தொடர்கள்
அழகு
காலமே போதி மரம் ! ஒரு ராஜகுமாரன் சம்பவம் மீள் பதிவு !- என்.குமார்

20200610231538475.jpg

இங்கு ஒருவர் பிறக்க இருவர் காரணமாக இருக்கலாம். அந்த ஒருவர் இறக்கும்வரை ‘இருக்க’ யாரோ ஒருவர் அழுத்தம் திருத்தமான காரணமாய் இருக்க வேண்டும்.

அப்படி ஒவ்வொருவருக்கும் உயிர் பேணும் ஒருவராய் யாரோ இருந்தே ஆகவேண்டும்.

அவர் பெயர் சொன்னதும் ஏதோ நிகழும். உள்ளில் ஏதோ நெகிழும். அது கவிதை வரியோ, ஆஜானுபாகுவான தோற்றமோ, புகைப்படமோ, ஒரு வர்ணத் தீற்றலோ, உணவுப் பண்டமோ... எதுவோ – சிலிர்ப்பை ஏற்படுத்தி, ‘அது இல்லாமல் நாம் இல்லை’ என்று ஆகுமளவு ஆக்கிவிடும். இது ஒருவகை அமிழ்தல் தனம்.

அப்படி ஆன ஒருவனைப் பற்றி... அப்படி ஆக்கிய ஒருவரைப் பற்றி...

அவன் அப்போது மூன்றாம் வகுப்பு ‘இ’ பிரிவு மாணவன். பக்கத்து வீட்டில் ஒரு Bachelor இளைஞர். தவறாது சனி (எண்ணெய்) நீராடுபவர். அன்று அப்படித் தயாராகுமுன், காதில் எதையோ மாட்டிக்கொண்டு தலையாட்டிக் கொண்டிருந்தார்.

தலைக்கு மேலே மெல்லிசாய் வளைந்து ஒரு கம்பித்தகடு. பார்த்துக்கொண்டே இருந்த அவனிடம், “நான் குளிச்சிட்டு வந்திடறேன். இரு... வாக்-மேன்ல நீ கேளு.” அலமாரியில் வைக்கப் போனவர், அவன் தலையில் வைத்து, காதில் அழுத்தி, கையில் கொடுத்து விட்டுப் போய்விட்டார். மாட்டிக்கொண்டான். ஆம், மாட்டிக்கொண்டான்...

அந்த வீட்டின் ஜன்னலருகே சென்று நின்று கொள்வதற்குள், காதுகளில் இடைவெளி விட்டுப் பாய்ந்த ஒரு இசை. திணறடித்தது. ஜன்னல் கம்பிகளை இன்னும் இறுக்கமாகப் பிடித்துக்கொண்டான்.

இசையைக் காதால் கேட்டதுண்டு. ஆனால், காதுக்குள் இசை உருகி ஓடும் இந்த அனுபவம்... இப்போது காதுகள் மட்டும் தான் தன் உடம்பில் இருக்கிறதோ என்றொரு மயக்க உணர்வு வந்தது அவனுக்கு.

ஜன்னலில் சரிந்து கிடந்தவனைத் தோள் தொட்டு, “நல்லா இருந்துச்சா?” என்றார். குளித்து முடித்து விட்டார். அவனும்!

வாக்-மேனைக் கேட்டு வாங்கி, தலை துவட்டியபடியே கடந்து போய்விட்டார். ஏதோ தூதுவன் போலத் தெரிந்தார், இப்போது.

இசையதிர்ச்சி மீளாத அவன், வீடு வந்தான். உள்ளே நிரம்பிய இசை, வெளியே வராமல் உள்ளேயே தங்கிக்கொண்டது.

அதன் பிறகு அந்த இசை அவனைப் படுத்திய பாடு!

ஒரு நாள் ரேடியோவில் “(டம்) ஓரம்போ... (டம்) ஓரம்போ... (டம்) ருக்குமணி (டம்)வண்டி வருது...(டம்)...” இடைத் தாளம் அதிர ஒரு பாட்டு. கால் தானாய் தட்டுகிறது.

“வாங்கடா வந்தனம் பண்ணுங்கடா... வந்து இந்த வண்டியத் தள்ளுங்கடா...” ஒரு தினுசான மண் குரல்... ஆண் குரல்... அதைக் கேட்டதும் அவன் பரபரக்க...

“அன்னைக்குப் பாட்டெல்லாம் கேட்டேல்ல... அதுக்கு ம்யூசிக் பண்ணினவர் குரல் தான் இது... அவர் தான் பாடறாரு.” - பக்கத்து வீட்டு வாக்-மேன் இளைஞர் தகவல் தந்தார்.

உருவமே இல்லாமல் ‘ஒருவர்’ இசையின் ரூபமாக ‘ஜம்’மென்று அவன் உள்ளே வந்து உட்கார்ந்தே விட்டார்.

அவன் நடையே மாறிப்போனது. யாரையோ, யாருக்கும் தெரியாமல்-சம்பந்தப்பட்டவருக்கே தெரியாமல் காதலிக்கும் ‘தெரியாக் காதலன்’ போல் மொத்தமாய் மாறிப்போனது.

அதற்குப் பிறகு எந்தப் பாடலைக் கேட்டாலும், “இது அவர் தானே... இது அவரில்லை தானே...” என்று தரம் பிரிக்க ஆரம்பித்துவிட்டான்.

ஓடி ஓடிப் போய் அந்த இளைஞரிடம் தெளிவு செய்துகொண்டான்.

ஆச்சரியம்... அவனை ஈர்த்த இசையெல்லாம்... அவர் பிரசவித்த இசையாகத் தான் இருந்தது.

கன்றுக்குட்டி போல் துள்ளித் துள்ளி முணுமுணுத்தான். அவர் இசை தான்... அவர் இசை மட்டும் தான் தன்னைக் குதிக்க வைக்கிறது என்று குதித்தான்.

பள்ளிக்குப் போகும்போதெல்லாம் திரைப்படச் சுவரொட்டிகளின் அருகே நேரம் செலவழித்தான். அவர் பெயர் இருக்கிறதா என்பதை மட்டும் முதலில் பரபரத்துப் பார்த்தான். அந்தப் பெயர் கண்ணில் பட்டதும், அந்த இசையை அவரே வந்து பிரத்யேகமாய் நடுத்தெருவில் அவனுக்காக வாசிப்பது போல் உணர்வான்.

வகுப்பு மாணவர்களிடம் வாய் வலிக்கச் சிலாகிப்பான். ஒன்றும் புரியாமல்... “சரிடா சரிடா.. அதுக்கு என்ன..” என்று ஒப்புக்குக் கேட்பார்கள். பாடிப் பேசி, பேசிப் பாடிப் படுத்துகிறானே என்று.

ஊர்களுக்குப் பேருந்தில் போகும்போது, பெரும்பாலும் ஜன்னலோரங்களுக்காக முண்டியடித்து அமர்ந்து, அவரைப் போலவே இசைக் கலவையாய் ஏதோ புலம்பிக் கொண்டே அவன் பயணம் தீரும். முகத்திலடிக்கும் காற்றுக்கும் அவனுக்கும் மட்டுமே தெரிந்த இசைக் கச்சேரி, அது!

யாராவது அவரைக் குறைவாகப் பேசினால், துடித்துப் போவான். அவர்களோடு அதன் பிறகு பேசவே மாட்டான். வாதிடப் பிடிக்காமல் ஒரு புழுவைப் போல் அவர்களைப் புறக்கணிப்பான். பாடித் தன் கோபம் தணிப்பான்.

அவர் அவனை ஒரு வழியாக்கிக் கொண்டிருந்தார்.

நாளாக நாளாக அவனது இதய அறையின் சுவர் முழுக்க அவரது பாடல்கள் வியாபித்து, தனிமையில் அவன் நுழைந்து கதவு மூடிக்கொள்ளும் இசை அறையாகவே அது மாறிவிட்டது.

கல்லூரிப் பருவத்தின் முன் திடீரென ஏற்பட்ட ஒரு தடைச் சூழலில், மனம் வருந்தி உற்சாகம் மூர்ச்சையாகிக் கிடந்தான். மெளனம்... மெளனம்... மெளனம்.. யாரோடும் உறவாட மறுத்த... தன் முகம் கூடப் பார்க்கப் பிடிக்காத ஆரோக்கியமில்லாத மெளனக்காரன் ஆனான்.

விரும்பியவர்களைக் கூடச் சந்திக்க விருப்பமில்லாமல், எதற்கும் தகுதியற்ற ஜீவனாகத் தன்னை நினைத்து, வருந்தி, வருந்தித் தெருவோரக் கல் திண்டில், இருள் வந்த பிறகு மட்டும் சிறிது நேரம் உட்கார்ந்துவிட்டுப் போவான்.

அந்தப் பக்கம் செல்லும் சரவணன் என்றொருவர், புன்முறுவல் நண்பராய் அறிமுகமாகி, ஓரிரண்டு நாட்களில், நேரம் போவது தெரியாமல் பேசும் நலம் விரும்பியாகி, சில வாரங்களில் எல்லாமும் பேசிக்கொள்ளும் உன்னத உறவாய் மாறிவிட்டார். யாரிடமும் பேசாத அவன் தன்னிடம் பேசப் பேசத் தனக்குள் ஏதோ புரிபடுவதாகச் சொன்னவர், “கொஞ்சம் இருங்க...” என்று அவனை இருட்டில் விட்டு விட்டு, திடீரென அப்படியே வீட்டிற்குக் கிளம்பிப் போனார்.

சிறிது நேரத்தில், கையில் இரண்டு கேசட்களுடன் வந்தார். “இதைக் கேளுங்க... எவ்வளவு நாள் வேணும்னாலும் கேட்டுட்டுக் கொடுங்க...” என்று அவன் கையில் வைத்துவிட்டார்.

அன்று இரவு... வீட்டில் எல்லோரும் தூங்கிய பிறகு, அவன் படுக்கையின் மிக.... மிக.... மிக.... நெருக்கமாய் டேப்-ரெக்கார்டரை வைத்து, முதலில் ஒரு கேசட் போட்டு... ON செய்தான்....

அவன் காதுகளுக்கு மட்டும் கேட்கும்படி அதன் மேல் சாய்ந்தான்.

கேசட் சுழலும் ஆரம்ப நிசப்த சப்தத்திற்குப் பிறகு, ........ திடீரென ஒரு வயலின் கிளம்பி... அப்ப்ப்ப்ப்பா....

உயிரோடு உலுக்கியது அவனை.

எல்லாப் புலன்களும் சில்லிட்டு, உறைந்து – தட தடவென்று அதிர்ந்தன.

விடிய விடிய... புல்லாங்குழல், வயலின் இரண்டும் அவனைப் பிழியப் பிழிய அழ வைத்தன. அவன் அழுவதை அவனே தள்ளிப் படுத்திருந்து பார்த்தான்.

அந்த இரவில்... அந்த இசை.. அவனைப் பல முறை புல்லரிக்கச் செய்தது. நின்ற உரோமங்கள் தலை சரியவே இல்லை. பிரவாக இசை! இரத்தம் புது வேகத்தோடு பாய்ந்தது. உயிருக்குள் தெம்பு நுழைந்தது.

இனி வாழ – என்னென்னவோ செய்ய – அவனுக்குள் தைரியம் ஊறியது.

புரண்டு புரண்டு படுத்தவன், இசையின் மடியில் ஆழ்ந்து உறங்கினான். அதனை இசைத்த இசைத் தாய் அவரே தான்!

குரல்களே இல்லாமல், கருவிகளே இசை வடிவமாய் வெளிவந்து அவனை மீண்டும் மீட்டெடுத்தது.

அடுத்த நாள்... அத்தனை மாதப் பிரிவுக்குப் பின் மறுபடியும் கண்ணாடி முன் நின்றான். அவன் உருவம், அவரால் கிடைத்த புது உருவம் போல் இருந்தது. சந்தோஷ சாயல்!

அவர் இசையோடு மீண்டும் பற்றிக் கொண்டான். கேட்டான். கேட்டான். கேட்டான். இரவும் பகலும் அவர் இசையையே கேட்டான். முணுமுணுத்த உதடுகள் பாடத் தொடங்கின. இசை அவன் அங்கத்தில் ஓர் அங்கமானது.

அவரின் இசையைக் கேட்டால் போதும், காட்சிகள் உதிக்க ஆரம்பித்தன. அதை நடத்திக் காட்டியபோது பார்த்தவர்கள் பரவசப்பட்டார்கள். “காட்சியமைத்து இசையமைத்ததா?” என்றார்கள். அவரது இசை போட்ட தானம் தான் அவனது மேடைக் காட்சிகள் என்று நன்றி சொன்னான்.

நாட்கள் புதுப்புது உடை பூண்டன. பருவத்தே வரும் காதல் கண்ணா மூச்சிகள் கூட ஓடி ஒளிந்துகொண்டன. இனக்கவர்ச்சி கூட இசையோடு ஏற்பட்டது. தூங்காத இரவுகளால், முகத்தில் இசைப் பருக்கள் தோன்றின.

அவரது குரல் - அவரது படம் – அவரது இசை – எதையாவது, யாராவது, எங்காவது கண்டால், அவன் பெயர் நினைவுக்கு வருமளவு இரண்டறக் கலந்தான்.

அவரால் அழுது அழுது கரைந்த பொழுதுகள்... அவரால் மெய் சிலிர்த்து உருகிய பொழுதுகள்.... அவரால் இவன் பாராட்டப்பெற்ற பொழுதுகள்...

என்ன இது? ஒருவன் வாழ்க்கையில் இன்னொருவர் உயிர் நாடியாய் இருக்க முடியுமா? இருந்தார். அவனுக்கு அவர் இருந்தார்.

இந்த ‘தெரியாக் காதலன்’, அவரைக் காண்பதும், பேசுவதும் சாத்தியமா? அவனது மானசீக உருகல்... ஏக்கமாய், தவிப்பாய்... ஒரு கட்டத்தில் ஆன்ம சாதகமாய் உருக்கொண்டது.

..... அதுவும் நிகழ்ந்தது!

அவன் விரும்பிய துறையில், அவர் இருக்கும் துறையில் – அவன் வந்துவிட்டான்.

ஒரு ஜூன் மாதம் அது. தனது இயக்குநருடன் காரில் பயணித்துக் கொண்டிருந்த காலை. ஒலிப்பதிவுக் கூடம் வந்தது.

எப்போதும் போல ஒதுங்கித் தயங்கி மறைவாக நின்ற அவனை வலுக்கட்டாயமாகக் கை பிடித்து அழைத்துச் சென்றது, காலம்! உள்ளே...

.......

அங்கே... அவன் பார்த்த கணத்தில், அவர்!

அத்தனை வருடக் காதலும் ஒட்டுமொத்தமாய் உச்சிக்குச் சென்று, திடீரென மறைந்து பேரமைதியைப் பிறப்பித்துவிட்டுப் போயின.

அப்படியென்றால், அது ‘தரிசனம்’ தானே! செய்தது தவமாக இருந்தால், கிடைப்பது வரமாகத் தானே இருக்கும்.

அவர் அவனைப் பார்த்தார். வரவேற்றார். அன்று அவர் பிறந்த தினம். பாதம் தொட்ட அவனை வாய் திறந்து ஆசிர்வதித்தார். எப்போதும் அவன் கையில் இருக்கும் அவர் எழுதிய அரிய புத்தகத்தைப் பார்த்ததும், அவர் கண்கள் ஆச்சரியத்தில் மின்னுகின்றன.

அவன் அதை அவரிடம் குனிந்து நீட்ட, வாங்கிக்கொண்ட அவர், உலகமே கட்டுண்டு போகும்படி அத்தனை அத்தனை (எத்தனை! எத்தனை!) நாதம் பொழிந்த அந்த ஹார்மோனியத்தின் மீது வைத்து, முதல் பக்கத்தில் அவன் எழுதியிருந்த வரிகளை கூர்ந்து வாசித்துவிட்டு, சட்டென்று பேனா எடுத்து, அதன் கீழ் அவரும் பதிலாய் ஒன்று எழுதி, கை...யெ...ழுத்திட்டு...

20200610231835542.jpg

20200610231913502.jpg

“சரிதானே?” என்று அவனிடம் கொடுத்துவிட்டுப் புன்னகைக்க...

என்ன நடக்கிறது என்பதை அநுபவிக்குமுன், சடுதியில் கடந்து போக இருந்த அந்த ‘ஒரு கணத்தை’ ஆயுளின் எல்லா கணங்களுக்குமாய் நீட்டித்துக் கொண்டான்.

ஏனெனில், அவன் பிறக்க இருவர் காரணமாய் இருக்க... ஆனால், அவன் இறக்கும் வரை ‘இருக்க’ அவர் ஒருவர் தானே அழுத்தம் திருத்தமான காரணமாய் இருக்க முடியும்.

... அந்த அவன் - நான். .... அந்த அவர், இளையராஜா!

அதி தீவிரக் காதலோடு நாம் என்ன கேட்டாலும், காலம்... அதைக் காது கொடுத்துக் கேட்கும்!

20200610231753617.jpg