முதுமை ஒரு வரம்.
வயதானாலும் நல்ல ஆரோக்கியத்துடன் தன் குடும்பத்துக்கும்,தான் சார்ந்த சமூகத்துக்கும் பயன்பட வாழ்தல் என்பது எல்லோருக்கும் வாய்க்கும் வரம் அல்ல.
நூறு வயதைத் தொடும் தோழர் நல்ல கண்ணு பொது உடமைக் கொள்கையை தமிழகத்தில் ஒளிரவைக்கும் கலங்கரை விளக்காக இன்றும் திகழ்கிறார் .
ஒருமுறை இந்திராகாந்தியைக் பேட்டி காண பத்திரிக்கையாளர் அவர் இல்லம் சென்ற போது, பேட்டியின் நடுவில் எழுந்துச் சென்று, உறங்கிக் கொண்டிருந்த பேரன் ராகுலின் டயப்பரை மாற்றி விட்டு பேட்டியைத் தொடர்ந்ததாக கேள்விப்பட்டுள்ளோம்.இந்திரா காந்தியைப் போலவே இங்கிலாந்தின் அரச குடும்பத்தின் விக்டோரியா,எலிசபெத் மகாராணிகள், அரசிகளே ஆனாலும் தம் குடும்ப நலன்களை மனதில் கொண்டு வாழ்ந்து மறைந்தார்கள்.
அரசிகள் மட்டுமல்ல , அவர்களைப் போலவே நாம் அறிந்த சாதனை செய்த 'சூப்பர் பாட்டிகள்' சிலரைப் பற்றி பேசுவோம் .
விலைவாசிகள் தாறுமாறாக ஏறிக்கிடக்கும் இக்காலத்தில் கோவையைச் சேர்ந்த வடிவேலம்பாளையம் கிராமத்து கமலத்தாள் பாட்டி ஒரு ரூபாய்க்கு இட்லி விற்று வருகிறார். தள்ளாடும் வயதில் இந்த சமுகப்பணியை செய்யும் இவரை சீனத்தின் யூ டியூபர்கள் பேட்டி கண்டு வெளியிட்டுள்ளனர்.
அதே கோவை மாவட்டத்தில் 109 வயது வரை வாழ்ந்து சென்ற ஆண்டு மறைந்தவர் பாப்பம்மா என்னும் இயற்கை விவசாயி . தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்துடன் இணைந்து செய்யப்பட்டவர் .105 வயது வரை தன் வயலில் தினமும் காலை முதல் மாலை வரை உழைத்தார் . விவசாய பங்களிப்புக்காக பத்மஸ்ரீ பட்டம் பெற்றவர் அவர்.
தமிழிகத்தின் ஒளவை பாட்டியாயினும் சரி , அமெரிக்காவின் மாயா ஏஞ்சலோவும் சரி , முதுமை வரை கவிதை எழுதியவர்கள். (இதில் ஒளவை, பாட்டியே இல்லை என்று ஒரு சாரார் அடித்துக் கூறுவார்)
.எழுத்தாளர் சிவசங்கரி 82 வயதிலும் எழுதுவது மட்டுமன்றி , சமூக முன்னேற்றத்துக்கும் இன்றும் பங்களிப்பைச் செய்து வருகிறார். அவரது சுய முன்னேற்ற நூல்கள் எக்காலத்துக்கும் ,எல்லா வயதினருக்கும் வழிகாட்டி.
பரதக்கலைஞர் பத்மா சுப்பிரமணியம் நாட்டியக்கலைக்கு அளித்து வரும் பங்களிப்பு உலகம் அறிந்தது. நாட்டியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். பரததுக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர் . தொண்ணுறு வயதைத் தொடும் வைஜயந்தி மாலா இன்றும் மேடையேறி அபிநயப்பதை காணும் போது ஆச்சர்யத்தில் ஆழ்ந்து போகிறோம்.
நடிகைளில் சௌகார் ஜானகி தொண்ணுறு வயதைத் தொட்டவர். இன்று யாருக்கும் தொல்லை தராமல் அவர் வேலைகளே அவரே செய்துக் கொள்கிறார்.அவரே சமைத்துக் கொள்வதுடன், புதிய கேக் வகைகளை அறிமுகப்படுத்தி வருகிறார் .ஐந்து தலைமுறையைக் கண்ட இந்த 'சூப்பர் பாட்டி 'எல்லோருக்குமே ரோல் மாடல்.
இவரைப்போலவே எண்பதுகளில் இருக்கும் சச்சு, காஞ்சனா, சரோஜாதேவி, பி.சுசிலா ,எஸ்.ஜானகி ஆகிய திரைத்துறையினரும் வெற்றி சுவைத்த சாதனையாளர்கள்.
மேதா பட்கர் எழுபதை தாண்டி இருந்த போதும் சமூக அவலங்களை நீக்க போர்க்குரல் எழுப்பி வருகிறார் .சோனியா காந்தி நீண்ட காலமாக காங்கிரஸ் தலைவராக இருந்தது மட்டுமன்றி 'இந்தியா கூட்டணி' தலைவராக இருந்து அரசியல் களத்தில் தொடர்ந்து பணியாற்றி வருகிறார்.
இவர்கள் எல்லோரும் தம் வயதை மறந்து வாழ்பவர்கள். தொடர் உழைப்பு, நல்ல உணவு வழக்கம், உடற்பயிற்சி, ஆரோக்கிய சூழல், நல்ல சிந்தனை உள்ள எவரும் நீண்ட நாட்கள் வாழ்வதுடன் சமூகத்துக்கு தன்னால் ஆன பங்களிப்பைத் தருகிறார்கள்.
நம் வீடுகளிலும் எண்பதைக் கடந்த அம்மாவும் தன் பிள்ளைகளுக்கும். பேரப்பிள்ளைகளுக்கும் உதவிகரமாக இருப்பதைக் காண்கிறோம். விமான நிலையத்துக்குச் சென்றால் , வயது முதிர்ந்த பாட்டிகள் அயல்நாடு சென்று தன் பிள்ளைகளின் பிள்ளகளை கவனித்துக் கொள்ள தனியாக பறப்பதை பார்க்கிறோம்.
கம்ப்யூட்டர் கற்றுக் கொண்டு, ஆன்லைன் பிசினஸ் செய்கிறார்கள் . யூ டியூபைத் திறந்தால் பாட்டிகள் நடனமாடுகிறார்கள். சமையல் செய்து காட்டுகிறார்கள், ஸ்டாக் மார்க்கெட் பற்றி பேசுகிறார்கள்.ஸ்மியூலில் பாட்டு பாடுகிறார்கள். ஜூம் வழி பாடம் நடத்துகிறார்கள், பாட்டு , வீணை என்று ஆன்லைனில் கற்றுத் தருகிறார்கள்.மருத்தவக்குறிப்புகள் சொல்கிறார்கள். எந்த துறையானலும் அதை பற்றி தெளிவான அறிவு பெற்று, வருமானத்தைப் பெருக்கும் வழியை கடை பிடிக்கிறார்கள் இந்த ஹைடெக் பாட்டிகள்.
வயது என்பது ஒரு எண் தான். சாதிக்க அது தடை ஒன்றுமில்லை .ஆர்வம் இருந்தால் போதும்.
முழு மனதுடன் ஈடுபடுத்திக் கொண்டால் போதும்,எந்த வயதிலும் . சிறகு விரித்த முதிர் பறவைகளாக வானில் பறக்கலாம்.
Leave a comment
Upload