தொடர்கள்
பொது
பாரதியின் புதுமைப் பெண் தற்போது சியாச்சின் பனிமலையில் - மாலா ஶ்ரீ

20230007002211671.jpg

இந்தியா-பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கு இடையே சியாச்சின் பனிமலை தொடர் உள்ளது. உயரமான மலையுச்சியில் இருக்கும் போர்க்களம். இங்கு இந்திய ராணுவ படை வீரர்கள் இரவு பகலாக கொட்டும் பனிமழையில் எல்லை பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு அவ்வப்போது மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், பிரதமர் மோடி, மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் ராணுவ தளபதிகள் வந்து, இங்கு பணிபுரியும் ராணுவ வீரர்களை ஊக்கப்படுத்தும் வகையில் பேசி, புத்துணர்ச்சி ஏற்படுத்துவது வழக்கம்.

ஏனெனில், சியாச்சின் மலையுச்சியில் கடந்த 1984-ம் ஆண்டு முதல் பாகிஸ்தான் வீரர்கள் எல்லை மீறுவதும், அவர்களை தடுத்து நிறுத்தி இந்திய ராணுவ வீரர்கள் போரிடுவதும் அவ்வப்போது நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், சியாச்சின் பனிமலையில் உள்ள குமார் போஸ்டில், ஃபயர் அண்ட் ப்யூரி கார்ப்ஸ் எனும் இந்திய ராணுவப் பிரிவை சேர்ந்த கேப்டன் ஷிவ சவுகான், நாட்டைக் காக்கும் பணியில் கடந்த சில நாட்களுக்கு முன் முதல் பெண் ராணுவ அதிகாரியாகப் பொறுப்பேற்று உள்ளார்.

இதுகுறித்து இந்திய ராணுவத்தின் ஃபயர் அண்ட் ப்யூரி கார்ப்ஸ், தனது டுவிட்டர் பக்கத்தில், 'கண்ணாடி கூரையை உடைத்தல்' எனும் தலைப்புடன், இந்திய ராணுவத்தின் ஃபயர் அண்ட் ஃப்யூரி கார்ப்ஸ் கேப்டன் ஷிவ சவுகான், கடுமையான பயிற்சிகளுக்குப் பின்னர், குமார் போஸ்ட்டில் ராணுவ பணிக்காக அனுப்பப்படும் முதல் பெண் அதிகாரி ஆவார்' என்று அதிகாரபூர்வ தகவலை வெளியிட்டுள்ளது.

சியாச்சின் பனிமலையில் பாதுகாப்பு பணிக்கு தேர்வாகியுள்ள பெண் வீராங்கனையை விகடகவி நெஞ்சை நிமிர்த்தி பெருமையுடன் வாழ்த்தி தலை வணங்கி பாராட்டுகிறது.