ரசிகர் புனைவு! இது சரியான வார்த்தையா என்று தெரியவில்லை. Fanfictionக்கு என்னால் இது
தான் யோசிக்க முடிந்தது. வேறு வார்த்தை இருந்தால் சொல்லுங்கள். திருத்திக்கொள்கிறேன்.
ரசிகர் புனைவு என்றால் என்ன? ஒரு முப்பது வருஷத்துக்கு முன் நீங்கள் ஒரு கதை
எழுதுகிறீர்கள். நல்ல வரவேற்பு. ரசிகர்கள் ஏராளம். அப்பொழுது என்ன நடந்திருக்கும்? ரசிகர்கள்
உங்களை கொண்டாடி இருப்பார்கள். உங்கள் கதா பாத்திரங்களை அக்குவேறு ஆணிவேறாக
விவாதிபார்கள். உங்கள் கதைகளத்தை விமர்சிப்பார்கள். இது அத்துடன் முடிந்து விடும். ஆனால்,
ரசிகர் புனைவு என்பது அதுவல்ல. உங்கள் வாசகர்கள் உங்களின் கதை களத்திற்குள்
குதிப்பார்கள். அவர்களே எழுத்தாளர்களாக மாறுவார்கள். உங்கள் கதைக்களத்தில் உங்கள்
கதாபாத்திரங்களை தாங்கள் உருவாக்கிய சூழலில் புகுத்துவார்கள். கதை வேறு விதமாக
பயணிக்கும். பொதுவாக இது சமூக வலைத்தளத்தில் தான் இயங்குகிறது. ஒரு புத்தகத்தின்
ரசிகர்கள் ஒன்று கூடி கதையை வெவ்வேறு வடிவமாக சித்தரிப்பார்கள். எழுத்தாளரின்
அனுமதியோடும், சில சமயம் இல்லாமலும். முக்கியமாக இதை எழுதுபவர்கள் அனைவருமே
ரசிகர்கள் தான். எழுத்தாளர்கள் இல்லை. அதிலும் பெரும்பாலும் இளையவர்கள் தான்.
என்னைப்பொறுத்தவரை இது கொஞ்சம் அத்து மீறலோ என்று தோன்றும். ஒரு எழுத்தாளன்
உருவாக்கிய உலகம் அவனுடையது. அதை வெளியிலிருந்து பார்க்கலாம், விமர்சிக்கலாம்.
உள்ளே புகுந்து ஆளக்கூடது. அது அத்துமீறல் என்று தோன்றும். இதைப்பற்றி இந்த
தலைமுறையினர் சிலரிடம் கேட்டேன்.
ரசிக புனைவுகளை ஏன் வாசிக்கிறீர்கள் என்ற என் கேள்விக்கு வந்த பதில் " instant gratification"
படித்தவுடன் வரும் ஒரு அலாதி திருப்தி. அது ஏன் வருகிறது என்று கேட்டேன். சில சமயம் கதை
களம் பிடிக்காது, நாயகர்கள் பிடிக்கும். அவர்களை அந்த களத்திலிருந்து இடம் பெயர்த்து வேறு
களத்தில் கொண்டு செல்வார்கள். அது நிறைவான கதையாக இருக்கும் என்று கூறுகிறார்கள்.
அதே போல் கதாபாத்திரத்தையும் மாற்றலாம், கதைக்களம் பிடித்திருந்தால். கதை படிக்கும்
ஆர்வமுள்ள அத்தனை இளம்வயதினருக்கும் இந்த ரசிகர் புனைவு மேல் ஈர்ப்பு இருக்கத்தான்
செய்கிறது. மேலும் கேட்டதற்கு, ஆசிரியர் சொல்ல தயங்கிய அல்லது சொல்ல மறந்த சில சமூக
பிரச்சனையை கதை களத்திற்கு கொண்டுவந்து மேலும் பன்னோக்கு பார்வையுடன் கதையை
நகர்த்தும் சுதந்திரம் இதில் உண்டு என்கின்றனர்.
இதை நடுத்தர வயதினர் இன்னும் புரிந்து கொள்ள ஒரே ஒரு உதாரணம். பொன்னியின்
செல்வனில் உங்களுக்கு குந்தவையை காட்டிலும் மணிமேகலை வந்தியத்தேவனுக்கு சிறந்த
ஜோடியாக தோணலாம். கதையை மாற்றுங்கள். அவ்வளவு தான். உங்களைப்போலவே
யோசிப்பவர்களும் உங்களுடன் புனைவார்கள். மணிரத்னம் பொன்னியின் செல்வன் போல்
உங்களுடைய பொன்னியின் செல்வனை நீங்கள் உருவாக்கலாம்.
இந்த ரசிகர் புனைவு இன்னும் சட்டப்படி அங்கீகரிக்கப் படவில்லை. காப்புரிமை பிரச்சனையின்
குழப்பம் இருக்கத்தான் செய்கிறது. பிரச்சனை இல்லாமல் இருக்கவேண்டும் என்றால் பொது
உரிமை பரப்பிலிருக்கும் கதைகளை எடுத்து உங்களுக்கு வேண்டியதைப் போல்
மாற்றிக்கொள்ளலாம்.
இந்த வகையில் பொன்னியின் செல்வன் 2......
இது சரியா தவறா என்பது அவர் அவர்களின் பார்வையை பொறுத்தது!
Leave a comment
Upload