தொடர்கள்
ஆன்மீகம்
பாரதத்தின் மலைக் கோவில்கள் ! -10 நீலாச்சல் மலை, கௌஹாத்தி, அஸ்ஸாம்!! கல்யாண வரம் அருளும் காமாக்யா தேவி கோயில்!!!

மாக்யா தேவி கோயில்!!!
ஆரூர் சுந்தரசேகர்.

கல்யாண வரம் அருளும் காமாக்யா தேவி கோயில்!!!


பாரதத்தின் வடகிழக்கு மாநிலமான இயற்கை வளங்கள் நிறைந்த அஸ்ஸாம் மாநிலம் கௌஹாத்தி நகரில் இருந்து சுமார் 12 கி.மீ. தூரத்தில் கடல் மட்டத்திலிருந்து 700 அடி உயரத்தில்
பிரம்மபுத்திரா நதியின் தென் கரையில் நீலாச்சல் மலை மீது காமாக்யா தேவியின் கோயில் அமைந்துள்ளது. இந்த மலைக்கோயிலை 600 படிகள் ஏறியோ அல்லது பேருந்தில் 3 கி.மீ பயணித்தோ அடையலாம்.
இத்தலம் காமயோனி மண்டலம், மஹாமாயா ஸ்தானம், நீலாச்சலம், நீல் பர்வதம், காமகிரி, பிரக்ஜோதிஷபுரம், காமரூபம் போன்ற பெயர்களிலும் அழைக்கப்படுகிறது.
இக்கோயில் புராதானமிக்க சக்தி வாய்ந்த கோயிலாகக் கருதப்படுகிறது. இந்தியாவில் உள்ள 51 முக்கியமான சக்தி பீடங்களில், ஆதி சக்தி பீடமாகவும் விளங்கும் இக்கோயில் ஆதி சக்தி ரூபமான தாட்சாயிணி எனும் பார்வதி தேவியின் யோனி உடல் பகுதி விழுந்த பீடமாக விளங்குகிறது. கர்ப்பகிரகத்தில் இருக்கும் சக்தி தேவியை காமேஸ்வரி, காமரூபிணி, காம, காமாக்ய என்றெல்லாம் அழைக்கிறார்கள். நீலாச்சல் மலையில் மகா வித்யாக்கள் என்றழைக்கப்படும் பத்து தேவிகளின் சந்நிதிகள் இருக்கின்றன. மூன்று தேவிகள் காமாக்யா கோவிலுக்கு உள்ளேயே அருள் பாலிக்கிறார்கள். இக்கோவிலில் கர்ப்ப கிரகத்தில் தெய்வ விக்கிரகம் இல்லை. பாறையில் தேவியின் யோனி பகுதியைச் செய்து அதையே தெய்வமாக வழிபடுகி றார்கள். இந்த கர்ப்பக்கிரகமானது தரைமட்டத்துக்குக் கீழே சிறிய குகை இயற்கையாக அமைந்திருக்கிறது. இங்குச் செல்ல மூன்று செங்குத்தான படிகளைத் தாண்டி வெளிச்சம் குறைந்த கருவறையை அடைந்தால் இரண்டு பெரிய அகல் விளக்கின் நடுவில் யோனியைத் தரிசிக்கலாம். சிவப்புத் துணியாலும், செம்பருத்திப் பூவாலும் அலங்கரிப்பட்டிருக்கும் யோனியைத் தரிசித்து அங்கு ஊற்றாகப் பெருகும் தீர்த்தத்தை அள்ளி நம் தலையில் தெளித்துக் கொண்டால் தீராத பிணிகள் தீர்ந்துவிடும் என்பது ஐதீகம்.
இங்கு தேவிக்கு மாதவிலக்கு நிகழ்வதாகவும், அந்த மூன்று நாட்கள் கோயிலை மூடி வைக்கப்படும் வழக்கம் உள்ளது. அப்போது அங்கு ஓடும் பிரம்மபுத்திர நதி சிவப்பு நிறத்தில் ஓடுவதாகக் குறிப்பிடுகின்றனர்.
இக்கோயிலில் ஆட்டை உயிர்ப்பலி கொடுக்கும் வழக்கம் பின்பற்றப்படுகிறது. இக்கோவில் பெண்மையைப் போற்றும் விதமாக இருப்பதால் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது.

ஸ்தல புராணம்:
சிவபெருமானை அவமதித்து தட்சன் செய்யும் யாகத்தைத் தட்டிகேட்ட தேவி தாட்சாயிணி அங்கு மரியாதைக் குறைவாக நடத்தப்படவே யாகத்தை அழியுமாறு சபித்துவிட்டு, அதே யாகத் தீயில் விழுந்தவுடன், தட்சனின் ஆணவத்தை அடக்க, சிவனால் உருவான வீரபத்திரர் யாகத்தை நிறுத்துவ தோடு தட்சனின் தலையையும் கொய்த செய்தார். பின்பு தீயில் விழுந்த தேவி தாட்சாயிணியை தோளில் போட்டுக் கொண்டு ஊழித்தாண்டவம் ஆடிய சிவபெருமானின் ஆட்டத்தை நிறுத்த மகாவிஷ்ணு, தனது சக்ராயுதத்தால் தாட்சாயிணியின் உடலை கூறுபோட தாட்சாயிணி உடல் 51 துண்டுகளாகச் சிதறி பூமியில் விழுகிறது. தேவியின் பாகங்கள் விழுந்த இடங்களே சக்தி பீடங்கள் என்று அழைக்கப்படுகின்றன. 51 சக்தி பீடங்களில் முதன்மையானது 'மகா காமாக்யா' தேவி கோயில். `தாட்சாயினியின் யோனி விழுந்த சக்தி பீடம் இது’ என்று புராணங்கள் கூறுகின்றன. தேவியின் அங்கம் விழுந்ததும், மலை நீல நிறமாக மாறியதாம். அதனால் தான் இந்த மலையை, `நீல் பர்வதம்' என்றும் `நீலாச்சல்' என்றும் அழைக்கிறார்கள். தரையிலிருந்து 700 அடி உயரத்தில் மகா காமாக்யா தேவியின் கோயில் வனங்கள் சூழக் காணப்படுகிறது. தாட்சாயினியின் யோனி விழுந்த இடத்தில், விஸ்வகர்மா மூலம் கோயில் கட்டிய பிறகு தான் மன்மதன் இழந்த தன் உடலைத் திரும்பப் பெற்றதாகப் புராணங்களில் கூறப்பட்டுள்ளது. தேவியின் யோனி விழுந்த இந்தத் தலத்துக்குக் காமரூபம், ஹரிக்ஷேத்திரம், பிரக்ஜோதிஷபுரம், காமகிரி, காமயோனி மண்டலம், மஹாமாயா ஸ்தானம், நீலாச்சலம், நீல் பர்வதம் எனப் பல பெயர்கள் இருக்கின்றன.
இங்குப் பாண்டவர்கள் தேவியை வழிபட்டதாக மஹாபாரதத்தின் விராட பர்வம் மற்றும் பீஷ்ம பர்வம் கூறுகிறது. மகாபாரதத்தின் விராட பர்வம் (6) மற்றும் பீஷ்ம பர்வம் (23) ஆகியவற்றில் காமாக்யாவை அர்ஜுனனும் யுதிஷ்ட்ரரும் பிரார்த்தனை செய்ததாகக் கூறப்பட்டுள்ளது. மேலும் தந்திர சூடாமணி போன்ற பல தந்திர நூல்களும் இக்கோயிலைச் சக்தி பீடங்களில் மிக உயர்ந்த பீடமாகச் சொல்கின்றன. இந்த கோயில் பற்றி தேவி பாகவதத்திலும், காளிகா புராணத்தில் குறிப்புகள் இருக்கின்றன.

கல்யாண வரம் அருளும் காமாக்யா தேவி கோயில்!!!

காமாக்யா கோயில் வரலாறு:
8ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகக் கூறப்படும் இந்த கோயில் பார்க்கவே பிரமிப்பானதாக விளங்குகின்றது. பத்தாம் நூற்றாண்டில் அஸ்ஸாம் மன்னர்களால் சீர்திருத்தப்பட்ட உண்மையான காமாக்யா கோவில் பதினாறாம் நூற்றாண்டின் முற்பகுதியில் படையெடுப்பின் போது அழிக்கப்பட்டது. தற்போதுள்ள கோயிலை கூச் பீகாரின் அரசர் நர நாராயணா என்பவர் கி.பி.1565 ல் மீண்டும் கட்டினார். 1665ல் மீண்டும் புதுப்பிக்கப்பட்டது. இக்கோவிலின் வெளித்தோற்றத்தைப் பார்த்தால் மட்டுமே கோவில் போலத் தோன்றும். உள்ளே சென்றால் இருண்ட பாதாள குகை போன்று இருக்கும். இங்குச் சிறு விளக்கு வெளிச்சத்தில் காமாக்யாவின் யோனி பீடத்தைத் தரிசிக்கலாம்.

கல்யாண வரம் அருளும் காமாக்யா தேவி கோயில்!!!

கோயில் அமைப்பு:
அஸ்ஸாம் மாநிலம் கௌஹாத்தி நகரில் இருந்து சுமார் 12 கி.மீ. தூரத்தில் கடல் மட்டத்திலிருந்து 700 அடி உயரத்தில்
பிரம்மபுத்திரா நதியின் தென் கரையில் நீலாச்சல் மலை மீது காமாக்யா தேவியின் கோயில் அமைந்துள்ளது. இங்கு செல்ல பல வழிகளிலும் வசதி உள்ளது. இங்கிருந்து இரு வழிகளில் மலை ஏறலாம். படிகள் மூலமாக 600 படிகள் ஏறியோ அல்லது பேருந்தில் 3 கி.மீ பயணித்தோ மலைக்கோவிலை அடையலாம்.
இந்தத் தலத்திலிருக்கும் அம்பிகையைக் காமேஸ்வரி, காமரூபிணி, காம, காமாக்யா என்றெல்லாம் அழைக்கிறார்கள். இந்தத் திருத்தலத்தில் உள்ள தேவிக்கு உருவம் கிடையாது. தேவியின் யோனியே சக்தியின் வடிவமாக வணங்கப்படுகிறது. நீலாச்சல் மலை மீது ஏறினால், மூன்று பெரிய கோபுரம், அவற்றைச் சுற்றிலும் சிறிய நான்கு கோபுரங்களுடன் கம்பீரமாகக் காட்சியளிக்கிறது கோயில். கோயிலின் மேற்குப் பகுதியில் பலிபீடம் இருக்கிறது. இங்குத் தேவிக்குத் தினமும் ஓர் ஆட்டை பலி கொடுத்து அதன் தலையைக் கருவறையில் வைத்த பிறகுதான் தினசரி நித்திய பூஜையைத் தொடங்குகிறார்கள். அம்பிகையின் முக்கிய சக்தி பீடமாக இது விளங்கினாலும் பிரம்மன், சிவன், விஷ்ணு, கணேசன், ரதி தேவி-மன்மதன் ஆகியோரையும் வழிபடுகிறார்கள்.
மன்மதனின் கட்டளையின் பேரில் காமாக்யா கோயிலைக் கட்டிய விஸ்வகர்மாவின் சிலையும் இருக்கிறது. கோயிலின் கருவறை இயற்கையாக அமைந்த மலையின் குகைக்குள் இருக்கிறது. கோயிலினுள் செல்வது ஒரு குகையில் செல்லும் அனுபவத்தைத் தருகின்றது. கருவறையில் சிறிய மலைப்பாறை போன்று ஒரு மேடை அமைக்கப்பட்டுள்ளது. இதை “மேரு வடிவம்” என்கிறார்கள். சிறிய ஊற்றில் நீர் வழிந்து ஓடியபடி இருக்கிறது. அந்த ஊற்றில் நீருக்குள் மூழ்கியபடி தேவியின் யோனி பாகம் இருக்கிறது. 108 செம்பருத்தி மலர்களால் ஆன மாலையைத் தேவிக்கு பிரத்யேகமாகச் சூட்டி வணங்கி வேண்டிக்கொள்கிறார்கள். தேவியை வேண்டினால், மனதில் நினைத்தது அனைத்தும் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. கல்யாண வரம் வேண்டுவோரும் சக்தி தேவியின் பீடத்தை வேண்டி வரம் பெறுகிறார்கள். குகையிலிருந்து வெளியேறும்போது உலோகத்தால் செய்யப்பட்ட காமேசுவர காமேசுவரி சிலைகள் எட்டுவித அமைப்பில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதைக் காணலாம். பிரகாரத்தில் காமாக்யாதேவி, “தசமகா வித்யா‘ என்ற பெயரில் பத்துவித தோற்றங்களுடன் காட்சி தருகிறார். பிரகாரச் சுவர்களில் மங்கள சண்டி, அன்னபூரணி, நீலகண்ட மகாதேவ், மானசாதேவி ஆகியோரின் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.

ஸ்தல பெருமை:
இங்குக் குங்குமமாக ஒரு வகைக் கற்களைப் பொடி செய்த செந்தூரப் பொடியைப் பிரசாதமாக அளிக்கிறார்கள். இதை இட்டுக் கொண்டால் தேவியின் ஆசி பரிபூரணமாக கிடைக்கும் என்பது நம்பிக்கை. அம்பிகையின் மீது போர்த்தப்பட்ட சிவப்பு நிற ஈரத்துணி பிரசாதமாகக் கிடைத்தால் அதிர்ஷ்டம் என்று நினைக்கிறார்கள். இதற்கு அம்புபச்சி வஸ்திரம் என்று பெயர். தாந்த்ரீகர்களுக்கு முக்கியமான திருக்கோயில் இது. அவர்கள் பயிற்சியில் முதல் நாளையும் நிறைவு நாளையும் இங்குதான் மேற்கொள்கிறார்கள். அந்த அளவுக்குச் சக்தி மிகுந்த கோயில் இது. தற்போது பல பக்தர்கள் வயதுக்கு வராத தங்கள் பெண் குழந்தைகள் விரைவில் வயதுக்கு வரவேண்டும் எனச் சிறப்பு யோனி பூஜை நடத்துவதுண்டு.

திருவிழாக்கள்:
நவராத்திரி,
துர்கா பூஜை,
மானஷா பூஜை,
அம்புபச்சி மேளா எனும் திருவிழா இந்த காமாக்யா கோயிலில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

அம்புபச்சி மேளா:
இத்தலத்தின் சிறப்பு அம்புபச்சி மேளா என்னும் திருவிழாதான். நான்கு நாட்கள் இவ்விழா வெகு சிறப்பாகக் கொண்டாடப்படும். மாதந்தோறும் அம்பிகைக்கும் உண்டாகும் மாத விலக்கு நாள்களின் போது சிவப்பு வஸ்திரத்தால் கர்ப்ப கிரகத்தைத் திரையிட்டு மூடிவிடுவார்கள். ஆனால், தமிழ் மாதக் கணக்குப்படி ஆனி மாதம் வரும் மாதவிலக்கு நாள்களில் மட்டும் சக்தி பீடத்தில் வழிபாடுகள் நடைபெறும். அன்றைய தினம் இலட்சக்கணக்கான பக்தர்கள் காமாக்யா தேவியை வழிபடுகிறார்கள். கும்பமேளாவில் நீராடிய பலனை காமாக்யா தேவியின் யோனி பீடம் அன்றைய தினம் தருவதாக ஐதீகம். வட மாநிலங்களில் பிரபலமாக உள்ள நிர்வாண நாகா சாதுக்கள் ஆயிரக்கணக்கில் அம்புபச்சிமேளா திருவிழாவில் கலந்துகொண்டு காமாக்யா தேவியை வழிபடுகிறார்கள்.

கோயில் திறந்திருக்கும் நேரம்:
காலை 5.30 மணி முதல் மதியம் 1 மணி, 2.30 முதல் மாலை 6 மணிவரை திறந்திருக்கும்.

பிரார்த்தனை:
திருமணத்தடை, குழந்தைப்பேறு, பில்லி சூனிய ஏவலிலிருந்து விடுதலை, கல்வியில் சிறந்து விளங்க காமாக்யா தேவியைப் பிரார்த்திக்கலாம். இந்த கோவிலில் சென்று வழி பட்டால் பிரிந்த தம்பதிகள் சேர்வார்கள். நீண்ட நாள் பூப்பு அடையாத குழந்தைகள் பூப்பு அடைவார்கள்.

நேர்த்திக்கடன்:
அம்மனுக்கு அபிஷேகம் செய்தும், சிவப்பு வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.

கோயிலுக்குப் போவது எப்படி:
கௌஹாத்தி நகரில் இருந்து சுமார் 12 கி.மீ. தூரத்தில் காமாக்யா தேவி கோயில் அமைந்துள்ளது. இரயில் மற்றும் விமானம் வழியாக எளிதாக அடையலாம்.
விமானம் மூலம்: கௌஹாத்தி சர்வதேச விமான நிலையம் 20 கிமீ தொலைவில் உள்ளது. அஸ்ஸாம் ட்ரங்க் ரோடு மற்றும் NH17 மூலம் விமான நிலையத்தை அடைய மிக விரைவான பாதை உள்ளது. விமான நிலையத்திலிருந்து கோயிலுக்குச் செல்ல டாக்ஸி அல்லது உள்ளூர் பேருந்தில் செல்லலாம்.
இரயில் மூலம்: கௌஹாத்தி இரயில் நிலையத்திலிருந்து 6 கிமீ தொலைவில் உள்ளது.
சாலை வழியாக: கௌஹாத்தி நகரத்திலிருந்து காமாக்யா கோவிலுக்கு ASTC யின் வழக்கமான பேருந்து சேவைகள் உள்ளன. OLA & UBER ஆப் கேப்களின் சேவைகளும் கிடைக்கும்.

முகவரி:
அருள்மிகு காமாக்யாதேவி திருக்கோயில், தி காமாக்யா டெப்யூட்டர் போர்டு, காமாக்யா டெம்பிள் காம்ப்ளக்ஸ். கவுகாத்தி - 781 010, அஸ்ஸாம் மாநிலம்.

கல்யாண வரம் அருளும் காமாக்யா தேவியை வழிபட்டு அருள் பெறுவோம்!!