தொடர்கள்
அழகு
‘தமிழுக்கு ஒரு முத்தம்’ – 9     பித்தன் வெங்கட்ராஜ்

20240418104526141.jpg

விலங்குகளை மதியுங்கள்.

அவை மாறுவேடமிட்ட மனிதர்கள்.

விலங்குகளை நேசியுங்கள்.

அவை அன்புக்கு ஏங்கும் ஐந்தறிவுக் குழந்தைகள்.

-கவிப்பேரரசு வைரமுத்து

இவ்வுலகம் உண்டான காலத்திலிருந்து ஒருசெல் உயிரியான அமிபாவில் தொடங்கி, பல்வேறு பரிணாம வளர்ச்சிகளைக் கடந்து, தற்போதைய உணவுச் சங்கிலியின் உச்சியில் இருக்கிறான் மனிதன். இந்தப் பரிணாம வளர்ச்சியை ஓரறிவு முதல் ஆறறிவு வரை என்று அவற்றின் நிலையைத் தொல்காப்பியர் ஒரு பாடலில் குறிப்பிடுகிறார்.

ஒன்றறி வதுவே உற்றறி வதுவே

இரண்டறி வதுவே அதனொடு நாவே

மூன்றறி வதுவே அவற்றொடு மூக்கே

நான்கறி வதுவே அவற்றொடு கண்ணே

ஐந்தறிவதுவே அவற்றொடு செவியே

ஆறறிவதுவே அவற்றொடு மனனே

நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத் தினரே. (தொல்- மரபியல்: 27)

20240418104552871.jpg

உயிரினங்களில் தொடுவுணர்வு மட்டும் உடையது ஓரறிவு, அத்தோடு நாக்கு இருந்தால் ஈரறிவு, இவற்றோடு மூக்கு இருந்தால் மூன்றறிவு, இவற்றோடு கண்களும் இருந்தால் நான்கறிவு, மேலும் காதுகளும் இருந்தால் ஐந்தறிவு என்றுகூறி, இவையனைத்துடனும் சேர்த்து மனமும் இருந்தால் அவ்வுயிர்க்கு ஆறறிவு என்று கூறுகிறார் தொல்காப்பியர்.

இப்படி மனிதர்கள் ஆறறிவுகொண்டவர்களாக மாறுமுன் விலங்குகளோடு விலங்குகளாகவே சுற்றித் திரிந்தார்கள். அப்போது உணவாகப் பழங்களையும், விலங்குகளை வேட்டையாடியும் உண்டார்கள் என்பது நாம் அறிந்ததே. அதேசமயம், அவர்கள் தின்று வீசிய கொட்டைகள், விதைகள் முளைப்பதைப் பார்த்தபோதுதான் வேளாண்மை செய்வதற்கான முதல் விதை விழுந்திருக்கலாம் என்கின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள். அப்படி உருவான வேளாண்மையில் மனிதர்கள் எப்போது விலங்குகளையும் பயன்படுத்தத் தொடங்கினரோ அப்போதே வேளாண்மையின் அடுத்தகட்டமும், மனித நாகரிகத்தின் அடுத்தகட்ட வளரச்சியும் நிகழ்ந்தன எனலாம்.

20240418104611611.jpg

ஐந்திணையாய்ப் பகுக்கப்பட்ட தமிழ்நிலத்தின் மருதப் பகுதி வயலும் வயல் சார்ந்த இடமுமாகும். இங்கேதான் விலங்குகள் வேளாண்மைக்குத் துணைசெய்யப் பயன்பட்டன. பயன்பட்டன என்பதைவிட மனிதன் அவற்றைப் பழக்கிப் பயன்படுத்தினான் என்பதே சரி. பசு, காளை, ஆடு, எருமை போன்றவை மருதத் திணைப் பாடல்களில் குறிப்பிடப்பட்டுள்ள சில விலங்குகள் ஆகும். மேலும், ஜல்லிக்கட்டு என்று நாம் அழைக்கும் ‘காளையை அடக்கும் வீர விளையாட்டு’ அப்போது ஏறுதழுவுதல் என்னும் பெயரில் கொண்டாடப்பட்டுள்ளதைக் கலித்தொகையில் உள்ள மருதத் திணைப் பாடல்களில் மருதன் இளநாகனார் குறிப்பிட்டுள்ளார். ​இதன்மூலம் வேளாண்மை மட்டுமல்லாது மற்ற நிகழ்வுகளிலும் அவ்விலங்குகளைத் தமிழர்கள் முன்னிலைப்படுத்தியிருக்கின்றனர் என்பதை அறிகிறோம்.

இப்படிக் குறிஞ்சி, முல்லை, நெய்தல், பாலை எனப் பிற திணைகளிலும் புலி, சிங்கம், கரடி, யானை, மான், நீர் நாய், கடற்காகம், முயல் போன்ற பல்வேறு விலங்கினங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த விலங்கினங்கள் எல்லாமும் ஐந்தறிவுகொண்டவைதானா என்றால் அதற்கும் பதில் தருகிறார் தொல்காப்பியர்.

'மக்கள் தாமே ஆறறி வுயிரே

பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே' - (தொல்- மரபியல்: 33)

'ஒருசார் விலங்கும் உளவென மொழிப' - (தொல்- மரபியல்: 34)

மனிதர்களே ஆறறிவுடையவர்களாவர். பிற ஆறறிவுள்ளவர்களும் உள்ளனர். அவர்கள் தேவர், அசுரர் மற்றும் இயக்கர் முதலானோர். மேலும், ஆறறிவுடைய ஒருசில விலங்குகளும் உள்ளன என்கிறார் தொல்காப்பியர். நவீன அறிவியலின் அளவுகோலில் இப்போது புறா, சிலந்தி, டால்ஃபின் போன்ற சில விலங்கினங்கள் ஆறறிவுள்ளவையாகக் கருதப்படுகின்றன.

20240418104638635.jpg

அதேநேரத்தில் தொல்காப்பியரின் அளவுகோல்கொண்டு கீழ்க்காணும் கலித்தொகைப் பாடலைப் பார்ப்போம்.

ஒடுங்கா எழில் வேழம் வீழ் பிடிக்கு உற்ற

கடுஞ்சூல் வயாவிற்கு அமர்ந்து நெடுஞ்சினைத்

தீங்கண் கரும்பின் கழைவாங்கும்... (குறிஞ்சிக்கலி 4, வரிகள் 26-29)

ஆண்யானை ஒன்று தன் இணையான பெண்யானை அதன் முதற்கருவைச் சுமந்துகொண்டிருப்பதால் ஏற்பட்ட மசக்கைக்கு, நல்ல சுவையுடைய கரும்புகளைத் தேடி முறித்துக்கொடுக்கும் என்கிறார் கபிலர். கடுஞ்சூல் என்றால் முதல் கர்ப்பம். வயா‌ என்றால் மசக்கை. (‘வயா’விலிருந்தே வாயும் வயிறுமாய் என்ற சொல்வழக்குத் தோன்றியிருக்கலாம்)

அன்புகொண்ட பேர்க்கு வேண்டியதைத் தேடித் தேடிச் செய்வது மனிதர்க்கே உரிய குணம். அதற்குக் காரணம் மனம். அம்மனமுள்ள காரணத்தாலேயே யானை தன் இணைக்கு வேண்டியதைத் தேடித் தேடிச் செய்துள்ளது என நாம் கொள்ளலாம்.

யானையின் ஆறாம் அறிவை, அன்பு மனத்தை நம் அறிவுக்கு வெளிச்சமிட்டுக் காட்டிய கபிலர்க்கு ஒரு தமிழ்முத்தம் தந்தோம்.

எல்லா உயிர்மீதும் அன்புசெலுத்த நமக்குச் சொல்லித் தரும் நம் தமிழுக்கு

இஃது ஒன்பதாவது முத்தம்.

முத்தங்கள் தொடரும்‌…

-பித்தன் வெங்கட்ராஜ் ✍️