தொடர்கள்
அனுபவம்
எங்க பாட்டி 1. - கோமதி லண்டன்

20250003195510447.jpeg

பட்டம்மாள் எனும் என் பாட்டி

குழந்தைப் பருவம் என்பது சிறப்பு வாய்ந்ததாக, எப்போது நினைவு கூர்ந்தாலும் மகிழ்வை மட்டுமே அளித்து, பூரிப்பை ஏற்படுத்தும் ஒரு ஆனந்தப் பருவம் என்று கூறினால், அது முற்றிலும் உண்மை. விளையாட்டு, நண்பர்கள் என்று எந்த ஒரு கவலையும் இன்றி, வாழ்க்கையை எளிதாக கடந்து சென்ற நாட்கள் என்பவற்றை தாண்டி, தாத்தா பாட்டியின் மூலம் கிடைக்கும் அன்பு, அந்த சிறுவயதில் ஒரு மிகப் பெரிய தாக்கத்தை நம்மிடையே ஏற்படுத்தி இருக்கிறது என்பதும் உண்மையே. என்னுடைய சிறு வயதில், என் பாட்டி பட்டம்மாள் ஊன்றிய விதையே, தமிழின் மீதும், கதை, கட்டுரை, தமிழ்க் காவியங்கள் மீதும் ஈடுபாடு ஏற்பட காரணமாக அமைந்தது.

என் தாத்தா நாராயண ஐயர் அவர்களின் இரண்டாவது மனைவியாக வாழ்ந்த பட்டம்மாள், பத்தாம் வகுப்பு வரை படித்திருந்தாள். என் பாட்டியின் பிறந்த வீடு, சற்று வசதி குறைவான குடும்பம்மாதலால், அன்றைய சூழலில், திருமணம் முடித்தால் போதும் என்ற நிலையில், அவரது திருமணம் நிகழ்ந்திருக்க வேண்டும் என்பது என் எண்ணம். திருமணத்தின் போதே என் தாத்தாவிற்கு, அவரது முதல் திருமணம் மூலம் இரு மகன்களும், ஒரு மகளும் இருந்தார்கள் என் அப்பா உட்பட. இவர்கள் அனைவரையும் முழு மனதோடு ஏற்று, அரவணைத்து அவர் வளர்த்த பாங்கு இன்றும் என்னை பிரமிக்க வைக்கிறது. பெண்களின் தியாகம், உரிமை, சுதந்திரம் போன்றவற்றை இன்று பேசும் நாம், அன்றைய தலைமுறையினர் வாழ்ந்த நிலைமையையும், அவர்களது தியாகத்தையும் நினைத்தால், அவற்றின் முன்பு, இன்று இவற்றை பற்றி நாம் அங்கலாய்ப்பது சரியா என்கிற வினாவை நம்முள் எழுப்புகிறது.

எரிவாயு அடுப்பு இல்லாத அந்த காலத்தில், கறி அடுப்பில் சமைப்பது, அம்மி, ஆட்டுக்கல் என்று இயந்திரங்கள் இல்லாத வாழ்க்கை , என்று இவை அனைத்தும் அன்றைய தலைமுறையில் வாழ்ந்த பெண்கள் அனுபவித்ததே. இதற்கு என் பாட்டியும் விதி விலக்கல்ல. எனக்கு என் பாட்டியிடம் மிகவும் பிடித்தது, அவரது கதை கூறும் பாங்கு, திறன். குறிப்பாக விக்ரமாதித்தன் கதைகளை அவர் கூறும் விதம், அந்த புத்தகத்தை படிப்பதற்கு இணையானதாகும். போஜ ராஜன் சிம்மாசனத்திற்கு செல்லும் பொழுது, படிக்கட்டுகளில் நின்ற பதுமைகள் ஏளனமாக சிரித்தது, வேதாளம் விக்கிரமாதித்தனுக்கு இடையே நடந்த உரையாடல்கள் போன்றவை, இன்றும் என் மனதில் பசுமரத்தாணி போன்று பதிந்துள்ளதே அதற்கு சான்று. அவர் கூறுகின்ற பொழுது, அந்த காட்சிகள் இன்றும் என் கண்முன்னே வந்து செல்கின்றன. காச நோயால் இருமலுடன் அவதிப்பட்டாலும், அதை சிறிதும் பொருட்படுத்தாமல் எங்களுக்கு கதை கூறுவதில் எப்பொழுதும் ஆர்வம் செலுத்துபவர்.

விக்ரமாதித்தன் கதைகள் தவிர, ராமாயண மஹாபாரதக் கதைகள் கூறுவதிலும் அவர் கை தேர்ந்தவர். வெள்ளி தோறும் வரும் சிறுவர் மலரின் கதைகளை நான் படித்திருந்தாலும், என் பட்டி கூறுவதை கேட்பதற்காகவே படிக்கவில்லை என்று கூறி, அவர் மூலம் கேட்ட கதைகளே அதிகம். அவையே இன்றும் என் நினைவில் நிற்கின்றன. பொழுதுபோக்கு என்பது அதிகம் இல்லாத காலத்தில், பட்டம்மாள் பாட்டியே எங்கள் அனைவரின் நடமாடும் பொழுதுபோக்கு சாதனமாக விளங்கினாள்.

ஒரு பெண்ணாக, என் பாட்டியை எண்ணிப் பார்க்கின்றபொழுது எனக்கு மிகவும் பிரமிப்பாக உள்ளது. சிறு சிறு எதிர்பார்ப்புகள் நிறைவேறாததிற்கு மனம் நொந்து கொள்ளும் இன்றைய தலைமுறையினரின் வாழ்வியலுக்கு, முற்றும் முரணாக அன்றைய வாழ்க்கை இருந்ததாகவே நான் எண்ணுகின்றேன். எந்த ஒரு எதிர்பார்ப்பும் இன்றி, வாழ்க்கையை முழு மனதோடு, மகிழ்வாக வாழ்ந்த அந்த வாழ்வியலை நாம் சற்று உற்று நோக்க வேண்டும். கல்வி, பொருளாதார சுதந்திரம் என பலவற்றில் இன்று நாம் முன்னேறி இருந்தாலும், அன்றைய வாழ்வு நேர்மறையான எண்ணங்களின் துணையோடு இருந்ததால், உடல் மன உறுதியை அது வலுப்படுத்தியதாகவே எண்ணத் தோன்றுகிறது.

நமது தாத்தா பாட்டியின் வாழ்க்கை, பல தலைமுறைகளுக்கு முன்னுதாரணமாகவும், வழிகாட்டியாகவும், தாக்கத்தை ஏற்படுத்தும் விதத்திலும் அமைந்திருக்கிறது. வாட்ஸ் ஆப், யு டியூப் என சமூக ஊடகங்கள் நிறைந்து, கவனச்சிதறல்களுக்கான வாய்ப்பு நிறைந்துள்ள இந்த காலத்தில் நம்மால் அத்தகையதொரு தாக்கத்தை, நம்முடைய இளைய சமுதாயத்திடம் ஏற்படுத்த முடியுமா என்பது கேள்விக்குறியே! இருப்பினும், அந்த பாதையில் சென்று, ஒரு செழிப்பான வருங்காலத்தை படைத்தல், நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.