தொடர்கள்
கதை
நாம் என்ன செய்யணும் சொல்லுங்கோ - எஸ்.மைக்கேல் ஜீவ நேசன்

20241023005438937.jpeg

மதிப்பிற்குரிய தோழருக்கு, வணக்கம்!

நீங்கள் அனுப்பிய 'தேனி மாவட்ட சிறுகதைகள் தொகுப்பு'- இன்னும் கிடைக்கவில்லை. நீங்கள் சேலத்துக்காரராக இருந்தாலும் மாவட்ட ரீதியாக சிறுகதைகளை தொகுத்து வெளியிடுவது பாராட்டுக்குரியது. இதில் உங்களுக்கு எந்த பிரதிபலனோ,பண ஆதாயமோ கிடையாது என அறிவேன். சமூகத்தின் மீதும் இலக்கியத்தின் மீதும் உள்ள அதீத பற்றின் காரணமாக உங்கள் சேமிப்பு தொகையை செலவிடுகிறீர்கள் என அறியும் போது நெகிழ்ச்சியாக உள்ளது.

அரசு தபால் துறையின் மூலம் அனுப்பும் போது அலட்சிய போக்கு நிகழ்வதால் உரிய நேரத்தில் புத்தகம் சென்றடைவதில்லை என்பது எனக்கும் அனுபவமே. அதனால், தனியார் தூதஞ்சல் மூலமாக கனிசமாக தொகை செலுத்தி அனுப்பி உள்ளீர்கள். ஆனால், மக்கள் சேவையில் பணம் பெற்று செயல்படுபவர்களும் சில நேரங்களில் அப்படித்தான் இருக்கிறார்கள் என்பதற்கு உதாரணமாக இருக்கிறது.

தூதஞ்சலிலிருந்து 'புத்தக பையை' எடுத்துக் கொண்டு அதில் குறிப்பிட்டுள்ள என் வீட்டு முகவரி முன் வந்து நின்று அலைபேசி மூலம் அழைத்து பார்த்துவிட்டு பதில் கிடைக்காததால் புத்தக பையை திருப்பி அனுப்பிவிட்டதாக தூதஞ்சல் நிறுவனர் சொல்கிறார். உண்மையில் அவர் அலைபேசி மூலம் அழைத்த எண் அவர்கள் இணைய முகவரியில் கொடுக்கப்பட்ட எண் அல்ல. நான் அந்த எண்ணை சேமித்து வைத்திருந்ததால் அந்த எண்ணின் அழைப்பை மட்டுமே எதிர் பார்த்திருந்தேன். தினமும் சேமிப்பில் இல்லாத பத்துக்கும் மேற்பட்ட விளம்பர அழைப்புகளுக்கெல்லாம் நான் பதில் கூறுவதும்மில்லை. மேலும் புத்தக பை திரும்பி வந்துவிட்டதாக உங்கள் குருஞ் செய்தியை கண்டவுடன் தூதஞ்சலின் இணைய எண்ணுக்கு அழைப்புவிடுத்தேன். நான்கு முறை அழைத்தும் அவர்கள் பதில் கொடுக்கவில்லை.ஐந்தாவதாக அழைத்த போது சுட்சு ஆப் என்று குரல் விளக்கம் மட்டுமே கேட்டது.

நான் மறுநாள் விடுப்பு எடுத்துக் கொண்டு தூதஞ்சல் அலுவலகத்திற்கு சென்றேன். நான் அவர்களிடம் கேட்ட முதல் கேள்வி வீட்டு முகவரி சரியாக இருக்கிறது. அங்கு வந்து நின்று அலைபேசியில் அழைக்க வேண்டிய அவசியம் என்ன என்றும் , வீடு பூட்டி இருந்தால் மட்டுமே அலைபேசியில் அழைக்க நேரிடும்தானே என்று கேட்டேன். அவர்களோ முகவரி சரியாக இருந்தாலும் அலைபேசியில் அழைத்து உறுதி செய்ய வேண்டியது எங்கள் கடமை என்றார். அதையே நீங்கள் வீட்டில் இருப்பவர்களிடம் கேட்டு உறுதி செய்து கொள்ள முடியாதா என்றும் அழைப்பை எடுக்காததால் புத்தக பையை திருப்பி அனுப்புவது பொறுப்பான செயல்தானா என்றும் கேட்டேன்.

இது எங்களுக்கு கொடுக்கப்பட்ட விதி என்றும் முடிந்தால் தலைமை அலுவலகம் சென்று முறையிடும்படி அவர் பதில் தந்தார். சரி, நான் உங்களுக்கு அழைப்பு கொடுத்தேனே அதை நீங்கள் ஏன் எடுக்கவில்லை. நான்கு முறையும் மணி அடித்து ஓய்ந்ததே என்று கேட்டேன்.எனது இந்த கோள்வியை சற்றும் எதிர்பார்க்காத அவர் முதலில் இல்லை, வரவில்லை! என்று சொல்லிவிட்டு தன் அலுவலக அலைபேசியை எடுத்து சரிபார்த்தார். அவர் முகத்தில் தோல்வியின் இருள் தெரிந்தது. நீங்கள் என் அழைப்பை ஏன் எடுக்கவில்லை. நான் உங்கள் சரியான இணையத்தில் உள்ள எண்ணுக்குத்தானே அழைப்புவிடுத்தேன். நீங்களோ வேறோரு எண்ணிலிருந்து எனக்கு அழைப்புவிடுத்தீர்களே எது சரி என்றேன்.

நாங்கள் எந்த எண்ணிலிருந்து அழைத்தாலும் பொருளை பெறுகிறவர் நீங்கள். எடுத்துத்தான் ஆகவேண்டும் என்று விடாப்பிடியாக தங்கள் தவறை மறைத்துக் கொண்டிருந்தார்.ஒருவருக்கு சரியான முகவரி இருந்தும் அலைபேசி எண்தான் 'முகவரி' என்று பொருளை திருப்பி அனுப்பிவிட்டீர்களே இப்போது நான் என்ன செய்ய வேண்டும் சொல்லுங்கோ என்றேன். அவருக்கு அது கையறு நிலை இல்லை. எனக்குத்தான் கையறு நிலை.

மக்களிடம் பணம் பெற்று சமூக பணி செய்பவர்கள் ஒருபடி, இரண்டுபடி இறங்கி வந்து வாடிக்கையாளரை அலைக்கழிப்பு செய்யாமல் தீர விசாரித்து கடமை ஆற்றலாமே.

நான் சிறிது மன அழுத்தத்தில் இருந்தாலும் மறுநாள் காலை தலைப்பு செய்தியை படித்த போது எனது ரத்த அழுத்தம் ஏறிவிட்டது. ஆம்! அந்த செய்தி 'மருத்துவரை கத்தியால் குத்திய இளைஞன்' செய்திதான்.

அந்த காலத்தில் வனத்தில் இருக்கும் சித்தர்கள் கடுமையான புற்று நோயையும் குணப்படுத்தினார்கள் அவரிகளிடம் மருத்துவம் பயின்றவர்களும் வைத்தியர்களாக இருந்தார்கள். வெத்தலை பாக்கு,இரண்டு ரூபாய் காணிக்கை தந்தால் போதும். நூறுவிழுக்காடு நோய் குணமாகிவிடும்.

பணப் புழக்கம் அதிகமாகிவிட்ட மருத்துவ மனைகளில் உண்மைத் தன்மை அருகிவிட்டது. தனியார் மருத்துவமனையில் புற்று நோய்க்கு சிகிச்சை எடுக்கும் போது மருந்துகளின் வீரியத்தால் தலைமுடி உதிர்வதைவிட ,அதிகப்படியான கட்டண விதிப்பால் நோயாளியின் தலை மொட்டையாகிவிடுகிறது. தங்கள் சேமிப்பை அனைத்தும் இழந்துவிட்டு இரண்டாம் பட்சமாகதான் அரசு மருத்துவமனைக்கு வருகிறார்கள் நோயாளிகள். அவர்களிடம் கனிவான பேச்சு இல்லை. அலட்சிய போக்கு. ஒவ்வொரு படி சிகிச்சைக்கும் கையூட்டு பெறுவது. பணம் கொடுக்காவிடில் கட்டாயமாக அடுத்த சிகிச்சைக்கு போகவிடாமல் தடுத்தல். மற்றும் மருத்துவர்களுக்கும்,செவிலியர்களுக்கும் இதில் சிறிது கூட பங்கு இல்லையென்றாலும் மருத்துவமனை பணியாளர்கள் கையூட்டு பெற ரகசிய சங்கமே வைத்து செயல்படுகிறார்கள். அநேக அரசு மருத்துவமனைகளில் இது போன்ற செயல்களால் நோயாளிகள் அலைக்கழிக்கப்படுவது போராட்டத்தில் இறங்கும் மருத்துவர்களுக்கு தெரியாதா?அல்லது, அரசுக்குத்தான் தெரியாதா? தங்கள் தவறுகளை மறந்து நீதி கேட்டு போராடுவதும் குற்றம்தானே?

இந்த கடிதத்தை எழுதி முடிக்கும் முன் நூறு முறை ரத்ததானம் செய்துவிட்டேன்...கொசுவுக்கு. ஏழைகள் என்றால் எல்லோருக்கும் இளப்பம்தான்.

நாம் என்ன செய்ய வேண்டும் சொல்லுங்கோ!

இப்படிக்கு உங்கள் வாசகன்.

இடம்:தேனி.