எதிர்பாராமல் நேர்ந்த அந்த திருப்பம் பற்றி.....சொல்கிறார் சூரியபிரபா - சௌராஷ்ட்ர தமிழ் சங்கமம் 2023
முதலில் ஸ்ரீபால்கா தீர்த்தம், இங்கு இங்கிருந்து தான் பகவான் ஸ்ரீகிருஷ்ணர் ஜரா என்ற வேடனின் அம்பினால் ஒரு அரசமரத்தடியில் அமர்ந்திருந்த பொழுது தாக்கப்பட்டு தமது இறுதிப் பயணத்தைத் தொடங்கியதாக அறியப்படுகிறது. அதே போன்ற அமர்ந்த கோலத்தில் இங்கு பகவான் ஸ்ரீகிருஷ்ணர் நமக்கு அருள்பாலிக்கிறார். இங்கு பால்கா தீர்த்தில் அவர் வழிபட்ட சிவலிங்கமும் தீர்த்தகுளத்தில் உள்ளது சிறப்பு.
[ஸ்ரீக்ருஷ்ணன் பால்கா தீர்த்தத்தில் மரத்தடியில் அமர்ந்திருக்கிறார்]
இந்த ஸ்தல வரலாறு நாம் ஆலயத்தினுள் நுழையும் இடத்திலேயே கல்வெட்டாக வைக்கப்பட்டிருக்கிறது. அதைப் படிக்கும் போதே அங்கு நீராட வாய்ப்பு ஏற்படுத்தித் தந்திருந்தால் நன்றாக இருக்குமே என்று எண்ணினேன். ஆனால் எதிர்பாராமல் நேர்ந்தது அந்த திருப்பம்.
இந்த ஸ்ரீபால்கா தீர்த்த குளத்தில் தான்
யாருக்குமே கிட்டாத வாய்ப்பு எனக்கு கிட்டியது. அதை தெய்வ சங்கல்பம் என்று சொல்வதா இல்லை; ஈஸ்வரன் திருவிளையாடல் என்பதா, ஸ்ரீகிருஷ்ண லீலை என்பதா என்று நான் முதலில் அறியவில்லை. தீர்த்தகட்டத்தின் மூன்றாவது படிக்கட்டு சற்று வெட்டுப் பட்டுள்ளதை அறியாத நான், தீர்த்தத்தை எடுக்க குளத்தில் இறங்கும் பொழுது அந்த படியில் கால் இடறி மூன்று முறை படியில் அங்கப் பிரதக்ஷ்ணம் செய்து குளத்தினுள் மூழ்கி எழுந்தேன்.
அது ஒரு விபத்தாக நிகழ்ந்தாலும், அதற்கு முன்பின் நடந்த நிகழ்வுகள் இது முழுக்க முழுக்க தெய்வ சித்தம் என்பதை எனக்கு உணர்த்தியது.
இங்கு சிவபெருமானுக்கும் தனி சந்நிதானம் அமைந்துள்ளது. தீர்த்த நீராடலுக்கு பின் தான் நான் சிவபெருமானை தரிசித்தேன்.
https://youtu.be/W_cVS1CxvOY
[மேற்கண்ட லிங்கில் க்ளிக் செய்து சூரியப்ரபா அவர்கள் அளிக்கும் வீடியோவை கண்டு களியுங்கள்]
விழுந்தது பெரிதாக வலி தெரியவில்லை ஆனால் கால் சுளுக்கியது போல இலேசாக வலித்தது. ஆனால் அதைப் பொருட்படுத்தாமல், “இறைவா நின்னடி சரணம்” என்று ஈஸ்வரன் மேல் பாரத்தை வைத்துவிட்டு, அடுத்தடுத்த ஆலயங்களுக்கு பயணித்தோம். இதில் குறிப்பிட வேண்டிய முக்கியமான செய்தி என்னவென்றால், நாங்கள் தங்கியிருந்த விடுதிக்கு சென்று உடைஎடுத்தால் தான் மாற்ற முடியும். ஆனால் ஏனோ மதிய உணவு முடிந்து புறப்படும் போதே என் மனதில் ஒரு உள்ளுணர்வு தோன்றவே நான் ஒரு மாற்று புடவை வைத்திருந்தேன். எங்களுக்கு தீர்த்த நீராடல், நதியில் குளித்தல் என எந்த அறிவிப்பும் இல்லாததால் என்னிடம் மாற்று உடை இருந்தது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது. அதுவும் இறைசெயலே. தெய்வ செயல் என்ற நம்பிக்கை எனக்கும் இன்னும் சிலருக்கும் இருந்தாலும், இச்செயலை சந்தேகிக்கவும் சிலர் இருந்தனர். அந்த அவச்சொல்லிருந்தும் ஈஸ்வரன் என்னைக் காத்து இரட்சித்தான். என்னுடன் பயணித்த தோழி ஒருவர் நான் தீர்த்தக் கட்டத்தில் இறங்கியதை காணொளி பதிவு செய்து கொண்டிருந்தார். அது நான் கால் தடுமாறி விழும் வரை ஒளி-ஒலியுடனும், அதன் பின் ஒலி மட்டும் என இரண்டு நிமிடங்களுக்கு மேல் பதிவாகி இருந்தது. காணொளி எடுத்த தோழி ஆழம் இருக்குமோ என்று பதறிப்போய் அனைவரையும் அழைத்தார், நான் ஆழம் அறியவில்லை, அங்கிருக்கும் நீரின் தன்மையை அறியவில்லை, ஆனால் தீர்த்தகுளத்திற்குள் வீழும் போது, அங்கே குடிகொண்டிருக்கும் ஈஸ்வரனை மட்டுமே நம்பினேன், வாழ்ந்தாலும் சரி, மடிந்தாலும் சரி பகவான் ஸ்ரீகிருஷ்ணரே இந்த பூவலகை விட்டு மோட்சம் அடைந்த ஸ்தலம், இந்த தீர்த்தகட்ட நீராடலால் எனக்கும் மோட்சம் உறுதி என்ற பெருமகிழ்ச்சி மட்டுமே இருந்தது. குளத்தில் நன்கு மூழ்கி எழுந்த போது நான்கைந்து அடி ஆழம் உள்ள இடம் என்பதை அறிந்தேன். பின் நன்கு வழுக்கும் தன்மையுடைய பாசிபடர்ந்த படித்துறையில் ஏறி, பச்சை நிறத்தில் இருந்த தீர்த்தத்தை எடுத்துக் கொண்டேன். பின்பு தான் ஈஸ்வரரையே தரிசித்தேன். அந்த உன்னதமான அனுபவத்தை இந்த நிமிடம் நினைத்தாலும் மெய்சிலிர்க்கும். அதை அடுத்த அன்றைய தின முடிவில் நடந்த மற்றொன்றையும் இதன் தொடர்ச்சியாகவே கூறிவிட்டு நம் ஆலய பயணத்தைத் தொடர்வோம். அடுத்தடுத்து நாம் தரிசிக்கப் போகும் ஆலய பயணங்கள் முடிந்து நாம் சோம்நாத் கடற்கரை அருகே அமைக்கப்பட்ட அரங்கிற்கு தான் இரவு உணவு மற்றும் கலை நிகழ்ச்சிகளுக்கு செல்ல வேண்டும். அங்கு தான் அவசர உதவி மருத்துவக் குழுவும் உள்ளது. இங்கிருந்து இன்னும் சில ஆலயங்களுக்கு பயணித்து நடந்ததால் நேரம் ஆக ஆக காலில் வீக்கம் அதிகரித்தது. மேலும் நடக்க முடியாத அளவு வலி அதிகரித்துக் கொண்டே சென்றது. எனக்கு பயணத்தில் ஏதேனும் சிக்கல் ஏற்பட்டு விடுமோ என்ற கலக்கம் இலேசாக வந்தது. சோம்நாதரிடம் வாய்விட்டே கேட்டு விட்டேன், “தீர்த்த கட்டத்தில் விழுந்தது நான் வேண்டிக் கேட்டதால் நீ அளித்த வரமா இல்லை காலில் வலி ஏற்படுத்தி என்னை தண்டிக்க நான் ஏதும் தவறிழைத்து வீட்டேனா” என்று. மாலை சுமார் 4மணிக்கு, காலில் அடிபட்டது. இரவு 9மணியளவில் விழா அரங்கை அடைந்ததும் மருத்துவர் வந்து பரிசோதித்து விட்டு, காலில் கட்டை விரல் அருகே ஜவ்வு கிழிந்து ( ligament tear) வீக்கம் ஏற்பட்டுள்ளது, அதனால் ஒரு வாரம் ஓய்வெடுக்க வேண்டும் நடக்கக் கூடாது, நடந்தால் உள்காயம் இன்னும் அதிகரிக்கும், நடக்கவும் கடினம் என்று கூறிவிட்டார். மேலும் மருந்துகள் வாங்கக் கூட நான் நடக்கக் கூடாது என்று சொல்லி உடன் வந்தவர்களை வரச் சொல்லி அவர்களிடம் இன்னும் இரண்டு நாள் வீக்கம், வலி இருக்கும், ஒரு வாரம் ஓய்வெடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தி விட்டு சென்றார். எனக்கு, “இதென்ன சோதனை இறைவா!” என்று தோன்றியது ஆனால் என்னால் அப்பொழுதும், “நீ என்னைக் கைவிட மாட்டாய். மீதமுள்ள இரு நாள் பயணங்களும் நான் பங்கேற்று நிறைவு செய்திட, இறைவா நீ என்னுடன் இருப்பாய்” என்று உள்ளுக்குள் எண்ணிக்கொன்டே விடுதிக்கு வந்து சேர்ந்தோம். மருத்துவர் சொன்னது போல நடக்கவே முடியவில்லை. ஆனால் விடுதிக்கு வந்து சேர்ந்த சற்று நேரத்தில் எல்லாம் வலி கொஞ்சம் கொஞ்சமாக மறையத் தொடங்கியது. காலின் வீக்கமும் குறைய ஆரம்பித்தது பேரதிசயமாகத் தோன்றியது. மறுநாள் செல்ல வேண்டிய இடம் துவாரகை... அங்கு நடனமாடும் அளவிற்கு கால்வலி குறைந்து சரியானது இறைவன் திருவிளையாடல் தான் என்றால் அது பொய்யல்ல.
இந்த சௌராஷ்டிர தமிழ் சங்கமத்தில் எனக்கு மட்டும் கிடைத்த இந்த தனித்துவமான சில அனுபவங்களைத் தொடர்ச்சியாக எழுதினால் நன்றாக இருக்கும் என்ற காரணத்தினால், தீர்த்தக் கட்ட சம்பவத்தில் இருந்து, மருத்துவர் பரிசோதித்த பின்னர் இறைவன் செய்த அற்புத சிகிச்சை வரை தொடர்ச்சியாக எழுதிவிட்டேன்.
இனி ஸ்ரீபால்கா தீர்த், தரிசனத்தில் இருந்து நாம் பிரபாஸ் பாடனில் உள்ள பிற ஆலய தரிசனங்களைத் தொடர்வோம்.
ஸ்ரீபால்கா தீர்த்தின் வெளிப்புறம் இடப்பக்கம் பிரம்மாண்ட சிவலிங்க வடிவில் இந்த தீர்த்தகட்ட வரலாறு காட்சிப்படுத்தப் பட்டுள்ளது. அருகில் மற்றொரு கூடத்தில் மழலையாக பகவான் ஸ்ரீகிருஷ்ணர் பக்தர்கள் பொன்னூஞ்சலாட்ட காட்சி தருகிறார்.
இரண்டாவது, அருகிலேயே ஸ்ரீகோலோக்தாம் தீர்த்தக் கட்டத்திற்கு சென்றடைந்தோம்.
இவ்விடம் ஹிரண் நதிக்கரையில் அமைந்துள்ளது. இந்த நதிக்கரையில் தான் அர்ச்சுனரால் பகவனின் பூதவுடலுக்கு இறுதி மரியாதை செய்யப்பட்டதாக குறிப்புகள் கூறுகின்றன. அதையடுத்து, அவருக்கு கிரியைக் காரியங்கள் திரிவேணி சங்கமத்தில் செய்யப்பட்டதாகவும் புராணக் குறிப்புகள் கூறுகிறது. ஸ்ரீ பால்கா தீர்த்தில் ஜரா என்ற வேடனால் காலில் அம்பெய்யப்பட்டு தன் அவதார நோக்கம் நிறைவடைந்ததால், மெல்ல நடந்து அருகிலேயே இந்த ஹிரண் நதிக்கரையில்
கோலோக்தாம் தீர்த்தத்தை அடைந்தார். இங்கு தான் தனது பூதவுடலை நீத்து சொர்க்க யாத்திரைப் பயணத்தை மேற்கொண்டதால், இவ்விடத்தில் தேஹொத்சர்காவும் அமைந்துள்ளது.
[ஸ்ரீக்ருஷ்ணனின் சரண் பாதுகா]
[தேஹோர்த்சர்க்கா கோலக்தாம்]
பகவானது பூதவுடலுக்கு இறுதிக்காரியம் செய்யப்பட்டதாக குறிப்புகள் கூறும், இந்த ஹிரண் நதியிலும் நாங்கள் தீர்த்தம் எடுத்துக் கொண்டோம்.
இங்கு சன்னிதானத்தில் பகவான் ஸ்ரீகிருஷ்ணர் ஸ்ரீகீதா மந்திரில் குழலூதும் கண்ணனாகவும், அதையடுத்த சந்நிதியில் ஸ்ரீலட்சுமி-நாராயணன் தம்பதி சமேதராகவும் அருள்பாலிக்கின்றனர். இங்கிருந்து தான் ஸ்ரீகிருஷ்ணரின் சகோதரரான பலராமரும் தமது உண்மையான சர்ப்ப வடிவில் மோட்சம் அடைந்தார். இங்குள்ள கீதா மந்திரில் பளிங்கு தூண்களில் கீதாசாரம் முழுவதும் பொறிக்கப்பட்டுள்ளன.
அடுத்ததாக ஹிரண், கபிலா மற்றும் சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில்
தீர்த்தம் எடுத்துக் கொண்டு பின்னர், அதற்கு எதிர்புறத்தில் அமைந்துள்ள ஸ்ரீகாம்நாத் மகாதேவர் ஆலய தரிசனமும்
அங்கு பாதாள அடியில் அமையப்பெற்ற ஆதி சங்கராச்சாரியார் குகையில் அவர்தன் நான்கு பிரதான சீடர்களுடன் வீற்றிருக்கும் தபோ கோலமும் தவழ்ந்து கீழிறங்கி சென்று கண்டு தரிசித்தோம்.
முன்னாளில் குகை போன்ற அமைப்பு இருந்தது, தற்சமயம் நன்கு பராமரிக்கப்பட்டு கட்டமைக்கப்பட்டு வழிபாட்டிற்காக பராமரிக்கப்படுகின்றது. இங்கு சரஸ்வதி தேவி, மஹா மேரு, சாரதா தேவியுடன் பன்னிரு ஜோதிர்லிங்க தரிசனமும் கண்டோம்.
இந்த தனது சௌராஷ்ட்ர தமிழ் சங்கம யாத்திரை அனுபவங்களை அடுத்த வாரம் நிறைவு செய்கிறார் சூரியப்ரபா.
Leave a comment
Upload