தொடர்கள்
அனுபவம்
கோமதிப் பாட்டி ! மீனாட்சி பாட்டி ! - ராம்

20250004092016732.jpeg

பாட்டி நினைவுகள்.....

பாட்டிகளோடு வளரும் குழந்தைகள் பாக்கியசாலிகள்.

கண்டிப்பும் அன்பும் உரிமையும் கலந்த உறவு என்ன என்பதை அவர்கள் மூலமாகத்தான் புரிந்து கொள்ள முடியும்.

இதிலுமே அப்பா வழிப் பாட்டி அம்மா வழிப் பாட்டி என்ற இருவரிடம் சரிசமமான தூரத்தை எதிர்பார்க்க முடியாது.

இதில் அப்பாவின் கண்டிப்பும் அவர்களின் உறவு நிலை வைத்து மாறுபடும்.

யாரிடம் நெருக்கம் அதிகம் என்று கேட்டால் ஒவ்வொருவரும் ஒரு பதில் சொல்லக் கூடும்.

என்னைப் பொறுத்தவரை இரண்டு பாட்டிகளுமே தங்கம் தான்.

மீனாட்சிப் பாட்டி நான் பிறக்கும் முன்பாகவே தாத்தாவை இழந்திருந்தார்.

இரண்டு மகன்கள் இரண்டு மகள்கள் என்று பாட்டியும் தன் வாழ்வை குழந்தைகளுக்காக அர்ப்பணித்தவர். தனக்கென்று ஆசாபாசங்கள் வைத்துக் கொள்ளாதவர்.

எல்லாக் குடும்பங்களிலேயும் இருக்கும் உறவுச் சிக்கல்களை அருமையாக சமாளித்தவர். அவருடன் உடன் பிறந்தவர்களுக்கு அவர் எப்போதுமே செல்லம் தான்.

உறவுகளை நினைவு வைத்துக் கொள்வது சுலபமல்ல. எங்கள் குடும்பத்தில் தாத்தா பாட்டி அவர் குழந்தைகள் பேரன்கள் என்று ஐ.பி. அட்ரஸ் போல 1.1.2 2.3.2 என்று ஒரு வாட்சப் குரூப்பே இருக்கிறது.

எனக்குத் தான் சரிவர புரிபடமாட்டேன் என்கிறது.

மீனாட்சி பாட்டியுடன் திருநெல்வேலி, நாகர்கோவில் பக்கம் செலவு செய்த நாட்கள் அலாதியானவை. மடி ஆசாரம் என்று அதிகமாக வெளியூர் வந்தால் பார்க்காமல் அட்ஜஸ்ட் செய்து கொள்வார். அவருடன் சென்ற சுற்றுலாக்கள் பசுமையாக நினைவிருக்கிறது.

எங்களை விட சித்தப்பா மகள்களுக்குத்தான் பாட்டியின் அருகாமை அதிகம். ஏனெனில் பாட்டி கடைசி மூச்சு வரை இருந்தது சித்தப்பாவுடன் தான்.

இறுதி நாட்களில் கொஞ்சம் நெருக்கமாகவே பல விஷயங்கள் பேசியிருக்கிறார். வெளிநாட்டு வாழ்க்கையில் இழந்தவைகளில் உறவுகளின் அருகாமைக்கு விலையே இல்லை.

பாட்டியின் இள வயது படத்தையும் கடைசியில் எடுத்த படத்தையும் பார்க்கையில் காலத்தின் அழுத்தமான இருப்பு நினைவுக்கு வரும்.

20250004092042902.jpeg

அம்மா வழி கோமதிப் பாட்டியும் அப்படியே.

அவருக்கு பத்து குழந்தைகள். தற்போது இருப்பது என் பெரியம்மா மட்டும் தான். (அவரும் பாட்டி தானே)

பெரியம்மா தன் அம்மாவைப் பற்றி சொல்வது "அம்மா ரொம்ப அன்பா இருப்பா. ராத்திரில எல்லா குழந்தைகளையும் சுற்றி உட்கார வைத்து கைல சாப்பாடு உருட்டி உருட்டி போடுவா. ஒர்ப்படி கூட அன்பா எல்லா இடத்துக்கும் போவா. ரொம்ப ரொம்ப அழகா இருப்பா. முறுக்கு பிரமாதமா சுத்துவா. பட்ஷணங்கள் பண்றதுல மகா கெட்டி. இன்னும் நிறைய இருக்கு மறந்துடுத்து. நினைவு வரும்போதெல்லாம் சொல்றேன்"

கோமதி பாட்டி சதாபிஷேகம் வரை தாத்தாவுடன் இருந்தவர்.

தாத்தா போனதற்குப் பின் அவரது மறைவு வரை அருகாமையில் இருக்கும் வாய்ப்பு கிடைத்தது. இரவுகளில் அவருக்கு இயற்கை உபாதைக்கு கூட அழைத்து உதவி செய்தது நினைவிருக்கிறது.

எத்தனையோ முறை பல குடும்ப இரகசியங்களை, அந்தக்கால நினைவுகளை என்னோடு அசைபோட்டிருக்கிறார்.

அதிலும் அவரது மூன்று பெண்களின் மாப்பிள்ளையை குறித்து சொல்லும் போது, "மூணும் மூணு முத்து" என்று குத்தலாக சொல்லி சிரிக்கும் போது அதில் கோபமோ, அல்லது வன்மமோ, பாராட்டோ கூட இருக்காது. பொத்தாம் பொதுவாக சொல்லி சிரிப்பார்.

கொடிகட்டி பறந்து நொடித்துப் போன வகையில் எல்லோரையும் மீட்டெடுத்து ஆளாக்கியவர் கோமு பாட்டி.

அம்மா வழி பாட்டியிடம் சில பல டிகிரி சுதந்திரமும் உரிமையும் எடுத்துக் கொள்ளலாம் என்பது என் அனுபவ அறிவு. எல்லோருக்கும் இப்படித்தான் என்று நியதியில்லை.

மீனாட்சி பாட்டியின் இறுதி நாட்கள் வெளிநாட்டிலிருந்து தொலைபேசி மூலமாகவே கழிந்தது.

கோமதி பாட்டியின் இறுதி நாட்களில் கூட இருந்து அவர் கஷ்டப்பட்டு பிரிந்தது இன்னமும் நினைவில் இருக்கிறது.

யாருக்கெல்லாம் தாத்தா பாட்டியுடன் நேரம் செலவழிக்க முடியுமோ தயவு செய்து படிப்போ, உத்தியோகமோ துரத்தினாலும் கொஞ்சம் நேரம் ஒதுக்கி செலவிடுங்கள். அந்த நேரம் கோல்டன் ஹவர். மீண்டும் கிடைக்காது.

ஒரு முறை அம்மாவிடம் பேசிக் கொண்டிருக்கும் போது சொன்னேன் தாத்தா, பாட்டி நினைவுகள் எல்லாம் எவ்வளவு அபூர்வமானது. அவர்கள் இல்லை என்று நினைக்கும் போது துக்கமாகத்தான் இருக்கிறது.

அம்மா சொன்னாள். "தாத்தா பாட்டிக்கே இப்படி சொல்றியே அம்மா இல்லாத போது என்ன சொல்லுவ"

சட்டென அம்மா வாயைப் பொத்தினேன். சொல்லாதம்மா. நினைக்கவே நடுக்கமாக இருக்கிறது.

இன்று அம்மாவும் இல்லை. !

காலம் !