சின்ன அய்யா - பெரிய அய்யா மோதல் :-
பொதுக்குழுவில் டாக்டர் ராமதாஸின் பெரிய மகள் ஸ்ரீ காந்தியின் மகன் முகுந்தனை இளைஞர் அணி தலைவராக டாக்டர் ராமதாஸ் அறிவித்தார். மேடையிலேயே டாக்டர் அன்புமணி ராமதாஸ் கட்சிக்கு வந்தே நான்கு மாதம் தான் ஆகிறது, இப்போது அவனுக்கு எதற்கு பதவி தேவையில்லை என்று தனது கடுமையான எதிர்ப்பை தெரிவித்தார். "இது நான் தொடங்கிய கட்சி இங்கு நான் சொல்வது தான் சட்டம் இதை ஏற்றுக் கொள்பவர்கள் கட்சியில் இருக்கலாம், இல்லையென்றால் வெளியேறலாம் "என்று பதில் சொன்னார் டாக்டர் ராமதாஸ். வாக்குவாதம் மோதல் அளவுக்கு முற்றி முற்றிப்போக தற்சமயம் பனையூரில் குடியிருக்கிறார் அன்புமணி ராமதாஸ். அங்கு தனியாக எனக்கென்று ஒரு அலுவலகம் இருக்கிறது என்னுடைய செல்பேசிஎண் இதுதான் அங்கு வந்து எல்லோரும் என்னை சந்திக்கலாம் என்று சொல்லிவிட்டு புறப்பட்டு விட்டார் அன்புமணி ராமதாஸ். பாட்டாளி மக்கள் கட்சிக்கு இது புதுசு சின்னையா பெரிய ஐயா என்று அப்பா மகனை கொண்டாடிய கட்சியில் இப்போது கலக குரல் வெளிப்படையாக வரத் தொடங்கி இருக்கிறது. அன்புமணி ராமதாஸ் கோபத்துக்கு இன்னொரு காரணம் சொல்லப்படுகிறது. அந்த பொதுக்குழுவில் டாக்டர் ராமதாஸ் கூட்டணி யாருடன் என்பதை நான் பார்த்துக் கொள்கிறேன். ஒருமுறை தவறு செய்து விட்டோம். நாம் புதிய பாதைக்கு திரும்ப வேண்டும் என்று பேசினார் அதாவது பாரதிய ஜனதாவுடன் கூட்டணி வேண்டாம் அதிமுகவுடன் சேருவோம் என்பதைத்தான் சூசகமாக டாக்டர் ராமதாஸ் சொன்னார். ஆனால் இதை அன்புமணி ராமதாஸ் விரும்பவில்லை மோதலுக்கு இதுவும் ஒரு முக்கிய காரணம் என்கிறார்கள்.
'சார் 'படும் பாடு
அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் பலாத்காரம் செய்த ஞானசேகரன் யாரோ ஒரு சார் என்பருடன் பேசினான் என்று அந்த மாணவி முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார். யார் அந்த 'சார் 'என்பதுதான் இப்போது பேசும் பொருள். இந்த சார் என்ற வார்த்தையை வைத்து நிறைய மீம்ஸ் எல்லாம் வரத் தொடங்கி விட்டது. ஆனால் சென்னை மாநகர காவல் துறை ஆணையர் சார் எல்லாம் கிடையாது. சம்பவம் நடந்தபோது ஞானசேகரன் செல்பேசி ஏரோபிளேன் மோடில் இருந்தது.அவன் யாரிடமும் பேசவில்லை அந்தப் பெண்ணை மிரட்டுவதற்காக சார் என்ற வார்த்தையை பயன்படுத்தியிருக்கிறான் என்கிறார். கூட்டணிக் கட்சிகளுக்கு யார் அந்த சார் என்று தெரிந்து கொள்ள வேண்டிய ஆவல் தற்சமயம் வரத் தொடங்கி இருக்கிறது. அவர் பேராசிரியரா ? அரசியல் பெரும் புள்ளியா என்றும் விவாதம் வரத் தொடங்கி இருக்கிறது.
அண்ணாமலையிடம் அமித்ஷா சொன்னது
சமீபத்தில் டெல்லி சென்ற தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அமித்ஷா உள்பட தேசியத் தலைவர்களை சந்தித்து தமிழக அரசியல் பற்றி பேசியிருக்கிறார். அமித்ஷாவை அண்ணாமலை சந்தித்தபோது 2026 சட்டமன்றத் தேர்தலில் உங்களால் கூட்டணி கதவுகள் இந்த முறை அடைப்பட்டு போய்விடக் கூடாது. எனவே உங்கள் அணுகுமுறை பேச்சு எல்லாமே ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். திமுகவை விமர்சனம் செய்வதோடு உங்கள் நடவடிக்கையை நிறுத்திக் கொள்ளுங்கள். அதனால்தான் அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில் அதிமுக ஐடிவிங் நடத்திய போராட்டத்தை பாராட்டி பதிவு செய்தார்.
சந்தோஷத்தில் ஆளுநர்
தமிழக மாநில ஆளுநரின் பதவி காலம் கடந்த அக்டோபர் எட்டாம் தேதியுடன் முடிவடைந்துவிட்டது என்றாலும் ஜனாதிபதி விரும்பும் காலம் வரை பதவியில் தொடரலாம் என்பது ஒரு சம்பிரதாயம். தமிழ்நாட்டில் இவரே தொடரட்டும் என்று பிரதமர் மற்றும் அமித்ஷா முடிவு செய்து இருக்கிறார்கள். விரைவில் இது பற்றி முறையான அறிவிப்பு ஜனாதிபதி மாளிகையில் இருந்து வருமாம்.
குஷ்பூக்கு வந்த சோதனை
பாஜகவில் இருப்பதாக சொல்லிக் கொள்ளும் நடிகை குஷ்பூ கட்சி நிகழ்ச்சிகளுக்கு எனக்கு முறையான அழைப்பு இல்லை என்று மாலை முரசு நிருபரிடம் சாதாரணமாக பேசியதே செய்தியாக வெளியிட்டு விட்டார்கள். உடனே குஷ்பு நான் பேட்டி எல்லாம் தரவில்லை என்று மறுத்தார். ஆனால் மாலை முரசு குஷ்பூ உடன் செல்பேசியில் பேசிய ஆடியோவை வெளியிட்டது. நான் பேட்டி எல்லாம் தரவில்லை சாதாரணமாக நான் பேசியது அவர்கள் செய்தியாக்கி விட்டார்கள் என்று மீண்டும் மறுத்தார் குஷ்பூ .இது பற்றி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலியிடம் நிருபர்கள் கேட்டபோது "இது குறித்து எனக்கு எதுவும் தெரியாது நான் தனிப்பட்ட முறையில் யாரையும் எந்த நிகழ்ச்சிக்கு அழைப்பதில்லை .அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகத்திடம் தான் நீங்கள் கேட்க வேண்டும் என்று பதில் சொன்னார்.இந்த பிரச்சனை பெரிதாக பேசப்பட்டதும் அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை சம்பந்தமாக நீதி கேட்டு பேரணியை மதுரை செல்லாத்தம்மன் கோயிலில் குஷ்பு தொடங்கி வைப்பார் என்று அறிவிப்பு வெளியாகிறது. குஷ்பூவும் பாஜக தலைமை அலுவலகத்தில் பேட்டி தர தொடங்கி இருக்கிறார்.
பாஜக பக்கம் விஜய்?
விஜய் கட்சி ஆரம்பித்தது முதல் திமுகவை கடுமையாக எதிர்த்தாலும், மத்திய அரசை அவர் பெரிதாக கண்டித்து கருத்து சொல்வதில்லை. அமித்ஷா அம்பேத்கர் பற்றி பேசியதற்கு மட்டும் என் தலைவன் அம்பேத்கர் பற்றி எப்படி பேசலாம் என்று கொஞ்ச நேரம் பொங்கினார் அவ்வளவுதான். அண்ணா பல்கலைக்கழக விவகாரம் அவருக்கு அல்வா மாதிரி கிடைத்தது. ஆளுநர் தான் நடவடிக்கை எடுக்க சரியான ஆள் என்று அவரிடம் மனு தர அனுமதி கேட்டார். முதலில் 11:00 மணிக்கு என்று சொன்ன ஆளுநர் அதை ஒரு மணிக்கு மாற்றினார். ஆளுனரிடம் திமுக மீது நடவடிக்கை எடுக்க சொல்லி மனு தந்தார். இது தவிர கூட வந்த நிர்வாகிகளை எல்லாம் தவிர்த்து விட்டு தனியாகவும் ஆளுநரிடம் பேசினார் விஜய். விஜய்க்கு ஆளுநர்வி பாரதியார் கவிதைகள் புத்தகத்தை வழங்கினார். விஜய் பதிலுக்கு திருக்குறள் புத்தகத்தை தந்தார். இது எல்லாமே பாஜக ஏற்பாடு என்ற சந்தேகம் திமுகவுக்கு வரத் தொடங்கி இருக்கிறது. அதற்கு ஏற்றார் போல் விஜய் ஆளுநர் சந்திப்பை அண்ணாமலை வரவேற்று இருக்கிறார்.
அழகிரி ஆதரவாளர்களுக்கு மீண்டும் வாய்ப்பு ?
மு.க.அழகிரி கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பிறகு அவரது ஆதரவாளர்களையும் திராவிட முன்னேற்ற கழகம் ஒதுக்கியது அல்லது அவர்களையும் கட்சியை விட்டு நீக்கியது. தற்சமயம் முக அழகிரி அரசியல் வேண்டாம் என்று கிட்டத்தட்ட ஒதுங்கி விட்டார். அவரை நம்பி வீணாப்போன அவரது ஆதரவாளர்கள் தற்சமயம் மீண்டும் திமுகவில் சேர்த்துக் கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்து மன்னிப்பு கடிதமும் தந்திருக்கிறார்கள். தற்சமயம் அவர்கள் யார் யார் என்று விவரம் எல்லாம் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு இருக்கிறது. இது தவிர அழகிரி உதயநிதி ஸ்டாலினிடம் அவர்கள் மீண்டும் கட்சியில் சேர்த்துக்கொண்டு அவர்கள் கட்சிப் பதவி தருமாறு கோரிக்கை வைத்திருக்கிறார். விரைவில் அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் போல் தான் தெரிகிறது.
Leave a comment
Upload