தொடர்கள்
பொது
பல்ப் சீரீஸ் 9 – மோஹன் ஜி

“ஜெயந்தி ரொம்ப லக்கி டீ!”

கும்பகோணத்தில் எனக்கு கல்யாணமாகி ஒரு மாசம் தான் ஆகியிருந்தது.

தினம் ஒரு வீட்டில் விருந்து என்று கூப்பிட்ட வீட்டிலெல்லாம் மொக்கிக் கொண்டிருந்தேன்.

அன்று என் சகதர்மிணி ஜெயந்தியின் சொந்தத்தில் ஒரு திருமணம். தன் கல்யாணப் புடவையைக் கட்டிக் கொண்டு, ஜிலுஜிலுவென்று என்னையும் ஒரு அலங்காரமாகக் கூட்டிக் கொண்டு போனாள்.

‘ஜெயந்தி ரொம்ப லக்கிடீ! ‘என்று என் காதுபடவே (நிஜமாத்தான்!) பேசிக் கொண்டார்கள் ரெண்டு யுவதிகள்.

திருமண மண்டபத்தில் என் சகலை சேகரோடு நான் பேசிக் கொண்டிருந்தபோது தான்,

‘வாங்க மாப்ளே!’ என்ற பலமான குரல் கேட்டது.

அழைத்தவர் என் மனைவியுடைய மாமா. எங்களை நோக்கி வேகமாக வந்தார். என் கல்யாணத்தில் அவர் ஓடியாடி வேலை செய்து கொண்டிருந்தாராதலால் நானும் அவரை அன்போடு எதிர்கொள்ளத் தயாரானேன்.

“டிபன் சாப்ட்டீங்களா மாப்ளே?”என்று வினவியபடி வந்தவர், நேராக என் சகலை சேகரின் கைகளைப் பற்றிக் கொண்டார்.

‘அட ஆமாம்! என் சகலையும் அந்தக் குடும்பத்து மாப்பிள்ளை தானே?’ என்ற யோசனை வந்தது.

‘சீனியாரிட்டி பிரகாரம் மாப்பிள்ளைகளை அவர் செல்லம் கொஞ்சுவார் போல இருக்கு’ என்று சமாதானமாகி, என் முறைக்குத் தயாரானேன்.

அந்த மாமாவும் என் பக்கம் திரும்பினார்.

முந்திக் கொண்டு, “நல்லா இருக்கீங்களா அங்கிள்?’’ என்று குசலம் விசாரித்தேன்.

தலையாட்டியபடி, ‘உங்களை எங்கோ பார்த்திருக்கேனே?’ என்றார் சிந்தனையுடன்.

எனக்கு ‘சே’ என்றாகி விட்டது.

நான் வாயெடுக்குமுன், “நீங்க ஜெயந்தி கல்யாணத்துக்கு கும்பகோணம் வந்திருந்தீர்களா சார்?” என்று கேட்டார்.

“வந்திருந்தேங்க!” என்றேன் சுரத்தில்லாமல்.

“அந்தக் கல்யாணத்துக்கு நான் தான் ஏற்பாடெல்லாம் பண்ணினேன். எங்கே தங்கியிருந்தீங்க?”

“மாப்பிள்ளை ஜாகையில் தான்”

“சார் புது மாப்பிள்ளைக்கு சிநேகிதமோ?”

“ சிநேகிதமா?! நான் தாங்க அந்தக் கல்யாணத்துல மாப்பிள்ளையே!”

கேட்டதும் பதறி விட்டார். “அடடா! தப்பாயிடுத்து மாப்ளே! கல்யாணத்தப்போ அலைஞ்சுகிட்டேயிருந்தேனா... கவனம் இல்லை” என்றார்.

“பரவாயில்லை சார்!”

“சாரா? மாமான்னு கூப்பிடுங்க மாப்ளே! ஜெயந்திக்கு மாமான்னா உங்களுக்கும் நான் மாமா தானே? ஒருக்கா ரெண்டு நாள் நம்ம ஊருக்கும் ஜோடியா வரணும் சொல்லிட்டேன் ஆமா..”

“சரிங்க மாமா! “

“ரொம்ப சாரி மாப்பிள்ளை! என் கவனக் குறைவை மனசுல வச்சுக்காதீங்க. ஜெயந்தி காதுல போட்டுடாதீங்க. என்னைப் பிலுபிலுன்னு பிடிச்சிக்குவா”

“அவளுக்குச் சொல்லல்லே மாமா!”

சாயங்காலம் விஷயத்தை அம்மா காதில் போடத்தான் செய்தேன்.

“அம்மா! அந்த பாலுமாமா என்னை ஜெயந்தி கல்யாணத்துக்கு வந்திருந்தீங்களா?ன்னு கேட்டுட்டார்ம்மா!”

நடந்ததைக் கேட்டு விட்டு அம்மா அடக்கமுடியாமல் சிரித்தாள்.

“போடா போக்கத்தவனே! கல்யாணத்தப்போ மயிராண்டியாட்டம் ஸ்டெப் கட்டிங் வச்சிருந்தே.. புதுப் பொண்டாட்டி சொன்னவுடன் மிலிட்டிரிக்காரன் மாதிரி முடிவெட்டிகிட்டு நிக்கிறே! இப்போ எனக்கே உன்னை அடையாளம் தெரியல்லே! பாலு என்ன பண்ணுவான் பாவம்?!” என்றபடி என் கன்னத்தைத் தடவி திருஷ்டி கழித்தாள் அம்மா.

20240416235641423.jpg

[பின்குறிப்பு: ஸ்டெப் கட்டிங்க் போட்டோ அனுப்பச்சொன்னேன். உடனே நடிகர் நாகேஷுடன் இருந்த போட்டோ அனுப்பிவிட்டார் மோஹன் ஜி].

“ஜெயந்தி ரொம்ப லக்கி டீ!” என்று எனக்குள் ஒருமுறை சொல்லிக் கொண்டேன்!