சென்ற வாரத்தில் பாரிஸில் நடைபெற்று வந்த பாரா ஒலிம்பிக் போட்டிகள் முடிவடைந்தன . அகில உலக அளவில் மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்காக நடத்தப்படும் இந்த போட்டிகளில் இந்திய வீரர்கள் கலந்துக் கொண்டு பதக்கங்களை அள்ளி வந்துள்ளனர் . 28.8.2024 முதல் 8-9-2024 வரை நடைபெற்ற இந்த போட்டிகளில் உலகமெங்கும் இருந்து 4400 வீரர்கள் பல வித விளையாட்டுகளிலும் பங்கு பெற்றனர்
.இந்தியாவின் சார்பில் 84 வீரர், வீராங்கனைகள் 12 வித விளையாட்டுப் பிரிவுகளில் பங்கேற்றுள்ளனர் .இந்த போட்டிகளில் இந்தியா 29 மெடல்களைத் தட்டி இருக்கிறது .7தங்கம்,9 வெள்ளி மற்றும் 13 வெண்கலப்பதக்கங்களைப் இந்தியா வென்றுள்ளது. உலகப் பதக்கப்பட்டியல் வரிசையில் இந்தியா 19 ஆம் இடத்தைப் பிடித்துள்ளது . பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்தியா தர வரிசையில் 71 ஆம் இடத்தில் இருந்தது . அந்த சரிவை பாரா ஒலிம்பிக் போட்டிகள் சரி செய்து நிமிர்த்தி விட்டன .
இந்திய அரசு 74 கோடி ரூபாய் அளவில் இந்திய வீரர்களுக்காக செலவு செய்தது . பல்வேறு நிறுவனங்களும் பின்னணியில் இருந்து உதவி செய்தன .இந்த 84 வீரர்களும் ஒலிம்பிக் மைதானத்தில் தம் திறமையைக் காட்டினார்கள். கடுமையான போட்டிக்கு இடையில் வெற்றி பெற்றுள்ளனர் .
அவர்களுள் குறிப்பிடத்தக்கவர் தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு .கடந்த மூன்று பாரா ஒலிம்பிக் போட்டிகளிலும் அவர் பதக்கங்களை வென்று வெற்றிக்கொடி நாட்டி உள்ளார்
மாரியப்பன் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பெரிய வடுகம் பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் . ஆறு குழந்தைகளில் ஒருவராக ,கூலி வேலை செய்யும் தாயாரால் வளர்க்கப்பட்டவர் .ஐந்து வயதில் பள்ளிக்குச் செல்லும் போது ஒரு வாகன விபத்தில் அவரது வலது கால் நசுங்கியது .
வறுமையும் , ஊனமும் அவரை முடக்கவில்லை . ஆரோக்கியமான மற்ற மாணவர்களிடம் இருந்து தம்மை வேறுபடுத்திக் கொள்ளாமல் இருக்க அவர் தேர்ந்தெடுத்தது விளையாட்டு .உடற்பயிற்சி ஆசிரியர் உதவியுடன் முதலில் வாலிபால் விளையாட்டில் தேர்ச்சி பெற்றார் . அவரது கோச் சத்யநாராயணா அவரை உயரம் தாண்டுதலில் சாதிக்க தூண்டினார் .அவரது விடாமுயற்சியும் ,பயிற்சியும் மாரியப்பனை துனிசியாவில் நடந்த மாற்றுத் திறனாளிகளுக்கான டி 42 உயரம் தாண்டும் போட்டியில் பங்கேற்று 2016 ரியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றார் .அங்கு தங்கம் வென்றார் .
அதன் பின் தொடர் வெற்றிகள் அவருக்கு வந்துக் கொண்டே இருக்கின்றன தொடர்ந்து 2020 டோக்யோ பாராஒலிம்பிக்ஸில் வெள்ளிப் பதக்கம் வென்றார். இதனையடுத்து தற்போது பாரிஸ் பாரா ஒலிம்பிக் தொடரில் உயரம் தாண்டுதல் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். இதன்மூலம் பாரா ஒலிம்பிக்கில் தொடர்ந்து 3 முறை பதக்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை படைத்துள்ளார் மாரியப்பன். .
2017 ஆம் ஆண்டு இந்திய அரசின் பத்மஸ்ரீ விருதும், விளையாட்டுத் துறையின் உயர் விருதான அர்ஜுனா விருதும் மாரியப்பனுக்கு அளிக்கப்பட்டுள்ளது . ரொக்கப்பணம் பரிசுகளும் அவருக்கு மத்திய ,மாநில அரசுகள் சார்பில் வழங்கப்பட்டுள்ளது .
பாரா ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்கள் ஓவொருவருக்கும் மாரியப்பனைப் போன்ற கதையும் , பின்னணியும் இருக்கும். தடைகளைத் தகர்க்க மனம் கொண்டவருக்கு , ஊனம் ஒரு தடை அல்ல என்று அவர்கள் நிரூபித்து இருக்கிறார்கள் .
தமிழகத்தைச் சேர்ந்த பெண்கள் இந்த போட்டிகளில் வென்றிருக்கிறார்கள். பேட்மிண்டன் ஒன்றையர் பிரிவில் தமிழகத்தை சேர்ந்த வீராங்கனைகள் துளசிமதி முருகேசன் வெள்ளிப் பதக்கமும், மனிஷா ராமதாஸ் மற்றும் நித்ய ஸ்ரீ சிவன் ஆகியோர் வெண்கலமும் வென்று சாதனைப் படைத்திருந்தனர்.காஞ்சிபுர மாணவி துளசிமதி, அடுத்த பாராலிம்பிக்கில் நிச்சயம் தங்கம் வெல்வதே லட்சியம் என்று நம்பிக்கையுடன் கூறுகிறார்.
மாரியப்பனைப் போலவே இவர்களும் போற்றுதலுக்கு உரியவர்கள் .
Leave a comment
Upload