கள் மகன் நடவடிக்கை சரியில்லை என்று கூறி பெண் தர மறுத்து விட்டார்கள். தவிர மதன் நடவடிக்கை பற்றி ரமணிக்கும் சில விஷயங்கள் திடீரென தெரிய வர அவருக்கும் அவர் மீது இருந்த காதல் காணாமல் போனது. அதனைத் தொடர்ந்து அவரை சந்திப்பதை தவிர்த்தார் ரமணி. மதன்குமார் சந்திக்க முயற்சி செய்தபோது கூட ரமணி அவருடன் பேச விருப்பமில்லை என்று மறுத்துவிட்டார். சில தினங்களுக்கு முன் மதன்குமார் ரமணியை வழிமறித்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்திய போது ரமணி உறுதிப்பட மறுத்துவிட்டார்.
அதன் பிறகு புதன்கிழமை காலை அதாவது நவம்பர் 20-ஆம் தேதி ரமணி பணி புரியும் பள்ளிக்குச் சென்ற மதன்குமார் ஆசிரியர்கள் அறையை விட்டு வெளியே வந்து நின்று கொண்டிருந்த ரமணியை சந்தித்து தகராறு செய்திருக்கிறார். இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட ஒரு கட்டத்தில் தான் மறைத்து வைத்திருந்த மீன் வெட்டும் கத்தியால் கழுத்து உள்பட பல்வேறு இடங்களில் குத்தி விட்டு தப்பியோட முயற்சி செய்து இருக்கிறார் மதன்குமார் ஆசிரியர்கள் மாணவர்கள் கூச்சலிட்டதை தொடர்ந்து பள்ளிக்கு வெளியே சாலையில் ஆட்சியர் வருகையை ஒட்டி பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை மடக்கி பிடித்தார்கள். பலத்த காயமடைந்த ரமணி அதிக அளவு ரத்தப் போக்கு காரணமாக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது வழியிலேயே அவர் உயிர் போனது. அவர் மருத்துவமனைக்கு வரும்போது இறந்துவிட்டார் என்று டாக்டர்கள் அறிவித்தார்கள்.
முதல்வர் உள்பட பல தலைவர்கள் இந்த கத்திக்குத்து சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள். தமிழக அரசு அந்த குடும்பத்திற்கு நிவாரணத் தொகையாக 5 லட்சம் ரூபாய் கொடுத்திருக்கிறது.
ரமணி கொலை பரபரப்பு அடங்குவதற்குள் மதுரை ஒத்தக்கடை பகுதியில் கடையில் பணிபுரியும் இளம் பெண் மீது ஒரு இளைஞர் சரமாரி தாக்குதல் நடத்தும் வீடியோ சமீபத்தில் நம்மை பதைபதைக்க வைக்கிறது. காரணம் அந்தப் பெண்மணி சித்திக் ராஜா என்ற இளைஞரை காதலிக்க மறுத்ததால் இந்த தாக்குதல் என்று அவரை கைது செய்த போலீஸ் தகவல் சொல்கிறது.
இன்னொரு சம்பவம் இது நேற்று நடந்தது கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தாலுகா ஆபீஸ் சாலையில் நீதிமன்ற வளாகம், காவல் நிலையம்,தாலுக்கா அலுவலகம், எம் எல் ஏ அலுவலகம் என்று பரபரப்பான இடம் அது. ஓசூரில் மிக முக்கியமான சாலை என்று கூட சொல்லலாம். அங்கிருந்த நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்த வக்கீல் ஒருவரை அந்த பரபரப்பான பட்டப் பகலில் சாலையில் ஒருவர் வெட்டி பலத்த காயத்தை ஏற்படுத்தினார். இந்த வீடியோவும் தற்சமயம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி கொண்டு இருக்கிறது. இதில் வேடிக்கை என்னவென்றால் அந்த இளைஞர் அந்த வழக்கறிஞரை கத்தியால் தாக்கிக் கொண்டிருக்கும் போது பொதுமக்கள் வேடிக்கை பார்க்கிறார்கள். இரு சக்கர வாகனங்களில் கடந்து போகிறார்கள் சிலர் சீரியஸாக வீடியோ எடுத்துக் கொண்டிருந்தார்கள். யாரும் போய் அவரை தடுக்கவில்லை. சமூக ஊடகங்களின் தாக்கம்.
வக்கீல் தாக்கப்பட்டதற்கு காரணம் ஏன் என்று விவரம் தற்சமயம் வெளியாகி இருக்கிறது. பெண்கள் விஷயம் போலும்.
நாம் எங்கே போய்க் கொண்டிருக்கிறோம் என்று யாராவது கேட்டால் தெரியலையே என்று தான் நாம் பதில் சொல்ல வேண்டும் போலிருக்கிறது. கலாச்சார சீரிழவை நோக்கி நாம் போய்க் கொண்டிருக்கிறோம் என்பது மட்டும் தெரிகிறது.
ஒரு காலத்தில் ஸ்டெல்லா புரூஸ் காதல் கதைகளைப் படிக்கையில் காதல் என்பது புனிதமானது என்று தோற்றம் இருந்தது.
காதல் போயின் சாதல் என்பது காதலித்தவரை கொல்வது அல்ல. அது காதலும் அல்ல.
காதல் என்பதும் ஒரு வகையான பண்டமாற்று போல இன்றைய நாளில் மாறிப் போனது அதிர்ச்சியாகவே இருக்கிறது.
Leave a comment
Upload