தொடர்கள்
கதை
எதிர்பாராத பரிசு- மதுராந்தகம் முனைவர் என்.பத்ரி

அப்படி என்னத்த பெருசா வாழ்ந்து கிழிச்சிட்டோம்னு சொல்ல, சொல்ல கேக்காம இந்த போட்டிக்கு கூட்டிட்டு வர்றீங்க என்றபடி சண்டையிட்டு கொண்டே உள்ளே என்னுடன் விழா நடக்கும் அறைக்குள் வந்தாள் கீதா, என் மனைவி.

நானோ சிரிச்சபடியே, ’பாரு, நமக்குதான் பரிசு கிடைக்கப் போகுது.35 வருடம் என்னோட நீ குப்ப கொட்டியிருக்க. முத்து முத்தா நாலு குழந்தைகள பெத்து கொடுத்துருக்க.அவங்க எல்லாரும் நல்லாத்தானே இருக்காங்கா?நமக்குபோயி பரிசு கிடைக்காமா போகுமா என்ன?’ அவளை அமைதிப்படுத்தினேன் நான்.

’ எனக்கு என்னவோ நம்பிக்கை இருக்கு. ஈ சீ ஆர்ல சொந்த வீடுன்னா
சும்மாவா?இந்த விழா முடியற வரைக்கும் மட்டும் நீ என்னோட சண்ட போடாத.
சிரிச்ச மூஞ்சோடு இரு.உன்ன கெஞ்சிக் கேட்டுக்கறேன்’மன்றாடினேன், என்
மனைவியிடம் நான். ஆனால், அவள் வழக்கப்படி ’சிடு,சிடு’ என்றுதான் இருந்தாள்.

போட்டி இப்படித்தான் நடந்தது.கணவன் மனைவியை தனித்தனியா அழைத்து நிறைய கேள்விகள் கேட்டாங்கா. கலந்து கொண்டவர்களில் பெரும்பாலானோர் ஓரளவுக்குதான் சரியான பதிலை சொன்னாங்க.

அதில் ஒரு தம்பதி சொன்ன பதில்கள் அரங்கத்தையே
ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ஒரு வேளை கொஸ்டின் பேப்பர் அவங்களுக்கு மட்டும் அவுட் ஆயிருக்குமோ? எல்லோருக்கும் இந்த சந்தேகம் இருந்துச்சு.எனக்கும்தான்.ஒருவருக்கொருவர் பிடிச்ச பூரியிலிருந்து பிடிக்காத பீட்சா வரைக்கும் எல்லாத்தையும் கரெக்டா சொன்னாங்கா. ’அவங்களுக்குதான் வீடு. எனக்கு கிடைக்கப் போறது இல்ல.’ திருவிளையாடல் டயலாக்கை என் வாய் உளறித்தொலைத்தது.

’’அப்ப வீட்டுக்கு கிளம்பலாமா?’பகீர் கிளப்பினாள் என் பட்டத்து ராணி

ஒருகட்டத்துல எங்களை அழைச்சாங்கா. ஸ்டேஜ்ஜுக்கு. சொன்னபடி சிரித்துக் கொண்டே போனோம்..கீதாவோ ரொம்ப
கேஷுவலா இருந்தா.’என்னை நல்லா மாட்டிவிடப்போறா’ன்னு மனசு பொலம்பியது.

உங்க கணவர் உங்க உறவா? கேட்டது போட்டிக் குழுத்தலைவர். ’பெற்றோர் பார்த்துதான் இத எனக்கு கட்டிவைச்சாங்கா’ இத
சொன்னது கீதாதான்.

ஏதோ மாட்ட பிடிச்ச கட்டற மாதிரி.எனக்கு ரொம்ப சங்கடமாப் போச்சு.

’எத்தனை குழந்தைங்க?’ கேட்டது போட்டிக் குழு.

’நான்கு’ என்றாள் அவசர அவசரமாக. எதையோ பெரிசா சாதித்து விட்டது


போல. கூட்டம் பலமாக கைத்தட்டியது.’பாராட்டு எனக்கா, அவளுக்கா’ன்னு தெரியல

திருமணம் ஆகி எவ்வளவு வருடங்கள் ஆகுது.??என்றதற்கு...

’35 வருடங்கள்’ என்று அவள் சொல்ல எல்லோரும் சிரித்து விட்டார்கள்.

கேட்ட கேள்வி அத்தனைக்கும் நானும் பதில் சொன்னேன். அவளும் சொன்னாள். ஆனா விடைகள் இரகசியமா இருந்துச்சு.அவங்க சொன்னாத்தான் தெரியும். எங்களுக்கான சோதனைக் களமும்,காலமும் முடிந்தது.

’நீங்க உங்க எடத்துக்கு போகலாம்’ன்னு சொன்ன மறுகணம் அவள் போய் தன் சேரில் அமர்ந்தாள்.நானும் போனேன்.சேரை ஓரடி இழுத்து போட்டுக்கொண்டாள். எனக்கு ரொம்ப வெக்கமாய் போச்சு.’இன்னும் பத்து நிமிஷம் அவ நடிப்பத் தொடர்ந்திருக்கலாம்’னு மனசுக்குள்ளே சொல்லிக் கொண்டேன்.அவக் கிட்ட சொல்ல முடியுமா, ‘என்ன? இதோ தீர்ப்பு சொல்ல வந்துட்டாங்கா.

பூஜ்யம் மார்க் வாங்குன எங்களுக்குத் தான் அபார்ட்மெண்ட் கிடைச்சது. அதற்கு காரணம்.....

போட்டியின் நடுவர்சொன்னது இதுதான் வாழ்க்கையே ஒவ்வொரு ஆம்பளைக்கும் பெரிய சவாலா இருக்கு. குடும்பத்துலயும், ஆஃபீஸ்லேயும் எக்கசக்கமா காம்பரமைஸ் பண்ணி ஒவ்வொரு நாளையும் நகத்த வேண்டியிருக்க.அந்த விதத்துல நீங்க இரண்டு பேரும் எதிரும்,புதிருமா இருந்தாலும் வெற்றிகரமா 35 வருஷம் ஒன்னா வாழ்ந்திருக்கீங்க.நீங்கதான் இந்த ஷோவின் சிறந்த தம்பதிகள்’ என்று சொல்லியபடி போட்டி நடுவர் அபார்ட்மெண்ட் கீயை எங்ககிட்ட கொடுத்தார்.

என்னுடைய பொறுமைக்கு இவ்வளவு பெரிய பரிசா? என்று வியந்து போனேன். கீதா ஆர்வமுடன் அதை வாங்கிக் கொண்டு, என்னை ஏனோ முறைத்துக் கொண்டே நகர்ந்து போனாள்.எல்லோரும் போய் அவளுக்கு கைகுலுக்கி வாழ்த்துசொன்னாங்க.நான் மொளனமாக என் கீதாவை பின் தொடர்ந்தேன்.