தொடர்கள்
தொடர்கள்
சுப்புசாமியின் சபதம்...! புதுவை ரா. ரஜனி ஓவியம்: மணி ஶ்ரீகாந்தன் 6.

20240418094308857.jpg


"சார் டிஸ்கஷனில் இருக்கிறார்! யாரையும் இப்போதைக்கு உள்ளே விட வேண்டாம் என்று உத்தரவு. மிக மிக முக்கியமான இசை சம்பந்தமான 'சவுண்ட் இசை மேதையுடன்' டீப் டிஸ்கஷன்! எப்போ முடியும்னு தெரியலை. இப்படி உட்காருங்கள்...!" - பாட்டியிடம் சொல்லிவிட்டு, சில இசை சம்பந்தமான புத்தகங்களை முன் வைத்தார் ஏ. ஆர். ரஹ்மான் செகரட்டரி.


"அஃப்கோர்ஸ் அன் யுனிவர்சல் மியூசிஷியன் பிஸியாக இருப்பதில் ஆச்சரியம் என்ன? சில காரியங்களுக்காகச் சில சமயம் காத்திருப்பதில் தவறில்லை'.


புத்தகங்களை நாசூக்காய் புரட்ட ஆரம்பித்தாள் பாட்டி.


"ரொம்ப குளிர் அடிக்கிறது பிரசிடென்ஜி...!" என்று அகல்யா புடவைத் தலைப்பால் முதுகைப் போர்த்திக் கொண்டாள்.


எங்கிருந்தோ அறைக்குள் தவழும் முகலாயபாணி இசை. ஒரு கீ போர்டின் நேர்த்தியைப்போன்று வரிசையாக மாட்டப்பட்டிருக்கும் பெரிய பெரிய ஆளுமைகள், இசை ஜாம்பவான்கள், உள்ளூர், வெளியூர், வெளிநாட்டு சினிமா இயக்குனர்கள், கோல்டன் குளோப்,ஆஸ்கர் விருது நிகழ்வு புகைப்படச் சட்டங்கள், பெரிய கண்ணாடி அலமாரி முழுவதும் நிறைந்திருக்கும் விருதுச் சின்னங்கள், தங்க இசைத் தட்டுகள்...


'ஓ, ஏ. ஆர். ஆர். ஈஸ் ரியலி ஒண்டர் ஃபார் அவர் ஃபிரைடு இந்தியா. நாட் ஒன்லி இந்தியா... ஃபார் யுனிவர்சல்! எடுத்த ஒவ்வொரு ஸ்டெப்பும் அருமையான தளத்தில் அமைந்தது. இதற்கு முழுமுதற் காரணம் அவரது எளிமை, வறுமை. அதனையே இனிமையாக ஆக்கிக்கொண்டு எடுத்த காரியத்தில் கண்ணும் கருத்துமாக ஹி ஹேஸ் டன் ஹார்ட் வொர்க் அச்சீவ்மென்ட்...! சும்மாவா கிடைக்கும் அங்கீகாரம்? அதற்கான பெரும் பெருமை கோல்டன் குளோபல் அவார்ட்ஸ், அகாடமி அவார்ட் ஆகியவை...' உள்ளுக்குள் உணர்ந்து கொண்டிருந்தாள் பாட்டி.


"பிரசிடென்ஜி என்ன பலத்த யோசனை?"


"அகல்யா ஐ அம் திங்கிங் அபௌட் மிஸ்டர் ரஹ்மான். உழைப்பால் முன்னேறியவர். குறுக்கு வழியில் இந்த உயர்ந்த நாற்காலியைப் பிடிக்க அவர் எந்த குறுக்கு வழியையும் தேர்ந்தெடுக்கவில்லை...!"


"ஆமாம், ஆமாம்... பிரசிடென்ஜி...!"


"அகல்யா, ஐ வாண்ட் டு கிவ் யூ மை பர்சனல் அட்வைஸ். ஏன் நீங்களே என் இடத்திற்கு உங்களை ஃபிட்டாக நினைக்கக் கூடாது? உங்களுக்கு என்னோடு பயணித்த அனுபவம் நிறைய இருக்கு. இது போதாதா? எனக்கோ வயது ஏறத்தான் செய்கிறது. ஐ அம் ரெடி டு கிவ் மை பொசிஷன் டூ சம்படி... ஏன் நானே உங்களை பிரபோசல் செய்யலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால், தேவையில்லாமல் என்னென்னவோ நடந்து கொண்டிருக்கிறது...!"


இனிமேல் வழி இல்லை. அகல்யா பணிந்தாள்.


"ஐ அம் ரியலி சாரி பிரசிடென்ஜி. என் அறியாமை... சின்ன சபலம்... அந்த ஸ்ரீமதி கண்ணாம்பாள் பக்கம் சாய்ந்தது தவறுதான். என்னை மன்னிப்பீர்கள் என்று எனக்கு தெரியும். இனிமேல் நான் உங்கள் பக்கம்தான் இருப்பேன்...!" பாட்டியின் டைமன்ட் வளையல் கையைப் பிடித்துக்கொண்டு உறுதி தந்தாள்.


"ரியலி அபிரிஷியேட் யூ. நான் சொன்னதை கற்பூரபுத்தி ஆக புரிந்து கொண்டீர்கள், பாராட்டுகிறேன். கீப் கன்டினியூ யுவர் சின்சியர் சர்வீஸ் வித் மி...!"


அந்தக் கதவு மெல்லத் திறந்தது.

முன்னால் வேஷ்டி, ஜிப்பாவோடு வந்தவர் சுப்புசாமி.

ஐ பி எல் கிரிக்கெட்டில் ஏழாவதாக களமிறங்கும் தோனிக்கு எழும் கூட்டத்தின் கரகோஷ டெசிபலைவிட அதிகப்படியான அதிர்ச்சி டெசிபல் பாட்டிக்கு எழுந்தது.

கணவருக்குப் பின்னால் தி லெஜெண்ட் மியூசிஷியன் ரஹ்மான் பவ்யத்தோடு வந்தார்.


"தம்பி நீங்க கவலையை விடுங்க. இந்த சுப்புசாமியை நம்பினோர் கைவிடப்படார்! என்னோட முழு ஒத்துழைப்பும் உங்களுக்கு கிடைக்கும். நாளைக்கே ரெக்கார்டிங் வெச்சுக்கலாம். ஒரே ஒரு கண்டிஷன். நம்ம ரெக்கார்டிங் நடக்கிறப்போ என் சிநேகிதர்கள் குண்டு ராஜா, பாமராவ், கருணாச்சலம் உடன் இருக்கணும். அப்போதான் எனக்கு மூடு வரும். வேண்டுமென்றால் குண்டு ராஜாவோட பீவி ருக்மணியையும் கூப்பிட்டுக்கலாம்...!"


"உங்க விருப்பம் சார்...!" என்றார் பணிவாக.


சுப்புசாமி வரவேற்பறையில் ஸ்டைலாக அமர்ந்திருந்த கோமுவை கண்டார். கண்டவர் அதிர்ச்சியாகவில்லை; ஆச்சரியமடையவில்லை; துணுக்குறவில்லை. தான் பாட்டுக்கு நடந்தபடி -


"அதுல பாருப்பா ரகுமான், ஒரு முறை இப்படித்தான் கே.வி. மகாதேவன் ஒரு இக்கட்டில் மாட்டினார். அதை நிவர்த்தி செய்தது யார் தெரியுமா? என் ஒன்றுவிட்ட மாமா. நல்ல புல்லாங்குழல் கலைஞராக இருந்தவர்...!"


எழுந்து நின்ற பாட்டியையும் அகல்யாவையும் பார்த்து புரிந்து கொண்ட ரஹ்மான் சிரம் தாழ்த்தி சலாம் வைத்து பின்னர் வணக்கம் என்று கூறினார். "ஐயாவை வழியனுப்பிட்டு வந்திடறேன்...!" என்றார்.


சுப்புசாமி பாட்டியை இப்போது நேருக்கு நேர் பார்த்து யாருக்கும் தெரியாமல் கண்ணடித்தார். பின்னர், அகல்யாவைக் கண்டவராய்,


"அடடே அகல்யா சந்தானம்! மேடம் எப்படி இருக்கீங்க? தம்பி ரகு... இவர்தான் பாட்டிகள் முன்னேற்றக் கழக செகரட்டரி திருமதி. அகல்யா. டெடிகேடட் பெண்மணி. யாருக்காவது பென்ஷன் கின்ஷன் வேணும்னா டென்ஷன் ஆகாமல் உதவி செய்வாங்க. பாவம் இந்தப் புது பாட்டிக்கும் ஏதாவது இக்கட்டு வந்திருக்கும். உதவி செய்யவே வந்திருப்பாங்க. என்னம்மா சந்தானம் எப்படி இருக்கார்...?" என்றார்.


"ரொம்ப சௌக்கியம், மாமா. உங்களை இங்கே பார்த்ததில் ரொம்ப சந்தோஷம்!" என்ற அகல்யா சுப்புசாமி சரியான நேரத்தில் பாட்டியை நோஸ்கட் செய்கிறார்!' என்று சரியாகப் புரிந்து கொண்டாள்.


"சரிங்க, தம்பி... நீங்க வந்திருப்பவர்களைக் கவனியுங்க. நாம நாளை சந்திக்கலாம்...!" என்று தாத்தா பகர்ந்துவிட்டு, ரஹ்மான் ஏற்பாடு செய்திருந்த குளுகுளு படகுக்காரில் பெருமிதமாய் ஏறிக் கொண்டார்.


பாட்டி நடந்த கூத்தைப் பார்த்து அசந்து போய்விட்டாள்!
*****


வாசகக் கண்மணிகளே...கொஞ்சம் பின் (பூந்தோட்டக்) கதையைப் பார்த்து விடலாமா?


'இறைவன் படைத்த படைப்புகளுள் பூக்கள் மிகவும் அழகு. அடுத்து என் பீவி சாய்ரா போன்ற பெண்களை அழகாகப் படைத்தார் இறைவன்.


பூக்கள்மீது பைப்பினால் தண்ணீர் பாய்ச்சும்போது எழும் நீரின் ஓசை இசையே. பாலைவனத்தில் நட்ட நடு இரவில் எழும் அமானுஷ்ய நிசப்தம் கூட இசையானது. துணியை அடித்துத் துவைக்கும் வண்ணார் கல்லில் எழும் சப்தத்தை மீறி, ஒவ்வொரு அடிக்கும் தன் நெஞ்சத்தில் இருந்து ஓர் ஓசையை எழுப்புவதும் இசை. உப்புமாவில் இருந்து எழும் தாளிப்புவாசம்கூட இசையாகவே தெரிகிறது.
இதோ இந்தப் பெரியவர் எழுப்பிய வித்தியாசமான மூக்கின் ஒலிகூட இசைதானே? தேடித்தேடி கிடைக்காததை தேட வைத்து, அதற்கு ஒரு விடையைத் தரும் இறைவனின் கருணைதான் இசை!'


இப்போது சுடச்சுட வந்த பாதாம் பால் வாசம் சுப்புசாமியின் நாசியின் மெல்லிய நரம்புகளை மறுபடியும் மீட்டத் தயாரானது. மஞ்சள், பாதாம் பிசுறுகளுக்கே உரிய நறுமணம் அவரது எண்ணத்தைத் தூண்டியது. ஜிப்பா பையில் கையை விட்டு, பொடி மட்டையிலிருந்து மொறு மொறு பொடியை இரண்டு விரல்களில் ஏந்தினார். சற்று காற்றில் உதறி மூக்கின் துவாரங்களில் செல்லமாய் இழுத்துக் கொண்டார்.


"பால் சூடு ஆறாமல் இருக்கிறதா?" என்று கரிசனத்துடன் கேட்டார் ரஹ்மான்.


ஆமாம் என்று சொல்வதற்குப் பதிலாக இசையாகவே 'அக்... சூ...!' என்றார் சுப்புசாமி. பிறகு நாசூக்காய் கர்சிஃபினால் மூக்கை மவுத் ஆர்கன் போல உரசினார். மறுபடியும் எழும் ஆனந்தத் தும்மல்...பிரிவோம்... சந்திப்போம்...


"ஆ...ஆக்சூ...!"


"இந்த இசைக்கு எவ்வளவு வேண்டுமானாலும் தரத் தயாராக இருக்கிறேன். இந்த ஓசையின் உலக உரிமையை எனக்குத் தந்து விடுங்கள்...! என்றார் இசைப் புயல்.


"போங்க தம்பி. காசு என்ன காசு? துட்டு இன்னைக்கு வரும். நாளைக்கு வரும் என்பது நிச்சயமா? ஆனால், இசையை உயிர் மூச்சாய் நினைக்கும் உங்களுக்கு தினமும் இசை பொங்கும். அப்படி பொங்காவிடில் என்னைப் போன்ற அறிஞர்களிடம் கேட்டு தெளியும் உங்கள் எளிய மனசு பெரியது. இதில் பிட்சாத் பணம் பெரிதல்ல. நான் ஒரு பொறாமைப் பிடித்த எதிரியிடம் சவால் விட்டு வந்திருக்கிறேன். என் சவாலுக்கு நீங்க துணையிருந்தா போதும்...!" என்றார் சுப்புசாமி பானத்தை அருந்திக்கொண்டே.


"சொல்லுங்க, என்ன சவால்? யார் போட்ட சவால்? சவால்தானே சபாஷான வாழ்க்கைக்கு அர்த்தம் தரும்! சொல்லுங்க. நீங்க சவால் விட்டு இருந்தால், அதை நான் நிறைவேற்றும் பாக்கியம் கிடைத்தால் அது அல்லாஹ்வின் கருணைதான்...?" என்றார் ரஹ்மான்.


(அட்டகாசம் தொடரும்...)