நீ பராவில்லைம்மா,அந்த ரேவதியம்மா வூட்டிலே போடற துணிகளையும் தேய்க்கிற பாத்திரங்களையும் பார்த்தால் ஏண்டா இந்த வேலை செய்கிறோம் என எவருக்கும் அலுத்துப்போயிடும்.கணக்கு வழக்கு இல்லாமல் அப்படி போடுவாங்க என்ற சரஸ்வதி எனும் சரசுவிடம், உன் அம்மா எப்படி இருக்காங்க ? உடம்பிற்கு முடியலையென்று சொன்னாயே இப்போது தேவலையா ? என கேட்டாள் லதா.
அப்படியேதான்மா இருக்கு. அந்த ரேவதி வூட்டிலே,மருந்து மாத்திரை வாங்கிக் கொடுத்தாங்க அதை தின்னதிலேயிருந்து என்னமோ தூக்கம் தூக்கமா வருது என்று அம்மா படுத்தபடுக்கையா கிடக்கு என்றாள் சரசு.
கல்யாணம் செய்த உன் மகள் நல்லபடியாக குடும்பம் நடத்துகிறாளா ? என்று லதா கேட்க.
அது நல்லா இருக்கும்மா, அஞ்சாம் மாசம் சீர் செய்யனும் ஒரு இரண்டாயிரம் ரூவா தேவை என்று கேட்டேன், அந்தம்மா.. அந்த ரேவதியம்மா, அதெல்லாம் தர முடியாது என்று சொல்லிடுச்சு என்று அடுத்த அஸ்திரம் வீசினாள்.
இதோ பாரு சரஸ்வதி, எனக்கு அவ்வளவாக காது கேட்காது. இந்த காபியை குடித்துவிட்டு வேலையைச் செய் என்று சொல்லி விட்டு உள்ளே சென்று விட்டாள் லதா.
யம்மா, அந்த லதாம்மா இருக்கே அது வூட்டிலே துணி, பாத்திரம் எல்லாம் ரொம்ப இல்லை. கம்மியாதான் இருக்கு. அதுக்கு கூட அதாலே முடியலைனாபாரு இந்த வேலைக்கு ஒரு ஆள் தேவைபடுது அவ்வளவு நெளிவு அதுக்கு.
ஏம்மா, இவ்வளவுதான் பாத்திரமா என கேட்டதற்கு அதுக்கு காதிலே விழலை என்னனோமோ பேசுது, சொல்லுது என ரேவதியிடம் லதாவைப் பற்றி புறம் சொல்லிக் கொண்டிருந்தாள் சரசு,
அருகே அமர்ந்தபடி ரேவதி, எனக்கெதுக்கு வம்பு ? ஆமாம் அவ பொண்ணு எந்த ஆபீஸில் வேலை செய்யுது என கேட்டதும்,
ஏம்மா, என்ன விஷயம் ? கேட்டாள் சரசு
இல்லை தினமும் காரிலே யாருகூடவோ வந்து இறங்குதா ? அதான் கேட்டேன், நமக்கு ஏன் ஊர் வம்பு என்றாள் ரேவதி.
அதானே, நான் கூட பார்த்தேன் நேற்று பைக்லே யார் கூடவோ வந்து இறங்கிச்சு. நமக்கும் இந்த ஊர் கதையெல்லாம் பிடிக்காது, நீ கேட்டதினாலே சொன்னேன் என்றாள் சரசு.
ஆமாம் எங்க வீட்டு அய்யாவிற்கும் அதெல்லாம் பிடிக்காது , இப்படி புறம் பேசுவது தெரிந்தால் உன் வேலைக்கே கூட உலை வந்திடும் என பயமுறுத்தினாள்.
ரேவதியும், அவரது வீட்டுக்காரரும் கோயிலுக்குப் புறப்பட்டனர்
போகும் வழியில் லதாவைப் பார்த்தனர் இருவரும்.
இவதான் லதா, நம்ம குடியிருப்பிலே புதுசா குடி வந்தவங்க. சரசு இங்கேயும் வேலை செய்கிறாள் என ஆரம்பித்து அவள் சொன்னதை அட்சரம் பிசகாமல் கணவ்ரிடம் சொல்லிய ரேவதி, இவள் பொண்ணு யாரையோ லவ் பண்ணுது என்று நம்ம காலனியிலே ஒரு பேச்சு உள்ளது என இருவரும் பேசிக்கொள்ள,
ஏய் மெதுவாகப் பேசு என்ற கணவரிடம், அவளுக்கு இரண்டு காதும் கேட்காதுங்க என சொன்னதும், அப்படியா என ஆச்சரியமடைந்து நமக்கு அது மாதிரி வாய்க்கலையே என மனத்தில் நினைத்தபடி, உனக்கு யார் இதெல்லாம் சொன்னார்கள் ? என்று கேட்டார். நம்ம சரசுதான் என்றது அவர்கள் பேசியது வரை லதாவின் காதிலும் விழுந்தது. சரஸ்வதி, நீ ரேவதி வீட்டிலே நிறைய துணிகள், பாத்திரங்கள் தேய்பதற்கும், துவைப்பதற்கும் போடறாங்க என புலம்பியதால்தான் உன் மேல் பரிதாபப்பட்டு பாதி உன்னிடம் கொடுத்தும் மீதியை நான் தேய்த்தும் துவைத்தும் வந்தேன்.
மேலும் புறம் பேசும் யாரையும் எனக்கு பிடிக்காது. அதனால்தான் நீ அவர்களைப் பற்றி குறை பேசும் போதெல்லாம் நான் உன் குடும்பத்தின் நிலையை என் கேள்வியின் மூலம் உனக்கு உணர்த்தினேன். அதையும் நீ புரிந்துக் கொள்ளவில்லை. ஆனால் எனக்கு காது கேட்காது என்று நீ முடிவு செய்துக் கொண்டுவிட்டாய்.
இப்படி அவர்களைப் பற்றி என்னிடம் புறம் பேசும் நீ, என்னைப் பற்றியும் அவர்களிடம் கண்டிப்பாக பேசுவாய் அதுதான் உன் இயல்பாக இருக்கும். ஆதலால் நாளை முதல் வேலைக்கு வரவேண்டாம் என்று செல்லி சரசுவை பணியிலிருந்து நிறுத்திவிட்டாள்.
எம்மா, என்னை வேலையை விட்டு நிறுத்திட்டாங்க என்று, ரேவதியிடம் சரசு சொன்னபோது “சரியான முடிவுதான். முதலில் மனிதர்களை சக மனிதர்களாகப் பார்கணும். ஒருவரைப் பற்றி குறை சொல்லியும், புறங்கூறுவதாலேயும்,அது உண்மையோ, பொய்யோ எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் அவர்களை நேரில் காணும்போது நல்லது நம் கண்ணிற்கு தென்படாது, அந்த எதிர்மறையான நினைப்புதான் முதலில் வரும். நாளை முதல் நீ இங்கும் வேலைக்கு வரவேண்டாம் என்றார் ரேவதியின் கணவர்.
அப்போ இந்த வேலையெல்லாம் யார் செய்வது ? என ரேவதி கேட்க, நமக்கு ஏன் இந்த ஊர் வம்பு ? நீயே சேர்த்து அதையும் செய் என்றார் வீட்டுக்காரர்.
Leave a comment
Upload