(ஒரு திபத்திய பாட்டி. எல்லா பாட்டிகளும் பாசமானவர்கள் தானே)
கிராமத்து வாழ்க்கையின் முக்கிய அங்கம் நம்முடைய பாட்டிகள்தான். அவர்களின் வெள்ளந்தியான சிரிப்பு நினைவடுக்கில் ஊறிப் போன ஒன்று.
பாசத்தை அளவில்லாமல் கொடுத்தும் அன்பை அள்ளி அள்ளி நிரப்பியுள்ளனர் நம் இளவயதினை. அம்மாவை பெற்ற அம்மாவை அம்மாச்சி, ஆயா, ஆச்சி என்று அழைக்க ஊரே பழக்கப்பட்ட போது, அதை எப்படி சொல்வது என்று தெரியாமல் அமுனா என்று நான் மாற்றிக் கூறியதை அப்படியே ஏற்ற என் அன்பு அமுனா. பாசத்தின் மறு உருவம். முதல் பேத்தி என்பதால் கூடுதல் செல்லம் கிடைத்தது எனக்கு. அது ஒரு வரம் என்றும் சொல்லலாம். சிறுவயதில் அவர்கள் கூறுகிற ராமாயணம், மகாபாரதம், நள மகாராசா, சுந்தர காண்டம் கதைகள் இன்றும் மனதில் பசுமரத்தாணி போல் பதிந்துள்ளது. என்னுடைய வாழ்க்கையில் வாசிப்பின் தொடக்கம் மற்றும் கதைகளின் மீதும் கதை சொல்வதன் மீதும் ஈர்க்கப்பட்ட காரணம் அவர்கள் என்று இப்போது உணர்கிறேன்.
அதன் மூலமே அவர்கள் தான் என்று இப்பொழுது புரிகின்றது.
இடி இடித்து எல்லோரும் பயந்து ஓடி ஒளிகையில் " ஆத்திப் பத்து அர்ச்சுனன் பத்து" என்று சொல்லச் சொல்வார்கள். அப்படி சொன்னா இடி தூரமா போய்விடும் என்று காரணம் சொன்னார்கள். அதை ஒவ்வொரு இடி மழையின் போதும் இப்போதும் கூட நான் நினைத்து பார்த்து மகிழ்வதுண்டு. அவர்களுடைய இளமைக்காலம் எப்படி இருந்தது ஊரில் உள்ள பழக்கவழக்கம், உழைப்பு, வாழ்க்கை முறை, உணவு முறை அனைத்தும் நினைக்க நினைக்க ஆச்சரியம்தான். அதேபோல் திருமணத்திற்கு பின்பு கூட்டுக் குடும்பம் எப்படி, அதில் தன்னுடைய நான்கு குழந்தைகளை எப்படி வளர்த்தார்கள், அந்த பொறுப்புகள் எப்படி இருந்தது என்று கேட்டு வளர்ந்த நான் இப்பொழுது நம்முடைய வாழ்க்கை முறையை நினைக்கும் போது நாம் செய்வதெல்லாம் ஒரு வேலையா என்று தான் நினைக்கத் தோன்றுகிறது.
குளத்திற்கு சென்று தண்ணீர் எடுத்து வந்த சமைப்பது, வயல் வேலை செய்வது, கல்லில் மாவாட்டுவது பால் பீய்ச்சுவது, பருப்பு,கேப்பை, அரிசி இவற்றை திரிகையில் திரிப்பது, அம்மியில் அரைத்து சமைப்பது என்று முற்றிலும் நமக்கு இப்போது பழக்கம் இல்லாத வாழ்க்கையாகவே அவர்கள் வாழ்ந்துள்ளார்கள். இதை நினைக்க நினைக்க பிரமிப்பு. சுவிட்சை போட்டால் நொடியில் செய்யும் வேலைக்கு இவ்வளவு அலுப்பு நமக்கு. அவர்கள் செய்த வேலையை நினைக்கையிலே நமக்கு மூச்சு வாங்குகிறது.
அனாவசிய செலவு செய்யாமல் சேமிப்பின் அவசியம் என்பது அவரிடம் கற்றுக் கொண்ட முக்கியமான பண்பு. சமையல் கலையில் மாஸ்டர் செப் என்றுதான் சொல்ல வேண்டும். மிளகாய், சீரகம், சோம்பு அம்மியில் அரைத்து பருப்பு ரசம் வைத்தாலும் அதன் சுவையும் மனமும் அட அட அட....
மீன் குழம்பு, மீன் வறுவல் செய்வது பார்க்கவே அவ்வளவு அழகாக இருக்கும். அதேபோல் எங்கள் வீட்டின் மருத்துவரும் அவர்தான் கேட்பைக்கூழ் கூடவே துவரம்பருப்புக் குழம்பு, சளிக் கஞ்சி, தூதுவளை ரசம் என்று தன்னுடைய சாப்பாட்டின் மூலமாகவே மருத்துவம் பார்த்து விடுவார்கள்.
ரவைப் பணியாரம், தீபாவளிப் பலகாரம் என்று சுவை மிகுந்த உணவு வகைகள் பட்டடியல் நீண்டு கொண்டே இருக்கும். பள்ளிக்கூட நாட்களிலும், வேலைக்கு சேர்ந்த பிறகும் விடுதியில் இருந்த பொழுது தேவையான பலகாரங்களையும் உணவு வகைகளையும் கொடுத்து அனுப்புவார்கள். ஓரிரு நாட்கள் கெட்டுப் போகாமல் இருக்கும் சட்னி, புளிசாதம் பொட்டலம் செய்து தருவார்கள். அந்த ருசியை விடுதித் தோழிகள் சிலாகித்து பேசுகையில் நம் மனம் மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்கும்.
பள்ளி நாட்களில் டூர் என்று எங்கே சொன்னாலும் அனுமதி கொடுப்பது அவர்கள்தான். பிள்ளைகளோடு சேர்ந்து போயிட்டு வரட்டும் என்று எப்போதும் தாத்தாவிடம் கூறுவார். அதனால் பல இடங்களுக்கு நான் சென்று வரும் வாய்ப்பு கிடைத்தது.
அதேபோல் கோவில் வழிபாடு அவருக்கு மிகவும் பிடித்த ஒன்று. கும்பாபிஷேகம் நடக்கும் கோவில்களை விசாரித்து தேடி சென்று வழிபடும் பக்தி அலாதியானது.
என் வாழ்வின் ஒவ்வொரு நிகழ்விலும் நீக்கமற நிறைந்திருப்பவர் அவர். எவ்வளவோ சொல்ல இருந்தும் அவருடைய இறுதி நாட்கள் மனதை கனக்க வைக்கின்றது. ஆறாத ரணமாய் என்றும் இருக்கும் எனக்குள்ளே. ஆனாலும் அவர்களுடைய நினைவுகளை அசை போடுவது ஆறுதலாகவும், மனதை வருடி இதத்தையளிக்கும். ஆதலால் எல்லோரும் நமக்கு வரமாக கிடைத்த பாட்டிகளை கொண்டாடி விடுங்கள், சந்தர்ப்பம் கிடைக்கும் பொழுதே. பிறகு அப்படியானதொரு நல்வாய்ப்பு நமக்கு
கிட்டாமலேயும் போகலாம்.
Leave a comment
Upload