தொடர்கள்
கற்பனை
படித்ததில் சிரித்தது

20240814073512352.jpeg

ஒரு பிரபலமான பார். அங்கே வேலை செய்த பார்டென்டர் மிகுந்த பலசாலி. இதனால் அந்த பார் அங்கே ஒரு போட்டி வைத்து வெற்றிபெறுபவருக்கு ரூ10,000 பரிசு என்று அறிவித்தது. போட்டி என்னவென்றால் ஒரு எலுமிச்சை பழத்தை அந்த பலசாலி பார்டென்டர் கடைசி சொட்டு வரை பிழிந்து எடுத்துவிடுவான். அதற்கு மேல் ஒரு சொட்டு.., ஒரே ஒரு சொட்டு பிழிந்து விட்டால் கூட பிழிபவருக்கு ரூ10,000 பரிசு.

இதை தெரிந்து பல பேர் போட்டியில் கலந்துக்கொண்டனர். ஆனால் ஒருவரால் கூட ஒரு சொட்டு என்ன?! ஒரு கால் சொட்டு கூட அந்த எலுமிச்சை பழத்திலிருந்து எடுக்க முடியவில்லை. அந்த அளவிற்கு உலர்ந்த எலுமிச்சையாக பிழிந்து வைத்திருந்தான் பலசாலியான அந்த பார்டென்டர். பளுதூக்கும் வீரர்களிலிருந்து, பெரும் சுமையை அனாயசமாக தூக்கி சுமக்கும் மூட்டைத்தூக்கிகள் வரை முயற்சி செய்தனர். ஆனால் யாராலும் முடியவில்லை.

ஒரு நாள் ஒரு பெண் அந்த பாருக்குள் நுழைந்தாள். “நான் பிழிகிறேன்.. அந்த எலுமிச்சையை கொடுங்கள்” என்றாள். பார்த்தவர்கள் சிரித்தனர். பெரும் பலசாலிகளே தோற்றுப்போன விஷயத்தில் இந்த பெண் வந்து என்ன சாதிக்கப்போகிறாள் என சுற்றி இருந்தவர்கள் நக்கலடித்தனர்.

“நான் பிழிந்து காண்பிக்கிறேன் என்னிடம் கொடுங்கள் “ என திரும்பவும் அவள் கூற அந்த பலசாலி பார்டென்டர் அவன் பிழிந்து மிச்சமான, முற்றிலும் காய்ந்து, உலர்ந்து போன எலுமிச்சையை அவளிடம் கொடுத்தான். அந்த பெண் எலுமிச்சையை கையில் வாங்கி பிழிய ஆரம்பித்தாள்.

ஒன்றல்ல, இரண்டல்ல.., மொத்தம் 6 சொட்டுகள் கண்ணாடி கோப்பையில் விழுந்தன. சுற்றி இருந்த அத்தனை பேரும் ஒரு வினாடி அதிர்ந்து போயினர். உடனே சுதாரித்து அனைவரும் கூக்குரலிட்டு கைத்தட்டி அப்பெண்ணை பாராட்டினர். அந்த பார்டென்டரும் “ யாராலும் செய்ய முடியாத ஒன்றை எப்படி செய்தீர்கள்? நீங்கள்பளுதூக்கியா?...மரம் வெட்டியா? …. நீங்கள் யார்? ” … என்று கேட்டான்.அதற்கு அப்பெண்

“ நான் சீதாராமன்.. நிர்மலா சீதாராமன்”

என்று கூறி அந்த பத்தாயிரத்தை வாங்கிக்கொண்டு நடையைக்கட்ட சுற்றி உள்ளவர்கள் அதிர்ச்சியில் மயக்கமடைந்தனர்.

பி.கு :

விகடகவி நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பத்திரிகை ! இது இணையத்தில் உலாவும் ஒரு நகைச்சுவை அவ்வளவே !!

ஜோக்கு சொன்னா அனுபவிக்கனும் ! ஆராயப்படாது !!