அன்று பிற்பகல் மணி 2 இருக்கும்.பாமா அப்போதுதான் வீட்டிற்குள் நுழைந்தாள். அவளுக்கு காலை முதல் லேசான தலை வலி, காய்ச்சல்.அதனால் அலுவலகத்தில் அரை நாள் விடுப்பு எடுத்துக் கொண்டு, வீட்டுக்குள் நுழைந்தாள்.அப்போது சமையலறையிலிருந்து வந்த சத்தம் அவளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
’என்னங்க, உங்க தம்பி ஊர்லேந்து வந்து இருக்காரா?’ என்று கேட்டாள். அவர்தான் கிராமத்திலிருந்து அவர்களுடைய வீட்டிற்கு அடிக்கடி வந்து போவார். அவள் கணவன் மதன், ’யாரும் வரலையே’ என்றான்.
இதற்குள் இவர்கள் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்ட சாமிப்பிள்ளை சாப்பாட்டை எடுத்து வைத்திருந்த கேரியருடன் வேகமாக தோட்டத்து கதவு வழியாக வீட்டுக்கு வெளியே சென்றான்.உடனே மெயின் ரோட்டின் ஜோதியில் ஐக்கியமாகிவிட்டான்.பின் தொடர்ந்த பாமாவுக்கு மிஞ்சியது ஏமாற்றமே.
சமைத்து வைத்த சாப்பாட்டை எல்லாம் யாரோ ஒருத்தன் எடுத்துக் கொண்டு சென்று விட்டதை அறிந்த பாமாவுக்கு ஏற்பட்ட அதிர்ச்சியும்,பயமும் அவளை விட்டுப் போக ரொம்ப நேரமானது. ‘மதிய சாப்பாட்டுக்கு ஓட்டலுக்குத்தான் போக வேண்டும்’என்று நினைத்தாள். உடல் நலமில்லாமல் இருக்கும் அவளால் இப்போது சமைக்கவும் முடியாது. கோபமெல்லாம் கணவன் மதன் மீதுதான். பொறுப்பற்ற கணவனால் பாமாவின் வாழ்க்கையில் அன்றாடம் பிரச்சனைதான்.தினமும் வீட்டில் நடக்கும் சண்டையால் சலிப்படைந்து விட்டாள் பாமா.
ஒரு பார்க் பென்ச்சில் உட்கார்ந்தான் சாமிப்பிள்ளை.திருடி வந்த கேரியரை திறந்து சாப்பிடத் தொடங்கினான். சாப்பாடு சுவையாக இருந்தது. அந்த குடும்பத்தை மனதால் வாழ்த்தினான்.
சாமிப்பிள்ளை ஒரு பிச்சைக்காரன். வயது 60 இருக்கும்.ஆதரவு யாரும் இல்லாதவன்.பிச்சை எடுத்து சாப்பிடுவதுதான் அவனுடைய தொழில். அவனுடைய பசித்த வயிறு இதை அவமானமாக என்றும் கருதியதில்லை.
அன்று காலை 11மணி இருக்கும்.அது மதனின் வீடு. அவனுக்கு வயது 35 இருக்கும்.பெண்டாட்டி சம்பாத்தியத்தில் வாழ்பவன்.’தனக்கு வேலையில்லை’ என்பது பற்றிய கவலை அவனுக்கு வந்ததே இல்லை.
அவனுடைய வீட்டுக்கு வெளியேதான் சாமிப்பிள்ளை நின்று கொண்டு ‘ஏதாவது சாப்பிட கொடுங்கள்’ என்று ரொம்ப நேரமா மன்றாடிக் கொண்டிருந்தான். இப்படியாக அரை மணி நேரம் போயிருக்கும்.வீட்டை விட்டு வெளியே யாரும் வருவதாக தெரியவில்லை.
மெதுவாக திறந்திருந்த வீட்டுக்குள்ளே எட்டிப்பார்த்தான். வீட்டிற்குள் டிவி சத்தமாய் அலறிக் கொண்டிருந்தது. மதன் டி.வி.ஐ பார்த்துக் கொண்டு இருந்தான்.இடை இடையே மொபைலில் எதையோ பார்த்துக் கொண்டிருந்தான். அவ்வப்போது தன்னுடைய படுத்திருந்த போஸை மட்டும் மொபைலுக்கு ஏற்றவாறு மாற்றிக் கொண்டே இருந்தான்.
நம்ம ஆள்,அதான் சாமிப்பிள்ளை வீட்டுக்குள்ளே மெதுவா நுழைஞ்சான். இவன் உள்ளே வருவதை அவன் கண்டு கொள்ளவே இல்லை. மொபைலில் ஃபேஸ்புக்கிலோ, இன்ஸ்டாகிராமிலோ, வாட்ஸ் ஹேஃப்பிலோ, கூடவே டிவியிலும் எதையோ ஆர்வமாய் பார்த்துக் கொண்டு இருந்தான்.
’அவன் எதையாவது பார்த்துட்டு போகட்டும். என்ன பார்க்காம இருந்தா சரிதான்’ன்னு மனசுல நெனச்சுண்டான் சாமிப்பிள்ளை. அவனைத்தாண்டி சப்தமில்லாமல் மேலும் நகர்ந்து சென்றான்.
அடுத்தது அவன் தேடி வந்த சமையலறையை பார்த்தான். உள்ளே நுழைந்தான். சமையல் மேடையின் மீது ஒரு பெரிய டிபஃன் கேரியர் காலியாக இருந்தது. நிதானமாக சாப்பிட இருந்ததையெல்லாம் கேரியரில் நிரப்பினான். அப்போதுதான் எதிர்பாராமல் பாமா விஜயம் செய்தாள்.
அன்று முழுவதும் பாமா மதனுடன் பேசவே இல்லை.மதனுக்கு குற்ற உணர்ச்சி ஏற்பட்டது.கோபமடைந்த பாமா மறுநாள் வேலைக்கு போகும் போது, ’இனிமேலாவது மொபைலில் நோண்டிக் கொண்டிருக்காமல், பொறுப்பாக இருங்க’ என்றாள்பாமா.
’இல்ல நானும் வரேன்’ என்ற மதன் ’போன வாரம் கூப்ட கம்பெனிக்கு போய் பார்க்கிறேன்’ என்று அவளுடன் புறப்பட்டான்.அன்றுமாலை ஸ்வீட் பாக்ஸூடன் வந்த மதனைப் பார்த்து மகிழ்ந்து போன பாமா, அவன் மனதை மாற்றிய திருடனுக்கு மானசீகமாக நன்றியைச் சொன்னாள்.
மதனைப் பார்த்து,’புது வருஷம், புது வேலை,புது டிரஸ் கலக்கிட்டேள் போங்க’என்றாள் தன் கன்னம் சிவக்க வெட்கப்பட்டுக் கொண்டே.
Leave a comment
Upload