நாடாளுமன்ற புதிய வளாகத்தில் தேவாரம், திருமுறை பாடும் வாய்ப்பு கல்லூரி மாணவி உமா நந்தினிக்கு வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பை பயன்படுத்தி, திருமுறைகளை மிகச் சிறப்பாகப் பாடி, அனைவரின் பாராட்டுகளையும் உமா நந்தினி பெற்றிருக்கிறார்.
சும்மா வரவில்லை இந்த வாய்ப்பு.
யார் இந்த உமா நந்தினி ???
19 வயதான உமா நந்தினி. இவர், உடுமலையில் ஒரு தனியார் கல்லூரியில் தமிழ் இலக்கியம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவரது தந்தை பாலகிருஷ்ணனும் தாயார் கண்ணம்மாளும் அரசு பள்ளி ஆசிரியர்களாக உள்ளனர். சிறுவயதில் இருந்தே உமா நந்தினி தமிழ் இலக்கியத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். பின்னர், பள்ளி பருவத்தில் பக்தி இலக்கிய நூல்களை வாசிக்க துவங்கினார்.
கடந்த 2020-ம் ஆண்டு உமா நந்தினி 239 நாட்கள், தேவாரத்தில் உள்ள 795 பதிகங்களில், 8,239 பாடல்களைப் பாடி இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இடம்பிடித்தார். இதன்மூலம் திருவாவடுதுறை ஆதீனத்திடம் அறிமுகமானார். இதுதவிர உடுமலை, காந்திநகரில் உள்ள விநாயகர் கோயிலில் நாள்தோறும் தேவாரம், திருமுறை பாடல்களை பாடியும், மாணவர்களுக்கு உமா நந்தினி கற்றுக் கொடுத்தும் வருகிறார்.
உமா நந்தினி கூறுகையில், "கோயில்களில் சிவபெருமானின் முன்பு திருமுறைகளை பிழையின்றி பாடியும், மற்றவர்களுக்கு கற்று கொடுத்ததன் பலனாக, இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. இதில் பிரதமர் மோடி உள்பட பல்வேறு முக்கிய தலைவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது மிக்க மகிழ்ச்சி.
இது, திருமுறையினால் கிடைத்த வாய்ப்பாகவே கருதுகிறேன். திருமுறையில் உள்ள பாடல்களை பாடிய பின், தற்போது திருப்புகழ் பாடி வருகிறேன். இது, பக்தி இலக்கியத்தை தொடர்ந்து பரப்புவதற்கு உறுதுணையாக இருக்கிறது!” என்று மகிழ்ச்சி தெரிவித்தார்.
(நன்றி குமுதம் யூடியூப்)
மாலாஸ்ரீ
Leave a comment
Upload