தொடர்கள்
அனுபவம்
நடந்தது-ஜாசன்

2024081318302787.jpg

தி நகருக்கு ஒரு வேலையாக ரயிலில் ஏறிய போது என் பின்னால் தாய் மகள் இருவரும் ஏறி என் எதிரே இருந்த இருக்கையில் அமர்ந்தார்கள்.

மகளிடம் அந்த தாய் "எல்லாவற்றையும் எடுத்து வைத்துக் கொண்டு விட்டாயா "என்று கேட்டார்.

"ஆம் எல்லாம் எடுத்து வைத்துக் கொண்டு விட்டேன் "என்று மகள் சொல்ல அப்போது அந்த தாய்" ரொம்பவும் ஜாக்கிரதையாக இரு. இந்த உலகத்தில் நாம் கெட்டுப் போவதற்கான சூழல் வாய்ப்பு நிறைய இருக்கிறது. நீ ஒன்னும் சின்ன குழந்தை அல்ல, எது சரி எது தப்பு என்று யோசித்து முடிவு எடு. உன் நோக்கம் படிப்பு என்பதில் மட்டும் தான் இருக்க வேண்டும். அதற்காகத்தான் நீ போகிறாய் என்பதை மனதில் வைத்துக் கொள். உன்னை எங்கள் சக்தியை மீறி தான் படிக்க வைக்கிறோம்.

கல்லூரி முடிந்ததும் யாரிடமும் பேச்சு கொடுக்காமல் தேவையற்ற பேச்சுக்களை தவிர்த்து நேராக ஹாஸ்டலுக்கு போ தேவையில்லாமல் ஹஸ்டலை விட்டோ கல்லூரி வளாகத்தை விட்டோ வெளியே சுற்றாதே. வெளியே போவது என்றால் முறையாக கல்லூரி முதல்வர் ,ஹாஸ்டல் வார்டன் இவரிடம் அனுமதி வாங்கி போய்விட்டு போனோம் வந்தோம் என்று இருக்க வேண்டும்.

விடுமுறை நாட்களில் தோழி தங்கியுள்ள அறை வீடுகளுக்கு செல்லக்கூடாது. அப்படியே பாட சம்பந்தமான சந்தேகங்கள் கேட்க போனாலும் மிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

தோழி வெளியே போயிருந்தால் அவள் வரும் வரை அந்த வீட்டில் இருக்கக் கூடாது. அவளின் உறவினர்கள் காத்திருங்கள் வருவார் என்று சொன்னால் கூட வேண்டாம் நான் அவள் வந்ததும் வருகிறேன் என்று சொல்லிவிட்டு திரும்பி விடு.

அவர்கள் தரும் குளிர்பானம் மற்றும் சாப்பிட ஏதாவது தந்தால் அவற்றையெல்லாம் வேண்டாம் என்று மறுத்துவிடு .

அவர்கள் வீட்டு கழிவறை எல்லாம் பயன்படுத்தாதே.

சில கயவர்கள் கழிவறையில் கூட கேமரா வைத்து படம் பிடித்து மிரட்டுகிறார்கள் என்று அடிக்கடி செய்தி வருவதை நீயும் படித்து இருப்பாய். இதேபோல் உணவு பொருளில் மயக்க மருந்து தந்து செய்யும் பாலியல் கொடுமைகள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.

இவையெல்லாம் நாம் அறியாமையால் நாமே இதற்கு மறைமுக காரணமாகி விடுகிறோம்.

என்னுடைய எச்சரிக்கை உனக்கு கசப்பு மருந்து மாதிரி இருக்கும். ஆனால், உனக்கு இதுதான் சரியானது. இது உனக்கு இப்போது புரியாது நாளை திருமணம் ஆகி உனக்கும் குழந்தை பிறக்கும் அப்போது உன் குழந்தைகளுக்கும் நீ இதே அறிவுரைகளை சொல்வாய்.

காவலன் செயலி இதை டவுன்லோடு செய்து உன் செல்பேசியில் பதிவிறக்கம் செய்திருக்கிறேன்.

ஆபத்தான காலகட்டங்களில் இந்த செயலியை பயன்படுத்த மறக்காதே "என்று மகளுக்கு அந்த தாய் அறிவுரை செய்தது என்னை உண்மையில் கவர்ந்தது.

நான் கவனிக்கிறேன் என்பதை தெரிந்து கொண்ட அந்த தாய் "அண்ணா நான் சொல்வது சரிதானே இந்த உலகம் மோசமானது என்று சொல்லிவிட்டு நாம் ஒதுங்க கூடாது இந்த மோசமான உலகத்தில் நாம் நல்லவனாக வாழ என்ன செய்ய வேண்டுமோ அதை செய்ய வேண்டும் அதைத்தான் என் மகளுக்கு அறிவுரையாக சொல்கிறேன் "என்று சொல்ல நீங்கள் சொன்ன அறிவுரை அனைத்தும் நூற்றுக்கு நூறு உண்மை என்று சொல்லி அந்த மாணவியிடம் உங்கள் அம்மா சொல்படி நடந்து கொள்ளுங்கள் நீங்கள் நன்றாக வருவீர்கள் என்று வாழ்த்தி விட்டு இறங்கினேன்.