புத்தூர் காவல்நிலையம்..
ஏட்டய்யா.. கேசவனை இன்றைக்கு அழைச்சுகிட்டுப்போய் கோர்ட்ல ஆஜர்படுத்துங்க,தப்பி ஓடகீட விட்டுடாதீங்க.. இந்த மாசம் உங்க ரிடையர்மெண்ட், பார்த்து செய்யுங்கள் என ஆய்வாளர் சொல்லும்போதே ரெங்கநாதன் ஏட்டையாவிற்கு அடிவயிற்றில் பயம் தொற்றிக்கொண்டது.
சரிங்கய்யா.. பார்த்து பத்திரமாக செய்திடறேன் என ஆய்வாளரிடம் சொன்னாலும் கேசவனைப்பற்றி தெரிந்ததினாலே ஒருவித பயம் அவருக்கு உள்ளுக்குள் வந்தது.
கேசவா, கேட்டிச்சா ? என்னை எந்த சிக்கல்லேயும் இழுத்து வுட்டுடாதேப்பா..என்றார்பரிதாபமாக.
கேசவனுக்கு உள்ளூர்தான். கோளாறு பிடித்தவன்தான்,அவன் மீது கடைகளில் மிரட்டி வசூல்,கொலை மிரட்டல், வழிபறி என வழக்குகள் தொடுக்கப்பட்டு பலமுறை சிறை சென்று வந்தவன். போலீஸ், கேசு, கோர்ட் எல்லாம் அதிக புழக்கமான இடம்தான் அவனுக்கு. முதல் முறையாக கோர்ட்டுக்கு அவனை இவர் அழைத்துப்போகும் சூழல் இன்று. இத்தனை பில்டப் கொடுக்கும்போதே உங்களுக்கும் தெரிஞ்சிருக்கும் இன்னிக்கு ஓடத்தான் போறான்னு...மேலே படிங்க...
தனது பைக்கில் கேசவனை அமரச்சொன்னவரிடம் , அய்யா நான் ஓட்டவா என்றான்அதெல்லாம் வேண்டாம் பேசாமல் வா என்றழைத்துப்போனார்.
நகர தபால் நிலையம் வழியாகச்செல்லும்போது மாணிக்கத்தைப் பார்த்து வாகனத்தை நிறுத்தினார் ஏட்டு.
என்ன மாணிக்கம் ? என் பணம் என்னாச்சு ? ஆத்திர அவசரத்திற்கு கடனாக கொடுத்தேன், இப்போது என் பொண்ணுக்கு கல்யாணம் வச்சுருக்கேன், ரூபாய் தேவைபடுது திரும்பக் கொடுன்னா இதோ அதோங்கிற என சாதரணமாகத்தான் கேட்டார் ரங்கநாதன்.
யோவ்! என்ன புத்திகித்தி மழுங்கிடுச்சா.. திருட்டுப்பயலை பக்கத்திலே வச்சுகிட்டு எங்கிட்டே பணம் கேட்கிறே ? என் மருவாதி என்ன ? என எகிறியவர், எப்படி தருகிறேன்னு மட்டும் நீ பாரு! என பே(ஏ)சியபடி ஏட்டுவைக்கடந்துப்போனார்.
நான் பேச வேண்டிய வசனத்தையெல்லாம் இவன் பேசிட்டு போறான்யா..என்றார் ஏட்டு.
என்னங்கய்யா.. என்றான் கேசவன்.
ஒன்னுமில்லடா, மூனு லட்சம் கடனாக வாங்கினான், கேட்டால் இதோ அதோங்கிறான் இல்லாதபட்டவனா இவன் ? நாலு வருசமாச்சு அசலை மட்டுமாவது கொடு எனகேட்டுப்பார்த்துட்டேன் என்றார்.
"கறக்கவிடாத மாட்டை ஒன்று தீவணம் போட்டுக்கறக்கலாம் ஐயா.. இல்ல கன்றை முன்னே கட்டிப்போட்டு கறக்கலாம் என்றான் கேசவன்.
எட்டி உதைக்குதேப்பா.. என்று நகைச்சுவையாகச் சொன்ன ஏட்டையாவிடம், அப்போ வேறு வழியே இல்லை, காலைக்கட்டி கறந்திட வேண்டியதுதானே என்றான்.
ம்.க்கும்.. என்று சலித்தபடியே வண்டியை உதைத்தவர், நெஞ்சைப் பிடித்துக் கொண்டு சுருண்டு விழுந்தார்.
அய்யா.. அய்யா என அழைத்துப் பார்த்தான் எச்சலனம்முமில்லை அவரிடத்தில். ஆட்டோ ஒன்றினை அமைத்துக் கொண்டு மருத்துவ மனையில் சேர்த்து. விட்டு சந்தர்ப்பத்தைப். பயன்படுத்திக்கொண்ட கேசவன் எங்கோ போய் விட்டான். தகவலறிந்து வந்த அவரது மனைவியிடம் நடந்ததைச் சொன்னார்கள் மருத்துவமனை ஊழியர்கள்.
பரபரப்பாகவிருக்கும் நீதிமன்றம், ரெங்கநாத ஏட்டாலும்,ஓடிப்போன கேசவனாலும் இன்னும் பரபரப்பு கூடியிருந்தது.
புத்தூர் காவல்நிலையம்... என கோர்ட்டார் அழைக்க,
ஐயா..சின்னதாக சம்பவம் ஒன்னு நடந்திடுச்சு, இன்னும் அரை மணிநேரத்திலே கேசவனை ஆஜர் படுத்திடறோம் என நடந்ததைச் சொல்லி வந்திருந்த உதவி ஆய்வாளர்நேரம் கேட்டதும்,
ஏட்டு இப்ப எப்படியிருக்கார் ? சீக்கிரம் அவனை பிடித்து வாங்க, என நீதிபதி விசாரிக்கும்போதே உள்ளே வந்த கேசவன் உதவி ஆய்வாளர் அருகில் நின்றான்.
பதினைந்துநாள் சிறைக்காவல் என தீர்ப்பையும், வேறு. தேதியையும் வாங்கிக் கொண்ட உதவி ஆய்வாளர் பிடறியில் கையை வைத்து வெளியே தள்ளிக்கொண்டு வந்தார் கேசவனை.
எங்கடா ஓடினே ? நீ என்றவரிடம் நடந்ததைக்கூறினான்.
அடுத்தவன் காசு, நகையெல்லாம் வழிபறி செஞ்சியிருக்கேன், ஏன் மிரட்டி கூட வாங்கியிருக்கேன், பாவம் ஓய்வுப் பெறப் போகிறவரு, பொண்ணுக்கு திருமணம் வைத்திருக்கிறாரு, சொந்தக் காசை திரும்பக் கேட்டதற்கு எத்தனை அவதியும், அவமானமும் படவேண்டிருக்கு என அந்த மாணிக்கத்தையும் ஏட்டையாவையும் பார்த்ததும்தான் புரிந்தது எனறான்.
எங்கடா போனே ? அதை சொல்லாமல் கத வுடறியா நீ ? என கேட்டதும், எனக்காக பிறரை மிரட்டி பணம் வாங்கிய நான் அதே பயத்தைக்காட்டி ஏட்டையாவோட பணம் மூன்று லட்சத்தை வாங்கி கொடுப்போம் என நினைத்து மருத்துவமனையிலிருந்து நேரே மாணிக்கம் கடைக்குப் போய் ஏட்டையாவின் பணத்தைக் கேட்டேன்.
இல்லை, முடியாயெனத்தான் மாணிக்கம் முதலில் சொன்னாரு "எத்தனையோ கேசு, அதிலே உன் உசிர எடுத்த வகையில் இன்னொரு கேசு"என்று உயிர் பயம் காட்டியதும் பணத்தைக் கொடுத்து விட்டார் என்றான்.
இதையும் சேர்த்து ஒரு கேசாகப்போட்டுக்கோங்க ஆனால் ஐயா.. போகிற வழியிலே ஏட்டையாவைப் பார்த்து பணத்தைக்கொடுத்து விட்டுப் போவோமா என்ற கேசவனிடம், நிச்சயமாக.. ஏட்டு மகிழ்ச்சியடைவார் என்றார் உதவி ஆய்வாளர்
Leave a comment
Upload