"ஆரண்ய காண்டம்" தமிழ்ப்படம் 2011 இல் வந்தது. இயக்குனர் தியாகராஜன் குமரராஜாவுக்குஅகில இந்தியாவின் சிறந்த புதிய இயக்குனர் விருது பெற்றுக்கொடுத்த அருமையான படம் இது.
இப்போது ராமாயணத்தின் அடுத்த காண்டம் கேரளத்லிருந்து அதிரடியா வந்திருக்கிறது.
ஆம்! இது "கிஷ்கிந்தா காண்டம்."
இந்த கேரளாக் காரர்களைப்பார்த்தால் கொஞ்சம் பொறாமை தான் வருகிறது!
அவர்கள் ஊரில் நெடிதுயர்ந்த காட்டு மரங்களின் மீது ஏறி அங்கு உச்சாணிக்கொப்பில் இருக்கும் அரிய பழங்களை பறிப்பது போல்,.... திரைக்கதையை எப்படித்தான் தேடி எடுக்கிறார்களோ தெரியவில்லை.!
இது நாம் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயம்தான்.
கொஞ்சம் பிசகினாலும் சிக்கலில்
மாட்டும் அபாயம் கொண்ட நூல் கண்டிலிருந்து சிக்காமல் சிதறாமல் நூல் எடுத்து காஞ்சிபுரம் பட்டுப்பபுடவையாக திகிலுடன் சேர்த்து நெய்திருக்கிறார்கள் இந்தப் படத்தை ..
மலையாள திருஷ்யம் ( பாபநாசம் )படம் போல இந்தப்படத்திலும் .
கடைசி காட்சி வரையில் படம், எதை நோக்கி செல்கிறது என்று தெரியாமல்,
விமான சக்கரங்கள் தரை தொட்டு இற ங்குவதை எதிர்பார்த்து காத்திருக்கும் விமான ஜன்னல் ஓரப் பயணிகள் போல பார்வையாளர்கள் மாறுகிறோம்.
வீட்டுக்கு பின்னாலேயே ஒரு காடு. காட்டில் கிஷ்கிந்தைபோல தன்னிச்சையான வானரங்கள்.
வீட்டுக்கார மிலிட்டரி பெரியவர் தொலைத்த ரிவால்வர் எங்கே?
மிலிட்டரிக்காரரின் பாசம் ரொம்பிய இரண்டாவது மகனின் இரண்டாவது திருமணம். இறந்த முதல் மனைவி,அவளது தொலைந்த ஏழு வயது மகன்.
மிலிட்டரிக்காரரின் , கஜனி சூர்யாவை ஒத்த பயங்கர ஞாபக மறதி.,பழைய சந்தேகப்படும் படியான நக்சலைட் பின்புலம்,
ஒரு புல்லட்டால் சுடப்பட்ட, புதைக்கப்பட்ட குரங்கு,
காணாமல் போன இன்னொரு புல்லட்.
குரங்கு கையில் பூமாலைக்கு பதிலா
துப்பாக்கி........... என்று தொடுக்கப்படும் திகில் கதைப்பின்னல்.
கடைசியில் அழகாக அவிழும் முடிச்சு.
மிலிட்டரிக்கார அப்பாவாக விஜய ராகவன்.
கோபம் நிறைந்த உணர்ச்சியற்ற, ஞாபக மறதிக்காரராக,
நடிப்பதில் ஏகப்பட்ட குழப்பங்கள் வந்தி ருக்கலாம் .வராதது அவரது
நடிப்பின் தனிச் சிறப்பு.
பிள்ளை அஜயாக ஆசிப் அலியும்
அவனது ரெண்டாம் மனைவியாக அபர்ணா பால முரளியும் கச்சிதம்.
கொஞ்சம் வந்தாலும்
மேல்தட்டுக் களையுடன் அசத்துகிறார் நம் நிழல்கள் ரவி. மற்றவர்கள் எல்லோரும் அவரவர்கள் பாத்திரத்துக்கு நன்கு பொருந்துகிறார்கள்.
மலையாள வீட்டுக்குப்பின் எவ்வளவு அழகான, ஆழமான காடு?திடீர்னு கூச்சலிட்டு எகிறி,மரம் தாவி, திகிலூட்டும் குரங்குகள்,இலையடர்ந்த காட்டுக்குள் மெல்லிய வெளிச்சம்... என்று, காமெராவில் பின்னிப் பெடல் எடுக்கிறார் பாபுல் ரமேஷ். கதையும் அவருடையது தானாம். சபாஷ்.!
தின்ஜித் ஐயாதனின் சிக்கல் இல்லாத
தெளிவான இயக்கம் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம்.
இசை வேண்டிய பதத்தில் இருக்கிறது .
ஓ டி டி இல் இத்தகைய மர்மப்படங்கள் பார்ப்பது ஒரு வகையில் போனஸ் தான்.
சந்தேகம் தீர்த்துக்கொள்ள வேண்டும்
என்றால் உடனே இன்னொரு தரம் திரும்பவும் பார்க்கலாம்.
அப்படிப்பார்க்கும் போது, இப்போ மர்மம் தெரிந்துவிட்டதால்,வேற கதையையே பார்ப்பது போல் தோற்றமளிப்பது, முழுமையான திரைக்கதை அமைப்பினாலும்
இயக்குனர் நடிகர்களின், உழைப்பினாலும் தான் என்பதில் சந்தேகமே இல்லை.
சிறு குறைகள் இல்லாமல் இல்லை.
இரண்டு மனைவிகளின், மற்றும் தொலைந்து போன (!) மகனின், பாத்திரங்கள்,திரைக் கதை என்ற முக்கிய ரயிலுடன் சேராமல், பக்கத்து தண்டவாளத்தில் செல்லும் கூட்ஸ் ஆக
தோன்றுவது ..,
முக்கியத் தடயமான துப்பாக்கி சர்வ சாதாரணமாக பீரோ கீழ்த்தட்டு அறையில் ஒளித்து வைக்கப்படுவது......
போன்றவை சில.
ஆனாலும் மன்னிக்கப்படலாம்.
மொத்தத்தில்,இந்தப் படத்துக்கு,நாலு ஸ்டார் வஞ்சனை இல்லாமல் தரலாம்.
Leave a comment
Upload