தொடர்கள்
தொடர்கள்
பெண்களுக்கான சுய அதிகாரம் - 23 - பத்மா அமர்நாத்

20240417051858726.jpg

சுய நிர்ணய உரிமையை மேம்படுத்தும் வாழ்க்கைமுறை!

பெண்கள் தங்களை மேம்படுத்திக்கொள்ளத் தேவையான ஆற்றல்களைப் பற்றி எழுதி வந்தேன். இனி, நம்மை மேம்படுத்தும் வாழ்க்கை முறைகளை ஆராய்வோம்.

“குறைந்தபட்சக் கோட்பாடுடன் வாழுங்கள். இதனால், அடுத்தவர் குறைந்தபட்சம் வாழ்வார்கள்” - மகாத்மா காந்தி

“இனி கழிக்க ஏதும் இல்லை, என்ற நிலைக்கு வரும்வரை, தேவையற்ற பொருட்களைக் கழிப்பதற்குத் தான், அதிகப் பட்ச தைரியம் தேவை” -
ஜான் பாஸன்.

‘குறைவே நிறைவு’

இந்த வாசகங்கள் எதைப் பற்றியது? என்ன சொல்ல வருகிறார்கள்?
ஒரு உதாரணத்தைக் குறிப்பிடுகிறேன். பின் உங்களுக்குப் புரிகிறதா என்று பார்ப்போம்.

நீங்க, வேலை அல்லது ஓய்வுக்காக, ஒரு பயணம் போறீங்க. புறப்படுவதற்கு முன்பிலிருந்து, கடைசி நிமிடம் வரை பேக்கிங்கில் மும்முரமா இருப்பீங்க. தேவையான துணிமணிகளை வைத்து, எக்ஸ்ட்ராவாக ஒரு செட் வைத்து, பட்டியலை சரிப் பார்த்து, ‘எதையும் மறந்துவிடக் கூடாது’ என்று இரண்டு முறை சரிபார்த்து, வீட்டைப் பூட்டி, சூட்கேஸை நடைபாதையில் உருட்டத் தொடங்கிய பின் - “எதையாவது மறந்துட்டேனா… பரவாயில்லை, போகிற வழியில் கண்டிப்பா கிடைக்கும்… வாங்கிக்கலாம்” என்றபடி, பயணத்தைத் தொடங்குவீர்கள்.

அச்சமயம், உங்களுக்குள் ஒருவித சுதந்திர உணர்வு காணப்படும். காரணம், இந்த ஒரு சூட்கேஸை மட்டுமே வைத்துக்கொண்டு, நீங்கள் அடுத்த ஒரு வார காலம் வாழப்போகிறீர்கள். வீட்டின் மற்ற எந்த பொருளும் உங்களுடன் இல்லை.

20240417052115199.jpg

சேரவேண்டிய ஊரை அடைந்தவுடன், ஹோட்டல் ரூமுக்குள் புகுந்த அடுத்த நிமிடம், படுக்கையின் பளிச் விரிப்பு உங்களை வரவேற்கும். அறை சுத்தமாகவும், தேவையான அத்தியாவசியப் பொருட்களுடன் மட்டுமே இருக்கும். உங்களைத் திசைதிருப்பும், கவனச்சிதறல் ஏற்படுத்தும் பொருட்கள் எதுவும் இருக்காது. பெரும்பாலான விடுதி அறைகள் வசதியாகவும் சவுகரியத்துடனும் இருப்பதற்கு, இதான் காரணம்.

பையை கீழே வைத்துவிட்டு, காலார நடந்து, அக்கம்பக்கத்தைச் சுற்றிப் பார்க்க ஆரம்பிப்பீர்கள். வெளியே செல்ல திட்டமிடுவீர்கள். நீங்கள் எங்கு வேண்டுமானாலும் செல்ல உங்களுக்குச் சுதந்திரம் உண்டு. அனைத்திற்கும் நேரம் உண்டு.

20240417052215472.jpg

இது தான் ‘minimalism’ தரும் உணர்வு - குறைந்தபட்சக் கோட்பாட்டைக் கடைபிடித்து வாழும்போது, ஏற்படும் சுதந்திர உணர்வு. நம்மில் பலர், இதை ஏதோ ஒரு காலத்தில் நிச்சயம் அனுபவித்திருப்போம். உண்மையில், அன்றாட வாழ்க்கையில் நாம் இருக்க வேண்டிய நிலை இது தான்.

இதன் எதிர்மறை நிலை எப்படி இருக்கும் என்று பார்ப்போமா?

வந்த வேலை முடிந்து, மீண்டும் விமான நிலையம் போவதைச் சற்று கற்பனை செய்து பாருங்கள். நுழைவுச் சீட்டுகள் மற்றும் ரசீதுகள், கைப்பையில் திணிக்கப்பட்டிருக்கும். வீட்டிற்குப் போனவுடன் கணக்குப் பார்க்க வேண்டுமே… “நிச்சயம் பாப்பீங்களா” என்றெல்லாம் கேட்கப்படாது. ஆனால் இப்போதைக்குத் தூக்கிப் போட மாட்டோம்.

இந்த ஒரு வாரத்தில், நம் கண்ணைக் கவர்ந்த, ஆசையாய் வாங்கிய நினைவுப் பொருட்களைப் பெட்டியில் வைக்க இடம் இருக்காது. அதற்கென்று புதிதாய் இரண்டு கைப்பைகளை வாங்கி, அதையும் சுமந்து செல்ல வேண்டும்.

20240417052639112.jpg

விமான நிலையம். வரிசையில் நிற்கிறீர்கள், உங்கள்போர்டிங் பாஸை எடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.
“அடடா, எங்கே வைத்தேன்? “
எல்லா இடங்களிலும் தேடவேண்டிய நிலை.
“ஐ.டி கார்ட் பிலீஸ்….”
“ஓ.. எஸ் கமிங்…” எங்கே வைத்தேன்?
“சார்ஜரை இதில் போட்டேனா அல்லது பெட்டியில் வைத்தேனா?”
டென்ஷன்… டென்ஷனோ.. டென்ஷன்…

குறைவான பொருட்களுடன் வந்த பின்னும் ஏன் இந்த பதற்றம்? என்ன நடந்தது?
தொடர்ந்துப் பேசுவோம்… இணைந்திருங்கள்.