நெய்தல் நிலத்து பாவை அவள்.
கடலும் கடல் சூழ்ந்த பகுதியிலும் அவளது காதல் தழைத்து வளருகிறது .
கண்ணுக்கெட்டிய தூரம் வரை அங்கே அழகு கொட்டிக்கிடக்கிறது .
அலையும் ,கடலும், மலரும் ,கதிரும் பறவைகளும் மாலை நேரத்தில் வண்ணக் காட்சி ஒன்றைப் படைக்கிறது .
இவை எல்லாம் இருந்தும் அவள் "எனக்கு வாழ பிடிக்கவில்லை " என்று அன்புத் தோழியிடம் புலம்புகிறாள்.
திருமணத்தை தள்ளிக் கொண்டே செல்லும் காதலன் , அவளைக் காணவும் வரவில்லை என்பதே அவள் துயருக்கு காரணம்
தன் உள்ளத்தின் கவலையை தோழியிடம் உரைக்கிறாள் .
"தோழி , தலைவன் வராத மாலைப் பொழுது என்னை வருத்துகிறது .
இங்கே பார் , பெருங்கடல் முழங்கி ஒலிக்கிறது
கடற்கரை சோலைகளில் மரங்கள் பூத்துக் குலுங்குகின்றன.
கரிய உப்பங்கழிகளில் பெருகும் வெள்ளம் நம் இல்லத்தைக் கடந்துச் செல்கிறது.
பெரிய இதழ்களுடன் நெய்தல் மலர்கள் குவிகின்றன.
சோலைகளில் காக்கைகள் கூடு நோக்கி சென்று தங்குகின்றன .
செக்கச் சிவந்த கதிரவன் மேற்கே மலையைத் தொட்டு விட்டான் .எங்கும் பரவி இருந்த சூரியக்கதிர்கள் ஒளி மங்கி விட்டன .
மயக்கும் இம்மாலை நேரம் எனக்குத் நடுக்கத்தைத் தருகிறது. தலைவனைப் பிரிந்த துன்பத்தால், காமம் அதிகரித்து என் உடல் மெலிந்து விட்டது .
என் நிலையைக் காணும் ஊர் மக்கள் , கடவுள் தந்த நோயால் என் உடல் மெலிந்து விட்டது என்று பேசுகிறார்கள்.
உண்மை அதுவல்ல , காமமே காரணம் ,கவலையும் காரணம் !
ஊரார் பேசும் பண்பற்ற சொற்களால் என் மனம் புண்படுகிறது . நான் நெடுநாள் வாழ விரும்பவில்லை தோழி.நான் ஏன் வாழ வேண்டும் சொல்? "
அந்தப் பாடல் இதுதான்
பெருங் கடல் முழங்க கானல் மலர
இருங் கழி ஓதம் இல் இறந்து மலிர
வள் இதழ் நெய்தல் கூம்ப புள் உடன்
கமழ் பூம் பொதும்பர்க் கட்சி சேர
செல் சுடர் மழுங்கச் சிவந்து வாங்கு மண்டிலம்
கல் சேர்பு நண்ணிப் படர் அடைபு நடுங்க
புலம்பொடு வந்த புன்கண் மாலை
அன்னர் உன்னார் கழியின் பல் நாள்
வாழலென் வாழி தோழி என்கண்
பிணி பிறிதாகக் கூறுவர்
பழி பிறிதாகல் பண்புமார் அன்றே
(நற்றிணை 117)
குன்றியனார் எழுதிய இந்த நற்றிணைப் பாடல் பொருள் நயமும்,ஓசை நயமும் மிக்க அழகிய பாடல் .
மற்றுமொரு நல்ல பாடலுடன் , அடுத்த இதழில் சந்திப்போம்.
தொடரும்
Leave a comment
Upload