தொடர்கள்
தொடர்கள்
சென்னை  மாதம்  --  பாகம்  86:-- ஆர் . ரங்கராஜ்

சீமாவரம் பல்லவர் கால மாஹேஸ்வரி

20230502211305759.jpg
பல்லவர் கால மாஹேஸ்வரி: இச்சிலை 45.செ.மீ. உயரமும் 27 செ.மீ. அகலமும் கொண்டு சிறிய அளவினதாகக் கண்கவர் அழகுடன் காணப்படுகிறது. சிலை வடிக்கப்பட்டுள்ள கல் பசுமையாக உள்ளது. பத்ர பீடத்தில் அமர்ந்து மேலிருகரங்களில் மானும் மழுவும் கொண்டு, கீழ் வலது கரத்தினை அபய முத்தரையிலிருத்தி, இடது கரத்தினைத் தொடைமீது வைத்துள்ள நிலை பரவச மூட்டக் கூடியதாக உள்ளது. நெற்றியில் நெற்றிக்கண் உள்ளது. மார்பினில் காணப்படும் புரிநூல் வலது கைமீது ஏறிச் செல்கிறது. அரையில் அணிந்துள்ள ஆடை பாதம் வரை நீண்டுள்ளது.

இந்தியாவில் பல இடங்களில் சப்தமாதர்களின் சிலைகளும், சிற்பங்களும் கிடைத்திருக்கின்றன. வட மாநிலங்களில் புனா, பாட்னா ஆகிய இடங்களில் காணப்படும் சப்த மாதர்களின் மடிகளில் குழந்தைகள் காட்டப்பட்டுள்ளன. இவை உயிர்களைக் காக்கும் அன்னையின் வடிவை நமக்கு உணர்த்துகின்றன. ஆனால் தமிழகத்தில் சப்த மாதர்களைப்போல் கன்னியர்களையும் மக்கள் வழிபட்டுள்ளனர், , என்று தெரிவிக்கிறார் திரு. இ. துளசிராமன், மேனாள் உதவி இயக்குநர், தொல்லியல் துறை, தமிழ்நாடு அரசு.

சீமாவரத்தில் காணப்படும் சப்தமாதர்கள் சிலைகள் அனைத்தும் அமர்ந்த நிலையில் நாற்கரங்களுடன் காணப்படுகின்றன. மேற்கரங்களில் அவரவர்களுக்குரிய ஆயுதங்களைத் தாங்கியுள்ளார்கள். கீழ்க்கரங்கள் அபயமுத்திரையிலும் தொடைமீது வைத்த நிலையிலும் உள்ன.

திருத்தணி வீரட்டானேஸ்வரர் கோயிலில் காணப்படும் சப்த மாதர்களைப் போன்று பீடங்களில் அவரவர்களுடைய வாகனங்கள் காணப்படுவது இச்சிலைகளின் சிறப்பாகும். சில சிலைகள் மேலிருகரங்களில் வழக்கமாகக் கொண்டிருக்கும் ஆயுதங்களுக்குப் பதிலாகவேறு ஆயுதங்களைக் கொண்டிருக்கின்றன. எடுத்துக் காட்டாக, வராகி சங்கு சக்கரத்திற்குப் பதிலாக, பாசமும் கலப்பையும் தாங்கியுள்ளாள். பீடத்தில் சிம்மத்திற்குப் பதிலாக ஆட்டினை வாகனமாகக் கொண்டுள்ளாள். இந்திராணி சக்தி வச்சிரத்திற்குப் பதிலாக வச்சிரம், சக்கரம் ஆகியவற்றைக் கொண்டுள்ளாள், என்கிறார் திரு. துளசிராமன்.

சாமுண்டி மேலிடது க த்தில் உடுக்கைக்குப் பதிலாகக் கபாலத்தினை ஏந்தியுள்ளாள். பீடத்தில் எருமைக்குப் பதிலாகப் பேய் காணப்படுகிறது. சப்த மாதர்களுடன் வழக்கமாக காணப்படும் யோகேஸ்வரர் வினாயகர் போன்ற சிலைகளும் அமர்ந்த நிலையில் உள்ளன.

யோகேஸ்வரர் சிலையின் ஆசனத்தின் கீழ் நந்தி வாகனம் காணப்படுகிறது. இவையும் பிற்காலப் பல்லவர் காலத்தவையே.

மயிலையம்மன் கோயில் சீமாவரம் சப்த மாதர்கள்:

திரிசூலம்

1. யோகேஸ்வரார்: அக்கமாலை: திரிசூலம்

அபயம்: தொடைமீது அமர்ந்த நிலை: நந்தி வாகனம்



2. இந்திராணி: வச்சீரம்: சக்கரம்
அபயம்: தொடைமீது அமர்ந்த நிலை: யானை வாகனம்


3. வராகி: பாசம்: கலப்பை:
அபயம்: தொடைமீது அமர்ந்த நிலை: ஆடு வாகனம்

4. கெளமாரி: சக்தி: வரம்

அபயம்: தொடைமீது அமர்ந்த நிலை: மயில் வாகனம்

5. மாஹேஸ்வரி: மழு: மான்: காளை வாகனம்
அபயம்: தொடைமீது அமர்ந்த நிலை:


6. பிராமி: அக்கமாலை: கெண்டிகை:
அபயம்: தொடைமீது அமர்ந்த நிலை: அன்ன வாகனம்


7. சாமுண்டி: திரிசூலம்: கபாலம்: பேய் வாகனம்
அபயம்: தொடைமீது அமர்ந்த நிலை:


8. வைணவி: சக்கரம்: சங்கு:
அபயம்: தொடைமீது அமர்ந்த நிலை: கருடன் வாகனம்

9. விநாயகர்: அங்குசம்: பாசம்:

தந்தம்: மோதகம்

(தொடரும்)

- ஆர் . ரங்கராஜ், தலைவர், சென்னை 2000 ப்ளஸ் அறக்கட்டளை,
9841010821 rangaraaj2021@gmail.com)