தொடர்கள்
அரசியல்
நாய்,பூனைகளை தின்கிறார்கள்-ட்ரம்ப் குற்றச்சாட்டு-தில்லைக்கரசிசம்பத்

20240813151748397.jpg

“அமெரிக்க எல்லையின் சக்கரவர்த்தினி ஆயிற்றே நீங்க! லட்சோப லட்சக் குற்றவாளிகள், தீவிரவாதிகள், போதைமருந்து விற்பவர்களை அமெரிக்காவின் உள்ளே சட்டவிரோதமாக நுழையவிட்டு , அவர்கள் அமெரிக்காவின் நகரங்களில் குற்றச்செயல்களில் ஈடுப்படுவதை வேடிக்கை பார்த்தவர் தானே நீங்க! குற்றவாளிகளான சட்டவிரோத குடியேறிகள் பசிக்கும் போது அமெரிக்கர்களின் வளர்ப்பு மிருகங்களான நாய், பூனை, வாத்துகளை அவ்வப்போது பிடித்து தின்கிறார்கள் என அமெரிக்கர்கள் என்னிடம் வந்து முறையிட்டு ஓவென அழுகிறார்கள்!” என ட்ரம்ப், கமலா ஹாரிஸை கடுமையாக தாக்க , இந்த நேரலையை தொலைக்காட்சியில் பார்த்த அமெரிக்க வீடு ஒன்றின் வளர்ப்பு நாய் “ நாய் தின்பதை” புரிந்துக்கொண்டு அதிர்ச்சியில் திரையில் தெரிந்த ட்ரம்பை பார்த்து அலறி சோஃபாக்கு அடியில் புகுந்த வீடியோ ஒன்று அமெரிக்கர்களின் மத்தியில் வைரலானது.

“ஆகா.. தர்மபிரபு இதை சொல்வது தாங்களா? தேசிய பாதுகாப்பு குற்றச்செயல்களில் ஈடுப்பட்டு,பத்தாததற்கு பொருளாதார குற்றங்கள், தேர்தல் முறைக்கேடுகளில் இறங்கியது மட்டுமில்லாமல் பாலியியல் குற்றச்சாட்டுகளுக்கும் ஆளான தாங்களா இதை சொல்வது ?!” என சிக்சர் அடித்து ட்ரம்ப்பின் மூக்கை உடைத்தார் கமலா.

20240813212300142.jpg

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு முன்னர் அதிபர் போட்டியில் உள்ள இரு வேட்பாளர்களும் நேரிடை விவாதம் புரிவது அங்கே வழக்கம். ஜூன் 27 அன்று அப்போதைய ஜனநாயக வேட்பாளர் பிடனுடன் ட்ரம்ப் முதல் விவாதத்தை முடித்திருந்தாலும், வயோதிகம் காரணமாக பிடன் அதிபர் போட்டியிலிருந்து விலகியதை அடுத்து,பிடனுக்கு பதில் களமிறங்கிய ஜனநாயக கட்சியின் கமலா ஹாரிஸும் குடியரசு கட்சி வேட்பாளரான ட்ரம்ப்பும் முதன்முதலாக ஃபிலடெல்ஃபியாவில் நடந்த நேரடி விவாதத்தில் கலந்து கொண்டனர். நேரடி விவாதம் 3 முறை நடக்கும். கருக்கலைப்பு தடை சட்டத்திற்கு எதிரானவர் கமலா. “பெண்ணுடல் அவளுரிமை” என்று கமலா பேச ட்ரம்ப்பும் தேசிய அளவில் கருக்கலைப்பு தடை சட்டத்தில் கையழுத்து போட மாட்டேன் என்றார்.கமலாவை “பெண்ஒபாமா” என்று அழைத்த ட்ரம்ப் “உங்கள் கட்சி உலகை மூன்றாம் உலகப்போருக்கு அழைத்து செல்கிறது” என்று விளாசினார். விவாதத்தின் ஆரம்பத்திலிருந்து முடிவு வரை கமலாவே ஆதிக்கம் செய்தார். “ட்ரம்ப் பிரசாரக்கூட்டங்களில் அவரது ஆதரவாளர்கள் அவரது பேச்சைக்கேட்டு அலுப்பாகி கூட்டம் முடியுமுன்னே கிளம்பி போகிறார்கள், மோசமான தொழிலதிபர், பணக்காரர்களுக்காக மட்டுமே உழைப்பவர் , தவறான ஆட்சிமுறையினால் நாட்டையே பொருளாதார நெருக்கடியில் தள்ளியவர் ,

2020ல் 81 மில்லியன் மக்களால் வீட்டுக்கு துரத்தப்பட்டவர்” என்று சகட்டுமேனிக்கு கமலா ட்ரம்ப்பைத் தனிப்பட்ட முறையில் போட்டுத்தாக்கினார்.

ஜூன் மாதம் 27ல் பிடனுடன் நடந்த விவாதத்திலும் ட்ரம்ப் சரியாக பேசவில்லை என்கிறார்கள். வலுவான கருத்துகளின்றி , வெறும் பொய்செய்திகளை எப்போதும் போல சரளமாக ட்ரம்ப் புளுகினாலும், அதை சாமார்த்தியமாக எதிர்கொண்டிருக்க வேண்டிய பிடன் வயோதிகம் காரணமாக பயங்கரமாக சொதப்பியதில் ட்ரம்ப் அவ்விவாதத்தில் எளிதில் வென்றது போன்ற தோற்றம் ஏற்பட்டது. ஆனால் இம்முறை கமலா பிரமாதமாகவே பேசியுள்ளார்.

கமலா ட்ரம்பை விவாதத்தில் வெற்றிக் கொண்ட மாதிரி தெரிந்தாலும், ட்ரம்ப் தேர்தல் களத்தில் சிறிது பலமாக உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. பென்சில்வேனியா, மிச்சிகன், விஸ்கான்சின், வட கரோலினா,ஜியார்ஜியா, அரிசோனா மற்றும் நிவாடா போன்ற பழமைவாத மாநிலங்களில் ட்ரம்ப்க்கு அதிக ஆதரவு உள்ளது. இதற்கிடையே விவாதத்தின் போது கமலா தனது காதில் அணிந்திருந்த தோடுகளில் மைக்ரோ ஃபோன் இருந்ததாக எதிர்கட்சியினர் தங்கள் தலைவரான ட்ரம்ப் வழியிலேயே பொய் செய்தியை பரப்பினார்கள்.

விவாதகளத்தில் கமலா ஹாரிஸ், வெகு நிதானமாக, தலைமைப்பண்புடன் அமெரிக்காவின் எதிர்காலம் குறித்த நம்பிக்கையுடன் நின்றதை பார்த்த அமெரிக்க மக்கள் நிச்சயம் இவர் ட்ரம்ப் மற்றும் பிடன் போன்றவர் அல்ல.. இவர் ஒரு வித்தியாசமான தலைவர் என்பதை உணர்ந்திருக்கிறார்கள்.

20240813212324568.jpeg

அடுத்து வரவிருக்கிற பாக்கி இரு விவாதங்களில் யார் பிரமாதமாக வாதிட்டு வெல்கிறார்கள் என்பதையும், அது நவம்பரில் வருகிற தேர்தலில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதையும் பொறுத்திருந்து பார்க்கலாம்.