எனது தந்தையின் தாய், பார்வதி பாட்டி, ஐந்தடி உயரம் இருப்பார்.
வெள்ளைப் புடவையும் ருத்ராட்ச மாலையும் தான் அவளது உடைமைகள். மொட்டை அவளது கூந்தல். காலத்திற்கு ஏற்ப வாழ்ந்தாள். ஓஹோ என்றில்லாமல் தனது ஆத்ம திருப்திக்கும் பாதுகாப்பிற்கும் தனது கடவுள் நம்பிக்கையை கொண்டாடினாள்.
திருநெல்வெலியில் திருமணமாகி இரு குழந்தைகளுக்குத் தாயானாள். தாத்தா ராமைய்யர் ஒரு சிட் ஃபண்ட், அந்த காலத்து சின்ன பேங்க் நடத்தி வந்தார். நல்ல பணக்காரர். அவரது 32 வயதில் அவரது அகால மரணமும், கலியின் விளையாட்டும் அவளை விட்டு வைக்கவில்லை. ராணியாய் வீட்டில் இருந்திருக்க வேண்டியவள் தனது கணவரின் இல்லத்தில் நடக்கும் சொத்து தகறாரில் தனது நகை முதலான பங்கைக் கூடப் பெற இயலாது பேதையானாள். ஆதரவு இன்றி புகுந்த வீட்டை விட்டு வெளியேற வேண்டி வந்தது.
சுய மரியாதை மேலிட இளம் விதவை எனது தந்தை எனது அத்தை என இரு குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியேறினாள். அப்போது எனது தந்தைக்கு வயது ஏழு.
வைராக்கியமே குடி கொண்ட பாட்டி அக்கம் பக்கத்து வீடுகளில் சமைத்துப் போட்டு வரும் வருமானத்தில் இரு குழந்தைகளையும் வளர்த்தாள். படிக்க வைத்தாள். இந்த கொடுமையான தருணத்தில் ஹைதராபாத்திலும் சில காலம் தங்கி இருந்தாள். சென்னை வந்தாள். எனது தந்தையை ஹிந்தி பிரசார சபாவில் படிக்க வைத்தாள். அதில் படித்து ஹிந்தி பண்டிதரானார். வட ஆர்காடு மாவட்டம் சேத்துப்பட்டு என்ற ஊரில் டாமினிக் சாவியோ பள்ளியில் ஹிந்தி ஆசிரியரானார்.
பாட்டியோட தியாகத்திற்கு அளவே இல்லை.
“அவரது மகனுக்கு நாங்க நாலு குழந்தைகள்” என்று சொல்ல ஆரம்பிக்கிறார் திருமதி ஷோபா ஜெயராமன் அமெரிக்காவிலிருந்து.
எங்களது பாட்டியைப் பற்றி கூறுகையில், “எங்களோடு இருந்த பாட்டி, எங்களது வளர்ப்பிற்காக தமது ஆசார நியமங்களை தன்னோடு மட்டுமே சுருக்கிக் கொண்டார். அதே சமயத்தில் அன்பாக பாசமாக அக்கறையாக குடும்பம் கிராமத்திற்கும் சென்னை நகர வாழ்க்கைக்கும் பிரிய நேரிடுகையிலும் கிராமத்தில் குடும்பத்தை நடத்திக் கொடுக்கும் தலைவியாக தன் ஆதரவுக்கையை நீட்டினார். தனது இறுதிக் காலத்தில் சுமார் பத்து வருடங்கள் கண் தெரியாமல் கஷ்டப் பட்டார்கள். கிராமத்தில் இருந்ததாலும் குடும்பத்தின் நிதி நிலைமை வகை செய்யாததாலும் அதை சரி செய்து கொள்ள இயலாமல் போய் விட்டது. அதை ஒரு பொருட்டாகவே கொள்ளாது தன்னால் எந்த தொந்தரவுவும் வரக்கூடாது என்று கண்ணாயிருந்தார். அந்த நிலையிலும் வீட்டுக்குள்ளேயே தனது காரியங்களை தானே பார்த்துக்கொள்ளும் அளவுக்கு பழக்கிக் கொண்டார்கள்.
எனது சகோதரர் ராம்மோஹன், சிறு வயதில் அவருக்கு டைஃபாய்ட் வந்து படுத்த்ருந்தப்போ ஊரிலிருந்து வந்தாங்க குனைன் மாத்திரை, பழங்கள், கேக்னு வாங்கி வந்து கொடுத்துவிட்டு இனி சரியாய் போயிடும் கவலைப்படாதேன்னு சொல்லிட்டு போய்ட்டாங்களாம்.
மேஜிக் பாட்டி என்று சந்தோஷமாக பகிர்ந்துகொண்டார். கோக்கோ மிட்டாய் வாங்கித் தந்ததையும் மறக்காது கொண்டாடி சொல்லி மகிழ்கிறார். பாட்டி வந்தாலே பார்டி மூட் தான் , அதே சமயம், எங்களது அத்து மீறல், ஐ மீன், துஷ்டத்தனம் அவர்களது ம்ம்ம் என்ற தொண்டை கரகரப்பில் அடங்கி விடும் என்பதும் மறுக்கமுடியாத சத்தியம்.
அப்பாவின் கண்டிப்பில் அதிகம் அடி வாங்கியவன் நான். ஆனால் அதே சமயம், அப்பாவின் கண்டிப்புக்குப் பின் தூக்கி வைத்துக்கொண்டு அன்பாய் அப்பாவின் கண்டிப்பை அங்கீகரிப்பார்களே அதை என்ன வென்று சொல்ல.
பாட்டி யூ ஆர் கிரேட். நீங்க செய்த பெடல் விசையில் உங்களது குழந்தைகள், பேரக் குழந்தைகளாகிய நாங்கள், கல்யாணம் குழந்தைகள் என நன்றாக வாழ்வில் முன்னேறி தன்னிலை மாறாது வாழ்கிறோம். உங்களது வாழ்க்கை எங்களுக்கு ஒரு முன் மாதிரி.
நீங்கள் தான் எங்கள் ஹீரோ.
Leave a comment
Upload