தொடர்கள்
கதை
ஶ்ரீதேவியின் பேனா ( பெருங்கதை ?) - கி.ரமணி

20240418092853507.jpg

சென்னைக்கு பணி நிமித்தமாகச் சென்று, முடித்து,திருச்சி திரும்பி, இன்று கன மின் தொழிற்சாலை ஆபீசுக்கு வந்த சேகர் முகத்தில் அப்படி ஒரு பரவசம்.

வழக்கமாகவே வெட்கம் கலந்த புன்னகை குடி கொண்டிருக்கும் அந்த முகம், இன்று புன்னகைக்கீற்றினால்

உதடுகள் ,சற்று அகன்று, கண்களில் ஃப்ளுரசன்ட் விளக்கு பொருத்தப்பட்டது போன்று ஒளிவெள்ளம் பாய்ந்து.. எல்லாம் ஒன்றாக சேர்ந்து அமர்க்களமாக ஜொலித்தது.

அலுவலகத்தில் என் எதிர் மேஜைக்காரன் தான் சேகர்.

ஒளி வெள்ளம் கண் கூச வைக்க

சேகரை பார்த்து கேட்டேன்.

"என்ன சேகர் செம்ம மூட்ல இருகிற மாதிரி இருக்கு. வீட்ல பொண்ணு கிண்ணு பாத்திருக்காங்களா? இல்லை நீ யாரயாவது...."

"சே சே அதெல்லாம் ஒண்ணும் இல்லை ப்பா ."

என்று வெட்கப்பட்டான்.

அவன் கை தன்னை அறியாமல் சட்டை பாக்கெட்டில் இருந்த பேனாவை தடவியது.

"என்ன சேகர்.. பேனா புதுசா? "

"கிட்டத்தட்ட அப்படித்தாம்பா. பழைய பேனா.ஆனா புது ஜென்மம் எடுத்திச்சு."

நான் என் இடத்திலிருந்து எழுந்து சென்று சேகர்க்கு எதிரில் அமர்ந்தேன்.

பேனா புது ஜென்மம் எடுத்த கதையை சேகர் ஆரம்பிக்கும் முன் வாசகராகிய

நீங்கள் ஒரு விஷயத்தை தெரிந்து கொள்ள வேண்டியது இங்கு அவசியம் ஆகிறது.

'1977 ன் மிகப் பெரிய இந்திய நிகழ்ச்சி எது?' ..என்று கேட்டால் நீங்கள் என்ன சொல்வீர்கள்?

கூகுள் கடல் கடைந்து,.....

'எமெர்ஜன்சி முடிந்து, மொரார்ஜி பிரதமர் ஆனார்.' என்று ஏதாவது உப்புச் சப்பு இல்லாமல் சொல்லாதீர்கள்.

அக்கால தமிழ் நாட்டு இளைஞர்களைப் பொறுத்த வரையில், 1977 இல் கி மு ,... கி பி.. போல காலங்கள் வேறு பெயர்களில் பிரிக்கப்பட்டன. .1977 க்கு முந்தய காலம் ஸ்ரீமு என்றும் பிந்தியது ஸ்ரீ பி என்றும் கூறலாம் .

காரணம்1977 இல் பதினாறு வயதினிலே என்ற ஸ்ரீ தேவி மஹாத்மியம் வெளி வந்து நம் இளைஞர்களை நடிகை ஸ்ரீதேவி புகழ்

ஜபிக்க வைத்தது.

80 பக்க விஸ்டம் நோட் புக்கில் ஸ்ரீதேவி ஜெயம் என்று நுணுக்கி நுணுக்கி மணிக்கணக்காக எழுதிய அன்றைய இளசு,... (இன்றைய மிகப் பெரிசு) சிலதை எனக்குத் தெரியும்.

இத்தகைய பதினாறு வயதினிலே படம் வெளி வந்து ஸ்ரீதேவியின் மயிலாட்சி தமிழ் நாட்டில் நடந்து கொண்டிருந்த வேளை அது.

"மயிலு இருக்கற அழகுக்கும் அந்தஸ்துக்கும்... (அவளுக்காக) எவனாவது சீமையிலிருந்து சூட்டு கோட்டு போட்டவன் தான் வருவான்.." என்று படத்தில் ஒரு பாட்டி,ஜோசியம் சொல்லுவா ஞாபகம் இருக்கா?

,

ஏராளமான நம்ம ஊர் லுங்கி இளைஞர்கள் இதற்காகவே நிஜமாவே

சூட்டு கோட்டு தைத்துக் கொண்டார்கள் என்றால் பாருங்களேன்.

சுவற்றில், ஆட்டோ பின்னால் , பஸ் பின்னால்,... புடவை, பட்டாசு, பார் சோப்பு, பனியன், காப்பி,பிளேடு, பல்பொடி,, ஃபேன், ரேடியோ என.... அத்தனை விளம்பரத்திலும் நம்ம ஸ்ரீதேவிதான்.

இப்போ நம்ம கதைக்கு வருவோம்.

"சரி உன் பேனவோட புது ஜென்மக் கதையை சொல்லுப்பா, சேகர்!" என்றேன்.

சேகர் அக்கம் பக்கம் பார்த்து விட்டு ரகசியமா அடித் தொண்டையில் என்னிடம் பேசினான்.

" நேத்து சாயுங்காலம் அம்பத்தூர்ல

என்னோட எலக்ட்ரிகல் பேனல் ஆய்வு முடிஞ்சுதா, ஆட்டோல ஏறி நேர எழும்பூர் ஸ்டேஷன் வந்தேனா,

எங்கிட்ட வைட்டிங் லிஸ்ட் டிக்கெட் திருச்சிக்கு ராக்போர்ட்க்கு இருந்துதா.. அத கன்ஃபர்ம் பண்ண முதல் வகுப்பு கவுண்டர்க்கு போனேன். வேல முடிஞ்சு திரும்பினா.... " சேகர் கண்கள் மூடி சில வினாடிகள் உறைந்தான்.

பின், " என்ன சொன்னேன்... ஆ. டிக்கெட் கன்பர்ம் பண்ணித் திரும்பின உடனே, ஒரு பெண் அருகில் வந்து,

" சார், ரிசர்வேஷன் ஃபாரம் ஃபில்லப் பண்ணனும். கொஞ்சம் உங்க பேனா தர முடியுமா?" என்றாள்.

அவள் முகத்தை பார்த்தேன். அசந்தே போய் விட்டேன்.

யார் தெரியுமா? கெஸ் பண்ணு. முடியாது. அவ பதினாறு வயதினிலே ஸ்ரீதேவிப்பா. நம்பவே முடியலே. பின்னால ஒரு பெண், அம்மாவா

இருக்கலாம்.. அவங்க துணையுடன் வந்தாப்ல." என்று சொல்லி கொஞ்சம் மூச்சு விட்டான் சேகர்.

" சரி,நீ என்ன பண்ண?" என்றேன் நான்.

"மன்னனாக இருந்திருந்தால் என் சாம்ராஜ்யத்தையே கொடுத்திருப்பேன்.

ஓவியனாக இருந்தால் என் இரு கண்களையே கொடுத்திருப்பேன்.

பேனா கொடுக்க என்ன தடை? கொடுத்தேன். அடுத்த ஐந்து நிமிஷங்கள் ஸ்ரீதேவி அருகாமையில் ஒரு வினாடிக்கு கோடி ருபாய் மதிப்பு கொண்டிருந்தது."

"எவ்வளவு பெரிய அதிருஷ்டசாலிப்பா நீ.?என்ன டிரஸ் போட்டிருந்தா?"

"

அதே பதினாறு வயதினிலே மஞ்ச தாவணி பச்சை பாவாடை, தலையில் மல்லிகைப்பூ, கொஞ்சம் மேக்கப், இன்னொரு கிராமப்படம் ஷூட்டிங்ல

இருந்து வராப்பல."

"அப்புறம் "

"அப்பொறம் என்ன? பேனாவை திருப்பி கொடுத்து விட்டு... ரொம்ப தேங்க்ஸ்.. சொல்லிட்டு ரிசர்வேஷன் கவுண்டருக்கு போய்ட்டாங்க பொண்ணும் அம்மாவும்.

அந்த " ரொம்ப தேங்க்ஸ் " என் வாழ்க்கையில் மறக்க முடியாத வார்த்தைகள் ".

என்றுஅந்தப் பேனாவை வாஞ்சையுடன் தடவிக்கொடுத்தான் சேகர்.

"சேகர்! எங்கே கொஞ்சம் அந்த பேனாவைக் கொடேன்." என்றேன்.

சேகர் ரொம்பத் தயங்கி,மெதுவாக பாக்கெட்டில் இருந்து தன் பேனாவை .

எடுத்துக் கொடுத்தான்.

கொஞ்சம் காஸ்ட்லி பேனா தான்.

ஹீரோ பேனா. அபூர்வமான அடர்த்திப் பச்சைக் கலரில் அடிபாகம். மேலே ,தங்க நிற முடி அல்லது மூடி.

'அழகான அதிருஷ்டிக்காரப் பேனா!' என்று நான் தடவிக்கொடுத்ததை சேகர் ரசித்திருக்க வாய்ப்பில்லை..

உடனே பேனாவை திரும்ப வாங்கிப் பாக்கெட்டில் சொருகிக்கொண்டு

"கொஞ்சம் அர்ஜன்ட் ஒர்க் இருக்கு. மதியம் சப்பாட்டு வேளையில் பார்க்கலாம்." என்று முடித்துக்கொண்டான்.

சாப்பாட்டு வேளையில் ரெண்டு டேபிள் சேர்த்து போட்டு எட்டு பேர் உட்காருவோம். நாங்க ஆரம்பிக்கும் போது சேகர் வரல. நான்,சேகரின் ஸ்ரீதேவி பேனா வாங்கின கதையைச் சொல்ல, எல்லாம் வாய்

திறந்தாங்க.ஆனா ஒருத்தன் கூட டிபன் பாக்ஸ்ல இருந்து ஒரு பருக்கை வாயில் போடல.

லேட்டா சேகர் சாப்பிட வந்த போது

டேபிள் வி.வி.ஐ.பி ஆனான்.கிட்டத்தட்ட ஸ்டாண்டிங் ஓவேஷன் தான்.

ஸ்ரீதேவி பேனாவைத் தொட ஏக டிமாண்ட். சேகர் ரொம்ப ஆயாசம் ஆயிட்டான்.

மத்தியானம் சேகர் மேஜைல நான் அவனுடன் பேசின போது என் மீது கோபப்பட்டான். ஏன் ஸ்ரீதேவி விஷயத்தை எல்லார் கிட்டயும் சொன்னேன் என்று.

நான் " இது ஒரு காவிய நிகழ்ச்சி. இதை சொல்லாட்டி நீ இவ்வளவு பெரிய ஆளா இங்கு ரெண்டு மணி நேரத்தில ஆக முடியுமா? " என்றேன். யோசித்து "அதுவும் சரி தான்."என்று

ஒத்துக்கொண்டான் சேகர்.

"சேகர். உரையூர்ல பிளாஸ்டிக் பொருள் மேல எங்கிரேவ் பண்ணும் மெஷின் கடை இருக்கு. உன் பேனா கீழ உன் பேரு எழுதிக்கோ. இல்லின்னா எவனாவது பேனாவ அழுத்திடுவான்."

என்றேன்.

"நல்ல ஐடியா" என்ற சேகர் அன்றே பேனா கீழ் ஜி. எஸ் னு எழுதி அடுத்த நாள் ஆபீஸ் கொண்டு வந்தான்.

ஸ்ரீதேவி விஷயம் எல்லா டிபார்ட்மெண்ட்க்கும் பரவ சேகர்க்கு ஆபீஸில் பேனாவை வர்றவங்களுக்கெல்லாம் காட்டி, கொஞ்சம் அவர்களை ஸ்பரிசிக்க விட்டு ,உடனே திரும்பி வாங்குவது

சேகர்க்கு முழு நேர வேலையாகி விட்டது.

"உன் டேபிள்ல ஏம்ப்பா இவ்வளவு கூட்டம். ஏதாவது சிகரட், இல்லாட்டி லாட்டரி டிக்கெட் ரகசியமா விக்கிறாயா ஆபீசுக்குள்ள ? "என்று மேனேஜர் சங்கரனே கேட்க வாய்ப்பு உண்டு என்று பயந்தான் சேகர்.

என்னைக் கூப்பிட்டு

" என்னால் பிரஷர் தாங்க முடியலப்பா.

பேனா பற்றி கவலை.சங்கரன் பற்றியும் கவலை. இந்த பேனாவை நான் தங்கும் தில்லைநகர் ரூமில் வைக்கவும் பயமா இருக்கு. எவனாவது அமுக்கிடுவான் என்று.ஆபீசில் வேற மாதிரி தொல்லை.என்னப்பா செய்வது? "

என்றான்.

"கொஞ்சம் பேனா மேல் இருந்து உன் பற்றைக் கழட்டுப்பா."

" நீ பெரிய கிருஷ்ணர் . உன் ஓட்டைப் பேனாவை தப்பித்தவறி ஸ்ரீதேவி எழுத

வாங்கினா என்றால் இப்படியா பேசுவ?."

"சரி. என்ன பண்ணணும் என்கிறாய்? "

அடுத்த சில நாளைக்கு உன்னிடம் காலையில் நான் பேனா கொடுத்தால்.

நீ பத்திரமா வைத்துக்கொள். யாரிடமும் சொல்லாதே. அப்புறம் சாயுங்காலமா வாங்கிக்கொள்கிறேன்."

"ரொம்ப தேங்க்ஸ்!" என்று நான் கை நீட்ட,

"அட பாவி. இது கொஞ்சம் ஓவரா இருக்கே! இவ்வளவு அவசரமா?பேனா ஜாக்ரதை. நாலு மணிக்கு திரும்பி கொடு.."

என்று சொல்லி பேனா கொடுத்துப் பின் போனான் சேகர்.

பேனாவைச் சட்டைப்பையில் வைத்து கிறக்கத்தில் அமந்திருந்தேன்.

பியூன் பஷீர் வந்து " சார் மேனேஜர் உங்களை அர்ஜன்ட்டா அவர் ரூம்க்கு வரச் சொன்னார். "என்றார்.

டென்ஷனுடன் ஓடினேன்.

நாசிக் இருனூறு மெகா வாட் கஸ்டமர் பற்றி மானேஜர் ஏதோ கேட்க ஆரம்பிக்கும் போதே, எதிரே இருந்த டைப் செய்த லெட்டர்ல கையெழுத்து போட பேனா தேடி,அது இல்லாமல், என்னிடம் கேட்க,.. ஸ்ரீதேவி பேனாவை ரொம்ப தயக்கத்துடன் வேறு வழியில்லாமல் நான் கொடுத்தேன். சங்கரன் பேனாவை கையில் வாங்கும் போது டெலிபோன் அடிக்க, எடுத்து

" எஸ் சார்" என்று பின் எழுந்து நின்று,பத்து முறை பயத்துடன் மீண்டும் மீண்டும் 'எஸ் சார்' சொல்லி,போனை வைத்து "ஜி எம் கூப்பிடறார். அப்புறம்

பார்க்கலாம். " என்று விரைந்தார்

.

ஸ்ரீதேவி பேனாவும் சங்கரன் சட்டைப்பையுடன் கூடச் செல்வதைத் தடுக்க முடியாமல் பார்த்துக்கொண்டிருந்தேன்.

அன்று அப்புறம் மேனேஜரைப் பார்க்க முடியல. சேகர் கிட்ட சாயுங்காலம் பேனா, சங்கரனுடன் போன விஷயம் சொல்லி நாளைக்கு காலை சங்கரன் வந்ததும் வாங்கி தருவதாகச் சொல்ல,.

சேகர், கொஞ்சம் சோகர் ஆனான்.

அடுத்த நாள் காலை மேனேஜர் சங்கரன் வந்த உடன் அவர் அறைக்கு

சென்று " சார்... நேத்து... பேனா "என்று

ஆரம்பித்தேன்.

வினோதமா என்னை பார்த்த சங்கரன்.

"என்ன உளர்ற.. நாசிக் கஸ்டமர் கிட்ட பேசினாயா.? இல்லை நான் தான்

பேசணுமா?உன் வேலையச் செய்யவா,

எனக்கு இந்த கம்பெனில மேனேஜரா வேலை குடுத்துருக்காங்க?"என்று சிடுசிடுத்தார். அவர் சட்டைப் பையில் ஸ்ரீதேவி பேனா இல்லை.

விட்டால் போறும் என்று சேகரிடம் ஓடி வந்தேன்.

"சங்கரன் கிட்ட பேனா இல்லை போல இருக்கு."

" ஏம்ப்பா விளையாடறயா?. அப்ப உன்கிட்ட இருக்கா?. "

"எங்கிட்டயும் இல்லை "

"அப்போ அதுவா பறந்து ஸ்ரீதேவி கிட்டயே போயிடுத்தா?"

சேகர் என்னை ஒரு பச்சை துரோகியாகப் பார்த்து போல தோன்றியது.

"சேகர் இன்னிக்குள்ள நான் ஸ்ரீதேவி பேனாவை உனக்கு குடுத்துடறேன்."

என்று சொல்லிக் கிளம்பினேன்.

சங்கரனைப் பாக்கணும்னா முதல்ல

நாசிக் ஜி. எம்.'காலே' யிடம் பேசியாகணும். ஆனா ஏன் பேசணும், என்ன பேசணும், என்றே தெரியாதே!

.ஆபீஸ் சூப்பரின்டென்டென்ட் கிட்ட சொல்லி எஸ். டி.டி ல 'காலே' ய புடிச்சேன் . மராட்டியோ ஹிந்தியோ கலந்த ஆங்கிலத்தில் மேனேஜர் சங்கரனை ஏகமாகத் திட்டினார் ."வி ஆர் வெரி அப் செட்" என்றார் .

ஏன், எதற்கு என்று சத்தியமா புரியல.

"நான் சங்கரன் சார் கிட்ட உங்க வருத்தத்தை சொல்றேன் சார்." என்று

காலேயின் , காலைப்பிடிக்கும் தொ

னியில், ஆனால் அவர் வருத்தம் என்ன என்பது தெரியாமலே பேசி தொலை

பேசியைக் கீழே வைத்தேன்.

பிறகு,வேறு வழியில் துப்பு துலக்கஆரம்பித்தேன்.

சங்கரன் நேத்து மீட்டிங்குக்கு போன அறைக்குள் சென்று பியூன் பஷீர்

துணையுடன் பேனாவை தேடிப்பார்த்தேன்...இல்லை.

ஒரு சின்ன சந்தேகம். பஷீர் கிட்ட கேட்டேன். "நம்ம சங்கரன் சார்க்கும் ஸ்ரீதேவியைப் பிடிக்குமோ ?. பதினாறு வயதினிலே பார்த்து, ஃபேன் ஆயுட்டாரா?. அதுனால பேனாவை அமுக்கிட்டாரா?"

பஷீர் கடுப்பாகி விட்டான்.

"சார்! இந்த பேனாவோட சரித்திரம் சங்கரன் சாருக்கு தெரிய வாய்ப்பே இல்லை.இந்த விஷயத்துல அவரு தெய்வம். வேல தவிர ஒரு வம்பு கிடையாது. வயசு 45 வேற ஆவுது.அவருடைய ஞாபக மறதி வேற, எல்லாருக்கும் தெரியும்.என் கிட்ட கேட்ட மாதிரி வேற யார் கிட்டயும் கேட்காதீங்க." என்றான்.

போற வர்ற எல்லார் சட்டைப்பையை யும் பாத்தேன்.

பின் என்னையே திட்டிக்கொண்டேன்.

பேனா திருடன் தன் பாக்கெட்ல திருட்டு பேனாவை ஜம்னு வெச்சுப்பானா என்ன?

கடைசியில் ஒரு வழியா சேகரிடமே சொல்லி விட்டேன். "ரொம்ப சாரி. கிடைச்சா கொடுக்கறேன்." என்று.

சேகர் ஜென்டில்மன்.என்னைத் திட்டல. ஆனால் அதுக்கு அப்புறம் என்னோட அவன் பேசவே இல்லை

என்னுடைய சேகருடைய

நட்புக்கு குறுக்கே ஸ்ரீதேவி பேனா ஒரு அழிக்க முடியாத சிவப்புக் கோடு போட்டது போன்று எனக்குத் தோன்றியது.

சில மாதங்களில் எனக்கு சென்னையில் வேறு ஒரு நல்ல வேலை கிடைக்க,திருச்சி வேலையை ராஜினமா செய்து விட்டுப் போனேன்.

பிரிவு உபசாரத்தன்று சேகர்

இருந்தான். ஆனால் ஏனோ என்னிடம் பேசவில்லை.

புது அலுவலகம் சென்னையில் இருந்தும்,பழைய ஆபீஸ் நண்பர்களுடன் நட்பு,சந்திப்பு எப்போதும் போல இருந்தும் சேகரிடம் மட்டும் தொடர்பு இல்லை.இதில் எனக்கு ரொம்ப வருத்தம் தான்.

ஒரு குற்ற உணர்வு வேறு சதா

இருந்து தொலைத்துக் கொண்டிருந்தது.

பின்னர், திருச்சியில் நடக்கும் சேகர் கல்யாண இன்விடேஷன் வந்தும் நான் போகவில்லை.

ஒரு வருஷம் கழிச்சு எனக்கு கல்யாணம் நிச்சயமாகி அழைப்பு அனுப்பும்போது சேகர்க்கும் அனுப்பினேன். சேகர் வரலை . அவன்

நிர்வாக வேலையாக லிபியாவுக்கு போயிருப்பதாக கூறினார்கள்.

மூன்று ஆண்டுகள் கழித்து அலுவக வேலையாய் பம்பாய் போய் சென்னை திரும்பும் போது பம்பாய் ஏர்போர்ட்டில்

செக்யூரிட்டி சோதனை முடிந்த பின் அமர்ந்திருந்த போது கொஞ்சம் பின்னால் ஒரே சல சலப்பு.

திரும்பினால்.. அதிர்ந்தே போய்விட்டேன்..

...உயரமான ஸ்ரீதேவி மெதுவாக நடந்து

வருகையில்...கூட ஒரு பெண்ணும் .. (தங்கைபோல இருந்தாள்)....வந்தாள்.

உயரமான ஸ்ரீதேவி மெதுவாக நடந்து

வருகையில்...கூட ஒரு பெண்ணும் .. (தங்கைபோல இருந்தாள்)....வந்தாள்.

அன்று ஸ்ரீதேவி வெகு வேகமாக வளர்ந்து வரும் அகில இந்திய நடிகை.

பாலிவுட், ஸ்ரீதேவியின் முகத்தில்

பணக்காரத்தனத்தையும் , பெரிய மனுஷத்தனத்தையும், மேக்கப்பில் குழைத்து ஏகமாய் சேர்த்திருந்தது. ஆனால் பழைய குழந்தைத்தனமும், கவர்ச்சியான பெரிய மூக்கும் கொஞ்சம் ( நிறைய?)மிஸ்ஸிங்.

'அந்த ஆயிரம் மாபெரும் போர்க்கப்பல்கள், ஆவேசத்துடன் கடலில் கிளம்ப, முழுவதும் காரணமான பேரழகுள்ள முகம் இது தானா? 'என்று ஹோமரின், ட்ராய்

ஹெலனைத் தன் கற்பனையில் கண்டு மயங்கிய கவிஞன் பாடியது போல, எனக்கும் தோன்றியது.ஆனால் அடுத்த கணம். அறிவு உருப்படியா ஒரு ஐடியா கொடுத்தது.

" டேய்.உனக்கு என்று கடவுள் கொடுத்த தருணம் இது. வீணாக்காதே.

நேர ஸ்ரீதேவி கிட்ட போய் ஏர் டிக்கெட்டின் பின்னால் கவுண்டர் ஃபாயில் பகுதியில் ஒரு ஆட்டோகிராப் வாங்கிக்க. நீயும் பாக்கெட்ல சேகர் பேனா போல நல்ல பேனா வெச்சிருக்க. அப்புறம் பேனாவை சேகர் கிட்ட வெள்ளைக்கொடியா யூஸ் பண் ணி அவன் கிட்டயே கொடுத்துடலாம். "

என் அறிவுக்கு நன்றி சொல்லி மெதுவா ஸ்ரீதேவி பக்கம் சென்று "மேடம். நான் உங்க ஃபேன். ஆட்டோகிராப் ப்ளீஸ்.. என்று பேனாவை நீட்ட, ரெண்டு மில்லி மீட்டர் உதட்டசைவு மூன்று மில்லிமீட்டர் புருவ

ஏற்றத்துடன் என் பேனாவை வாங்கி ஸ்ரீதேவி,அக்கறையற்ற பார்வையுடன் கவுண்டர் ஃபாயிலில் கையெழுத்து போட, வெட்கத்த விட்டுட்டு,

"மேடம்!பென் ப்ளீஸ்!" என்று திரும்பி ஜாக்ரதையாக பேனாவை.

வாங்கிக்கொண்டேன்.

இவ்வளவு பெரிய நிகழ்ச்சி வாழ்நாளில் நடந்திருக்கு. பெரிசா சந்தோஷப்படாமல் இருக்கிறேனே என்று எண்ணினாலும் கூட ஒரு பழைய பெரிய பாரம் குறைவது போல ஒரு நிம்மதிஏற்பட்டது உண்மை.

மனைவியிடம் விஷயத்தை முழுசா சொல்லிவிட்டு ( நான் நியாயஸ்தன்! ) திருச்சி கிளம்பினேன்.

திருச்சியில் நண்பன் ராமனிடம் நான் அவனுடன் சேகர் வீடு போவதற்கு சேகரிடம் சம்மதம் வாங்கச் சொன்னேன்.திருச்சி போனேன்.

. திருச்சிமெயின் கார்டு கேட்டில் சேகரின் மூன்று வயசு பெண் குழந்தைக்கு ட்ரஸ் வாங்கிக்கொண்டு ராமனுடன் சேகர் வீட்டுக்குக் போனேன்.ஸ்ரீதேவியின் ஆட்டோகிராப் பேனாவும், கையெழுத்து போட்ட பாதி ஏர் டிக்கெட்டும் சட்டைப்பையில்.

திருவெறும்பூர் பக்கம் சேகரின் புது வீடு.

சேகர் , மனைவி, பெண் குழந்தையுடனும் முகம் மலர வரவேற்றான்.

"சாரி சேகர். உன் கல்யாணத்துக்கு வரல. என்று சொல்லி குழந்தையைக் கொஞ்சிவிட்டு, ட்ரெஸ் பொட்டியைக் கொடுத்தேன்.

பின் "என்னுடைய ரொம்ப நாள் கடனை திருப்பித் தரேன்." என்று ஸ்ரீதேவி கையெழுத்துப் போட்ட பேனாவையும் அதற்கு சாட்சியா ஏர்டிக்கெட் பாதியையும் சேகரிடம் கொடுத்தேன்.

"இதெல்லாம் என்ன?" என்றான் சேகர்.

பம்பாய் ஏர்போர்ட்டில் ஸ்ரீதேவியைப் பார்த்த விஷயம் முழுக்கச் சொன்னேன்.

"1977 ல நான் உன்னோட ஸ்ரீதேவி பேனாவை சங்கரன் சார்ட்ட கொடுத்து அப்புறம் அவர் திருப்பி கொடுக்கல இல்லையா!. இந்த பேனா அதற்கு பதில்!" என்று கொடுத்தேன்.

வாங்க மறுத்த சேகர் கட கட என்று சிரித்தான்." இன்னுமா உனக்கு அந்த விஷயம் ஞாபகம் இருக்கு.? அதனால் தான் என்னோட பேசலையா. பாவி. விஷயம் தெரியுமா. என் பெண் பிறந்த அப்புறம் பேர் வைத்த நாளில் நம்ம மேனேஜர் சங்கரன் மனைவியோட வந்திருந்தார்.

என் குழந்தையைக் கொஞ்சிய சங்கரன் மனைவி டக் என்று தன் ஹாண்ட் பாக்கில் இருந்து ஒரு பேனாவை எடுத்து குழந்தை கையில்

வைத்தார். பார்த்தால் ஆச்சர்யம்.

அது நம்ம ஸ்ரீதேவி எழும்பூர் ஸ்டேஷன்ல எங்கிட்ட இரவல் வாங்கின அந்தப் புகழ் பெற்ற பேனா.. அடில "ஜி. எஸ்" னு என்கிரேவ் பண்ணது.

சங்கரன் சார் தான் பேனா கடன் வாங்குவதிலும், பின்,திருப்பி கொடுக்காத மறதிக்கும் பேர் போனவர் ஆச்சே.இப்படி மறதில அவர் வீட்டுக்கு கொண்டுபோகும் எல்லா நல்ல இரவல் பேனாவையும் அவர் மனைவி தனியா எடுத்து வெச்சு,அப்புறம் இந்த மாதிரி விசேஷத்தில் கிஃப்டா யாருக்காவது

கொடுத்துடுவாங்க என்று அப்புறம் தான் தெரிஞ்சுது." என்று முடித்தான் சேகர்.

எனக்கு மனசு பாரம் பெரிசும் குறைந்தது. உற்சாகத்துடன் சேகரின் குழந்தையைத் தூக்கிக் கொண்டு,

"சரி.உன் பெண்ணுக்கு என்ன பெயர்.சொல்லவேயில்லையே."

என்றேன்.

ஃபங்ஷன் அன்னிக்கு சங்கரன் சார் தான் அவளுக்கு பேர் வெச்சார்.

பெயர்... "ஸ்ரீதேவி".. என்றான் சேகர்.