எனது இருப்பிடமான அமெரிக்காவின் வடகிழக்குப் பகுதியில், பனிக்காலம் முடிந்தபின் வரும் வசந்தகாலத்தின் (Spring Season) தொடக்கத்தில் செர்ரிபூக்கள் பூத்துகுலுங்கும். வசந்தகாலத்தை வரவேற்கும் விதமாக செர்ரிபூக்கள் மலர்வது, இங்கு செர்ரிப்ளாஸம் (Cherry Blossom) என்றழைக்கப்படுகின்றது. இங்கு பனிக்காலத்தில், இலைகள் இல்லாமல் வெறும் மரங்களாக இருந்த செர்ரி மரத்தில் (Cherry Tree), முதலில் பூக்கள்தான் உருவாகும். பிறகுதான் இலை வரும். மரம் முழுவதும் பூக்களே நிரம்பியிருக்கும். தனித்தனியாகவும், இரண்டிரண்டாகவும் பூக்கும். பெரும்பாலும் செர்ரிபூக்கள் வெளிர் இளஞ்சிவப்பு (Light Pink), வெண்மை மற்றும் அடர் இளஞ்சிவப்பு (Dark Pink) நிறங்களில் காணப்படும். ஊதா (Purple), மஞ்சள் மற்றும் பசுமை நிறங்களிலும் செர்ரிபூக்கள் உள்ளன. வரிசை வரிசையாக இருக்கும் மரங்களில், கொத்து கொத்தாகப் பூத்திருக்கும் இந்த செர்ரி பூக்களை காணுவது கொள்ளை அழகு.
அமெரிக்காவின் தலைநகரமான வாஷிங்டன் டி.சி-யில் (Washington D.C), இந்த செர்ரிப்ளாஸம் பிரசித்திப்பெற்றதாக உள்ளது.'ஜப்பானில் கல்யாணராமன் திரைப்படத்தில் வரும் 'சின்னப்பூ சின்னப்பூ கண்ணெல்லாம் வண்ணப்பூ' பாடல்காட்சியில், நாம் செர்ரிப்ளாஸத்தைப் பார்க்கலாம்.
செர்ரிப்ளாஸத்திற்கு மிகவும் பிரபலமான நாடு ஜப்பான். உலகெங்கிலுமிருந்து சுற்றுலா பயணிகள் செர்ரிப்ளாஸத்தைக் காண ஜப்பானுக்கு வருகிறார்கள். ஜப்பானியர்கள் செர்ரிப்ளாஸத்தை பல நூற்றாண்டுகளாகத் திருவிழாவாக (Cherry Blossom Festival) கொண்டாடுகிறார்கள். ஜப்பானிய மொழியில் செர்ரிப்ளாஸம் 'சக்குரா' (Sakura) என்றும் இந்தத் திருவிழா கொண்டாட்டத்தை (Cherry Blossom Festival) 'அனாமி' (Anaami) என்றும் அழைக்கிறார்கள். 'அனாமி' என்பதற்கு சரியான அர்த்தம் பூக்களை பார்வையிடுதலை குறித்தாலும், ஜப்பானியர்கள் இந்த விழா கொண்டாட்டத்தைத்தான் 'அனாமி' என்றழைக்கிறார்கள்.
இந்த விழா ஜப்பானில் அனைத்து பூங்காக்கள் மற்றும் கோட்டை மைதானங்களில் கொண்டாடப்படுகின்றது, திருவிழாவில் ஜப்பானியர்களின் பாரம்பரிய கலைகள், ஓவியங்கள், பானங்கள், உணவு, பாட்டு என அனைத்தும் இடம்பெற்று, விழா நன்றாக கலை கட்டும். வியாபாரிகள் அந்தந்த பகுதியின் சிறப்பு உணவுகள், நினைவுபொருட்கள், கைவினைப்பொருட்கள் முதலியனவற்றை விற்பார்கள். ஜப்பானியர்களின் செர்ரிப்ளாஸம் அனைத்து வேலைப்பாடுகளிலும் இடம்பெற்றிருப்பது, திருவிழாவில் இருக்கும் பொருட்களைப் பார்த்தாலே, அனைவருக்கும் புலப்படும்.
செர்ரிப்ளாஸத் திருவிழாவிற்கு ஒவ்வொரு வருடமும் குறிப்பிட்ட நாள், நேரம் என்றெல்லாம் கிடையாது. இது மரத்தில் செர்ரிபூக்கள் பூத்தவுடன் கொண்டாடப்படும். பூக்கள் மலருவது தட்பவெப்பநிலையைப் பொருத்தது. மிதமான வெப்பநிலையிருந்தால் பூக்கள் விரைவிலேயே மலரும். நம் நாட்டில் வானிலை முன்னறிவிப்பு தெரிவிப்பதுப்போல, ஜப்பானில் ப்ளாஸம் முன்னறிவிப்பு (Blossom Forecast) அறிவிக்கப்படும்.
மக்கள் செர்ரிப்ளாஸத்தைக் காண சுற்றுலா வந்து, இந்த விழாவை கொண்டாடுகிறார்கள். பூங்காவில் ஒரு நல்ல இடத்தைத் தேர்வு செய்து அதனை முன்பதிவும் செய்கிறார்கள். அதிகாலையிலேயே அல்லது ஒரு நாள் முன்னதாக வந்தும் இடத்தைத் தேர்வு செய்து ஆக்கிரமிப்பார்கள். மக்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் வந்து, மரத்தினடியில் போர்வை விரித்து தேநீர் விருந்து, வீட்டில் சமைத்து எடுத்து வந்த உணவுகள், பார்பிக்யூ (Barbeque) உணவுகள், அங்குள்ள கடைகளில் வாங்கிய உணவுகள் என உண்டு மகிழ்கிறார்கள்.
ஜப்பானின் தலைநகரமான டோக்கியோ (Tokyo) - வில் உள்ள மெகுரோ (Meguro river) நதி, ஐந்து மைல் தொலைவுக்கு இருக்கும். இதில் ஒன்றரை மைல் தூரத்திற்கு நதியின் கரையில் செர்ரிப்ளாஸ மரங்கள் காணப்படுகின்றன. கரையின் இருபக்கமும் காகிதத்திலான விளக்கை (Paper lantern) அலங்கரித்து வைத்திருப்பார்கள். நதியை ஒட்டி அருங்காட்சியகம் மற்றும் உணவகங்கள் உள்ளன. இந்த ரம்மியமான சூழ்நிலை, மக்களுக்கு விருந்து உண்ணவும், ஆனந்தமாக செர்ரிபளாஸத்தின் அழகினை கண்டுகளிக்கவும் ஏதுவாக இருக்கின்றன.
இந்த செர்ரிப்ளாஸத் திருவிழா தற்போது உலகெங்கிலும் கொண்டாடப்படுகின்றது. ஜப்பானில் மட்டுமல்லாமல் கொரியா சீனா, ஸ்வீடன், ஜெர்மனி, பிரான்ஸ், அமெரிக்கா மற்றும் பல நாடுகளில் கொண்டாடப்படுகின்றது. இந்தியாவில் சிக்கிம், ஷில்லாங், நாகாலாந்து, இமாச்சலப் பிரதேசம், பெங்களூர், மும்பை, ஜம்மு மற்றும் காஷ்மீரில் செர்ரிபூக்களைப் பார்க்கலாம். அமெரிக்காவில் வாஷிங்டன் டி.சி, ஜார்ஜியா, சியாட்டல், நியூயார்க், நியூஜெர்சி, பாஸ்டன் மற்றும் பல இடங்களில் செர்ரிப்ளாஸம் காணப்படுகின்றது. செர்ரிப்ளாஸ விழாவும் நிறைய இடங்களில் கொண்டாடப்படுகின்றது.
அமெரிக்காவில் வாஷிங்டன் டி.சி (Washington DC)- யில் செர்ரிப்ளாஸம் பிரபலமாக கொண்டாடப்படுகின்றது. வாஷிங்டன் டி.சி யில், பொடோமாக் (Potomac river) நதிக்கும் வாஷிங்டன் கால்வாய்க்கும் (Washington Channel) நடுவில் இருக்கும் இடம் டைடல் பேசின் (idal basin). இந்த இடத்தில் ஒரு நீர்த்தேக்கம் (Reservoir) உருவாக்கப்பட்டு இருக்கின்றது. இந்த டைடல் பேசினைச் சுற்றிலும், இளஞ்சிவப்பு நிற செர்ரி மலர்கள் நிறைந்த மரங்கள் காணப்படும். இந்த இளஞ்சிவப்பு நிற பூக்கள் தண்ணீர் பிரதிபலிப்பதைக் காண மிகவும் அழகாக இருக்கும். இதனாலேயே செர்ரி மரங்கள் இருக்க, இந்த இடம் தேர்வு செய்யப்பட்டது.
டைடல் பேசினுக்கு அருகில் அதிக நினைவுச்சின்னங்கள் இருக்கின்றன. குறிப்பாக தாமஸ் ஜெபர்சன் நினைவுச்சின்னமும், வாஷிங்டன் நினைவுச்சின்னமும் (Pencil Tower) செர்ரிப்ளாஸத்துடன் காண மிகவும் நன்றாக இருக்கும். தற்போது இந்த டைடல் பேசினைச் சுற்றி சுமார் 3800 க்கும் மேலான செர்ரிப்ளாஸ மரங்கள் உள்ளன. முதன்முதலாக அமெரிக்காவுக்கு, செர்ரிமரங்கள் ஜப்பானிடமிருந்துதான் வந்தன. மார்ச் மாத மத்தியிலிருந்து ஏப்ரல் மாத மத்தியில் வரை உள்ள காலத்தில்தான் வாஷிங்டன் டி.சி - யில் இந்தப் பூக்களைப் பார்க்க முடியும். இங்கும் உலகெங்கிலுமிருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் செர்ரிப்ளாஸத்தைப் பார்க்க வருகிறார்கள். தேசிய செர்ரிப்ளாஸ விழா (National cherry blossom festival) நம் ஊரின் பொங்கல் திருவிழா போல இங்கு கோலாகலமாகக் கொண்டாடப்படுகின்றது. ஜப்பான் நாட்டில் கொண்டாடும் செர்ரிப்ளாஸத்திருவிழா, அமெரிக்காவிலும் கொண்டாடும் கலாச்சாரம் எப்படி வந்தது என்றும், ஜப்பானிலிருந்து செர்ரிமரம் முதலில் அமெரிக்காவுக்கு வந்த வரலாறும் சுவையானத் தகவல்கள்.
கி.பி.1885-ல் உலக பயணி 'எலைஸா ரஹமா சிட்மோர் (Eliza Ruhamah Scidmore) ஜப்பானுக்குப் போய்விட்டு வந்து அமெரிக்கா திரும்பியவுடன், இந்த பொடோமாக் நதியைச் சுற்றி செர்ரிப்ளாஸ மரங்களை வைக்கலாம் என்ற எண்ணம் தோன்றியது. இதனைச் செயல்படுத்த இருபத்தைந்து வருடங்களாக எலைஸா முயற்சி செய்திருக்கிறார்கள். கி.பி 1909 ம் வருடம் முதல் பெண்மணியான ஹெலன் டாஃப்ட் (Helen Taft) - இடம் எலைஸா தன் கருத்தினைத் தெரிவித்தார்கள். இதனைத் தெரிவித்த ஐந்து நாட்களுக்குள் டோக்கியோ மேயர் (Tokyo Mayor) 2000 செர்ரி மரங்களை அமெரிக்காவிற்கு அனுப்பி வைத்தார். கி.பி 1910-ல் அமெரிக்க விவசாய நிறுவனத்தால் இந்த மரங்கள் சோதிக்கப்பட்டன. இதன் மூலம் மரங்கள் பாதிக்கப்பட்டிருப்பதை அறிந்து, அவை அழிக்கப்பட்டன. பிறகு கி.பி 1912 பிப்ரவரி மாதத்தில், டோக்கியோ மேயர் மீண்டும் அமெரிக்காவிற்கு பன்னிரண்டு வகைகளை உடைய 3020 செர்ரி மரங்களை அனுப்பிவைத்தார். கி.பி 1912 மார்ச் மாதத்தில், ஜப்பான் நாட்டு தூதுவரின் மனைவியும் அப்போது அமெரிக்காவின் முதல் பெண்மணியான ஹெலன் டாப்ட்டும் சேர்ந்து, இரண்டு செர்ரி மரங்களை வாஷிங்டன் (DC) - யில் உள்ள டைடல் பேசினில் நட்டு, தொடங்கி வைத்தார்கள்.
இன்றும் இந்த மரங்களைப் பார்க்க முடியும். கி.பி 1954 - ல் ஜப்பான்நாடு, 375 வருடத்திற்கு முன்னால் கிரானைட்டால் உருவாக்கிய விளக்கை நட்பின் அடையாளமாக அமெரிக்காவுக்கு கொடுத்தது. இது 8.5அடி உயரமும், 2 டன் எடையும் கொண்டது. இது வாஷிங்டன் டி.சி யில் முதன்முதலாக நட்ட செர்ரிமரங்களுக்கு அருகில் உள்ளது. இந்த விளக்கை ஒளிரச் செய்து தான் தேசிய செர்ரிப்ளாஸ விழாவை வாஷிங்டன் டி.சி யில் ஆரம்பிப்பார்கள். ஜப்பான் அமெரிக்காவுக்கு பரிசு கொடுத்ததை கொண்டாடும் விதமாக இங்கு செர்ரிப்ளாஸத் திருவிழா நடத்தப்படுகின்றது.
இந்த விழா 'சக்குரா மட்சுரி' (Sakura matsuri) என்றழைக்கப்படுகின்றது. இதன் அர்த்தம் ஜப்பானியர்களின் வீதிவிழா என்பதாகும். (Japanese Street festival). அமெரிக்காவில் ஜப்பானின் கலாச்சாரத்தை கொண்டாடுவதுதான் இந்த சக்குரா மட்சுரியின் அடிப்படை எண்ணம். இதில் ஜப்பானியர்களின் கலாச்சாரத்தைக் காட்டும் ஓவியங்கள், படங்கள், கவிதைகள், நினைவுச்சின்னங்கள், இலக்கியங்கள், பாரம்பரிய உணவுகள், பானங்கள் மற்றும் பலவிதமான கலைப்பொருட்களும் வியாபாரிகளால் விற்கப்படும். இவற்றோடு ஊர்வலம், காற்றாடி விழா மற்றும் பல நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாகக் கொண்டாடப்படுகின்றது. இந்த செர்ரிப்ளாஸத்தில் மக்கள் பிறந்தநாள் மற்றும் திருமண நிகழ்வுகளுக்காகப் புகைப்படங்களை அதிகமாக எடுப்பார்கள். மக்கள் இந்த செர்ரிப்ளாஸத்தின் அழகினை நடந்து சென்று ரசிப்பார்கள். படகில் மற்றும் சைக்கிளில் சென்றும் கண்டுகளிப்பார்கள்.
செர்ரிப்ளாஸம் தோன்றி, இரண்டு வாரங்களில் பூக்கள் உதிர்ந்து விடும். இது மேகத்தைப் போலத்தோன்றி, குறுகிய காலத்திலேயே மறைந்து விடுவதால், மேகத்தோடு ஒப்பிடப்படுகின்றது. செர்ரிபூக்கள் மலருவதை ஒவ்வொரு கலாச்சாரத்திலும் ஒவ்வொரு விதமான அடையாளத்தைக் குறித்தாலும், பொதுவான அடையாளமாக 'மறுபிறப்பு' அதாவது புதியத் தொடக்கத்தை உணர்த்துகின்றது. நிலையில்லாத இந்த வாழ்க்கையில், பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப்பட்ட குறுகிய காலத்தில் நாம் எப்போதும் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும் என்ற உன்னத தத்துவத்தினை இந்த செர்ரிப்ளாஸம் நமக்கு உணர்த்துகிறது.
Leave a comment
Upload