தொடர்கள்
ஆன்மீகம்
தியானத்தால் வசப்படும் - ஹாங்காங்கில் பிரம்மகுமாரிகள் இயக்கம். ! - ஜெயஶ்ரீ சுரேஷ்.

20230406094115524.jpeg

சிஸ்டர்.ஷிவானி.

பிரம்மகுமாரிகள் இயக்கத்தில் மிக மிக பிரபலமானவர். இவரது பேச்சை கேட்க ஏராளமானவர்கள் காத்திருக்கின்றனர். இவரது மனநலம் குறித்த பேச்சுக்களும் அறிவுரைகளும் பலரது வாழ்க்கையை மாற்றிப் போட்டிருக்கிறது.

அவர் ஹாங்காங்கில் 5ந்தேதி மே மற்றும் 6ந்தேதி மே சொற்பொழிவாற்றுகிறார் என்று அறிந்து அவரது பேச்சை கேட்க ஆயிரக்கணக்கானோர் முன்பதிவு செய்து காத்திருக்கின்றனர்.

இப்படி ஒரு சூழலில் அவரை தன்னந்தனியே சந்தித்து விகடகவிக்காக் ஒரு பேட்டி எடுக்கும் வாய்ப்பு அமைந்ததும் இறைச் செயல் தான்.

அந்த சந்திப்புக்கு போகுமுன் பிரம்மகுமாரிகள் பற்றி ஒரு சிறு குறிப்பை பார்த்து விடுவோம்.

பிரம்மகுமாரிகள் உலக ஆன்மீகப் பல்கலைக்கழகம்

பிரம்மகுமாரிகள் உலக ஆன்மீகப் பல்கலைக்கழகம் 1937-களில் சுதந்திரத்திற்கு முந்தைய இந்தியாவில் தொடக்கப்பட்ட ஆன்மீக இயக்கம். பிரம்ம குமாரிகள் இயக்கம் தாதா லேக்ராஜ் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டது. பின்னாளில் இவரை பிரம்ம பாபா என அழைத்தனர்

இந்த அமைப்பு இராஜ யோக தியானம், ஆத்மா மற்றும் பரமாத்மாவைப் (சீவ-பரமாத்மா) பற்றி போதிக்கின்றது. இது அனைத்து ஆத்மாக்களும் உயர்வான நிலையையும் நல்ல பண்புகளையும் கொண்டதாக வலியுறுத்துகின்றது.

பிரம்ம குமாரிகள் அமைப்பு ஆரம்பகாலத்தில் "ஓம் மண்டலி" என்ற பெயருடன் , அன்றைய சிந்து மாகாணத்தில் உள்ள ஐதராபாத்தில் ஆரம்பிக்கப்பட்டது. இதை தொடங்கின தாதா லேக்ராஜ் (ஓம் பாபா என அழைக்கப்பட்டவர்), நகை வணிகத்தில் ஈடுபட்ட சமூகத்தில் பெரிதும் மதிக்கப்பட்ட ஒருவராக இருந்தார்.

அவருக்குப் பின் இந்த இயக்கத்தை முன்னெடுத்துச் செல்ல பெண்களால் முடியும் என்றெண்ணி இந்த இயக்கம் பெண்களை தலைமையாகக் கொண்டே செயல்படுகிறது. அதனால் தான் அது பிரம்மகுமாரிகள் என்று பெயர் வந்த காரணம். ஆண்கள் இந்த இயக்கத்தில் இருந்தால் பிரம்ம குமாரர்கள்.

அவ்வளவு தான்.

சிஸ்டர் ஷிவானிக்கு வருவோம்.

ஷிவானி வர்மா 94 வரை பல்கலைக்கழக மாணவியாக இருந்து பின்னர் விரிவுரையாளராகவும் பணியாற்றியிருக்கிறார்.

அந்த சமயத்தில் உள்ளூரில் உள்ள பிரம்மகுமாரி செண்டருக்கு அடிக்கடி விஜயம் செய்வது ஷிவானியின் வழக்கம். அங்கிருந்த ஒரு பிரம்மகுமாரியின் கடவுள் பற்றிய விளக்கத்தால் ஈர்க்கப்பட்டு பிரம்மகுமாரிகள் இயக்கத்தில் இணைந்தவர் ஷிவானி.

அவரே தியானத்தில் அமர்ந்து உணர்ந்து கொண்ட இறை தான் அவரை பிரம்மகுமாரியக்கியது. இதை அவரே ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார்.

அதெல்லாம் இருக்கட்டும். சிஸ்டர் ஷிவானி மட்டும் ஏன் இவ்வளவு பிரபலம். பிரபல டிவி சானலில் பிரம்மகுமாரிகளுடன் விழிப்புணர்வு என்ற தலைப்பில் சுமார் 15 ஆண்டுகள் அவர் நடத்திய தொலைக்காட்சி நிகழ்ச்சி தான் அவரை மிகப் பிரபலமாக்கி விட்டது.

இனி சிஸ்டர் ஷிவானியுடன் ஹாங்காங்கில்.......

அது ஒரு சிறிய அறை. பத்துக்கு பத்து போலத்தான் இருக்கும். என்னையும் சேர்த்து ஒரு சிலர் தான் அங்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

அவர் உள்ளே நுழைவதற்கு சில நிமிடங்கள் தாமதமாகி விட்டது. வெண்மை நிறத்தில் ஒரு தாமரை நடந்து வருவது போல சிரித்து கொண்டே சிஸ்டர் ஷிவானி நுழைந்ததும் அந்த இடம் பரவசத்தில் ஆழந்தது உண்மை. அவருடைய கருணை மிகுந்த விழிகள் நேரடியாக சந்திக்கும் போது அந்த உணர்வையும் வார்த்தைகளால் வர்ணிக்க முடியவில்லை.

அவருக்கு முன்வைக்கப்பட்ட கேள்விகளுக்கு அசராமல் அழகாக மெல்லிய குரலில் பதிலிளித்தார்.

கே: என்னுடைய குழந்தைகளை என்னால் தியானத்தில் அமைதியாக உட்கார வைக்க முடியவில்லையே ?? இது கலாச்சார மாற்றமா அல்லது அவர்களுக்கு எல்லாம் தெரியும் என்பதால் இப்படி நடந்து கொள்கிறார்களா ?? எப்படி அவர்களை என்னுடைய பழக்கவழக்கங்களை தொடர வைப்பது ??

ஷிவானி: இது உங்களுக்கு மட்டும் இருக்கும் கேள்வியல்ல. உலகம் முழுவதும் உள்ள பொதுப்படையான பிரச்சினை தான். ஒன்று தெரியுமா நம் குழந்தைகளை கருவில் இருக்கும் போதே நாம் செயலாக இருக்க பழக்கப்படுத்தி விடுகிறோம். ஒரு ஐந்து நிமிடம் குழந்தைகளை ஒரு இடத்தில் அமர வைக்க முயற்சியுங்கள் ? மிகவும் கடினம். ஏனெனில் அவர்களுக்கு அடுத்தடுத்து கவனச் சிதறல்கள் ஏற்படும். அதை கையாள்வது கடினம். இதற்கு நாம் தியானத்தில் அமர்வதை அவர்கள் கவனித்தாலே போதும். இதை சின்ன சின்ன விளையாட்டாக அவர்களை செய்ய வைத்தால் அவர்களாலும் நம் வழக்கங்களை தொடர முடியும்.

கேள்வி : அனைத்து வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கும் உள்ள கேள்வி இது. என் குழந்தைகள் இங்கே வளர்வதைத் தான் விரும்புகின்றனர். இன்னொரு வகையில் நானும் குழந்தை தான் என் பெற்றோர்களுக்கு. அவர்களுக்கு இந்த வயதில் நான் தேவை. எனக்கு என் குழந்தைகளும் அவர்களுக்கு நானும் தேவை. இருதலைக் கொள்ளி எறும்பாக இருக்கிறேன். என்ன செய்யலாம் ??

ஷிவானி : முதலில் இடம் என்பது பிரச்சினையே இல்லை. எந்த இடத்தில் இருந்தாலும் மகிழ்ச்சிக்கு அது தடையாக இருக்கப் போவதில்லை. இந்தியாவில் ஒரு குக்கிராமத்தில் இருப்பவர்கள் கூட மனநிறைவோடும் மகிழ்ச்சியோடும் இருப்பதைப் பார்க்கிறோம். உங்கள் வரையில் எது வாழ்க்கையின் நோக்கம் என்பதை பாருங்கள். பணம் இங்கு இருந்தால் தான் சம்பாதிக்க முடியும் என்றால் அது அடுத்த பிரச்சினை. உங்கள் குழந்தைகளோடு இருப்பது முக்கியம். ஆனால் பெற்றோர்களுக்கு நீங்கள் அவசியம் வர வேண்டும் என்றால் அதையும் செய்யத்தான் வேண்டும். சரி இருக்கும் பணத்தை செலவழித்து மாதம் ஒரு முறையோ வாரம் ஒரு முறையோ சென்று பார்த்துக் கொள்ள வேண்டியது தானே ?? ஆனால் ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் இடம் என்பது ஒருவரின் மகிழ்ச்சியை தீர்மானிக்காது.

கே : நம் இந்து மதத்தில் ஏகப்பட்ட குருமார்கள், மாஸ்டர்ஸ் இருக்கிறார்கள். ஒருவரையே பின்பற்றுவது தான் முறையா அல்லது அனைத்து குருக்களின் உபதேசத்தையும் கேட்கலாமா ???

ஷிவானி : அனைவரையும் கேட்கலாம். ஆனால் யாரையேனும் பின்பற்ற வேண்டுமே ? உங்களுக்கான, உங்கள் வாழ்க்கைக்கு தேவையான செய்தி ஒரே ஒரு யூடியூப் வீடியோவில், அல்லது ஏதேனும் ஒரு சமுக ஊடக சொற்பொழிவில் பொதிந்திருக்கும். அது ஒரு நொடியில் உங்களை மாற்றும். மாற்ற வேண்டும். எத்தனை பேரை வேண்டுமானாலும் கேட்கலாம். ஆனால் மனதார ஒருவரை பின்பற்ற வேண்டும் என்று நினைப்பது முக்கியம்.

நேரம் குறைவானதாக இருந்ததால் அதிக நேரம் பேச முடியவில்லை அவரால்.

தொடர்ந்து "பாஸ்வேர்டு ஃபார் ஹாப்பினஸ்" என்ற தலைப்பில் உரையாற்ற கிளம்பிவிட்டார் சிஸ்டர். ஷிவானி. புறப்படும் முன் ஒவ்வொரு பத்திரிகையாளருடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள தவறவில்லை.

20230406103038952.jpeg

பின்னர் யுனெஸ்கோ சார்பில் சிஸ்டர்.ஷிவானிக்கு அமைதிக்கான விருது வழங்கப்பட்டது.

20230406103413864.jpeg

திருப்பதி நாச்சியப்பன் இணைத் தலைவர் சமூக ஈடுபாடு மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்,
யுனெஸ்கோ ஹாங்காங் சங்கத்தின் உலகளாவிய அமைதி மையம். சிஸ்டர்.ஷிவானிக்கு விருது கொடுத்த போது......

20230407183038219.jpeg

சிஸ்டர்.ஷிவானியின் இன்றைய சொற்பொழிவிலிருந்து மேலதிக தகவல் கிடைத்தால் இங்கு வலையேற்றப்படும்.

இன்றைய நிகழ்வு.....

20230406165437698.jpeg

20230406165514920.jpeg

சில புல்லட் புள்ளிகள் இங்கே....

நம் ஈகோ என்பது ஒவ்வொரு வயதின் போதும் மாறிக் கொண்டே இருக்கக் கூடியது.

குழந்தைகளாக நாம் இருக்கும் போது நம்மீது லேபிள்கள் ஒட்டப்படவில்லை. வயது ஆக ஆக நம்மீது ஓட்டப்படும் லேபில்கள் நம் போக்கை மாற்றுகின்றன.

ஒரு சின்ன உதாரணமாக நீங்கள் காரை எடுத்துக் கொண்டு அலுவலகம் செல்கிறீர்கள். வாசலில் நிற்கும் வாட்ச்மேன் முதல் ஆள். இரண்டாவதாக ரிசப்ஷனில் இருக்கும் ஒரு பெண். மூன்றாவதாக முதல் மாடியில் இருக்கும் மேனேஜர். கடைசியாக மேல் மாடியில் இருக்கும் முதலாளி.

இவர்கள் நான்கு பேரிடமும் நான்கு விதமாக உங்களை வெளிப்படுத்துவீர்களா இல்லையா ?? உண்மையை சொல்ல வேண்டும்.

ஒவ்வொருவரிடமும் உங்களுடைய அணுகுமுறையும் உங்களின் பர்சனாலிட்டியும் மாறுகிறதா ?? எது உண்மையான நீங்கள் ?? எது ?? எது ??

மாறுகிறது என்றால் அது எதுவுமே உங்களுடைய உண்மையான குணாதிசயம் இல்லை என்பது தானே உண்மை ??

அடுத்த முறை இந்த அணுகுமுறையை உண்மையாக உங்களால் மாற்ற முடியுமா என்று முயன்று பாருங்கள்.

இதற்குத் தான் தியானம் மிக அவசியம்.

**

இந்த உலகில் ஒவ்வொருவரும் ஆன்மாவின் பயணத்தில் நாம் சந்திப்பவர்கள் தான். உதாரணத்திற்கு உங்கள் வீட்டில் ஒரு பையன் தண்ணீரில் நீஞ்சுவதற்கு பயப்படுகிறான் என்று வைத்துக் கொள்வோம். நீங்களோ பெரிய நீச்சல் வீரர். ஆனால் உங்களுக்கு கோவம் வருகிறது. ஏன் இப்படி பயப்படுகிறான் என்று.

யோசித்துப் பார்த்தால் அந்தப் பையனின் முந்தைய ஆத்மா முடிவுக்கு வரும் போது ஒரு வெள்ளத்தில் பிரிந்திருக்கலாம். அதன் வாசனை இன்றும் அந்த ஆத்மாவிடம் இருக்கக் கூடும். ஆக ஒவ்வொருவரும் இந்த ஜென்மத்தில் இணைந்திருந்தாலும் ஒவ்வொருவரும் தத்தம் ஆன்மாவின் பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறோம். அவ்வளவு தான்.

**

உப செய்தி : அடுத்த வார இறுதியில் சென்னைக்கு விஜயம் செய்கிறார் சிஸ்டர்.ஷிவானி.