தொடர்கள்
ஆன்மீகம்
பஞ்சாங்கம் அறிவோம்..!! - ஆரூர் சுந்தரசேகர்.

Let's know almanac..!!

பிறப்பு முதல் இறப்பு வரை இந்தியர்களின் அன்றாட வாழ்க்கை முறையில் பஞ்சாங்கம் மிக முக்கிய பங்கினை வகிக்கிறது. பஞ்சாங்கம் என்பது இனம், மதம் கலாச்சாரம் சம்மந்தப்பட்டது அல்ல. சக்திமிகுந்த ரிஷிகள் எழுதியும், சொல்லியும் வைத்த கணக்கு. கிரகங்களோடு சுற்றுப்பாதையின் அடிப்படையில் செய்யப்படுகிற கால அட்டவணை. இதன் பின்னணியில் தான் விஞ்ஞான அடிப்படையில் வானியல் அறிவும் கணக்குகளும் உள்ளன. இதைத்தவிர விவசாயிகள் வயலில் விதைப்பு தொடங்கி அறுவடை வரை எல்லாவற்றையும் பஞ்சாங்கம் பார்த்துச் செய்கின்றனர். இந்த அளவிற்கு மனித வாழ்க்கையைத் தீர்மானிக்கிறது பஞ்சாங்கம்.
பஞ்சாங்கம் என்பது பஞ்ச + அங்கம் = பஞ்சாங்கம், அதாவது ஐந்து உறுப்புக்கள் அடங்கியது என்பதே இதன் பொருள். அதாவது வாரம், நட்சத்திரம், திதி, கரணம், யோகம் ஆகியவையே அந்த ஐந்து உறுப்புக்கள். இது தவிர இன்னும் சில முக்கிய குறிப்புகளும் இடம் பெற்றுள்ளது.
தற்போது நம் வழக்கத்தில் வாக்கிய பஞ்சாங்கம், திருக்கணிதப் பஞ்சாங்கம் என்று இருவகைப் பஞ்சாங்கங்கள் பின்பற்றப்படுகிறது.

Let's know almanac..!!

வாரம்:
பஞ்சாங்கத்தின் முதல் அங்கமாகிய வாரம் என்பது, கிழமை, நாள், வாரம், இந்த மூன்றும் ஒரே பொருள்தான். இந்தியப் பஞ்சாங்கம் முறைப்படி இன்றைய சூரிய உதயம் முதல் மறுநாள் உதயம் வரையில் ஆனது ஒரு நாள் கணக்கு.
ஆங்கில தேதி கணக்கீட்டின்படி நடு இரவு 12:00 கடிகார மணி முதல் மறுபடியும் இரவு 12:00 மணி வரை ஒரு நாள். இதன் அடிப்படையிலே தான் தேதியும் கிழமையும் கணக்கிடப்படுகிறது. இவை முறையே ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி மற்றும் சனி என்று நமது ஜோதிட ரிஷிகளும் ஞானிகளும் வகுத்துள்ளனர். இதிலும் ஒரு முறையைப் பின்பற்றினார்கள். சூரிய சுழற்சியில் சூரியனே பிரதானம் என்பதால் முதலில் சூரியனின் பெயரை ஞாயிறு என்றனர். பிறகு பூமிக்கு மிக அருகில் உள்ள சந்திரன் நம்மை அதிகமாக ஆட்கொள்வதால் அவருடைய பெயரான திங்கள் கிழமை. பிறகு பூமிக்கு வெளிவட்ட கிரகமான செவ்வாய்க்கும், அதன் உள்வட்ட கிரகமான புதன் பெயரையும், அதிலிருந்து வெளி வட்ட கிரகமான குருவின் பெயரான வியாழன் என்றும், அதன் பிறகு உள்வட்ட கிரகமான சுக்கிரனின் பெயரான வெள்ளி என்றும் கடைசியில் வெளி வட்ட கிரகமான சனி கிரக பெயரையும் நம் முன்னோர்கள் முறைப்படி வைத்தனர். (ராகு, கேது கிரகங்களிற்குச் சொந்த கிழமையும் இல்லை, சொந்த வீடும் இல்லை அவை சாயா கிரகங்கள்.

Let's know almanac..!!

நட்சத்திரம்:
நட்சத்திரம் என்பது, நமது புராதனமான வேத ஜோதிடத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ள, அஸ்வினி முதல் ரேவதி வரையிலான
27 நட்சத்திரங்கள் எனப்படும் விண்மீன்களைக் குறிக்கிறது.
அவை 1 .அஸ்வினி, 2. பரணி, 3. கார்த்திகை, 4. ரோகிணி,
5. மிருகசிரீடம்,6. திருவாதிரை, 7. புனர்பூசம், 8. பூசம்,
9. ஆயில்யம் 10. மகம் 11. பூரம் 12. உத்திரம் 13. அஸ்தம்
14. சித்திரை 15 .சுவாதி 16. விசாகம் 17. அனுஷம் 18. கேட்டை
19. மூலம் 20. பூராடம் 21. உத்திராடம் 22.திருவோணம்
23. அவிட்டம் 24. சதயம் 25. பூரட்டாதி26.உத்திரட்டாதி
27. ரேவதி
சந்திரன் வான் வெளியில் மேற்கொள்ளும் தனது பயணத்தின் பொழுது, இந்த ஒவ்வொரு நட்சத்திரத்தின் வழியாகவும் நகர்ந்து செல்கிறார். எந்த நேரப் பொழுதில் சந்திரன் எந்த நட்சத்திரத்தின் மீது பயணம் செய்கிறாரோ, அந்த நேரத்திற்குரிய நட்சத்திரமாக அது கொள்ளப்படுகிறது. இதன்படியே, எந்த நட்சத்திரத்தில் ஒரு குழந்தை பிறக்கிறதோ, அதுவே அந்தக் குழந்தையின் ஜன்ம நட்சத்திரமாக, ஜோதிட சாஸ்திரம் எடுத்துக் கொள்கிறது.

Let's know almanac..!!

திதி:
சந்திரன் ஒரு ராசியைக் கடக்க 30 நாட்கள் என்ற அடிப்படையில் சந்திர மாதம் கணக்கிடப்படுகிறது. சந்திரனை மையமாகக்கொண்டுகணிக்கப்படும் காலகணிப்பில் திதிகள் கணிக்கப்பெறுகின்றன. அவை. பிரதமை, த்விதியை, த்ருதியை, சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி, சப்தமி, அஷ்டமி, நவமி, தசமி, ஏகாதசி, துவாதசி, த்ரையோதசி, சதுர்த்தசி, அமாவாஸ்யை / பௌர்ணமி
வளர்பிறையில் 14 திதிகளும் பிறகு பௌர்ணமியும், தேய்பிறையில் 14 திதிகளும் பின்பு அமாவாசையும் வரும். இந்த 15 நாட்களும் மொத்தமாக பட்சம் அல்லது பக்கம் என்று அழைக்கப்படும். அமாவாசைக்குப் பிறகு வரும் வளர்பிறை காலத்தைச் சுக்கில பட்சம் என்றும், பௌர்ணமிக்குப் பின்பாக வரும் தேய்பிறை காலத்தைக் கிருஷ்ண பட்சம் ,அபர பட்சம், பஹூள பட்சம் என்று பலவாறாக அழைப்பர்.

Let's know almanac..!!

கரணம்:
கரணம் என்பது சந்திரனை மையமாகக் கொண்டு கணிக்கப்படுகிறது. கரணம் என்பது திதியில் ஒரு பாதி.
ஒரு நாளைக்கு இரண்டு கரணங்கள் வரும். மொத்த கரணங்கள் 11. அவை பவம், பாலவம், கௌலவம், தைதுலம், கரசை, வனிசை, பத்திரை, சகுனி, சதுஸ்பாதம், நாகவம், கிமித்துகணம், இதனுடைய அளவு 6.00 டிகிரி ஆகும்.

Let's know almanac..!!

யோகம்:
வான்வெளியில், சூரியன் சந்திரன் ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருந்து சேர்ந்து பயணிக்கும் தூரம். இந்த யோகங்கள் மொத்தம் 27-ஆகும். இதனை ” நாம யோகம்” என்பார்கள். அவையாவன:
விஷ்கம்பம், ப்ரீதி, ஆயுஷ்மான், சௌபாக்யம், சோபனம், அதிகண்டம், சுகர்மம், திருதி, சூலம், கண்டம், விருதி, துருவம், வியாகாதம், ஹர்ஷணம், வஜ்ரம், சித்தி, வியதிபாதம், வரீயான், பரீகம், சிவம், சித்தம், சாத்தீயம், சுபம், சுப்ரம், பிராம்யம், ஐந்திரம், வைதிருதி. இதனுடைய அளவு 13.20 டிகிரி ஆகும்.
நாம் தினமும் பார்க்கும் மரண யோகம், அமிர்த யோகம் சித்த யோகம் என்பது வேறு, இவைகள் வேறு. இதனை ‘சுபாசுப யோகம்’ எனப்படுகிறது. இவற்றில், சித்த யோகம், அமிர்த யோகம் என்பவை சுப நிகழ்ச்சிகள் நடத்தவும், மரண யோகம் போன்றவை சுப நிகழ்வுகளுக்கு விலக்காகவும் கருதப்படுகின்றன. இவை, நட்சத்திரம், கிழமை ஆகியவற்றை வைத்துக் கணக்கிடப் படுகின்றன. இந்தக் கிழமைகளில், இந்த நட்சத்திரங்கள் வந்தால் இந்த யோகம் உண்டாகும் என, இந்த முறை வகுக்கப்பட்டுள்ளது.

பஞ்சாங்கமும் பயனும்:
வாரம், திதி, கரணம், நட்சத்திரம், யோகம் என்பதெல்லாம் காலங்களைச் சூரியன் மற்றும் சந்திரன் நிலைகளைக் கொண்டு குறிக்கப்பட்ட பஞ்சாங்கமானது காலத்தை மிக மிகத் துல்லியமாகக் கணிக்கின்றது. பிறந்த குழந்தைகளுக்கு ஜாதகம் கணித்தல், திருமண தேதி, புலம்பெயர்தல், வேளாண்மை, நீர் மேலாண்மை, தூரப் பயணங்கள் துவங்குதல், காலத்திற்கேற்ப வியாபாரத்தைத் தேர்ந்தெடுத்தல், நோய்த் தடுப்பு நடவடிக்கைகளென மனித வாழ்வின் கால முன்னேற்பாடுகளுக்கு உருவாக்கப்பட்ட இந்த பஞ்சாங்கத்தை உரிய முறையில் உபயோகித்து, வானவியல், ஜோதிடம் தொடர்பான சில அடிப்படைத் தகவல்களை நாம் அறிந்துப் பயன் பெறலாம்.