மஹாராஜா, மகாராஜ் இரண்டு படங்களும் சமீபத்தில் பார்த்தேன். பாலியல் அத்துமீறல்பற்றிய வெவ்வேறு படங்கள். வெவ்வேறு காலகட்டம். இதை போன்ற செய்திகளைபடங்களிலோ, செய்திகளிலோ பார்த்துக்கொண்டே தான் இருக்கிறோம். கேட்டுக்கொண்டே தான் இருக்கிறோம். ஒரு பதிமூன்று வயது குழந்தை அதனினும் சிறியகுழந்தையை பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறது. சிறுவன் என்றோ சிறுமி என்றோகூடக் கூறத் தோன்றவில்லை.. இது எழுதி எழுதி அயர்ந்து போன விஷயம். வயதுமுதிர்ந்தவர்கள் இந்த தவறை செய்யும் போது எந்தவித யோசனையும் செய்யாமல், கொடும்தண்டனை குடுக்கத் தான் வேண்டும் என்று சொல்லத் தோன்றுகிறது. மஹாராஜாவில் அந்தமூவரும் இறக்கும்போது மனம் மகிழத்தான் செய்கிறது. அனால் சிறுவர்கள் இதில்ஈடுபடும்போது தண்டனை மட்டும் போதுமா? சீர்திருத்தப் பள்ளிகள் சீர்திருத்துகின்றனவா?? நிறைய கேள்விகள். பிரச்சனையின் மூலத்தை தோண்டிதோண்டிப் பார்க்கும் போது சமூகம் என்னும் சொல்லில் வந்து முட்டிக்கொண்டுநிற்கிறோம்.
தேவை இல்லாத விஷயத்தை தெரிந்து கொள்ளும் ஆர்வம். வயதுக்கு மீறிய exposure. பெற்றோர்கள் 24 மணி நேரமும் விழிப்புடன் இருக்க வேண்டிய கட்டாயம். உடலைப் பற்றிஆர்வம் அதிகரிக்கும் போது தெரிந்து கொள்வதற்கான வழிகள் ஏராளமாகிவிட்டன. இந்தஆர்வம், வன்முறை, பலாத்காரம் என்று நீளும் போது தான் யார் மேல் தவறு என்றுஅடித்துக்கொள்கிறோம்.
அழகிய மிதிலை நகரினிலே என்றொரு பாட்டு உண்டு. அதில் ஒரு வரி வரும், "இளையவர்என்றால் ஆசை வரும், முதியவர் என்றால் பாசம் வரும்!" அழகான பாடல். இளையவருக்குஆசை வருவதும், முதியவருக்கு பாசம் வருவதும் தான் இயல்பு. முதியவர் என்றால் பாசம்தான் வர வேண்டும். தற்போதைய கால கட்டத்தில் வயதெல்லாம் ஒரு கணக்கல்ல. சிலசெய்திகளைப் படிக்கும்போது தலையை சுற்றுகிறது. இப்படியுமா மனம் அலையும்!
என் உடன் பணியாற்றுபவர்கள் ஒரு பத்து பெண்களிடம், (குறைந்தது 50 வயது இருக்கும்) கேட்ட போது, அதில் 8 பேர்கள் தாங்கள் ஏதோ விதத்தில் பாலியல் ரீதியாக துன்பப்பட்டிருப்பதாகக் கூறினார்கள். இது எப்போதும் இருந்திருக்கிறது. யாரிடமும் சொல்லும்தைரியம் இல்லை என்றுதான் பெரும்பாலும் கூறினார்கள். இப்பொழுது மாற்றம் கொஞ்சம்இருக்கிறது. தைரியம் வந்திருக்கிறது. அனால் குற்றம் குறையவில்லை. அதிகமாக ஆகிஇருக்கலாம். எண்களை வைத்து கணக்கு பார்த்து என்ன செய்யப்போகிறோம்! இது சிறார்குற்றமாகும் போது, சமூகத்தின் மீது இன்னும் பயம் வருகிறது.
ஒரு குழந்தையை வளர்ப்பது சமுதாய பொறுப்பு என்று உணரும் காலம் எப்பொழுதோவந்து விட்டது. தொழில் நுட்பத்தால் உள்ளங்கைக்குள் உலகத்தை குடுத்த பின் என்பொறுப்பல்ல என்று எவரும் எதிலிருந்தும் பின் வாங்க முடியாது.
சில வருடங்களுக்கு முன்னால் பேரன்பு என்று ஒரு படம் வந்தது. ஒரு மிகப்பெரியகதாநாயகனைக் கொண்டு, நமக்கு பழக்கப்பட்டுப்போன எந்த வித கதாநாயகத்தனமும்இல்லாமல் எடுக்கப்பட்ட படம்। ஒரு மனநிலை பாதிக்கப்பட்ட குழந்தையின் உடல் தேவை, தேடல் பற்றிய கதை அது. கவிதையாய் கையாளப் பட்டிருக்கும் கரு. இதை ஏன் இங்கேசொல்கிறேன் என்றால், , மிகச்சிறந்த தந்தையாக பயணிக்கும் கதையின் நாயகன் ஒருபெண்ணின் உணர்வையும் தேவையும் புரிந்து கொள்ள நிறைய தருணங்களில்தடுமாறுகிறான். அதனால் பல சமயங்களில் தவறான முடிவுகளையும் எடுக்கிறான். (ஆபாசகாட்சிகளை தன் மகள் பார்க்கக்கூடாதென்று தொலைக்காட்சியை அணைக்கிறான். ஜன்னல் வழியாக, சுவரொட்டிகளை பார்க்க ஆரம்பிப்பாள் )ஒவ்வொரு முறையும் எழுந்துநின்று மறுபடியும் பயணிக்கிறான். தன் குழந்தையோடு தானும் வளர்கிறான்।
குழந்தைகளின் உடல் மாற்றத்தை மனரீதியாகவும் பார்க்கவேண்டிய கட்டாயத்தை நிகழும்நிகழ்வுகளால் காலம் நமக்கு உணர்த்துகிறது. மன நலம் என்பது இப்பொழுதுமுதன்மையாகப் பார்க்கப்படுகிறது. எல்லா பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் ஒரு மனநலஆலோசகர் நியமிக்கப்படுகிறார். அதன் முக்கியத்துவத்தை பெற்றோர்களும் புரிந்துகொள்ள வேண்டும். ஒரு குழந்தை அவன்/அவள் வித்யாசமான செயல்களால்கவனிக்கப்படும்போது, தன் குழந்தையை குற்றம் சொல்கிறார்கள் என்று எண்ணாமல், அதன் உண்மைத்தன்மையை ஆராய்ந்து உணரவேண்டும். தேவைப்பட்டால் தகுந்தநடவடிக்கையும் எடுக்கவேண்டும்.
வீட்டின் வரவேற்பறையில் இருக்கும் தொலைக்காட்சி பெட்டியில் காதல் காட்சிகளும், வன்முறை காட்சிகளும் எந்த வித சென்சாரும் இன்றி தான் ஓடிக்கொண்டிருக்கின்றன. எத்தனை ஜன்னல்களை அடைத்தாலும் ஏதோ ஒரு சாவி துவாரம் திறந்து தான்இருக்கிறது. எங்கேயோ நடக்கும் இதுபோன்ற சிறார் குற்றங்களுக்கு ஒவ்வொருவரும் தார்மீகப் பொறுப்பு எடுக்கவேண்டும். வளரும் ஒவ்வொரு குழந்தையும் சமூகத்தின்பொறுப்பு. இதை தார்மீக பொறுப்பாகச் செய்யலாம் இல்லையெனில், குறைந்தபட்சம் சுவரொட்டிகளையாவது கிழித்துப் போடலாம்.
Leave a comment
Upload