தொடர்கள்
அனுபவம்
சந்திப்போம் பிரிவோம் - 9 பொன் ஐஸ்வர்யா அமெரிக்க அனுபவங்கள்.

20240418104946383.jpg

அட்லாண்டா தொடர்ச்சி….

ஜார்ஜியா அக்வாரியம் அருகிலேயே அமைந்துள்ளது world of Coco Cola. உலகம் முழுவதும் கோலோச்சிக் கொண்டிருக்கும் கோகோ கோலா 1886ம் ஆண்டு பிறந்தது இங்குதான். அன்று தொடங்கி இதுவரை “வளர்ந்த கதை” சொல்லும் அருங்காட்சியகம் 20 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கிறது. இங்கே நவீன உத்திகளைப் பயன்படுத்தி கோகோ கோலாவின் பரிணாமத்தை மிக சுவாரஸ்யமாக காட்சிப்படுத்துகின்றனர்.

20240418105009605.jpg

20240418105038378.jpg

அட்லாண்டாவைச் சேர்ந்த ஃபார்மஸிஸ்ட் ஜான் பெம்பர்டன் என்பவர் உருவாக்கிய ஒரு சிரப்பைக் கொண்டு தயாரிக்கப்பட்ட தனித்துவ சுவையான கொண்ட லோகல் பானம், பின்னர் கோகோ கோலவானது. இதன் மூலக்கூறு உரிமத்தை இரண்டாயிரத்து முன்னூறு டாலர், சொற்பத் தொகைக்கு காலெண்டர் என்பவர் பெற்று, 1892ல் கோகோகோலா கம்பெனியை நிறுவியுள்ளார்.

இருபத்தொரு டாலர் நுழைவுக் கட்டணம் பெற்றுக் கொண்டு காலை பத்து மணி முதல் பார்வையாளர்களை அனுமதிக்கின்றனர். மொத்தம் ஆறு அரங்குகள். ஒவ்வொன்றிலும் வெவ்வேறு சுவாரஸ்யமான விஷயங்கள். “புத்துணர்ச்சியின் மைல் ஸ்டோன்கள்” என்ற அரங்கில் 1986 தொடங்கி இன்று வரையிலான வளர்ச்சிப் பாதையின் விளக்கம் மிகச்சிறப்பு.

கோகோகோலா பானத்தின் மூலக்கூறு வெகு இரகசியமாக காக்கப் பட்டு வருகிறதாம். உள்ளே அமைந்த திரயரங்கில் “கோகோ கோலா சீக்ரெட் ஃபார்முலாவின் வாலட் தேடல்” என்கிற சூப்பர் 3D குறும்படம் ஒன்றை திரையிட்டு காட்டுகிறார்கள்.

“டேஸ்ட் இட்” பகுதியில் உலகம் முழுவதிலுமிருந்தும் 100க்கும் மேலான கோகோ கோலா தயாரிப்புகள் ஜில்லென்று அருவியாய் கொட்டுகின்றன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விகித கலவை, வெவ்வேறு வகையான சுவை. மாலை ஐந்து மணி வரை இந்த 100க்கும் மேற்பட்ட கோகோகோலா தயாரிப்புகளை இலவசமாய் சுவைத்து மகிழலாம். கோகோகோலா என்ற பெயர் ஒன்றாக இருந்தாலும் ஊருக்கு ஒரு சுவை என்பது வியக்க வைக்கும் செய்தியாக இருந்தது.

மேலும் இங்குள்ள ஆய்வகத்தில், விரும்பும் பார்வையாளர்கள் தாங்களே புதுவிதமான கலவையை (பானத்தை!) முயற்சித்து அதன் சுவையை சோதித்து பார்க்க வசதி செய்யப் பட்டுள்ளது. சோதித்துப் பார்த்ததில் நம் கைவண்ணம் கண்றாவியாக இருந்தது வேறு கதை!

ஒரு சாதாரண குளிர்பானத்தை இத்தனை கவர்ச்சிகரமாக காட்சிப்படுத்த முடியும் என்பதை பார்க்கும் போது இதன் உலகலாவிய வெற்றி இரகசியம் புரிகிறது. மொத்தத்தில் கோகோ கோலா பானத்தை விரும்பாதவர்களையும் கவர்ந்து இழுக்கும் விளம்பர அதிஉத்தியை மிகச் சிறப்பாக கையாளுவதை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

நம் ஊரைப் போலவே அட்லாண்டாவிலும் நடைபாதை சர்பத் ஐஸ் கடைகள் தென்பட்டன. தெரு முனையில் வாடகை குதிரை வண்டிகளைப் பார்க்க ஆச்சர்யமாய் இருந்தது. சுற்றுலா பயணிகள் குதிரை வண்டி சவாரி செய்யலாம்.

20240418105100219.jpg

அமெரிக்காவில் எதுவும் இலவசம் கிடையாது. உழைத்தால்தான் காசு. காசிருந்தால்தான் வாழ்க்கை. முதல் நாள் நடைபாதையில் பார்த்தோமே வீடற்றோர், அவர்கள் எல்லோருமே தஞ்சம் வந்த அகதிகளாய் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஊதாரித்தனமாய் செலவு செய்து சொத்தை இழந்தவர்களும் அதில் அடக்கம். “ஊதாரியாய் வாழ்ந்தால் வீதிக்கு வருவாய்” என்ற கூற்று இங்கே நூற்றுக்கு நூறு சரியே.

20240418105118768.jpg

அமெரிக்காவில் வாழ்வதற்கு புத்திசாலித்தனம், கடின உழைப்பு, நேர்மை மூன்றும் மிக அவசியம். இதில் ஒன்று குறைந்தாலும் வேலைக்காகாது. “America is for Smart Hardworking and Honest people” என்று ஸ்பேஸ்-X நிறுவனர் எலன் மஸ்க் குறிப்பிடுகிறார்.

அட்லாண்டா நகரில் சுமார் இரண்டு இலட்சம் இந்தியர்கள்/ இந்திய வம்சாவளியினர் வசிக்கின்றனர். இந்தியத் தூதரகத்தின் துணை அலுவலகம் இங்குள்ளது. அட்லாண்டா ஹிந்து கோவில் மற்றும் சுவாமிநாராயண் மந்திர் ஆகியவை மிகவும் பிரசித்தி பெற்றவை. இந்திய பண்டிகைகள், இறை வழிபாடுகள் எல்லாம் வெகு விமரிசையாக கொண்டாடப் படுவதாக அட்லாண்டாவில் வசிக்கும் தஞ்சாவூர் நண்பர் வெங்கடேஷ் கூறக் கேட்டோம்.

வரும் வழியில் நெடுஞ்சாலையின் இரு புறமும் ஆங்காங்கே இருநூறு, முன்னூறு ஏக்கர் நிலம் விற்பனைக்கு இருப்பதாக அறிவிப்பு பதாகைகளைக் காண முடிந்தது. இதைப் பார்த்ததும் நம்மூர் நடிகரும் அரசியல்வாதியுமான நெப்போலியன் அவர்கள் அமெரிக்காவில் முன்னூறு நானூறு ஏக்கர் நிலம் வாங்கி பெரிய பண்ணை அமைத்திருப்பது ஞாபகம் வந்தது.

20240418105148850.jpg

நெடுஞ்சாலை விளம்பரங்களில் அதிகம் ஆக்கிரமிப்பது அட்டர்ணிகள்தான் (வக்கீல்கள்). டாக்டர், இன்ஜினீயர்களை விட இந்த அட்டர்ணிகள் அதிக வருவாய்க்காரர்களாக இருப்பார்கள் போலும். மில்லியன் கணக்கில் செட்டில்மெண்ட் என்கிறார்களே!

பயணம் தொடரும் …..