தொடர்கள்
அனுபவம்
மணமுறிவுகள் -ஒரு பார்வை , மரியா சிவானந்தம்

20230404175159686.jpg

சமீபத்தில் சமூக ஊடகங்களில் ஒரு வீடியோவும், புகைப்படங்களும் வைரலாகி நம் புருவங்களை உயர்த்த வைத்துள்ளன.

விவாகரத்து பெற்ற தொலைக்காட்சி நடிகை ஒருவர் "Divorced" என்ற பதாகையை மகிழ்சசியுடன் தூக்கிப் பிடித்துள்ள காட்சியும், விவாகரத்துக்குப் பின்பான (Post divorce) புகைப்படங்களும் அவற்றில் அடங்கும். "இது ஒருவரின் அந்தரங்க வாழ்க்கை, இங்கு நாம் பேச என்ன இருக்கிறது?" என்று சாதாரணமாக இந்த காட்சிகளை நாம் கடந்து விட முடியும். ஆனால் இவற்றை அப்படி விலக்கி விட்டு நடக்க முடியவில்லை. அப்பெண் அந்த வீடியோக்களில் அவரது கல்யாண புகைப்படத்தில் உள்ள முன்னாள் கணவருடைய புகைப்படத்தைக் கிழித்து,அதைக் காலடியில் போட்டு மிதிப்பதே நம் அதிர்ச்சிக்கு காரணம் .

இந்நாட்களில் எல்லா நிகழ்ச்சிகளையும் புகைப்படம் எடுப்பதும்,அதை இணையத்தில் உலவ விடுவதும் வழக்கம் தான். திருமணத்துக்கு முன்பான Pre wedding shoot எடுக்காத தம்பதியரே இல்லை என்று சொல்லலாம். திருமணத்தின் போதோ , candid video , Drone photos , உறவுகள் ஒன்றாக ஆடும் நடனங்கள், மணப்பெண்ணும், மணமகனும் ஒன்றாக ஆடுவதும் , பாடுவதும் என்று பலவிதமான போட்டோ செஷன்கள் 'தூள் பறக்கிறது.

திருமணத்துக்கு வந்த குட்டிச் செல்லங்கள் முதல் சமையற்காரர், அய்யர் வரை டைட் க்ளோஸ் அப் காட்சிகள் வைப்பார்கள். திருமண விருந்தின் உணவுவகைகள், ஐஸ்கிரீம், சூப், தாம்பூலம் தண்ணீர் பாட்டில் முதற்கொண்டு மயன் மாளிகை போன்ற மண்டப அலங்காரங்கள் வரை எல்லாமே விடீயோக்களாக எடுக்கப்பட்டு ஆவணமாகும் .இவை எல்லாவற்றையும் திருமணம் எனப்படும் மகிழ்ச்சியான கொண்டாட்டத்தின் ஒரு முக்கிய பகுதியாகவே நாம் பார்க்கிறோம். இது இயல்பு .

இப்போது விவாகரத்து பெற்ற பெண் அதை ஒரு கொண்டாட்டமாக மாற்றி "post divorce shoot" எடுத்து அவருடைய விடுதலை உணர்வை இணையத்தில் பதிவிட்டு இருப்பது பலவித விவாதங்களை இங்கு கிளப்பி விட்டுள்ளது .

"இதில் என்ன தவறு இருக்கிறது? எத்தனை வன்முறையை, கொடுமைகளை அவரது கணவன் மூலமாக அனுபவித்து இருந்தால், அவர் இவ்வாறு விவாகரத்தை கொண்டாட முடிகிறது? எல்லாவற்றுக்கும் மேலாக இது அவரது உரிமை , அவர் விருப்பம், அவர் செய்வது தப்பே இல்லை ' என்று அடித்துப் பேசுபவர்கள் ஒரு புறம்.

"விவாகரத்து வாங்கியாச்சு இல்லே .அவ்வளவுதான். நாகரிகமாக பிரிந்து விடலாமே .ஏன் போட்டோவைக் கிழித்து,காலில் போட்டு மிதித்து முன்னாள் கணவரின் மேல் உள்ள வன்மைத்தைக் வெளிச்சம் போட்டு காட்ட வேண்டும் ?"என்று சொல்பவர்கள் மறுபுறம் .

இந்த இரண்டு விதமான கருத்துக்களுக்கும் பதில் சொல்ல வரும் முன் சமூகத்தில் பெருகி வரும் விவாகரத்துகள் கவலையைத் தருகின்றன. இந்தியாவில் ,தமிழகத்தில் பல விவாகரத்து வழக்குகள் குடும்ப நல நீதிமன்றங்களில் நிலுவையில் இருக்கின்றன. சமீபத்தில் உச்சநீதி மன்றத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பு ஒன்று முக்கியத்துவம் பெறுகிறது .இனி விவாகரத்து வழக்குகளில் ,கணவன் மனைவி ஆறு மாதங்கள் கட்டாயமாக பிரிந்து இருக்க தேவை இல்லை. நீதிபதி எஸ்.கே.கவுல் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு, அரசியலமைப்புச் சட்டத்தின் 142 வது பிரிவின் கீழ் அவ்வாறு விவாகரத்து வழங்க உச்சநீதிமன்றத்துக்கு உரிமை உண்டு என்று தீர்ப்பினை வழங்கி உள்ளது . விவாகரத்துக்கு விண்ணப்பித்து விட்டு காத்திருக்கும் காலத்தைக் குறைப்பதும் ,நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவில் முடித்து வைப்பதும் இந்த தீர்ப்பின் நோக்கம்.

ஏன் இந்த மணமுறிவுகள் ? மாறி வரும் வாழ்க்கை முறையா? அல்லது வளர்ந்த முறையா ? ஆணோ, பெண்ணோ விவாகரத்து கேட்கும் போது சொல்லும் காரணங்கள் பல உண்டு. கணவரின் திருத்த முடியாத குடிப்பழக்கம், வீட்டில் நடத்தப்படும் வன்முறை, வரதட்சிணை கொடுமை ,புகுந்த வீட்டு உறவுகளின் தலையீடு மற்றும் வன்முறைகள், சைக்கோ தனமான நடத்தைகள், திருமணம் தாண்டிய கள்ள உறவுகள், திருத்த முடியாத அதீதங்கள் என்று பல காரணங்கள் இந்த மண பந்தத்தை முறித்துக் கொண்டே ஆக வேண்டும் என்ற நிர்பந்தத்தை ஏற்படுத்தி விடுகிறது .

அடித்தும், உதைத்தும் உடல்ரீதியாக, மன ரீதியாக துன்புறுத்தும் கணவனோடு சகித்துக் கொண்டு வாழ்ந்து ஆக வேண்டிய கட்டாயம் எந்த பெண்ணுக்கும் இல்லை. ஆணுக்கும் இது பொருந்தும்.. பொருளாதார சுதந்திரம் உள்ள பெண்கள் இந்த மணமுறிவு முடிவை சிந்தித்து எடுக்கிறார்கள். சட்டங்களும் சாதகமாக அவர்களுக்கு தீர்ப்பு தருகிறது . இப்போது இருக்கும் சமூகச் சூழலில் இதைத் தவறு என்று சொல்ல முடியாது .

இன்னொரு புறம் பார்க்கும் போது சின்ன சின்ன காரணங்களுக்காக சண்டை போடுதல் , பொறுமை, சகிப்புத் தன்மை இல்லாமை , 'நீயா ,நானா?" என்று மல்லுக்கு நிற்கும் குணம் இவை குடும்பம் என்னும் அழகிய கூட்டை கலைத்துப் போட்டு , இருபுறமும் பறவைகளைப் பறக்க விடுகிறது. கணவன் மனைவி நடுவில் பிறக்கும் ஈகோ சண்டைகளால் குழந்தைகள் தாம் பெரிதும் பாதிக்கப்டுகிறார்கள். என்னதான் வசதிகள் இருந்தாலும் ஒற்றை பெற்றோராக பிள்ளைகளை வளர்த்து எடுப்பது நம் சமூகச் சூழலில் மிகவும் சிரமம் .

கசந்து வழியும் திருமண பந்தத்தின் கடைசி தீர்வாக விவாகரத்து இருக்க வேண்டும். மணமுறிவுக்குப் பின் கிடைக்கும் விடுதலை ,மன அழுத்தத்தில் இருந்து விடுவிக்கும் என்பது சந்தேகமில்லை. விவாகரத்து பெற்றவர்கள் நண்பர்களுடன் விருந்து கொண்டாடி மகிழ்ச்சியைப் பகிர்ந்துக் கொள்கிறார்கள். விவகாரத்து பெற்ற தம்பதியர் பின்னாட்களில் நல்ல நண்பர்களாகவும் இருக்கிறார்கள் .

ஆனால், கணவரின் படத்தைக் கிழித்து காலடியில் மிதித்து அதை பொது வெளியில் பகிர்ந்துக் கொள்வது அநாகரிகம் . Don’t wash your dirty linen in public என்றொரு சொற்றொடர் உண்டு. நமது அந்தரங்கங்களின் பலவீனமான பக்கங்களை நாம் ஏன் பொது வெளியில் படித்துக் காட்டி, நம் உள் மன வன்மங்களை வெளியிட வேண்டும்?

இது போன்ற "சென்சேசனல்" சங்கதிகளை மக்கள் பார்த்து விட்டு, அடுத்த நாளே மறந்து விட்டு வேறு விஷயங்களில் கவனம் செலுத்துவார்கள். எனவே இது போன்ற விடீயோக்களால் கிடைக்கும் நல்ல பலன் எதுவும் இல்லை.

குடும்ப அமைப்பு ஒரு அழகான அமைப்பு, அது தரும் பாதுகாப்பை வேறு எந்த நிறுவனத்தாலும் தர முடியாது . ஆழ்ந்த அன்பு, காதலால் நெய்யப்படும் கணவன் மனைவி உறவு எந்நாளும் நிலைத்து இருக்கும். ஒரு திருமணம் நிலைத்து நிற்க பரஸ்பர புரிதல், பரஸ்பர மரியாதை, பரஸ்பர நம்பிக்கை போன்ற காரணிகள் முக்கியம். அவை குறையும் போது விலகலாம் , தவறில்லை.அப்போது ஒருவரை ஒருவர் காயப்படுத்த வேண்டாம். உள்ளத்தின் உணர்வுகளைச் முச்சந்தியில் நிறுத்தி சவுக்கால் அடிக்க வேண்டாம்.

மணமுறிவு பெற்றவர் அவரவர் பாதையில் தனித்தனியாக கம்பீரமாக பயணிக்கலாம், எவ்வித உறுத்தலும் இன்றி, உரசலும் இன்றி .