“நாம் போன வாரம் பேசியது போல இந்த வாரம் முதல் சித்திரக் கவியில் உள்ள வகைகள் ஒவ்வொன்றாக பார்ப்போம்” என்று ஆரம்பிக்கிறார் பரணீதரன்
கோமூத்திரி
முதலில் வருவது கோமூத்ரி சித்திரக்கவி ஆகும். கோமூத்ரி - கோ (பசு) + மூத்ரி (கோமியம்).
எப்படி ஒரு பசுவானது நடந்து செல்லும் பொழுது அதிலிருந்து விழும் கோமியம் எதிர் எதிர் வளைவுகள் கொண்டுள்ளதோ அதேபோல் பாடலின் முதல் வரியில் உள்ள எழுத்துக்களும் இரண்டாவது வரியில் உள்ள எழுத்துக்களையும் வைத்து மீண்டும் அதே பாடலை உருவாக்க முடியும்
இதற்கான எடுத்துக்காட்டை கீழே உள்ள பாடலில் பார்ப்போம். இது தண்டியலங்காரத்தில் உள்ள ஒரு எடுத்துக்காட்டு.
பருவ மாகவி தோகன மாலையே
பொருவி லாவுழை மேவன கானமே
மருவு மாசைவி டாகன மாலையே
வெருவ லாயிழை பூவணி காலமே
முதல் வரியை அப்படியே படித்துவிட்டு அதன் பிறகு முதல் வரியில் உள்ள முதல் எழுத்தையும் இரண்டாவது வரியில் உள்ள இரண்டாவது எழுத்தையும் சேர்த்தால் முதல் வரியில் உள்ள முதல் இரண்டு எழுத்துக்கள் கிடைக்கும். இதே போல் முதல் வரியில் ஒற்றை படை எழுத்துக்களையும் அடுத்த வரியில் இரட்டை படை எழுத்துக்களையும் சேர்த்தால் மீண்டும் அந்த இரண்டு வரிகளும் கிடைக்கும். இதுவே கோமூத்ரி. கீழே உள்ள படத்தைப் பார்த்தால் உங்களுக்கு அது புரியும்.
மற்றொரு எடுத்துக்காட்டு மாறனலங்காரத்தில் உள்ளது. அந்த பாடலை கீழே கொடுத்துள்ளேன்
மாயா மாயா நாதா மாவா
வேயா நாதா கோதா வேதா
காயா காயா போதா காவா
பாயா மீதா பேதா பேதா
யாப்பருங்கல விருத்தி நூலில் இரண்டு எடுத்துக்காட்டுகள் உள்ளன. அவை கீழே உள்ளது.
மேவார் சார்கை சார்வாகா
மேவார் சார்கை சார்வாமா
காவார் சார்கை சார்வாகா
மேவார் சார்கை சார்வாமா
பரவிப் பாரகத்தார் பணியுங்கழ
லிரவி யீர்ந்தண் வலம்புரி மாலையே
விரவிப் போர்வைத் தார்துணி வெங்கழ
லிரவி யீர்ந்தண் வலம்புரி மாலையே
கூடசதுர்த்தம்
அடுத்ததாக நாம் பார்க்கப்போவது கூடசதுக்கம் என்ற சித்திரக் கவி. இதை கூட சதுர்த்தம் என்றும் கூறுவர். கூடம் (மறைந்திருப்பது) + சதுர்த்தம் (நான்காவது), அதாவது நான்காவது அடியில் உள்ள எழுத்துக்கள் அனைத்தும் முதல் மூன்று அடிக்குள் (மறைந்து) இருக்கும். எடுத்துக்காட்டாக கீழே உள்ள மாறனலங்கார எடுத்துக்காட்டு பாடலை பார்ப்போம்.
நாதா மானதா தூய தாருளா
ணீதா னாவா சீராம னாமனா
போதா சீமா னாதர விராமா
தாதா தாணீ வாமனா சீதரா
இந்தச் செய்யுளை கீழே உள்ளது போல நாம் வகைப்படுத்தினால், அதாவது இடமிருந்து வலமாக உள்ள முதல் மூன்று அடிகளை மேலிருந்து கீழாக எழுதினால், நான்காவது அடி நமக்கு கிடைக்கும்.
நா ன ய ளா னா ரா ம தா னா வி
தா தா தா ணீ வா ம னா சீ த ரா
மா தூ ரு தா சீ னா போ மா ர மா
மற்றொரு எடுத்துக்காட்டு கீழே உள்ளது.
புகைத்தகைச் சொற்படைக் கைக்கதக்கட்பிறைப் பற்கறுத்த
பகைத்திறச் சொற்கெடச் செற்றகச் சிப்பதித் துர்க்கைபொற்புத்
தகைத்ததித் தித்ததுத் தத்தசொற் றத்தைப்பத் தித்திறத்தே
திகைத்தசித் தத்தைத் துடைத்தபிற் பற்றுக் கெடக்கற்பதே
மாலை மாற்று
அடுத்ததாக சித்திரக் கவியில் நாம் பார்க்கப்போவது மாலை மாற்று பகுதியாகும். ஒரு செய்யுளை இடமிருந்து வலமாக படித்தாலும் அல்லது வலமிருந்து இடமாக படித்தாலும் ஒன்று போலவே இருக்கும் சித்திரக் கவி தான் மாலை மாற்று. இதை ஆங்கிலத்தில் பாலின்றோம் (Palindrome) என்று அழைப்பர். பழங்கால செய்யுள்களில் மாலை மாற்று சித்திரக் கவி நிறைய வந்துள்ளது. அவற்றில் சிலவற்றை நாம் கீழே பார்ப்போம்.
நீவாத மாதவா தாமோக ராகமோ
தாவாத மாதவா நீ
- தண்டியலங்காரம்
வாயாயா நீகாவா யாதாமா தாமாதா
யாவாகா நீயாயா வா
- தண்டியலங்காரம்
பூவாளை நாறுநீ பூமேக லோகமே
பூநீறு நாளைவா பூ
- தண்டியலங்காரம்
யாமாமா நீ யாமாமா யாழீ காமா காணாகா
காணா காமா காழீயா மாமாயாநீ மாமாயா
- திருஞானசம்பந்தர்
யாகாயாழீ காயாகா தாயாராரா தாயாயா
யாயாதா ராராயாதா காயாகாழீ யாகாயா
- திருஞானசம்பந்தர்
மாலை மாற்று சித்திரக் கவியை வடமொழியில் விலோம காவியம் என்று அழைப்பர். வடமொழி இலக்கியமான வேங்கடாத்வரி அவர்களால் இயற்றப்பட்ட ராகவ யாதவீயம் மாலை மாற்றுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. இந்த நூலை மேலிருந்து கீழாக படித்தால் ராமாயணமும் (ராகவ சரித்திரம்), கீழ் இருந்து மேலாக படித்தால் பாகவத புராணமும் அதாவது கிருஷ்ணருடைய கதையும் (யாதவ சரித்திரம்) வரும். அதே போல வட மொழியில் சூரியதாசர் அவர்களால் இயற்றப்பட்ட ராமகிருஷ்ண விலோம காவியம் என்ற நூலிலும் இடமிருந்து வலமாக படித்தால் ராமாயணமும் வலமிருந்து இடமாக பிடித்தால் கிருஷ்ணருடைய கதையும் வரும். சப்தார்த சிந்தாமணி, நளஹர்ஷ சந்திரியா போன்ற நூல்களும் விலோம காவியங்களே.
நமது இதழான விகடகவி என்ற பெயரும் மாலை மாற்று சொல்லே ஆகும்.
மற்ற கவி வகைகளை வரும் வாரம் பார்க்கலாம் என்று விடை பெற்றார் நமது பரணீதரன்.
Leave a comment
Upload