தமிழ்நாட்டில், காஞ்சிபுரம் நடுப்பகுதியில் (பெரிய காஞ்சிபுரம் (சிவகாஞ்சி) மேலாண்டை இராசவீதி எனப்படும் மேற்கு இராஜவீதியில் ஏகாம்பரேசுவரர், காமாட்சியம்மன் கோயிலுக்கும் நடுவில் சோமாஸ்கந்த அமைப்பில் அமைந்துள்ள இந்த முருகன் கோயில் குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. இதன் புராணப் பெயர் செனாதீச்வரம் என்பது ஆகும்.
முருகப்பெருமானின் எண்ணற்ற பல சிறப்புகளைக் கொண்ட திருத்தலம். இந்தக் கோயிலில்தான் கந்தபுராணம் அரங்கேற்றம் செய்யப்பட்டது. அதனால் இத்தலம் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது. (கந்தபுராணம் அரங்கேறிய கல் மண்டபம் தற்போது கச்சியப்பர் நூலகமாக உள்ளது.)
கச்சியப்ப சிவாச்சாரியார், அருணகிரிநாதர், வள்ளலார், பாம்பன் சுவாமிகள் ஆகியோரால் போற்றிப் புகழப்பட்ட இக்கோயில் 1500 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்ததாகக் கூறப்படுகிறது. இத்தலத்தைப் பற்றி காஞ்சிப் புராணத்தில் தனிப்படலமாகச் சொல்லப்பட்டுள்ளது.
ஸ்தல புராணம்:
புராணங்களின்படி, ஒரு சமயம் “ஓம்” எனும் பிரணவ மந்திரத்தின் பொருளைப் பிரம்மாவிற்குத் தெரியாததால் முருகப்பெருமான் அவரை சிறையில் அடைத்து, பிறகு தானே பிரம்ம சாஸ்தா கோலத்தில் படைக்கும் தொழிலையும் மேற்கொண்டார். பிரம்மதேவரின் இந்த நிலையை அறிந்து கொண்ட சிவபெருமான் பிரம்மனை விடுவிக்க, முருகனிடம் நந்தி தேவரை அனுப்பியும், ஈசனின் கட்டளையை நிராகரித்து நந்தி தேவரைத் திருப்பி அனுப்பினார். பிறகு சிவபெருமானே நேரில் சென்று தகுந்த முறையில் முருகப் பெருமானுக்கு எடுத்துரைத்து, பிரம்மதேவரை விடுவிக்கச் செய்தார். இதைத் தொடர்ந்து, குருவின் அம்சமான ஈசனையே சீடனாகக்கொண்டது தோஷம் என்று அன்னை பராசக்தியின் மூலம் அறிந்துக்கொண்டார் முருகப்பெருமான். தனக்கேற்பட்ட தோஷம் நீங்குவதற்காக, நகரங்களில் சிறந்த புண்ணியம் மிகுந்த காஞ்சி நகருக்கு வந்தார். அங்கே ஒரு மாமரத்தடியில் சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டார். அவரே தேவசேனாதீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். அந்தத் தலமும் ‘சேனாபதீஸ்வரம்’ என்று உருவானது. மாமரத்தடியில் வழிபட்ட குமரகோட்டம் முருகன் ‘மாவடி கந்தன்’ எனப் பெயர் பெற்றார்.
ஸ்தல வரலாறு:
9 ஆம் நூற்றாண்டில் பல்லவ மன்னர்களால் கட்டப்பட்ட இக்கோவில் இதர வம்சங்களான சோழர்கள் மற்றும் விஜயநகர மன்னர்களும் இந்த கோவிலை கட்டுவதற்கு தங்கள் பங்களிப்பை வழங்கியுள்ளனர். புராதனமாக இருந்த இக்கோயில் 1915 ஆம் ஆண்டு தற்போதைய வடிவத்தில் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
ஸ்தல அமைப்பு:
இந்தக்கோவில் மேற்கு நோக்கிய ஐந்து நிலை இராஜ கோபுரத்துடன் அமைந்துள்ளது. மேலும் இக்கோயிலில் நீண்ட அர்த்த மண்டபம் மற்றும் மகா மண்டபம் உள்ளது. தெடர்ந்து கொடிமரம், பலி பீடம் மற்றும் மயில் வாகனம் ஆகியவை கருவறையை நோக்கிக் காணப்படுகின்றன. கோயிலைச் சுற்றி இரண்டு பிரகாரங்கள் உள்ளன. வெளிப் பிரகாரம் திறந்த வெளி, உள் பிரகாரத்தில் பல துணை சந்நிதிகள் மற்றும் சிலைகளும் காணப்படுகின்றன. கொடிமரத்திலிருந்து முருகப் பெருமானின் கருவறைக்கு நுழைவாயிலில் வலது புறம் பிரமாண்டமான திருமேனியோடு எழுந்தருளியுள்ள சக்தி விநாயகப் பெருமானைத் தரிசிக்கலாம். மூலக் கருவறையில் முருகப்பெருமான் ஜபமாலை, கமண்டலம் ஏந்தி 'பிரம்மசாஸ்தா' எனும் திருவடிவில், நின்ற திருக்கோலத்தில் முக்திதரும் மூர்த்தியாக இங்கு அருள்பாலிக்கிறார்.
உட்பிரகாரத்தை வலம் வருகையில் மூலக் கருவறையின் பின்புறம், வள்ளி, தெய்வானை தேவியர்கள் தனித்தனி சந்நிதிகள் கொண்டுள்ளனர். மற்றும் தேவசேனாபதீஸ்வரர், சந்தான கணபதி, தண்டபாணி, ஸ்ரீதேவி, பூதேவி சமேத உள்ளம் உருகும் பெருமாள் சந்நிதி, மார்க்கண்டேய முனிவர், சோமாஸ்கந்தர், நவவீரர்கள், முத்துக்குமாரசாமி, கஜவள்ளி, தெய்வானைதேவி, தட்சிணாமூர்த்தி, நாகதேவதை, நவ வீரர்கள், நவகிரகங்களை இக்கோயிலில் தரிசிக்கலாம். நவகிரகங்கள் ஒன்றையொன்று பார்த்த வண்ணம் அமைந்திருப்பதும், சூரிய பகவான் தனது தேவியோடு காட்சி தருவதும் சிறப்பானது. இங்குள்ள `அனந்த சுப்ரமண்யர்’ என்ற உற்சவ மூர்த்தி வடிவம் மிகச் சிறப்பானது. இவருக்கு ஐந்து தலை நாகம் ஒன்று குடை பிடித்தபடி இருக்கிறது. இந்த மூர்த்தியைத் தரிசித்து வழிபட்டால் நாக தோஷங்கள் விலகும் என்கிறார்கள். அதுபோலவே வள்ளி, தெய்வயானை உற்சவ திருமேனிகளிலும் மூன்று தலை நாகம் குடை பிடித்தபடி உள்ளன.
பிரகாரச் சுற்றின் நிறைவுப் பாதையில் அருணகிரிப் பெருமான்; வள்ளலார்; ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள்; கச்சியப்ப சிவாச்சாரியைச் சுவாமிகள் முதலிய அருளாளர்கள் வரிசையாய் எழுந்தருளி இருப்பதைத் தரிசிக்கலாம்.
கி.பி. 11ம் நூற்றாண்டில் கச்சியப்ப சிவாச்சாரியார் கந்த புராணம் அரங்கேறிய கல் மண்டபம் வெளிப் பிரகாரத்தில் உள்ளது.
கந்த புராணம் அரங்கேற்றம்:
கந்த புராணம் என்பது மகாபுராணங்களில் 13-வது புராணமாகும். பதினோராம் நூற்றாண்டில் கச்சியப்ப சிவாச்சாரியார் என்பவர் தமிழில் இந்தப் புராணத்தை எழுதினார். காஞ்சிபுரம் குமரக்கோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் அர்ச்சகர் அனைத்து ஆகமங்களிலும் தேர்ச்சி பெற்றிருந்த கச்சியப்ப சிவாச்சாரியார் தினந்தோறும் முருகப்பெருமானை வழிபட்டு வருவதைத் தனது கடமையாகக் கொண்டிருந்தார். ஒருசமயம் கச்சியப்பரின் கனவில் தோன்றிய முருகப்பெருமான், அவரை கந்த புராணத்தைத் தீந்தமிழில் இயற்றும்படி பணித்தார். மேலும், ‘திகட சக்கரம் செம்முகம் ஐந்துளான்’ என்ற முதலடியையும் கச்சியப்பருக்கு எடுத்துக் கொடுத்து அருளினார். இதை தன் வாழ்க்கையில் கிடைத்த பெரும் பாக்கியமாகக் கருதிய கச்சியப்பர், கந்தப் பெருமான் அருளிய முதலடியைக் கொண்டு, கந்த புராண நிகழ்வுகளைத் தமிழ்ப் பாடல்களாகப் புனையத் தொடங்கினார். ஒவ்வொரு நாளும் மாலைப் பொழுதில், தான் அன்றைய தினம் இயற்றிய பாடல்களைத் தொகுத்து, முருகப்பெருமானின் சந்நிதியில் வைத்துச் செல்வார். மறுநாள் அதிகாலை, முருகப்பெருமானின் கருவறையைத் திறக்கும்போது, அப்பாடல் களில் தவறுகள் இருந்தால் குமரகோட்டம் குமரனே திருத்தம் செய்திருப்பாராம். கூடவே 'காஞ்சி மாவடி வைகும் செவ்வேள் மலரடி போற்றி' எனக் காப்புச் செய்யுளையும் இயற்றி, கந்தபுராணத்தை நிறைவு செய்தார் கச்சியப்ப சிவாச்சாரியார். அதைத் தொடர்ந்து முருகப்பெருமானின் ஆணைப்படி 'கந்த புராணம்' குமரகோட்டத்தில் அரங்கேற்றம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது அரங்கேற்றத்திற்கு வந்திருந்த தமிழ்ப் புலவர்களுக்கு ஏற்பட்ட ஐயப்பாட்டைப் போக்க, முருகப்பெருமானே புலவர் வடிவில் வந்து அவர்களின் ஐயத்தைப் போக்கினார். கந்த புராணம் அரங்கேறிய மண்டபத்தை, இன்றைக்கும் ஆலயத்தில் தரிசிக்கலாம்.
ஸ்தல சிறப்புகள்:
கந்த புராணத்தை எழுதிய கச்சியப்பருக்குப் பெருமை சேர்க்கும் விதமாக அவரது பீடம் எதிரே முருகப் பெருமான் தெற்கு நோக்கி காட்சி அருள்கிறார். கி.பி. 11ம் நூற்றாண்டில் கந்தபுராணம் அரங்கேற்றம் நடைபெற்ற கல் மண்டபம், இன்று நூலகமாகப் பராமரிக்கப்படுகிறது.
பொதுவாகப் பெருமாளுக்குத் தான் ஐந்து தலை நாகம் குடைபிடிப்பதைப் பார்த்திருப்போம். இங்கே முருகனுக்கு ஐந்து தலை நாகமும், வள்ளி தெய்வானைக்கு மூன்று தலை நாகமும் குடைபிடிக்கிறது.
இத்தல மூலவரைக் குமரகோட்ட கல்யாணசுந்தரர் என அழைக்கிறார்கள். முருகன் தலங்களில் இது முக்தி தலமாகும்.
மேற்கு நோக்கியுள்ள இந்த முருகனைத் தரிசித்தால் பிரம்மா, விஷ்ணு, சிவனைத் தரிசித்த பலன் கிடைக்கும். எனவே இவரை 'ஒருவரில் மூவர்" என விசேஷ பெயரிட்டு அழைப்பர்.
காஞ்சிக்குச் செல்பவர்கள் காமாட்சியையும், ஏகாம்பரேஸ்வரரையும் தரிசித்து விட்டு குமரகோட்டத்துக் குமரனையும் தரிசித்தால்தான் முழுப்பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
திருவிழாக்கள்:
வைகாசி பிரம்மோற்சவம் (11 நாள்), ஐப்பசி கந்த சஷ்டி விழா, கார்த்திகைத் திருவிழா இங்கே சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. வைகாசியில் வள்ளி - சுப்பிரமணியர் திருமணம், ஐப்பசியில் தெய்வசேனா - சுப்பிரமணியர் திருமணம் நடைபெறும். கந்த சஷ்டி விழாவில் எண்ணற்ற பக்தர்கள் பங்கேற்று 108 முறை கோயிலை வலம் வந்து வேண்டிக் கொள்வது வழக்கம். செவ்வாய், வெள்ளிக்கிழமைகள், பரணி, கார்த்திகை, பூச நட்சத்திர தினங்கள், சஷ்டி நாட்களில் இங்கே சுப்பிரமணிய சுவாமிக்குச் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். பல்வேறு வாகனங்களில் எழுந்தருளும் வீதியுலாவும் உண்டு. இத்திருக்கோயிலில் செவ்வாய்க்கிழமை தோறும் சுப்பிரமணிய சுவாமி வெள்ளி திருத்தேரில் உள் பிரகாரம் மட்டுமே வலம் வந்து பக்தர்களுக்குக் காட்சியளிப்பார்.
பிரார்த்தனை, நேர்த்திக்கடன்:
திருமணத்தடை நீங்க மற்றும் நாக தோஷம் விலக இக்கோயிலில் பிரார்த்தனை செய்கின்றனர். இக்கோயிலில் வேண்டுதல்கள் நிறைவேறியவுடன் சுவாமிக்குப் பாலபிஷேகம் செய்து நேர்த்திக்கடனைச் செலுத்துகின்றனர்.
கோயில் திறந்திருக்கும் நேரம்:
இந்த கோயில் தினசரி காலை 5.00 மணி முதல் மதியம் 12.00 வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 8.30 மணி வரையில் கோயில் திறந்திருக்கும்.
கோயிலுக்குச் செல்லும் வழி:
காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து 1 கிமீ தொலைவிலும், ரயில் நிலையத்திலிருந்து 1 கிமீ தொலைவிலும் கோயில் அமைந்துள்ளதால் இந்த கோயிலுக்குச் செல்வது எளிது.
குறைவில்லா வாழ்வைத் தந்தருளும் காஞ்சி குமரகோட்டம்
முருகப்பெருமானைத் தரிசித்து அவரது அருளினைப் பெறுவோம்!!
Leave a comment
Upload