தொடர்கள்
தமிழ்
கத கேளு கத கேளு தமிழோட கத கேளு 69 " - பரணீதரன்

காளமேகப் புலவரின் வித்தாரக் கவி"

காளமேகப் புலவரின் கவித்திறம் பற்றி பரணீதரனின் விவரணம் தொடர்கிறது.

அடுத்ததாக ஒரு புலவர் காளமேகப் புலவரிடம் கருமாரி பாய்ச்சல் இனிது என்று பாடச் சொல்கிறார்.

பொதுவாக கருமாரி என்று கூறும் பொழுது அது அம்மை நோயை குறிக்கக் கூடியது. அம்மை நோய் பொதுவாக மிகவும் கொடியதாக இருக்கும். ஆனால் அது இனிமையாக இருக்கும் என்று இந்த புலவர் பாடச் சொல்கிறார். இதற்கு வித்தார கவியாக கீழே உள்ள பாடலை காளமேகப் புலவர் பாடுகிறார் :

அப்பா குமரகோட் டக்கீரை செவ்விலிமேட்

டுப்பாகற் காய்பருத் திக்குளநீர் - செப்புவா

சாற்காற்றுங் கம்பத் தடியிற் றவங்கருமா

ரிப்பாய்ச்சல் யார்க்கும் இனிது

இதற்குப் பொருள்,

  • குமரக்கோட்டத்தில் விளைகின்ற கீரையும்,
  • இன்று செவிலிமேடு என்று கூறப்படுகின்ற காஞ்சிபுரத்தில் உள்ள செவ்விலி மேட்டில் விளைகின்ற பாகற்காயும்,
  • இன்றைய பருத்திசம் என்று கூறப்படுகின்ற பருத்தி குளத்தில் உள்ள தண்ணீரும்,
  • காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் கோவிலின் தெற்கு கோபுரத்தில் வருகின்ற காற்றும்,
  • காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் கோவிலின் கம்பத்தடியில் செய்கின்ற தவமும்,
  • காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில் உள்ள கருமாரி மண்டபத்தில் இருந்து குளத்திற்குள் பாய்கின்ற பாய்ச்சலும்

அனைவருக்கும் இனிது என்று பாடுகிறார். இந்த பாடலில் காஞ்சிபுரத்தையும் அதன் சுற்றுப்பகுதிகளிலும் உள்ள கோவில்கள் மற்றும் கோவில்களின் மற்ற இடங்களை பற்றி பாடியிருக்கிறார். அம்மை நோய் இனிது என்று சொல் வருமாறு பாடச் சொன்ன புலவரும் இந்த பாடலை கேட்டு மகிழ்ச்சி கொண்டார்.

2024041711190112.jpg

அடுத்ததாக மன்னரே ஒரு குறிப்பினை கொடுக்கிறார்.

செங்கழுநீர் கிழங்கு என்று முடியுமாறு ஒரு பாடலை உருவாக்க சொல்கிறார்.

செங்கழுநீர் என்பது ஒரு வகையான நீர் பூ. தாமரை, அல்லி போன்ற ஒரு வகையான பூ. நீர் பூக்களுக்கு பொதுவாக கிழங்குகள் இருக்கும். அப்படி செங்கழுநீருக்கும் கிழங்கு உண்டு. அதை வைத்து பாடலை பாடுமாறு மன்னர் புலவரை பணிக்கிறார். அதற்கு புலவரும்

வாதமணர் ஏறியதும் மாயன் துயின்றதுவும்

ஆதிதடுத் தாட்கொண்ட அவ்வுருவும்-சீதரனார்

தாள்கொண் டளந்ததுவும் தண்கச்சிக் காவலா

கேள்செங் கழுநீர்க் கிழங்கு

என்ற பாடலை பாடினார்.

இதற்குப் பொருள்

வாதத்தில் தோற்ற அமணர்கள் ஆகிய சமணர்கள் ஏறியதும், மாயன் என்று கூறக்கூடிய திருமால் அவர்கள் துயின்றதும், சுந்தரரை அன்று ஒரு காலத்தில் தடுத்தாட்கொண்ட உருவமும், ஸ்ரீதரன் என்று கூறப்படுகின்ற திருமால் தன்னுடைய காலால் அளந்ததும், செங்கழுநீர் கிழங்கு என்று கச்சி என்ற பெயருடைய காஞ்சிபுரத்தின் காவலனான மன்னரிடம் கூறுகிறார்.

அனல்வாதம் (நெருப்பு வாதம்) புனல்வாதம் (நீர் வாதம்) ஆகிய இரண்டிலும் திருஞானசம்பந்தரிடம் தோற்ற சமணர்கள் பாண்டிய மன்னனால் மதுரையில் பழுக்க காய்ச்சிய கழுவில் ஏற்றப்படுகிறார்கள். இங்கே காளமேகப் புலவர் கழுவினை செங்கழு (நன்றாக பழுக்க காய்ச்சிய சிகப்பாக உள்ள கழு) என்று கூறுகிறார். திருமால் படுத்திருக்கும் இடம் திருப்பாற்கடல். அது நீர் நிரம்பியது. இதில் நீர் என்ற சொல்லை போட்டுவிட்டார். சுந்தரரை சிவபெருமான் கிழவனுடைய உருவத்தில் வந்தே தடுத்து ஆட்கொள்கிறார். இதில் கிழங் (கிழம் என்பதன் மருவு) என்ற பதம் வருகிறது. ‘கு' என்ற பதம் பூமியை குறிக்கும். சீதரன் என்று கூறப்படுகின்ற ஸ்ரீதரன் (திருமால்) தன்னுடைய காலால் இந்த பூமியை அளந்தார். இப்படி செங்கழுநீர் கிழங்கு என்ற பதத்திற்கு நான்கு விதமான காட்சிகளை மையப்படுத்தி இந்த பதத்தை கொண்டு வருகிறார்.

20240417112008540.jpg

அடுத்ததாக ஒரு புலவர் தமிழ் இலக்கணத்தை வைத்து ஒரு கேள்வி கேட்கிறார்.

அதாவது, ஓரெழுத்து ஒருமொழி (ஓர் எழுத்து ஒரு சொல்) சொற்களை அடுத்தடுத்து வைத்து ஒரு பாடலை பாடுமாறு கூறுகிறார்.

அதற்கு காளமேகப் புலவரும் பின்வருமாறு பாடுகிறார் :

சோகாமா ஏவாதா சொல்லின்மனைக் கூட்டியுமை

பாகார்ந்த தில்லைப் பரமேசர் – வாகாய்த்

தரித்தார் எரித்தார் தறித்தார் உதைத்தார்

உரித்தார் கணைபடைத்தார் ஊர்க்கு

என்று பாடுகிறார். இதன் பொருள் சோ, கா, மா, ஏ, வா, தா ஆகிய ஆறு சொற்களுடன் ‘மனை’ என்ற பதத்தை கூட்டினால் - சோமனை, காமனை, மாமனை, ஏமனை, வாமனை, தாமனை என்று பொருள் வரும். இப்பொழுது இந்த பாடலை நாம் சேர்த்து பார்த்தால் -

சோமனை ( சந்திரனை) - தரித்தார் (தன் தலையில் சூடிக்கொண்டார்)

காமனை ( மன்மதனை) - எரித்தார்

மாமனை (மாமனார் ஆகிய தக்ஷனை) - தறித்தார் (கொன்றார்)

ஏமனை (எமனை) - உதைத்தார்

வாமனை (கஜாசுரன் ஆகிய யானையை) - உரித்தார் (தோலை உரித்து கஜ சம்ஹார மூர்த்தியாய் மாறினார்) தாமனை(திருமாலை) – கணைபடைத்தார் (அம்பாக மாற்றினார்).

இவை அனைத்தையும் செய்தவர் உமை ஒரு பாகம் ஆகிய தில்லை பரமேஸ்வரன் ஆவார். இவற்றை ஊரின் (உலகத்தின்) நலனுக்காக செய்தார் என்று கூறுகிறார்.

20240417112048723.jpg

அடுத்ததாக ஒரு பெண் புலவர் நகர நெடில் வரிசை பற்றி பாடச் சொல்கிறார்.

அதாவது அவர் கூறியது ‘ந’ எழுத்தின் நெடில் எழுத்துக்களை பற்றி. அந்த எழுத்துக்கள் வரிசையாக தொடர்ந்து வரவேண்டும்.

நமது புலவரும் கீழ் வருமாறு பாடுகிறார் :

அரையின் முடியில் அணிமார்பின் நெஞ்சில்

தெரிவை யிடத்தமர்ந்தான் சேர்வை-புரையறவே

மானார் விழியீர் மலரணவொற் றாகும்

ஆனாலா நா நீ நூ நே

தமிழில் நகரம் என்ற சொல்லிற்கு ‘ந' என்ற ஒரு பொருளும் உள்ளது. நகர வரிசை என்பது ‘ந' முதல் ‘நௌ’ வரை உள்ள 12 எழுத்துக்களாகும். அதில் நான்கு எழுத்துக்களை (நா, நீ, நூ, நே) மட்டும் காளமேகப் புலவர் எடுத்துக் கொள்கிறார். இதோடு மலரண ஆகிய நான்கு எழுத்துக்களில் ஒற்றை எடுத்துக் கொள்ளச் சொல்கிறார். அதாவது ம், ல், ர், ண். இந்த இரண்டு பகுதிகளையும் ஒன்றாக சேர்த்து சொல்கிறார். இவை இரண்டையும் சேர்த்தப் பிறகு, இவை சிவபெருமானின் அரை, முடி, மார்பு, நெஞ்சு ஆகிய இடங்களில் என்ன உள்ளது என்பதை நமக்கு உரைக்கிறது.

அதாவது,

அரை (இடுப்பு) - நாண் (கயிறு)

முடி (சடை முடி) - நீர் (கங்கை நதி நீர்)

மார்பு (கழுத்திற்கும் இடைக்கும் இடையில் உள்ள பகுதி) - நூல் (பூனூல்)

நெஞ்சு (மனது) - நேம் (அன்பு)

உள்ளது என்று பாடுகிறார். இந்த பாடலை கேட்டது ஒரு பெண் புலவரே என்பதை இந்த பாடலிலேயே அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவருடைய இன்னும் சில பாடல்களையும் மற்ற புலவர்களின் பாடல்களையும் வரும் வாரம் பார்ப்போம் என்று விடை பெற்றார் பரணீதரன்.