தொடர்கள்
அழகு
ஜெயித்துக் காட்டிய சகோதரிகள் !! மாலா ஶ்ரீ

20240418095335908.jpeg

சென்னை மணலி அருகே சின்னசேக்காடு, பல்ஜிபாளையம் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன். ஹேமதாரணி, ஹேமஸ்ரீ என்ற இரட்டை பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த இரட்டை பெண் சகோதரிகளும் பிறவியிலேயே பார்வைத்திறன் குறைபாடு கொண்ட மாற்றுத் திறனாளிகள். இதனால் இவர்கள் இருவரும் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள பார்வைத்திறன் குறையுடையோர் பள்ளியில் படித்து வந்தனர். இரட்டை சகோதரிகளான ஹேமதாரணி, ஹேமஸ்ரீ ஆகிய இருவரும் பிரெய்லி முறையில் படித்து, சமீபத்தில் நடந்த பிளஸ் 2 பொது தேர்வை எழுதியுள்ளனர்.

சமீபத்தில் வெளியான பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவில், இரட்டை சகோதரிகளில் ஒருவரான ஹேமதாரணி கணினி அறிவியலில் 100 மதிப்பெண்ணும் தமிழ், புவியியல், பொருளியல், வரலாறு ஆகிய பாடங்களில் 99 மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்று, அப்பள்ளியிலேயே அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களில் 2-ம் இடத்தை பிடித்துள்ளார். மற்றொரு சகோதரியான ஹேமஸ்ரீ கணினி அறிவியல், புவியியல், பொருளியல் ஆகிய பாடங்களில் 99 மதிப்பெண், வரலாற்று பாடத்தில் 98, தமிழில் 92, ஆங்கிலத்தில் 79 என மொத்தம் 566 மதிப்பெண்கள் பெற்று, அப்பள்ளியில் 3-ம் இடத்தைப் பிடித்துள்ளார்.

தங்களுக்கு பார்வைத்திறன் குறைபாடு இருந்தாலும், அதை குறையாக எண்ணாமல் மனஉறுதியோடு படித்து, பிளஸ் 2 பொது தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று மாற்றுத்திறனாளிகளான இரட்டை சகோதரிகள் சாதனை படைத்துள்ளனர். தாங்கள் இருவரும் உயர்கல்வி முடிந்ததும் ஐஎப்எஸ் அதிகாரிகளாக வேண்டும் என்பதே விருப்பம் என்று இரட்டை சகோதரிகளான ஹேமதாரணியும் ஹேமஸ்ரீயும் ஒருமித்த குரலில் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

இவர்களின் தொலை நோக்குப் பார்வை விழிகளைக் கடந்தது.

இவர்கள் வெளியுறவுத் துறை அதிகாரிகளானவுடன் விகடகவியின் பிரத்யேகப் பேட்டி வெளிவரவேண்டும் என்பது தான் நமது வாழ்த்து.