நன்றி : தினமணி
கடந்த 2014 -ஆம் ஆண்டு அக்டோபர் மூன்றாம் தேதி மான் கீபாத் எனப்படும் மனதின் குரல் நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களுக்கு பிரதமர் உரையாற்றுகிறார். அதுவும் ஒவ்வொரு மாதமும் அந்த மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை மனதின் குரல் அகில இந்திய வானொலி நிலையம் மூலம் ஒலிபரப்பப்படுகிறது. சென்ற வாரம் பிரதமர் மோடியின் மனதின் குரல் நூறாவது நிகழ்ச்சி ஒலிபரப்பப்பட்டது.
கோடிக்கணக்கான இந்தியர்களின் குரல் இது என்று சொல்லலாம் அவர்களது உணர்வுகளை பிரதமர் இந்த நிகழ்ச்சி மூலம் வெளிப்படுத்தித் இருக்கிறார் என்று கூட சொல்லலாம். மற்றவர்களின் குணநலங்களை பிரதமர் மோடி தேடித்தேடி இந்த நிகழ்ச்சியில் பாராட்டுவார். ஆனால், அவர்கள் யாரும் மிகப்பெரிய பின்புலமோ பிரபலமோ இல்லை என்பதும் உண்மை பெரும்பாலும் அவர்கள் சாமானியர்கள். சாமானியருடன் இணைவதற்கான வழிதான் இந்த மனதின் குரல் என்று பிரதமர் குறிப்பிட்டு இருக்கிறார்.
மனதின் குரல் நிகழ்ச்சியில் 25, 30 ஆண்டுகளாக பாடம் சொல்லித் தரும் ஒருவர், ஏழைகளுக்கு இலவசமாக சிகிச்சை தரும் மருத்துவர், பாலைவன தரிசு நிலங்களில் மரங்களை நடும் சமூக ஆர்வலர், நீர் பாதுகாப்புக்காக குளங்களை தூர்வாரும் மனிதநேய சாமானியர் என்று தேடித்தேடி அவர்களை வஞ்சனை இல்லாமல் பாராட்டுகிறார் பிரதமர் மோடி.
அமெரிக்கா நியூயார்க் நகரில் ஐநா சபையின் தலைமை அலுவலகத்தில் மனதின் குரல் நூறாவது நேரடியாக ஒலிபரப்பப்பட்டது. பல தூதரகங்கள் மனதின் குரல் நூறாவது நிகழ்ச்சியை ஒலிபரப்பியது.
ஹரியானாவில் மகளுடன் செல்பி என்று பெண் சிசுக்கொலை பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யும் சுனில் ஜாக்லன் பற்றி பிரதமர் பேசியிருக்கிறார். தான் இந்த அளவிற்கு முன்னேறுவதற்கு உந்துதலாக இருந்த தனது அரசியல் குரு லக்ஷ்மன் ராவ் இனாம்தார் பற்றி கூட குறிப்பிட்டிருக்கிறார் பிரதமர் மோடி. ராஜஸ்தானில் ஒரு இளைஞர் பிரதமர் மோடியின் நூறாவது மனதின் குரல் நிகழ்ச்சியை கேட்பதற்காக தனது திருமண நேரத்தை ஒத்தி வைத்தார். தவிர திருமணத்துக்கு வந்தவர்களையும் பிரதமரின் மனதில் குரல் நிகழ்ச்சியை கேட்க ஏற்பாடு செய்தார் அந்த இளைஞர். பிரபல தொழிலதிபர் பில்கேட்ஸ் கூட பிரதமரின் மனதின் குரல் நூறாவது நிகழ்ச்சிக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். அந்த வாழ்த்துச் செய்தியில் இந்திய மக்களின் ஆன்மாவை மனதின் குரல் பிரதிபலிக்கிறது என்று குறிப்பிட்டிருக்கிறார் பில்கேட்ஸ். யுனெஸ்கோ தலைமை இயக்குனர் நூறாவது மனதின் குரல் நிகழ்ச்சியில் பங்கு பெற்று பிரதமரை பாராட்டி இருக்கிறார்.
மனதின் குரல் நிகழ்ச்சியில் பெரும்பாலும் தமிழக சாமானியர்களின் சாதனைகளை பிரதமர் சுட்டிக்காட்டி பேசியிருக்கிறார். தனது நூறாவது மனதின் குரல் நிகழ்ச்சியில் கூட தமிழ்நாட்டைச் சேர்ந்த இருபதாயிரம் பெண்கள் ஒன்றிணைந்து வேலூரில் உள்ள நாக நதிக்கு புத்துயிர் அளித்ததை குறிப்பிட்டு அவர்களைப் பாராட்டி இருக்கிறார் பிரதமர் மோடி. இது பற்றி குறிப்பிடும் போது பெண்களின் முயற்சிகளை உலகிற்கு கொண்டு செல்ல ஒரு சிறந்த தளமாக மனதின் குரல் செயல்படுகிறது என்று குறிப்பிட்டு இருக்கிறார் அது உண்மைதான்.
இந்தியர்கள் சுற்றுலாவுக்கு வெளிநாடு செல்வதற்கு முன் இந்தியாவில் உள்ள சுற்றுலாத்தலங்களில் குறைந்தபட்சம் 15 இடங்களை நீங்கள் சுற்றிப் பாருங்கள் என்று மனதின் குரல் நிகழ்ச்சியில் வேண்டுகோள் விடுத்தார் பிரதமர் மோடி. கூடவே சுற்றுலா துறையை மேம்படுத்த நதிகள், மலைகள், குளங்கள், புனித தலங்களை சுத்தமாக வைத்திருப்பது அவசியம் என்பதையும் மறக்காமல் குறிப்பிட்டார் பிரதமர் மோடி.
மனதின் குரல் நிகழ்ச்சியில் தமிழ் கலாச்சாரம் தமிழ் மொழி தொடர்பாக பிரதமர் மோடி அதிகம் குறிப்பிட்டு பேசியிருக்கிறார். உலகின் பழமையான தமிழ் மொழி நமது நாட்டில் தோன்றியது என்று அனைத்து இந்தியர்களும் பெருமை கொள்ள வேண்டும் என்று ஒரு மனதின் குரல் நிகழ்ச்சியில் தமிழ் பற்றி பெருமையாக கூறினார் பிரதமர் மோடி. தமிழ் மக்களின் சேவை பங்களிப்பு பற்றி பலமுறை மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி குறிப்பிட்டு இருக்கிறார். ஒருமுறை தூத்துக்குடி மாவட்டத்தில் புயல் தாக்கத்தை தடுப்பதற்காக மண் வளத்தை காக்க பனை மரங்கள் நடுவது பற்றிய கூட்டு முயற்சியை பாராட்டி இருக்கிறார். இதேபோல் பள்ளி உள்கட்டமைப்பை சீரமைக்க தாராளமாக பணம் வழங்கிய திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த தாயம்மாள் பற்றி பெருமையாக பேசி பாராட்டியிருக்கிறார் பிரதமர். திருக்குறளின் உலகளாவிய தொடர்பு பற்றி பலமுறை மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் பெருமையாக சுட்டிக்காட்டி இருக்கிறார். அவ்வையார் பற்றி பேசியிருக்கிறார். தமிழ் மொழி தமிழ் கலாச்சாரம் பற்றி மனதின் குரல் நிகழ்ச்சியில் தொடர்ந்து ஊக்குவிக்கும் வகையில் பிரதமர் மோடி பேசி வருகிறார்.
Leave a comment
Upload