தொன்று தொட்டு தமிழகத்தில் தாய்மையைத் தெய்வமாக வணங்குவது வழக்கத்தில் இருந்து வருகிறது. அகிலம் காக்கும் அன்னை பராசக்தி ஒவ்வோர் ஊரிலும் வெவ்வேறு திருநாமத்தில் அருளாட்சி புரிகிறார்.
மயிலையில் அம்மன் என்றதும் நம் மனக்கண் முன் வந்து நிற்பது முண்டகக்கண்ணி அம்மன். மயிலாப்பூருக்கு மட்டுமல்ல சென்னை மாநகருக்கே இன்று அருள்புரியும் ஆதி சக்தியாக, நலம் தரும் நாயகியாக முண்டகக்கண்ணியம்மன் திகழ்ந்து கொண்டிருக்கிறார்.
ரேணுகாதேவியின் அவதாரங்களுள் ஒன்றாகவும், சப்த கன்னிகைகளுள் ஒருவராகவும் கருதப்படும் முண்டகக்கண்ணி அம்மன் இந்தத் தலத்தில் சுயம்புவாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்...
கோயிலின் ஸ்தல வரலாறு:
சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன்பு இப்போது முண்டகக்கண்ணி அம்மன் ஆலயம் இருக்கும் பகுதி ஒரு குளமாக இருந்தது. அந்த குளக்கரையில் பல நூறு ஆண்டு வயதுடைய மிகப்பெரிய ஆலமரம் இருந்தது. ஒரு நாள் அந்த ஆலமரத்தடியில் அந்த ஊர் பகுதி மக்கள் அமர்ந்து இருந்தபோது அம்மன் தன்னை சுயம்புவாக வெளிப்படுத்தி காட்சி தந்தார் என்கிறது இத்தலத்தின் வரலாறு. சுயம்புவான அருவுருவ தோற்றத்தின் மேல்பகுதி தாமரை மொட்டு வடிவத்திலேயே தன்னை அம்மன் சுயம்புவாக வெளிப்படுத்திக் கொண்டதால் தாமரை என்ற தமிழ்ச் சொல்லுக்குரிய முண்டகம் என்பதைக் குறிப்பிடும் வகையில் அம்மனுக்கு 'முண்டகக் கண்ணி' என்று பெயர் ஏற்பட்டதாகத் தலபுராணம் கூறுகிறது.
தென்னங்கீற்றுக் கொட்டகைதான் இன்றும் கருவறை:
'விரிந்த பெரிய விழிகளைக் கொண்டவள்' என்ற பொருள் கொண்ட 'முண்டகக் கண்ணியம்மன்' இத்தலத்தில், ஓர் எளிய தென்னங் கீற்றுக் கொட்டகையில் கிழக்கு நோக்கி எழுந்தருளி அருள்பாலிக்கின்றார்.
அம்மன் சிலை பின்புறம் உள்ள பெரிய புற்றில் இருந்து நாகப்பாம்பு வந்து வழிப்பட்டதால், அம்பாளுக்குக் கூரை அமைக்கப்பட்டதாக வழிவழியாக சொல்லப்பட்டு வருகிறது. நாகம் வழிப்பட்ட இந்த அம்மன் வெப்பத்தைத் தான் தாங்கிக் கொண்டு, மக்களுக்குக் குளிர்ச்சியை அளிக்கக் கூரையின் கீழ் தங்கி இருக்கிறாள்.
முண்டகக்கண்ணி அம்மன் கோயில் வாசல் ராஜ கோபுரத்துடன் இருந்தாலும் அன்னை குடிகொண்டுள்ள கருவறை இன்றும் எளிய தென்னங்கீற்றுக் கொட்டகைதான் அமைந்துள்ளது.
அம்மனுக்குப் பல முறை அம்மனுக்குக் கருவறை அமைக்க முயன்ற போதெல்லாம் தடைப்பட்டு வந்துள்ளது. ஒருமுறை தீவிர முயற்சி மேற்கொண்டு கருவறைக்குக் கட்டடம் கட்டும் போது அம்மனின் கோபம் அப்பகுதியில் தீ விபத்தாக மாறியது.
‘தனக்குத் தென்னங்கீற்றால் அமைந்த கூரை மட்டுமே விருப்பம்’ எனப் பக்தர்களின் கனவில் அம்மன் சொன்னதாகக் கூறப்படுகிறது. எனவே, அன்னைக்கு தென்னங்கூரையே கருவறை விமானமாக இன்றுவரை இருந்து வருகிறது. மேலும் தல வரலாறும் தனது மக்களை வெம்மையில் இருந்து காக்கவே, அன்னை இவ்வாறு குடிகொண்டிருப்பதாகத் தெரிவிக்கிறது.
திருக்கோயில் அமைப்பு:
எளிமையும், அழகும், அருளும் நிறைந்த இந்த கோயில், மயிலாப்பூரில் நடுவே அமைந்துள்ளது. ஆலய முகப்பில் மூன்று நிலை கொண்ட ராஜகோபுரம் கம்பீரமாக உள்ளது. கருவறைக்கு முன்பாக, இருபுறமும் துவாரபாலகிகள் வீற்றிருக்கின்றனர்.
சுயம்புவாக அம்மன் தலையில் நாக கிரீடம் அணிந்து கொண்டு நடுவில் சூல வடிவம் கொண்டு இரண்டு கரங்களுடன் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகின்றாள். அம்மனுக்கு வலதுபுற எதிரில் மிகப்பெரிய அரச மரமும், அதனடியில் நாகக் கன்னிகளும் உள்ளன. அன்னையின் பின்புறம் தல மரமான ஆலம் விழுதுகள் இல்லாத அபூர்வ மரமான கல்லால மரமும், புற்றுடன் மூன்றடி உயரக் கல் நாகமும் அமைந்துள்ளன. இக்கோயிலில் பின்புறம் உள்ள புற்றில் வாழும் நாகம், நாள்தோறும் இரவில் அன்னையை வணங்கி வழிபட்டுச் செல்வதாக ஐதீகம்.
முண்டகக்கண்ணி அம்மன் மூலவர் அமைந்துள்ள சன்னதியை அடுத்து, இடதுபுறம் உற்சவர் தனிக்கோயிலில் எழுந்தருளி உள்ளார். அதன் எதிரே பிரமாண்ட வேப்ப மரமும் இருக்கிறது.
உற்சவர் சன்னிதியின் இடதுபுறம் பிரம்மி, மகேசுவரி, வைஷ்ணவி, வராகி, கௌமாரி, இந்திராணி, சாமுண்டி ஆகிய சப்தகன்னியர்கள் லிங்க வடிவில் காட்சி தருகின்றனர். இவர்களுக்கு இருபுறத்திலும் ஜமத்கினி முனிவர் மற்றும் பரசுராமர் சுதை வடிவில் உள்ளனர். இங்கு நர்த்தன விநாயகர், முருகன், ஐயப்பன், அனுமன், ராமலிங்க அடிகள், தட்சிணாமூர்த்தி, காசி விஸ்வநாதர், அன்னபூரணி ஆகியோருடன் தனித்தனி சந்நிதிகள் உள்ளன.
முண்டகக்கண்ணி அம்மன் தரிசனம்:
அம்மனை தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் வசதிக்காக மகா மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த மகாமண்டபத்தில் வரிசையில் நின்று முண்டகக்கண்ணி அம்மனை கண்குளிரத் தரிசனம் செய்யலாம். அம்மனுக்குக் காலையில் தொடங்கி, நண்பகல் வரை தொடர்ந்து அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. மதியத்துக்கு மேல் அபிஷேகம் கிடையாது. அபிஷேகங்கள் முடிந்த பின் அம்மனின் திருமுகத்தில் பெரிய மஞ்சள் உருண்டையைத் தட்டையாக்கிப் பதிய வைத்து, கண் மலர், நாசி, அதரம் வைத்து, வேப்பிலை பாவாடை கட்டி, பூமாலை சார்த்தி அர்ச்சனை செய்து தீபாராதனை காட்டுகின்றனர். மாலை வேளையில் வெள்ளியாலான அல்லது தங்கத்தாலான திருமுகம் வைத்து, நாகாபரணம் பூட்டி, கிரீடம் சார்த்தி, ஆபரணங்கள் அணிவித்து, திருக்கரங்கள் சேர்த்து அன்னையை அலங்கரிப்பார்கள். காலையில் சென்றால் அபிஷேகத்தையும் மாலையில் சென்றால் அலங்காரத்தையும் தரிசிப்பது கண்கொள்ளாக் காட்சியாகும்.
தரிசன பலன்கள்:
இக்கோயிலில் அம்மனை நாகம் வழிபடுவதாலும், நாக தோஷம் மற்றும் மாங்கல்ய தோஷம் உள்ளவர்களுக்கு இந்த அம்மனை வழிபட்டால் தோஷம் நிவர்த்தியாகும், மற்றும் அம்மை நோய், கண் நோய் உள்ளவர்கள் இந்த அம்மனை வழிபட்டால் விரைவில் குணமடைவார்கள். இங்கு வந்து அம்மனை தரிசிப்பதால் தீராத நோய் நிவர்த்தியாகும். பில்லி சூனியம், கிரக தோஷம் நீங்கும். திருமணத் தடை அகலும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. முன் செய்த வினையால் ஏற்பட்ட துன்பங்களைத்
தீர்த்து வைக்கின்றார். மேலும், கல்வி, மகப்பேறு, வீடு வாகன வசதிகளுக்கு வரம் தரும் அன்னையாகவும் திகழ்கின்றார். சாந்த சொரூபியான இந்த அன்னை நாம் கேட்பதை எல்லாம் தருவதால் அவளிடம் மனம் உருக வேண்டினால் அவள் நம்மை நிச்சயம் கைவிட மாட்டார்.
நேர்த்திக்கடன்கள்:
நாகதோஷம் இருப்பவர்கள், முண்டகக் கண்ணி அம்மனை வழிபட்டு, நாககன்னி சிலையைப் பிரதிஷ்டை செய்வதாக வேண்டிக்கொள்கிறார்கள். அதன்பிறகு, 48 நாள்களுக்கு நீரிலேயே நாககன்னியை வைத்திருந்து, பின் அதனை ஆலயத்தின் முகப்பில் இருக்கும் மரத்தடியில் பிரதிஷ்டை செய்து, அதற்கு அபிஷேகமும் செய்து வழிபடுகிறார்கள். அதேபோல ஆடி மாதம் அம்மனுக்கு மஞ்சள், சந்தனம், குங்குமம் காப்பு மற்றும் அன்னாபிஷேகம் செய்வதும் இங்கு விசேஷம். நோயற்ற உடல் வேண்டி அங்கப்பிரதட்சணம் செய்தும், வேப்பிலை பாவாடை அணிந்தும் பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்கின்றனர். பிரார்த்தனை நிறைவேறியதும் அம்மனுக்கு அபிஷேகம், சர்க்கரைப் பொங்கல், கண்மலர், கை, கால் உருவங்களைச் செலுத்தி பக்தர்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றுகின்றனர். அனைத்து செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் கோயில், திருவிழாக்கோலம் பூண்டுவிடும். ஆடி மாதம் முண்டகக் கண்ணியம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபடுவது மேலும் சிறப்பு. இக்கோவிலில் அம்பாளுக்குப் பூஜித்த வேப்பிலை, மஞ்சள், எலுமிச்சை மற்றும் தீர்த்தமே பிரதான பிரசாதமாகக் கொடுக்கப்படுகிறது.
திருவிழாக்கள்:
இங்கு சித்திரைப் புத்தாண்டு பிறப்பு அன்று நூற்று எட்டு விளக்குப் பூஜை, சித்ரா பௌர்ணமி அன்று ஆயிரத்து எட்டு பால்குட அபிஷேகம் சிறப்பானது. இந்த கோயிலில் ஆடி மாத திருவிழா மொத்தம் பத்து வாரங்களுக்கு நடைபெறும். பத்து வாரங்களிலும் செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கூழ் வார்த்தலும் நடைபெறும். ஆடி கடைசி வெள்ளிக்கிழமையில் பூச்சொரிதல் உற்சவம் இக்கோயிலில் மிகவும் சிறப்புடன் நடைபெறுகின்றது. இங்கு நவராத்திரி விழாவும் விமர்சையாக கொண்டாடப்படுகிறது.
கோயில் திறந்திருக்கும் நேரம்:
இந்தக் கோவில் தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும். விழா நாட்களில் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
கோயிலுக்குச் செல்லும் வழி:
இந்த கோயில் சென்னை மயிலாப்பூரில், கபாலீசுவரர் திருக்கோயிலிருந்து சுமார் பத்து நிமிட நடை தூரத்தில் உள்ளது. மெட்ரோ ரயிலில் முண்டகக்கண்ணியம்மன் ஆலய நிறுத்தத்தில் இறங்கி கோயிலை அடையலாம். சென்னையின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் மயிலாப்பூருக்கு பஸ் வசதி உண்டு.
ஸ்ரீ முண்டகக்கண்ணி அம்மன் சரணம்!!
ஓம் சக்தி.. பராசக்தி...
Leave a comment
Upload