"நான் மட்டும் வேலைக்கு போயிருந்தேன்னா", " நான் வேலைய விடாம இருந்திருந்தேன்னா நான் எங்கேயோ போயிருப்பேன்". என்று மனசுக்குள் குமுறிக்கொண்டிருக்கும் எண்ணற்ற பெண்கள் பலர். அவர்களுடன் கைகோர்த்து ஒரு பக்கபலமாக இருந்து உற்ற தோழியைப்போல் அவர்களுக்கான அடையாளத்தை மீட்டெடுக்க உதவும் நிறுவனமே "Her Second Innings" என்ற இந்த அமைப்பு.
தனக்குள்ள திறமைகளை பயன்படுத்த வெளிப்படுத்த வாய்ப்பு கிடைக்க பெறாதவர்கள் மற்றும் அதைப்பற்றி அறியாதவர்களுக்கு, இங்கே இருக்கிறது உனக்கான பாதை, உன்னால் சாதிக்க முடியும், நாங்கள் இருக்கிறோம் உன்னுடன் என்று சொல்லி அந்தக்கதவினை திறந்து விட தயாராய் இருக்கிறார், திருமதி.மஞ்சுளா தர்மலிங்கம்.
எதனை சிரமமான சூழல் குடும்பத்தில் ஏற்பட்டாலும், அந்த சூழலுக்கு முதலில் பலிகடாவாக மாறுவது, பெண்கள் தான்."குழந்தையை பார்த்துக்கொள்ள முடியவில்லையா?, அப்புறம் நீ ஏன் வேலைக்கு போற ?" என்று சொல்லி பெண்களின் உரிமை தான் முதலில் பறிக்கப்படுகிறது. இதுபோல காரணகளால் வேலையை விடும் பெண்களுக்கு மீண்டும் வேலைக்கு செல்வது என்பது மிகவும் சிரமமான செயலாக இருக்கிறது. . அவர்களுக்கு மீண்டும் பயிற்சி அளித்து, வழி காட்டுவது தான் "Her second innings". இதை தனது கடமை என்பதையும் தாண்டி தனது வாழ்வியல் முறையாகவே கொண்டு சமூக பணியாற்றிவரும் இரண்டு பெண்களைப் பற்றிய அறிமுகம் தான் இந்த வார சாதனைப் பெண்கள் நேர்காணல்.
"Hersecondinnings .com " இந்த தளத்தில், மீண்டும் பணியில் சேரவேண்டும் என நினைப்பவர்களை ( இலவசமாக)பதிவு செய்ய வைத்து, வேலை, தகுதிக்கேற்ப பயிற்சி அளித்து, அவர்களை அவர்களின் திறமை மற்றும் விருப்பத்திற்கு ஏற்ப பன்னாட்டுத் தொழில் நிறுவனங்களில் மீண்டும் பணியமர்த்த உதவுவதே இந்த நிறுவனத்தின் முக்கிய நோக்கம்.
பதினைந்து வருடங்களுக்கும் மேலாக இந்நிறுவனத்தை வெற்றிகரமாக செயல் படுத்தும் இவருக்கு பின்னால் அர்ப்பணிப்புடன் கூடிய பெரிய பெண்கள் குழுவே இருக்கிறது. இதுவரை 6000 க்கும் மேற்பட்ட புதிய வேலைகளை உருவாக்கி உள்ளனர். 10000 க்கும் மேற்பட்ட பெண்களை பணியமர்த்தி, ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்களை இணைத்து இவ்வமைப்பு வெற்றி பாதையில் செல்கிறது.
இதன் மற்றொரு கிளை அமைப்பான "Her money talks" , பெண்கள் பொருளாதாரத் துறையில் சிறப்பான அறிவினைப் பெற்றிடவும், தங்கள் சம்பாதிப்பதை சரியான வழியில் சேமிக்க, செலவிட தெரிந்து கொள்வதை சுலமாக்கிடவும் உருவானது. இதுவரை பல பெண்கள் கல்லூரிகள், மற்றும் பன்னாட்டு நிறுவங்கள், பெண்கள் கூட்டமைப்புகள் என பல இடங்களிலும் 1000 க்கும் மேற்பட்ட இலவச பயிற்சிப் பட்டறைகளை நடத்தியிருக்கிறது. ஒரு லட்சத்திற்கும் மேலான உறுப்பினர்களை கொண்ட இவ்வமைப்பு 50 பெரிய பொருளாதாரத் துறை சார்ந்த நிறுவனங்களோடு கைகோர்த்துள்ளது. எடுத்துக்கொண்ட லட்சியத்தின் மதிப்பும் அதை அடையவேண்டி மேற்கொள்ளவேண்டிய மிகப்பெரிய முயற்சியும், அர்ப்பணிப்பான மனதும் இவர்களை உந்துவிக்கும் சக்தியாகும். இவர்களின் பணி சிறக்க, இன்னும் பல பெண்களின் வாழ்வில் ஒளியேற்றிடவும் " அக்னி சிறகே எழுந்து வா.. புவியை அசைப்போம்.. " என்று சொல்லி வளர்க! வாழ்க!! என்று விகடகவி வாசகர்கள் சார்பாக வாழ்ந்திடுவோம்.
வாழ்க்கையில் எந்த விதமான சிக்கல்களும், என்ன சவால்கள் வந்தாலும் அதனை எதிர்கொண்டு எனக்கான தனித்துவத்தை நிரூபித்து காட்டியே தீருவேன் என்று நினைக்கும் ஒருவராய் நீங்கள் இருந்தால் ,உங்களோடு கைகோர்த்து உங்கள் பயணத்தில் உங்களுடன் உறுதுணையாய் இருந்து உங்கள் இலட்சியத்தை அடைய தயாராய் இருக்கிறாரகள் இந்த சிங்கப்பெண்கள் இருவரும்...
மேலும் இவர்களைப்பற்றி அறிந்துகொள்ள
hersecondinnings.com
hermoneytalks.com
Leave a comment
Upload