"லய சக்ரவர்த்தி" காரைக்குடி மணி என்கிற 'கணபதி சுப்ரமணியம்' பிறந்ததே ஒரு சங்கீத குடும்பத்தில் தான். மூன்று வயதில் இருந்து காரைக்குடியில் துவங்கிய சங்கீத பயிற்சி. கடந்த மே 4 அன்று நிறைவு பெற்று நாத ப்ரம்மத்தோடு கலந்தது.
அவருக்கு வயது 77. காரைக்குடி மணி எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி, டி.கே. பட்டம்மாள், மதுரை சோமு தொடங்கி இன்றைய சஞ்சய் சுப்ரமணியன், டி.எம்.கிருஷ்ணா வரை பல தலைமுறை கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றியவர்.
தாள வாத்தியங்களை மட்டுமே கொண்ட "தாள வாத்தியக் கச்சேரியை முதல் முறையாக 1990 ல் நடத்தினார். மறைந்த கஞ்சிரா மேதை ஜி. ஹரிஷங்கருடன் இணைந்து அவர் வழங்கிய கச்சேரி, இசை உலகில் மிகப்பெரிய புதுமையாய் பார்க்கப்பட்டது.அகில உலக புகழ் பெற்ற தாள வாத்திய கலைஞர்களுடன் நிகழ்ச்சிகள் வழங்கியிருக்கிறார்.
தனது முதல் தேசிய விருதை அவரின் 18 வைத்து வயதில் அன்றைய குடியரசுத் தலைவர், டாக்டர். ராதாகிருஷ்ணனிடமிருந்து பெற்றார். சங்கீத நாடக அகாடெமி விருதை 1999 அன்றைய ஜனாதிபதி கே. ஆர். நாராயணனிடம் பெற்றுக்கொண்டார்.
கடந்த 40 ஆண்டுகளில் எண்ணற்ற மாணவர்களை உருவாக்கியவர். காரைக்குடி மணி திருமணம் செய்து கொள்ளாமல் தனது வாழ்நாள் முழுவதையும் இசைத்துறைக்கு அர்ப்பணித்தவர்.
மிருதங்கத்தோடு அவர் மேடையேறிவிட்டால், இடி இடிக்கும், மின்னல் வெட்டும், நந்தி பகவானே நேரில் வந்து வாசிப்பதுபோல ஒரு அர்பணிப்பான வாசிப்பு. அதே அர்ப்பணிப்பு அவரின் ஒவ்வொரு அசைவிலும் தெரியும். தனது கலையை தெய்வமாய் போற்றியவர் அவர்.
அந்த மகா மேதையைப் பற்றி ஒரு மிருதங்க வித்வானின் புகழஞ்சலி இது...
அக்ஷய் ராம் - (சங்கீத கலாநிதி, பத்மவிபூஷன் உமையாள்புரம் சிவராமனின் சீடர்.)
" குரு காரைக்குடி மணி சார் இன்னிக்கி நம்ம கூட இல்லேங்கிறது மிகப்பெரிய இழப்பு. எங்களை மாதிரி இளைஞர்களுக்கு மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன். அவருடைய வாசிப்பு மிகவும் தனியானது.. அவருக்குன்னு ஒரு தனி பாணியை அவர் உருவாக்கினார். தஞ்சாவூர், புதுக்கோட்டை பாணியையும், தவில் பாடங்களையும் கலந்து தனக்கென புது பாணியை உருவாக்கிட்டார்.
அவர் பாட்டுக்கு , வர்ணத்திற்கு, துக்கடாவிற்கு வாசிக்கறது, எல்லாமே வித்தியாசமாய் இருக்கும். அவரோட தனியாவர்தனம் மட்டுமே கேக்கறதுக்குன்னு நெறய பேர் வருவாங்க. இன்னிக்கும் அந்த ரெக்கார்டிங் கேட்டா கூட மெய் சிலிர்த்துப்போகும். தாள வாத்தியத்தை கச்சேரி மேடையில் நடுநாயகமா இருக்கவெச்சு கச்சேரி பண்ண முன்னோடி அவர்தான்.
வயலின் மேதை லால்குடி ஜெயராமன் சாருக்கு வாசிக்கும்போது , அவரோட வர்ணங்கள், தில்லானாவுக்கு, மணி சார் வாசிக்கறது...ரொம்பவே வித்தியாசமா இருக்கும். பர்ஸ்ட் க்ளஸ்ஸா இருக்கும். அவருடைய பாடாந்தரம் நிச்சயமா தொடரும், அத வாசிக்காத மிருதங்க வித்வான்களே கிடையாது.
மணி சார் ஒரு ஒழுக்க சீலர். எல்லாத்துலயும் 'பர்பெக்சன்' எதிர்பாக்கிறவர். அவரை மாதிரி சாதகம் பண்ணவங்களே கிடையாதுன்னு அவருடைய சீனியர் மாணவர்கள் சொல்லுவாங்க , அது முழுக்க உண்மை தான். அதையெல்லாம் கேக்கும்போது மெய் சிலிர்க்கும். அவரை பாத்துதான் எப்படி தொடர்ந்து சாதகம் பண்றது, ஒழுக்கமா இருக்கறது அப்படின்றதெல்லாம் கத்துக்கணும். அவர் லைஃபே ஒரு லெசன் தான்.
சாதாரணமா தனி ஆவர்த்தனம் வாசிக்கும்போது, ரசிகர்களுக்கு ஒண்ணுமே புரியறதில்லை அப்படின்னு ஒரு குறை இருக்கு. மணி சார் வாசிக்கும்போது, ஒரு மெலடியா கேக்கும். பாமர மக்களுக்கும் போய் சேரணும்னு தான் அப்படி வசிக்கிறார். இன்னும் சொல்லப்போனா, "லயக்கவிதை" ன்னு ஒரு ஆல்பமே போட்ருக்கார். அதுல எங்கெங்க மியூசிக் சேக்கலாம், ஜதி சேக்கலாம், இசைக்கோர்வை எப்படி இருக்கணும்னு எல்லாமே நமக்கு தெரியவரும், அவர் வெறும் மிருதங்க வித்வான் மட்டுமில்ல, ஒரு திறமையான இசை அமைப்பாளர் அப்படிங்கறது நமக்கு தெரிய வரும்.
அவருடைய இழப்பு மாபெரும் இழப்பு, கர்நாடக இசை உலகுக்கே!!
அவருக்கு எனது சிரம் தாழ்ந்த நமஸ்காரங்கள்."
Leave a comment
Upload