தாய், தந்தையருடைய திருமணங்களைப் பிள்ளைகள் பார்த்து இருக்கமாட்டார்கள், ஆனால் பிள்ளைகள் சேர்ந்து பெற்றோர்களுக்கு சஷ்டியப்தபூர்த்தி (அறுபதாம் கல்யாணம்)
செய்துவைப்பார்கள். அதேபோல பேரன்கள், பேத்திகள், கொள்ளுபேரன்கள், கொள்ளுப்பேத்திகள். சேர்ந்து அவர்களது 80 வது வயதில் சதாபிஷேகம் (திருமணம்) செய்துவைப்பார்கள்.
திருக்கடையூரில் பாட்டிக்கும், தாத்தாவுக்கும் அமிர்தகடேஸ்வரர் கோயிலில் இதுபோன்ற திருமணம் தினமும் நடைபெற்று வருகின்றது.
இதனால் இங்கு வந்து ஆயுள் விருத்தி வேண்டிச் சிறப்பு ஹோமங்கள் செய்து 60 வயதில் சஷ்டியப்தபூர்த்தி, 70 வயதில் பீமரதி சாந்தி, 80 வயதில் சதாபிஷேகம், 90 வயதில் கனகாபிஷேகம், 100 வயதில் பூரணாபிஷேகம் என்று திருமணங்கள் செய்து சுவாமி அம்பாளை வழிபட்டால் நீண்ட ஆயுள் கிடைக்கும் என்றும் நம்பப்படுகிறது. எம பயம் போக்கும் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலுக்குத் தமிழ்நாடு மட்டும் இன்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் இங்கு வந்து தரிசனம் செய்து செல்கிறார்கள்.
ஸ்தல புராணம்:
ஒருமுறை பிரம்மா சிவபெருமானைத் தரிசனம் செய்து ஞான உபதேசம் பெறுவதற்காகக் கைலாயத்திற்குச் சென்றார். ஆனால் அந்த சமயம் சிவபெருமான் பிரம்மாவிற்கு ஞான உபதேசம் தரவில்லை. அதற்குப் பதிலாக அவர் கையில் வில்வ விதைகளைக் கொடுத்து, “பூலோகத்தில் இந்த விதைகள் விதைக்கப்பட்ட ஒரு நாழிகைக்குள் வில்வ மரம் எங்கு வளர்கிறதோ அந்த இடத்தில் ஞான உபதேசம் தருவதாகக் கூறி விட்டார்”. இதனை நிறைவேற்றப் பிரம்மா பூலோகத்தில் வந்து சிவனை நினைத்து வில்வ விதைகளை விதைத்த இடம் தான் இத்தலம். இங்குதான் சிவபெருமான் பிரம்மாவிற்குக் காட்சி தந்து ஞான உபதேசத்தைக் கொடுத்தார். பிரம்மனுக்குக் காட்சியளித்த இத்திருத்தலத்தில் சிவபெருமான் ஆதி வில்வவனநாதராக, தனி சந்நிதியில் பக்தர்களுக்கு இன்றளவும் காட்சி தந்து வருகின்றார். அடுத்ததாகப் பாற்கடலில் தேவர்கள் அமிர்தத்தை எடுத்தவுடன் விநாயகரை வணங்காமல் அதைப் பருகச்சென்றனர். இதனைக் கண்ட விநாயகர் அமிர்த குடத்தை எடுத்து மறைத்து வைத்து விட்டார். இதை அறிந்த தேவர்கள் விநாயகரை வணங்கி அமிர்தத்தைப் பெற்று சிவபூஜை செய்வதற்காக இத்தலத்தில் வைத்தனர். அந்த சமயம் அந்த அமிர்த குடம் இருந்த இடத்திலிருந்து சுயம்புலிங்கம் உருவானது. அமிர்தத்தில் இருந்து தோன்றியதால் இங்குள்ள சிவபெருமான் அமிர்தகடேஸ்வரர் என்ற பெயரினைப் பெற்றார் என்று ஸ்தல புராணம் கூறுகின்றது.
எமனைக் காலால் எட்டி உதைத்து சம்ஹாரம்:
இத்திருத்தலத்தில் தான் சிவபெருமான் எமனைக் காலால் எட்டி உதைத்து சம்ஹாரம் செய்தார். மிருகண்டு முனிவருக்கும், மருத்துவதி அம்மைக்கும் நீண்ட நாட்களாகக் குழந்தை வரம் இல்லாத சமயத்தில், முனிவர் சிவனை நினைத்துச் செய்த கடும் தவத்தின் மூலம் ஒரு வரத்தைப் பெற்றார். அந்த சிவனின் வரத்தினால் முனிவருக்கும், மருத்துவதி அம்மைக்கும் பிறந்த மகனுக்கு மார்க்கண்டேயன் எனப் பெயரிட்டு வளர்த்து வந்தனர். அவர் சிறந்த சிவபக்தனாக விளங்கினார். அவருக்கு பதினாறு வயது நடக்கும் போது அவரின் பெற்றோர் இறைவன் கூறியபடி அவருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் பதினாறு என்பதை மார்க்கண்டேயனிடம் கூறினார்கள்.
தன் பிறப்பைப் பற்றிய ரகசியத்தை அறிந்து கொண்ட மார்க்கண்டேயன் சிவபெருமானே தன்னுடைய ஆயுளைக் காக்க முடியும் என்று மார்க்கண்டேயன் ஒவ்வொரு சிவஸ்தலமாக தரிசித்து வரும் பொழுது கடைசியாக திருக்கடவூர் என்றழைக்கப்படும் திருக்கடையூர் வந்தபோது அவருடைய ஆயுட்காலம் முடியும் நாள் நெருங்கியது. அங்கு எமதர்மன் தன் பணியை முடிக்கும் பொருட்டு மார்க்கண்டேயன் மீது பாசக்கயிற்றை வீசினார். எமதருமனைக் கண்டு அச்சமுற்ற மார்க்கண்டேயன் தான் வழிபட்டுக் கொண்டிருந்த லிங்கத்தை ஆரத்தழுவிக் கொண்டார். எமதருமனும் பாசக் கயிற்றை லிங்கத்தையும் சேர்த்து வீசினார். சிவபெருமான் தன்னுடைய பக்தனைக் காப்பாற்ற லிங்கத்திலிருந்து திரிசூலத்துடன் வெளிப்பட்டு எமதர்மனை சூலாயுதத்தால் அழித்து காலனுக்கு, காலனாக காலசம்ஹார மூர்த்தியாக விளங்கினார். பின்பு பூதேவி, பிரம்மா, விஷ்ணு ஆகியோரின் வேண்டுதலுக்கு இணங்கி சிவபெருமான் எமனை உயிர்ப்பித்து அருள்புரிந்தார் என்று ஸ்தலபுராணம் கூறுகிறது.
ஸ்தல அமைப்பு:
ஸ்ரீ அபிராமி அம்மன் சமேத ஸ்ரீஅமிர்தகடேஸ்வரர் திருக்கோயில் ஊரின் மையத்தில் ஏழு நிலைகளுடன் கூடிய கோபுரம் மேற்கு நோக்கி காட்சி அளிக்கிறது. மேற்கிலும் கிழக்கிலும் கோயிலுக்கு இராஜகோபுர வாயில்கள் இரண்டு அமைந்துள்ளன. கிழக்கு கோபுரத்தில் முனீஸ்வரர் குடிகொண்டிருப்பதால் முனீஸ்வர கோபுரம் என்றும் அழைக்கப்படுகிறது. இதையடுத்து அமுத புஷ்கரணி அமைந்துள்ளது. அமுதகடேஸ்வரர் மேற்கு நோக்கி நின்று அருள்பாலிக்கிறார். அவரது திருமேனியில் ஒரு பிளம்பும், பாசக்கயிற்றின் தழும்பும் காணப்படுகின்றன. அமுதகடேஸ்வரருக்கு பாலாபிஷேகம் நடக்கும் போது இந்த பாசக்கயிற்றின் தழும்பினைக் காணலாம்.
மேற்குக் கோபுர வாயில் வழியாகக் கோயிலுக்குள் நுழைந்தால் இடதுபுறம் ஒரு நூற்றுக்கால் மண்டபம். அதே பிராகாரத்தின் தென்மேற்கு மூலையில் அபிராமி அன்னைக்கு எனத் தனி சந்நிதி அமைந்துள்ளது. அன்னை அபிராமி கிழக்கு நோக்கி நின்று அருள்பாலிக்கிறாள். அமிர்தகடேஸ்வரருக்கு நேர் எதிரில் இருக்கும் கொடிமரம், நந்தி தேவரைக் கடந்து உள்ளே நுழைந்தவுடன், இடது பக்கம் சுப்பிரமணியர். மகாலட்சுமி
காட்சியளிக்கின்றனர்.
பிராகாரத்தில் வில்வவனேஸ்வரர், பஞ்சபூத லிங்கங்கள் ஆகியோர் வீற்றிருக்கிறார்கள். இவர்களோடு எமன், அறுபத்துமூவர், சப்த மாதர் ஆகியோரும் உள்ளனர்.
மகா மண்டபத்தில் கள்ளவாரணப் பிள்ளையார் ஒருபுறமும், இன்னொருபுறம் காலசம்ஹார மூர்த்தி - எமனை எட்டி உதைத்த நிலையில் எழுந்தருளி இருக்கிறார்.
ஸ்தல தீர்த்தம் : காசி தீர்த்தம்
ஸ்தல விருட்சம் ; கொன்றை மரம்
எம பயம் போக்கும் கால சம்ஹார மூர்த்தி :
மகாமண்டபத்தின் வடக்கு பக்கத்தில் சிற்ப வேலைப்பாட்டுடன் கூடிய அழகிய சபையில் எமனை சம்ஹாரம் செய்த கோலத்தில் தெற்கு முகமாகக் கால சம்ஹார மூர்த்தி எழுந்தருளியுள்ளார். வலது திருக்கரங்களில் சூலமும், மழுவும் உள்ளது. இடது திருவடியால் உதையுண்ட எமன் தலைகீழாக வீழ்ந்து கிடக்கின்றார். வீழ்த்திக் கிடக்கும் எமனை ஒரு சிவபூதம் கயிறுகட்டி இழுத்து அப்புறப்படுத்தும் காட்சி காணற்கரியது. இறைவனார் வலது பாகத்தில் ஸ்ரீ மார்க்கண்டேயர் அருளுருவாய்க் காட்சியளிக்கிறார். இடது பக்கத்தில் இம்மூர்த்திக்கு எதிரில் திருமகள், கலை மகளுடன் விளங்குகின்றார். இம்மூர்த்திக்கு எதிரில் வடக்கு முகமாக எமனார் (உற்சவ மூர்த்தி) எருமையுடன் ஆண்டவன் அருளை நாடிய வண்ணமாக ஆட்சித் திருக்கோலத்தில் காணப்படுகிறார். இக்கால சம்ஹார மூர்த்திக்கு ஆண்டில் பன்னிரண்டு முறை அபிஷேகம் நடைபெறுகிறது. இவர் சித்திரைப் பெருவிழாவில் ஆறாந்திருநாளன்று தான் வீதியுலாவிற்கு எழுந்தருளுவார்.
ஸ்தல சிறப்புகள்:
பிரம்மன் வழிபட்டுப் பேறு பெற்றதலம்,
அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவராலும் பதிகம் பாடப் பெற்ற தலங்களில் திருக்கடையூர் ஸ்தலமும் ஒன்றாகும்.
மேற்குப் பார்த்த சிவஸ்தலங்களில் இத்தலமும் ஒன்று.
ஆலயத்தின் வெளியே தென்புறம் பிரம்ம தீர்த்தம் உள்ளது. இந்த தீர்த்தத்திற்கு அருகில் உள்ள கிணற்றில் இருந்து எடுக்கப்படும் நீரைக் கொண்டு தான் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரருக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. என்றும் 16 வயதுடன் வாழ இறைவன் அருள் பெற்ற மார்க்கண்டேயர் சிவபூஜை செய்வதற்காக இக்கிணற்றில் கங்கையைச் சிவபெருமான் வரவழைத்துக் கொடுத்தார் என்பது ஸ்தல வரலாறு.
இத்தலத்தில் 63 நாயன்மார்களில் இடம் பெற்றுள்ள குங்கிலிய நாயனார் மற்றும் காரிநாயனார் அருள் பெற்று சிவதொண்டு
மேற்கொண்ட தலம். மேலும் சரபோஜி மன்னர் ஆட்சிக்காலத்தில் பக்தன் ஒருவருக்காக அபிராமி அன்னை ‘தை அமாவாசையை’ முழுப் பௌர்ணமியாக்கி ‘அபிராமி அந்தாதி’ அருளச் செய்த சிறப்புப் பெற்ற ஸ்தலம்.
மூலவர் மேற்கே பார்த்தும் அருள்மிகு அபிராமி அம்பாள் கிழக்கே பார்த்தும் அமையப் பெற்றதால் இத்தலம் நித்திய திருக்கல்யாண தலமாகத் திகழ்கிறது.
இத்திருக்கோயிலில் ஆயுஷ்ஹோமம். ஜாதக ரீதியான மிருத்யுஞ்சய ஹோமங்கள் செய்வது சிறப்பு.
அபிராமி அந்தாதி அருளச் செய்த ஸ்தலம்:
இத்திருக்கோயிலில் கிழக்கு நோக்கியவாறு அன்னை அபிராமி அருள்பாலித்து வருகின்றார். இவ்வூரில் வாழ்ந்து வந்த பட்டர் ஒருவர் அன்னை அபிராமியின் மீது அளவு கடந்த பக்தி கொண்டவர். ஒருமுறை அன்னை நினைவிலேயே இருந்த பட்டர்
சரபோஜி மன்னரிடம் ஒரு அமாவாசை தினத்தை, பௌர்ணமி என்று தவறுதலாகக் கூறிவிட்டார். இதனால் கோபமுற்ற மன்னர்,
அந்நாளைப் பௌர்ணமி என நிரூபிக்காவிட்டால் மரணதண்டனை என்று சொல்லிவிட்டார்.
அன்றைய தினம் பட்டர் அக்னி வளர்த்து அம்பிகையை வேண்டி அபிராமி அந்தாதி பாடினார். அவர் 79ம் பாடல் பாடியபோது, அன்னை அபிராமி தனது காதில் இருந்த தோடு ஒன்றைக் கழற்றி ஆகாயத்தில் வீச அது பௌர்ணமி இரவு பூரண சந்திரனாகக் காட்சியளித்தது. இவ்வாறு பட்டருக்கு அருள் செய்த அன்னை அபிராமி தன்னை வழிபடும் பக்தர்கள் வாழ்வில் இருள் நீக்கி ஒளியேற்றி அவர்கள் வேண்டியது எல்லாவற்றையும் அருள் புரிகிறார்.
அபிராமி அந்தாதி பாடப்பட்ட இந்த நிகழ்ச்சி தை அமாவாசையன்று நடக்கிறது. அன்று அம்பிகை புஷ்ப அலங்காரத்தில் காட்சி தருகிறாள். அப்போது கொடிமரம் அருகில் கோயில் அர்ச்சகர்கள் ஒவ்வொரு அந்தாதியையும் பாடி, அம்பிகைக்குத் தீபாராதனை காட்டுகின்றனர். 79ம் பாடல் பாடும்போது, வெளியில் மின்விளக்கினை எரியச்செய்கிறார்கள். இந்த வைபவத்தைக் காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர்.
கல்வெட்டுகள்:
அமிர்தகடேஸ்வரர் கோயிலில் 50க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் காணப்படுகின்றன. சுமார் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த இத்தலத்தையும்,ஊரையும் சோழ, பாண்டிய மற்றும் விஜயநகர மன்னர்கள் செப்பனிட்டு, சீரமைத்து ஏராளமான திருப்பணிகள் செய்துள்ளனர். முதலாம் இராசராசன் முதல் மூன்றாம் இராசராசன் வரையில் உள்ள ஒன்பது சோழ மன்னர்களுடைய வரலாற்றுக் குறிப்புகளையும், கொடைத் தன்மையையும் இக்கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. பாண்டிய மன்னர்களான சுந்தரபாண்டியன், வீரபாண்டியன் மற்றும் குலசேகர பாண்டியன் ஆகிய மூவரின் கொடைத்தன்மையை இங்குள்ள கல்வெட்டுகள் மூலம் அறியலாம். விஜயநகர மன்னர்களுள் கிருஷ்ண தேவராயரும், முக்கண்ண உடையார் பரம்பரையில் விருப்பண்ண உடையாரும் இக்கோயிலுடன் தொடர்புடையவர்களாக இருந்ததை இக்கல்வெட்டுகள் வாயிலாகத் தெரிந்து கொள்ள முடிகிறது.
திருவிழாக்கள்:
சித்திரை மாதத்தில் மகம் நட்சத்திரத்தில் எம சம்ஹார விழா சிறப்பாக நடைபெறும். 18 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் தினமும் சுவாமி புறப்பாடு நடைபெறும். விழாவின் ஆறாம் நாள் அன்று காலசம்ஹார மூர்த்தி ஒரே ஒரு முறை மட்டும் வெளியே வலம் வருவார். புரட்டாசி மாதத்தில் நவராத்திரி திருவிழா மார்கழி மாதம் வியதீபாதம் (மிதிபாதம்)அன்று ஏக தின உற்சவம் ஆகியவை கோயிலில் சிறப்பாக நடைபெறும். திருக்கார்த்திகை, திருவாதிரை.ஆடிப்பூரம், பௌர்ணமி நாட்களில் சிறப்புப் பூஜைகள் நடைபெறும். மேலும் கோயிலில் கந்தசஷ்டி, மகா சிவராத்திரி, பங்குனி உத்திரம் ஆகிய விசேஷ நாட்களில் சிறப்புப் பூஜைகள் நடைபெறும். தை அமாவாசை அன்று அபிராமி அந்தாதி பாராயணம் செய்து பாடி நிலவு காட்டி வழிபடுதல் இங்கு மிகவும் விசேஷமான ஒன்று. தீபாவளி பொங்கல் தமிழ், ஆங்கில புத்தாண்டு ஆகிய தினங்களில் கோயிலில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.
பிரார்த்தனை, நேர்த்திக்கடன்:
திருக்கடையூர் கோயிலில் அமிர்தகடேஸ்வரரை வணங்கினால் மன அமைதி கிட்டும்.தொழில் விருத்தியடையும், பதவி உயர்வு கிட்டுவதுடன் நோய் நொடிகள் நீங்கி ஆயுள் விருத்தி தரும். இக்கோவிலில் உற்சவர் காலசம்ஹார மூர்த்தியை வழிபட்டால் எம பயம் நீங்கும் என்பது ஐதீகம்.
இத்தலம் ஆயுள் விருத்தி தலம் என்ற சிறப்புப் பெற்றது. சஷ்டியப்த பூர்த்தி, உக்ரரத சாந்தி, பீமரதசாந்தி, சதாபிஷேகம், ஜன்ம நட்சத்திரம், ஆயுஷ்ய ஹோமம் ஆகியவை செய்வதற்கு மிகவும் புகழ்பெற்ற திருத்தலம்.
அங்க பிரதட்சிணம், கல்யாணவரம் வேண்டுவோர் கல்யாண மாலை சாத்துதல், குழந்தை பாக்கியம் வேண்டுவோர் குழந்தை தத்துக் கொடுத்தல் ஆகியவற்றை நேர்த்திக்கடன்களாகச் செய்கின்றனர். வியாதிகள் குணமாக சங்காபிஷேகமும், புத்திரபாக்கியம் வேண்டுவோர் ருத்ராபிஷேகமும் சுவாமிக்கு செய்கின்றனர்.
கோயில் திறந்திருக்கும் நேரம்:
இந்த கோயில் தினசரி காலை 06.00 மணி முதல் 01.00 வரை, மாலை 04.00 மணி முதல் 09.00 மணி வரையில் கோயில் திறந்திருக்கும்.
கோயிலுக்குச் செல்லும் வழி:
மயிலாடுதுறையில் இருந்து கிழக்கே 22 கிலோமீட்டர் தூரத்திலும், காரைக்காலுக்கு வடக்கே 25 கிலோமீட்டர் தொலைவிலும், தரங்கம்பாடிக்கு வடமேற்கே 12 கிலோமீட்டர் தூரத்திலும் இந்த கோயில் அமைந்திருக்கிறது. கோயிலுக்கு மேற்கு மாவட்டங்களான கோவை,ஈரோடு, சேலம் மற்றும் திருச்சி, தஞ்சை, திண்டுக்கல், மதுரை, ராமேஸ்வரம், காரைக்குடி ஆகிய பகுதிகளில் இருந்து வருபவர்கள் மயிலாடுதுறை வந்து செல்ல வேண்டும்.
சென்னை, சிதம்பரம், கடலூர், புதுச்சேரி, திண்டிவனம், விழுப்புரம் ஆகிய பகுதிகளில் இருந்து வருபவர்கள் சீர்காழி, சட்டநாதபுரம் வழியாகக் கோயிலுக்குச் செல்லலாம்.
நாகூர், நாகப்பட்டினம் பகுதிகளில் இருந்து வருபவர்கள் காரைக்கால் வழியாக வர வேண்டும். ரயிலில் வருபவர்கள் மயிலாடுதுறை வந்து செல்லலாம்.
திருக்கடையூர் கோயில் சென்று அமிர்தகடேஸ்வரரை வணங்கி சகல சௌபாக்கியங்களையும் பெறுவோம்!!
Leave a comment
Upload