சில வருடங்களுக்குமுன், குடும்பத்துடன் ஆஸ்திரியா, சுவிட்ஸர்லாந்து போன்ற ஐரோப்பிய நாடுகளுக்குப் போயிருந்தோம்.
ஆஸ்திரியாவிலிருந்து சுவிட்ஸர்லாந்துக்குச் சென்ற ஒரு அழகான ரயில் பயணத்தின்போது 'என்னைப் பார்றா... என்னைப் பார்றா' என்று வெளியே ஒரு அழகிய மலைத்தொடர் உடன் ஓடி வந்தபடி இருந்தது.
அந்த மலை கூடவே தொடர்ந்து அவ்வளவு ஏன் கதற வேண்டும்?
அதை கவனிக்காமல் அப்போது இன்னொரு மலை பற்றி பிள்ளையோடு பேசி கொண்டிருந்தேன். அவன் மகர ஜோதி பற்றி சந்தேகம் கேட்டதற்கு விளக்கம் சொல்லியபடி இருந்தேன்.
இருந்தேனா? அடுத்து அந்த அழகிய மலைத்தொடரை ரயிலின் கண்ணாடி ஜன்னல் வழியே சில படங்கள் எடுத்தேன். மெல்ல மாலை கவிந்து கொண்டிருந்தது.
எடுத்தபடம் சரியாக வந்திருக்கிறதா எனப் பார்த்தேன். முதல் படத்திலேயே ஒரு ஆச்சரியம்.
மலைத்தொடரில் ஓரிடத்தில் பளீரென மஞ்சள் ஒளி மின்னியது. மீண்டும் அந்த மலையைப் பார்த்தேன். மலைமேல் வெளிச்சம் வந்ததற்கான தடயம் ஏதுமில்லை.
பிள்ளையை மீண்டும் அழைத்தேன்.
"விவேக்! கொஞ்சம் முன்னே எதைப் பத்திடா பேசிக்கிட்டிருந்தோம்?"
"மகர ஜோதி பத்தி! மலை நினைப்பு வந்துடுச்சா! இன்னும் அஞ்சு மாசம் இருக்கு"
"அதுக்கில்லடா! அந்த மலையை இப்போ போட்டோ எடுத்தேனா... இதப்பாரு... உச்சியிலே ஜோதியாட்டம் போட்டோல இருக்கு பாரு. மலையைப் பார்த்தா இருளோன்னு இருக்கு"
அவனும் போட்டோவைப் பார்த்தான். வெளியே மலையைப் பார்த்தான். பிறகு ரயில்பெட்டியின் உள்ளேயும் பார்த்தான். கமுக்கமாகச் சிரித்தான்.
"என்னடா? உங்கம்மா மாதிரி சிரிக்கிறே?"
"நைனா! வண்டி உள்ள பார்த்தியா? அந்த மஞ்சள் பல்பு (இங்கேயும் பல்பா?!)
கண்ணாடில ரிஃப்ளெக்ட் ஆகி அதுவும் போட்டோல வந்துடுச்சி. இதை அம்மா கிட்ட சொல்லாத..."
"ஏண்டா?"
"போனதரம் டிட்லிஸ் மலை உச்சியிலே ஒரு முருகன் கோவில் கட்டினா உலகத்திலேயே உயரமான கோவிலா இருக்கும்னு அம்மாகிட்ட சொன்னியாமே? கொஞ்சம் டென்ஷனாதான் இருக்கா!"
"போடா! போய் உன் பொண்டாட்டிக்கிட்ட போய் உக்காரு. இறங்கிப் போயிட்டியோன்னு தேடறா!"
“நீதானே கூப்பிட்டே? போட்டோவைப் பார்த்தே! மலையைப் பார்த்தே! வண்டி உள்ளே பார்த்தியா? பார்த்தா பல்பு வெளிச்சம் பட்டது புரிஞ்சிருக்கும் நைனா!"
"போடா! வம்புக்காரா!" என்று அவனை உந்தினேன்.
"உன் ஸ்டைல்ல ஒண்ணு சொல்றேன் கேளு நைனா! சுவாமியை வெளியே தேடாதே! உள்ளே தேடு! இதுதான் இந்த ரயில்விளக்கு சொல்ற பாடம்!" என்று சிரித்துக் கொண்டே நகர்ந்து விட்டான்.
உள்ளே தெரிவதைத் தான் வெளியே பார்த்துக் கொண்டிருக்கிறேன் என எப்படிச் சொல்ல!
Leave a comment
Upload